Wednesday, May 27, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அறிவும் வியாபாரம் ஆனதோ?


புது உத்தியும் புகுவது இவனாலே!


சேமிப்பின் பயன் சொல்லும் இவனும்

அதிகப்படியான அறிவால் 

ஓர் நாள் அழிவானோ? 


நம் செல்வாக்கை 

உயர்த்தியும்


சில சமயம் அடுத்தவரால் செல்லாக் காசாக ஆக்கப்படுபவனும் இவனாலே!


 பொன் முட்டை இடுகின்ற வாத்து

இப்போது உடைபட்டு

நிற்கிறது

காலத்தின் சுயநலத்தால்


 வங்கியில் சேர்த்து வைத்த 

சேமிப்பல்ல இது

தன் அறிவு கொண்ட மூளையை

பயன்படுத்தியதால்

வீழ்ந்து கிடக்கும் பணம்

அறிவு கொட்டிக்கிடக்கின்றவனுக்கு

செல்வம் கொட்டிக் கிடக்கின்றவனின் 

அன்பு பரிசு

எதற்கும் விலை

காணும் உலகில்

-Veena 

இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி

இருக்கும்,

தலைக்கு பூட்டு போட

 வேண்டுமோ...

கடன் கேட்க வருபவன்

 சுத்தியலோடு திரிவானோ..

டிஜிட்டல் முறையில் லாக்கர் போட

 வேண்டுமா...

இங்கு சேமித்தால் எவரும் திருட

 முடியாது,நாமும் பயன்படுத்த

 முடியாது!

- Vidhya 




Sunday, May 24, 2026

படமும் கருத்தும் by Veena Shankar

 


கைத்தலம் பற்றியதால் 

மட்டுமே இந்த உரிமை

கால்கள் பற்றிக்கொள்ள

மோகங்கள் மௌனமாய் பேசும்

விடியல் வரை

அரங்கேறும் 

வாசலில் கோலம் பூக்க

ஜாலம் அறைக்குள்ளே என்றென்றும்

 தொடர்கதையாய்


நர்த்தனம் கால்களால் ஆட

உடல் அசைவுகள்

மொழி பேச

முகம் அபிநயங்கள் காட்ட

உதடுகள் ஆட்டத்திற்கேற்ப 

அசைந்து கொடுக்க

வார்த்தைகள் மட்டும்

மௌனமாய் இருக்க

அரங்கம் இசையில் குளிர

யாருக்காக இந்த 

படைத்தவனின் நடனம்

அவன் கண் அசைவில்

நாம் ஆடுகின்ற நிலையில்

அவன் நாட்டியமும் 

சபையில் அரங்கேறி

நம்மை சிலிர்க்க வைக்கிறதே

அவன் ஆட நாம் ஆட

உலகம் எனும் நாடக

மேடையில் அவன் 

ஆட்டுவிக்கும் நடிகர்கள்

 நாம் தானே!

Saturday, May 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மகிழ்ச்சி என்பதை பட்டுப்புடவை

மட்டும் தருவதில்லை

பட்டாம்பூச்சி போல் 

இலகுவாய், வண்ணமாய்

இருப்பதில் கூட உண்டு

சிரிப்பில் கவலை மறக்க

குடம் கூட நிறைக்கும்

தாகத்திற்கு தண்ணீர் வேண்டி

பச்சைப்பசேல் வயல்வெளியும்

காட்டியது மகிழ்ச்சியை

தன் செழிப்பால்

செவி குளிர அடுத்தவர் மொழி கேட்டும்

மனம் நிறையும் 

மன நிறைவு என்பது

செல்வத்தில் இல்லை

வயலோரம் சொல்லும் கதை கூட

பாடம் சொல்லும்

கருத்தை கூட்டும்

ஆனந்த பூங்காற்றில்

அன்ன நடையும்

அருமருந்தே 

அதை வாழ்ந்து உணரத் தெரிந்தவருக்கு

- Veena 

இந்த சுகத்துக்காக எத்தனை

 மைல்கல்க்கூட சுமையை சுமக்க

 தயார், காலாற கதைப்பேசி 

 வழிநெடுக சிரிக்க, அழுக,கத்த

 ஒரு துணை வேண்டும் ,இந்த

 துணையை பறித்துச்சென்ற நவீன

 காலம், தன்னை தானே காணொளி

 ஆக்கி, தனிமையை போக்க ஆடும்

 நாடகங்கள் எத்தனை!


