Thursday, October 6, 2022

"ரத்த தானம்" சிறுகதை by Veena Sankar


 


ரத்த தானம் 


                                                மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் முகேஷுக்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. முகேஷின் நண்பன் அணிலின் மூலமாக மருத்துவமனைக்கு பல ஆயிரங்கள் முன் பணமாக கட்டப்பட்டும் விட்டது. அதன் பிறகு  தான் மருத்துவர்களும் செவிலியர்களும் அதற்கான வேலைகளில் மும்முரமாக  செயல்பட்டனர்.   பல காலமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த முகேஷுக்கு  தலையில் கட்டி இருப்பதாகவும்   உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து  என்றும் மருத்துவர் சொன்னார். 


                                                       பெரிய அறுவை சிகிச்சை என்பதால் முகேஷின் ரத்த வகையை சொல்லி அதற்கு ஏற்பாடு செய்யுமாறும் மருத்துவமனையில் அந்த வகை ரத்தம் கையிருப்பு இருந்தாலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது திடீரென்று அதிக ரத்தம் தேவைப்பட்டால் என்ன செய்வது என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று அணிலிடம்  செவிலியர் தெரிவித்தனர்.      முகேஷின் ரத்தவகை அரிது  என்பதாலும், தன்னுடைய ரத்தம்  நண்பனுக்கு பொருந்தாது என்பதாலும்  தனக்கு தெரிந்தவர்களுக்கும் அந்த வகை ரத்தம் இல்லை என்பதாலும் அணில்,  செய்வதறியாது விழிக்க, ரத்த வங்கிகளை அணுகுமாறு மருத்துவமனையில் அறிவுரை கூறினர். 


                                                அணிலும்  ரத்த வங்கியை அணுக, துரதிருஷ்டவசமாக அங்கே  அந்த வகை  ரத்தம் இருப்பு இல்லை என்று கை விரித்தனர்.   இருந்தாலும் சிலரின் அலைபேசி   எண்ணை அணிலிடம் கொடுத்து நேரடியாக விசாரிக்கும் படி  சொல்ல, அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது  அவர்களில் சிலர் தாங்கள் ரத்தம் வழங்கி மூன்று மாதம் ஆகவில்லை என்றும் தங்களால்  ரத்தம் கொடுத்து உதவாத சூழ்நிலை என்றும் சொல்ல,   அணிலின் முகம் வாடியது.  மேலும்  அதில் ஒரு பெண்ணின்  பெயர் குறிப்பிட்டு இருந்தாலும்  ‘பெண் தானே’ என்று நினைத்து, அவளை தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்திருந்த அணில், வேறு வழியில்லாமல்  அந்தப் பெண்ணின் தொலைபேசி  எண்ணை  தொடர்பு  கொண்டான். 


                                                            தொடர்பு கொண்ட உடனேயே அந்த பெண்மணி தான் ரத்தம் கொடுக்க முன் வருவதாகவும் மருத்துவமனையின் விலாசம்  சொல்லுமாறும் கேட்டுக் கொண்டாள்.  அதற்குள்ளாக அறுவை சிகிச்சை அறைக்கு முகேஷ் அழைத்துச்  செல்லப்பட்டான்.  ஒரு ஆட்டோவை பிடித்து சீக்கிரம் வந்து சேருமாறு அணில்  அந்தப் பெண்மணியிடம் கேட்டுக்  கொண்டான்.   அவள் இருபது  நிமிடங்களில் அங்கு  வந்து சேர,   அணில்   அவளை   செவிலியிடம் கூட்டிக் கொண்டு  சென்றான்.   அந்த பெண்ணின் தோற்றம்  சற்று முதிர்ச்சியாக தெரியவே “வயது என்ன?” என்று செவிலி  கேட்க,  “நாற்பத்தைந்து” என்று பதில்  அப்பெண் பதில் அளித்ததும், “ஒரு நிமிடம்” என்று சொல்லி அடுத்த  செவிலியிடம் ஆலோசனை கேட்டு திரும்பி வந்த செவிலி, நாற்பத்தைந்து வயது ஆகிவிட்டதால்  அவளிடமிருந்து ரத்தம் பெற முடியாது என்று அணிலிடம் சொன்னாள்.  செவிலி இப்படி சொன்னவுடன் அணிலின் முகம் மாறியதை அறிந்த ரத்தம் கொடுக்க முன் வந்த பெண், தான் முழு தகுதியுடன் நன்றாக இருப்பதாகவும் தன் ரத்தத்தை எடுத்து கொள்ளும் படி  வற்புறுத்தினாள். என்ன செய்வது என்று அறியாமல் மருத்துவரிடம் மறுபடியும் செவிலி கேட்க, அவளுக்கு மாதவிடாய் காலமா? மாதவிடாய் காலம் நின்று விட்டதா? என விசாரிக்க  மருத்துவர்  செவிலியை  பணித்தார். 