விலையில்லா மருந்து

 வினையாகாத வரை சுகமே!


- Vidhya 

Friday, May 22, 2026

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


ஓரிடம் விட்டு ஓரிடம்

பொழிந்தாலும் மாரி 

தன் துளிர்களை

இயற்கையாய் கொடுக்கிறதே!

பூ நினைய பூச்சியும் நினைந்ததே 

இயற்கையின் அதிகாரத்தில்

அகங்காரம் இல்லையே

சிறகு விரிக்க 

பூ காத்திருக்க 

பூவின் அழகை

தான் மட்டுமே ரசிக்க

தன் இறக்கையால்

பூவை பூச்சியும் அணைக்கிறதே

அழையா விருந்தாளியான

அவனை பூவும்

காதலிக்கிறதே

எதிர்ப்பு ஏதும் தராமல்

இயற்கையின் பால்

எதுவும் சாத்தியமே

விதை பூவாய் விரிந்து

காண்பவருக்கு விருந்தளிக்கிறதே

பூவில் பெண்மை உண்டு

பெண்மையும் பூவாய் மலரும் தானே 

பருவத்தில் மலரும்

காதலும் ஜெயிக்க

வேண்டி காதலர்கள்

காத்திருப்பதும் சரி தானே

பூவும் பூச்சியும் காதலிக்க

நிறைகிறது இயற்கை

என்னும் தோட்டத்தில்

- Veena 


திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக 

அதிக NICK NAME கொண்டது நீதான்

தட்டாம் பூச்சி 

தும்பி 

டிராகன் பிளை 

புட்டான் பூச்சி ...


வேட்டையாடுவதில் அந்த வேட்டைக்காரனையே 

மிஞ்சியது நீ 

உனது சதவீதம் 95% !!

மற்றவையின் உச்சம் 35% 


தண்ணீரிலும் வாழ்வாய் என்று 

இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் 

பாம்பைப் போல தோலுரித்து 

உன் பயணம் வான வீதி எங்கும் 


எங்களுக்கு மூதாதையர் நீ 

300 மில்லியன் வருடம் முன் தோன்றிய வானூர்தி நீ

மறக்கவில்லை 


கல்லை தூக்கு கருப்பட்டி தாரேன் 

கல்லை தூக்கு கருப்பட்டி தாரேன் 

என்று கூறியது 


உன் புகழை 

புலிகேசியும் பாடியுள்ளார் 

தட்டானுக்கு சட்டை போட்டால் 

குட்டை பையன் 

கட்டையால் அடிப்பான் 

அவன் யார் ??

யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் 


---பிரியா


சத்தமில்லாமல் முத்தமிட 

வான் வந்து குடைபிடிக்க

கலவரத்தில் இருவரும் நனைய 

நான் இன்னும் மலரவே

 இல்லையே அதற்குள் வேட்டையாட

வந்தாயோ!

இயற்கையின் அழகில் கொஞ்சும்

சிறுபிள்ளைகள்!

- Vidhya 




Thursday, May 21, 2026

"ஆம்" என்பதால் by Veena and Vidhya

 


 "ஆம்" என்பதால்


யாருக்கும் கற்பனைகள் இருக்கலாம்

இங்கே மாயைகள் கடக்கலாம்

இருக்கும் நிஜங்கள் ரசிக்கலாம்

அடுத்தவர் நிழல்கள் தொடரலாம்

என்றாவது சந்தர்ப்பம் கிடைக்கலாம்

அழகான கருத்துகள்

பேசலாம்

சிறப்பு கவிதைகள் வரையலாம் 

அறிவான எழுத்துகள் விரியலாம்


சில நேரம்


விரிந்த சிறகுகள் ஒடியலாம் 

காத்திருந்து எதிர்ப்புகள் உருவாகலாம்

அடுத்தவர் எதிர்பார்ப்புகள் ஏமாற்றலாம்

மட்டற்ற வேதனைகள் தரலாம் 

சிற்சில உண்மைகள் கசக்கலாம்

சிறப்பான பொய்கள் இனிக்கலாம்

அமைதியாய் எதுவும் விலகலாம்

துன்பத்தில் சுற்றாரை விளங்கிக்கலாம்


எனினும்


சரித்திரம் படைக்கலாம்

மீண்டு வா மனமே!

வரும் போது மறக்காமல்

இலகுவான இதயத்துடன் வா!

இணைந்து திரியலாம்

- Veena 


உண்மை வீணா,

தொடர நினைத்தால் எதும்

 சாத்தியமே,அது வளரும்,

அலைகள் வந்து அடிக்காத

 வரை,அழிக்காத வரை..


சில நேரம் "ஆம் " யை விட


இல்லை என்று சொல்ல தைரியம் 

வேண்டும் ,ஆம் என்ற பாதுகாப்பில்

 இருந்து விலக, பழக வேண்டும் ...

இல்லையேல் அது தரும் வலி

 கொடியது!

- Vidhya 



Wednesday, May 20, 2026

ரயில் பரிதாபம் by Veena Shankar

 


ரயில் பரிதாபம்


எப்போதும் ஏசி பெட்டியில் பயணிக்கும் சுந்தர் மிக முக்கியமான வேலையாக மதுரை வரை பயணிக்க வேண்டியிருந்ததால் இரண்டாம் வகுப்பில் டிக்கெட் போட்டான். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சரியாக இரவு ஒன்பது மணிக்கு ரயிலும் புறப்பட்டது. 


இவனுக்கு ஒரு நாளாவது கீழ் படுக்கையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ரயில்வே ஒத்துழைத்தாலும் பயணியரின் நிலை கண்டு எப்போதும் இவனே தன் இருக்கையை தாரை வார்ப்பான்.


அன்றும் அப்படித்தான். ஒரு பெண் சிறிய குழந்தையோடு இவன் எதிர் பக்கத்தில் பயணித்தாள். அவளுக்கு கீழ் இருக்கையை தாரை வார்த்து விட வேண்டும் என்று எண்ணி சன்னலை பார்த்துக் கொண்டிருக்கையில் " சார்! நீங்க சாப்பிட்டீங்களா?" என்ற குரல் கேட்டு திரும்பினான். "ஆம்" என்று தலையாட்டவும் "இல்ல , என் மிசஸ் குழந்தை வச்சிருக்காங்க. நடு சீட்ல படுக்க முடியாது, அதனால..." என்று தயங்கியவனுக்கு, "ஓகே!ஓகே! " நான் மாறிக்கிறேன் என கேஷுவலாக விட்டுக் கொடுத்து நடு படுக்கைக்கு மாறினான்.


அப்படியே படுத்தவாறே செல்போன் பார்த்து கொண்டிருக்கையில் அடுத்த ஸ்டேஷன் வர, மேலும் சில பயணியர் பெட்டியில் ஏறினர். மேலும் ஒரு பெண் கைக்குழந்தையோடு கீழ் படுக்கையில் படுப்பதை பார்த்தான்


பத்து நிமிடங்கள் ஆன நிலையில் ஆண் ஒருவர் "சார்! கீழே இரண்டு பெண்கள் குழந்தைகளோடு இருக்காங்க. என்னால அப்பர் பெர்த் ல ஏற முடியாது, அதனாலே கொஞ்சம் பிளீஸ் மேல் படுக்கைக்கு மாறலாமா?" என்று கேட்க, அவர் நிலைமையை புரிந்து கொண்டு மேல் படுக்கைக்கு மாறினான். 