                                               தற்போது  தான் மாதவிடாய் காலத்தில்  இருப்பதாகவும் ஆனாலும் ரத்தம் கொடுக்க தயாராக  இருப்பதாகவும்  அப்பெண்மணி தெரிவித்ததால் மீண்டும் மருத்துவரிடம் போய்  செவிலி சொல்ல,  அதை ஏற்க மறுத்த மருத்துவரிடமே நேராகச் சென்றாள் அந்தப் பெண்மணி.   அவரிடம் தான் நல்ல தகுதியிலிருப்பதாகவும் ரத்தப்போக்கு இருந்தாலும் ஒரு உயிர் பிழைப்பதற்காக தன் ரத்தம்  உபயோகப்படட்டும்  என்றும், தான் பெண் என்பதால் தன்னிடமிருந்து ரத்தம் எடுக்க மறுப்பது ஏன்  என்றும் சற்று உயர்ந்த குரலில் கேட்டாள். 


                                                      ஒரு விபத்தில்  சிக்கிக் கொண்ட தன் கணவனுக்கும் மகனுக்கும்  ஒரு  பெரியவர் ரத்தம் கொடுக்க முன் வந்தாலும் அவர் வயதை காரணம் காட்டி அதை ஏற்க   மறுத்ததால் சரியான நேரத்தில் அந்த வகை ரத்தம் கிடைக்காமல்  அவர்கள்  இறந்து விட்டனர் என்று சொல்லி கண்ணீர் வடித்தாள்.  அன்று வரை யாருக்கும் ரத்த தானம் செய்யாமல் இருந்த அவள்  அவர்களின் உயிரிழப்பிற்கு பிறகு தன்னால் முடிந்த போது இரத்தத்தை தேவைப்படும் நேரத்தில் கொடுத்து உதவி வருவதாகவும்  தெரிவித்தாள். 


                                                   மேலும் தனக்கு யாரும் இல்லை  என்றும்  தன்னுடைய உறுப்புகளை தானம்  செய்ய   பதிந்து வைத்து இருப்பதாகவும்  வாழும் நாள் வரை  தன்னுடைய  ரத்தத்தை அடுத்தவருக்கு தானமாக கொடுக்க  விரும்புவதாகவும் சொன்னாள். இன்று போல் அன்று ரத்த தானத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனதும்  அவர்களின் உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக  இருந்ததாகவும்  ரத்தம்  கொடுத்தால் தங்களுக்கு ரத்தம் குறைந்துவிடும் என்று நினைத்திருந்த காலம் அது  என்று  சொல்லி தன்னையறியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதாள்.


                                                             அவளை  வியப்புடன் பார்த்த மருத்துவர்,  அவள் மனதாலும் உடலாலும் முழு தகுதியுடன்  இருப்பதாகவும்  எண்ணி அவளுடைய   ரத்தத்தை பரிசோதனை செய்து   சேகரிக்க செவிலிக்கு உத்தரவிட்டார்.   “இப்படித் தான் பல விஷயங்களில் பயந்து நாம் நம் மனித நேயத்தை இழக்கிறோம்.” என்று சொல்லிக் கொண்டே ரத்தம் கொடுப்பதற்கு தயாரானாள் அந்தப் பெண்மணி. அவளுடைய தைரியத்தையும் பேச்சையும் கேட்டு ஒரு நிமிடம் தன்னையும் அறியாமல் அணில்  அவளுக்கு கைகூப்பி வணங்கினான். அவனுடைய நண்பனை காப்பாற்ற வந்த தெய்வமாக நினைத்தான்.


                                          சில நேரங்களில்  மனிதநேயத்துடன் இருக்கவும்   துணிச்சலான பேச்சும் செயலும்   தேவைப்படுகிறது.


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...