நேரம் மெல்ல நகர, ரயிலும் அடுத்த இரு நிறுத்தங்களைக் கடக்க, ஒருவர் மட்டும் ஏறினார். சிறிது சுற்றும் முற்றும் பார்த்தவர் உறங்காமல் இருந்த சுந்தரிடம் "தம்பி! எனக்கு சைட் அப்பர் ல சீட் அலாட் ஆகியிருக்கு. ஆனால் நான் உயரமாக இருப்பதால் எனக்கு கால் நீட்டி படுக்க முடியாது. கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நீங்கள் கொஞ்சம் மாறிக்கலாமா?" என்று கேட்டதும் அவர் உண்மை நிலையை புரிந்து கொண்ட சுந்தர், மனதால் நொந்தபடியே அவர் சொன்ன படுக்கைக்கு மாறினான் .


அங்கேயாவது நிம்மதியாக படுக்க விட்டார்களா அவனை? அவன் விதி பரிசோதகர் ரூபத்தில் வந்தது. அவரும் தன் பங்கிற்கு சும்மா இருக்காமல் கீழ் படுக்கைகாரர் கேட்டுக் கொண்டதன் பேரில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரை எழுப்பினார். "சார்! கீழ இருக்கிறவங்களுக்கு ஆர். ஏ. சி. ஃபேமிலியா வந்திருக்காங்க. அந்த அம்மாவல கீழ் படுக்கையில் இரண்டு குழந்தைகளோட படுக்க முடியாது. அவங்களோட இன்னொரு சீட் ஏசி ல இருக்கு, நீங்க ஏசிக்கு மாறலாமா ?" என்று கேட்க , கேட்பவர் பரிசோதகர் ஆயிற்றே? இல்லை என்று சொல்ல முடியாதே என்று நினைத்துக் கொண்டே தன் லக்கேஜோடு அவர் சொன்ன இருக்கைக்கு நடையை கட்டினான்..  


படுக்க விட்டார்களா என்னை? ஓடினேன் ஓடினேன், ஏசி பெட்டிக்கே ஓடினேன் என்று அவன் மனம் சொன்னது. ஆனால் அங்கிருந்தவர்கள் "பாவம் அந்த தம்பி, எத்தனை தடவை தான் சளைக்காம சீட்ட மாத்துமோ? " என்று பேசியது அவன் காதிலும் விழுந்தது.

Tuesday, May 19, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


உடலமைப்பு கொண்டு

எடை போட முடியாது

வலிமையே பெரியது


 வலிமை என்பது

உடலாலும் மனதாலும் பிறப்பதே


எவன் ஒருவன் தாங்குகிறானோ

அவனுக்கே பலமும்

பலவீனமும் அதிகம்


 பாரத்தை சுமப்பது

பெரிதல்ல அடுத்த பாரத்தை ஏற்கும் வரை

அவனுக்கும் தேவை 

ஓர் சுவாசம்

ஆசுவாசமாய்


 தாங்கும் நோக்கம் இருந்துவிட்டால்

அங்கே பாரம் பெரிதல்ல

மன வலிமையின் உதவியோடு


 வலியும் வலிமையும்

ஒரு சேர வந்தது  

எறும்பின் பாரம் வலியோடு

இரும்பின் தன்மை வலிமையோடு

- Veena 


உடல் வலிமைக்கான போட்டி

 இல்லை

ஆளைபார்த்து எடைப்போட

பளுதூக்கும் போட்டி மனவலிமை

 இருந்தால் போதும் 

பாரம்க்கூட தூசியாகும் தூக்கி

 தூக்கி பழகியவருக்கு,

மீண்டும் மீண்டும் சுமக்க

 சொன்னால் தான் வலிக்கும். ?

- Vidhya 



 

Monday, May 18, 2026

கிழவியின் ஆசை by Veena Shankar

 


கிழவியின் ஆசை


எப்போதும் ஞாயிற்றுகிழமை காலை சரியாக பத்து மணிக்கு செண்பகத்தின் போன் வரும். அன்றும் வந்தது. இன்று அம்மா என்ன புலம்ப போகிறாளோ என்றவாறே போனை எடுத்தான் கதிர். வாரா வாரம் அவள் புலம்பல்கள் கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது. சரி! சரி! என்று தலையாட்டியவாறே போனை கீழே வைக்க, "என்ன? எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரியா இருக்கு, இருக்குற கொஞ்ச காலத்தை பேரன் பேத்திகளோடு இருக்கணும். இப்போ பள்ளிக்கூடம் லீவு தானே? பிள்ளைகளை அனுப்ப வேண்டியது தானே? அவ பிள்ளைகளை எங்கிட்ட விட மாட்டா? எனக்கு தெரியும். எல்லாம் நகரத்துல பொறந்த பிறப்பு அப்படி பேச வைக்குது. எனக்கு கிராமத்துல இருக்குற வசதி அங்க இல்லை. இந்த கட்டை எப்போ போகும்னு தெரியாது, அதுக்குள்ள பேரப்பிள்ளைகளோடு இருக்கணும்னு நினைக்கிறேன். உன் அண்ணன் கிட்டையும் சொல்லிட்டேன். அவனும் பிள்ளைகளை அனுப்பல. ஏதோ அந்த படிப்பு இந்த படிப்பு படிக்கிறாங்களாம். பிள்ளைங்களுக்கு நேரமே இல்லையாம். நீயும் அதையேத்தான் சொல்லப்போற. ம்ம்... ஏதோ செய்யுங்க. மாசம் ஒருக்க நீயும் உன் அண்ணனும் வந்து பார்த்துட்டு போறீங்க? அது கொஞ்சம் எனக்கு ஆறுதலா இருக்கு என்று தானே சொல்லியிருப்பாங்க. உங்கம்மா. உங்களுக்கு முன்னாடி பெரிய அத்தானுக்கும் போன் போயிருக்கும்" என்று மீனா சொன்னதும் "போனை ஒட்டுக் கேட்டதலையே உனக்கு இவ்வளவு விசயம் தெரியுதா?" என்று சொல்லி மீனாவை பார்த்து கிண்டலடித்தான் கதிர். 


அவள் சொன்ன வாய் முகூர்த்தம் அவன் அண்ணனிடமிருந்து அழைப்பு வர, "தம்பி ! போனை மீனாட்ட குடுங்க" என்று அவன் அண்ணி பேச, "சரி" என்று சொல்லி மீனாவிடம் போனை நீட்டினான்.


"அக்கா! சொல்லுங்க" என்றாள் மீனா. "இந்த லீவுக்கு என்னடி பண்ணலாம் ? எங்கே போகலாம்?" என்று கேட்டவளுக்கு "இந்த முறை நாம குடும்பத்தோடு போக வேண்டாம் க்கா. பிள்ளைகளை மட்டும் நம்ம கிராமத்திற்கு அனுப்பி விடுவோம். வாரா வாராம் கிழவியோட புலம்பல் தாங்கல. பிள்ளைகளுக்கும் ஆன் லைன் கிளாஸ் தானே! என்ன சொல்றீங்க? " என்று கேட்டதும் "நீ எடுக்கும் முடிவு சரியாத்தான் இருக்கும். அப்படியே செஞ்சிடலாம். நீ உன் புருஷன் ட்ட சொல்லிட்டியா?" என்று கேட்க, "இல்லைக்கா, இனி மேல்தான் சொல்லணும் " என்று சொல்லி போனை வைத்து விட்டாள். 


இவள் பேசியதை பக்கத்திலிருந்த கதிருக்கு கேட்கவே, "சூப்பர் ! என் அம்மா நம்ம பிள்ளைகளை தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க " என்றான். " நீங்களும் ஒட்டு கேட்குறீங்களே!" என்று புன்னகைத்தவாறே மீனா நகர்ந்தாள். 


ஒரு வழியாக பேரப்பிள்ளைகள் செண்பகத்தின் ஊர் வந்து சேர்ந்தனர். கிழவிக்கு கொள்ளை மகிழ்ச்சி. பணியாரம், ஆப்பம், சுசியம் என வித விதமான கிராமத்து பலகாரங்களை செய்து கொடுத்தாள். ஆனால் என்ன! வகுப்பு இருப்பதால் ஒவ்வொரு முறையும் செண்பகம் தான் பேரப்பிள்ளைகளின் அறைக்கு கொண்டு போய் கொடுத்தாள். பேரப்பிள்ளைகள் கேட்காமலேயே பலகாரங்கள், தின்பண்டங்கள் அந்த பெரிய வீட்டிற்குள் படையெடுத்தன. 


ஒரு வாரம் செல்ல கிழவிக்கு கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்தது. ஆமாம். அவளோடு கூடமாட வேலை செய்ய யாருமில்லையே! ஆபிசில் வேலை பார்ப்பதால் இரு வீட்டு தம்பதிகளும் செல்லவில்லை. 


மேலும் ஒரு வாரம் போனது. செண்பகம் கொஞ்சம் அசந்து போனாள். இருந்தாலும் காலையில் எழுந்து சிற்றுண்டிக்கு இடியாப்பம் செய்ய தயார் ஆன நிலையில் அச்சில் போட்டு பிழிய பேரப்பிள்ளைகளை கூப்பிட்டாள். ஆனால் அடுக்களை பக்கம் அவர்கள் தலை கூட வைக்கவில்லை. பின் தானே செய்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் கிழவி தடுமாற , அடுத்த ஞாயிற்று கிழமை வரும் வரை காத்திருந்து பிள்ளைகளை அழைத்துக் கொள்ளும் படி கதிருக்கு போன் போட, ஒன்றும் புரியாமல் "சரியென்று " பதில் சொல்லி திரும்பியவனிடம் "என்ன! குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக கிழவி சொல்லிச்சா ?" என மீனா கேட்க, ஆம் என்றவன் "அது எப்படி உனக்கு தெரியும்.? நீ இப்பதானே வெளியிலிருந்து வர " என கேட்க, "எனக்கு தெரியும் . இவங்கள அத்தை பதினைந்து நாட்கள் சமாளிச்சதே பெரிய விஷயம். என்னமோ நாங்க பிள்ளைகளை கிராமத்திற்கு அனுப்பல ன்னு சடச்சாங்களே! இப்ப புரியுதா? இதுங்க நான் சொன்னாலே படிக்கணும்னு சொல்லி வேலை செய்யாதுங்க. இப்ப அத்தைக்கு நாங்க ஏன் அனுப்பல என்ற விசயம் புரிந்திருக்கும்" என்று சொல்லி தன் மூத்த பிள்ளைக்கு போனை போட்டு கிராமத்திலிருந்து கிளம்பி வரும்படி சொன்னாள் மீனா.

Sunday, May 17, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பகல் அல்ல , இரவு என்று உணர

ஓர் வினாடி ஆனது

உன் ஒளி வீச்சால்

களை கட்டிய ஒளியில்

மயங்கியது என் மனம் 

மாலைகள் இடம் மாற

மாலையில்

மறைந்தே ஒளி

தந்தது வாழ்வில்

கருவறை இருட்டு என்றாலும்

அங்கே ஜெனிக்கும் கரு , உரு கொண்டு வெளிவந்து

ஒளி தரும் என்பது உண்மையே !

மனம், உடல் ஒருமித்த தம்பதியருக்கு பரிசாக

ஒளிதரும் விளக்காக

பல வண்ணத்தில் இருந்தாலும்

ஒளியின் அளவு குறைவில்லை

விளக்கின் பரவல் இருளை நீக்கவே!

இடம் நகர்ந்து ஒளிர

நீ மெழுகுவர்த்தி அல்ல!

ஒளிர்வு கொடுக்கா விளக்கும்

பகிர்தல் இல்லா மனமும் இருளே என்றென்றும்!


- Veena 


இருளில் இவன் துணை தேடும்,

தொலைவில் கசியும் இவன் நிழல்

 மூக்கை நீட்டி தூக்கம் தொலைக்க,

 கனவில் வர்ணஜாலம் காட்டும்

 இவன் விரல்கள் கண்களை இறுக

 மூட,கூசும் தேகம்,

இருந்தாலும் தொல்லை,

தொலைந்தாலும் தேடும் நண்பன்!

- Vidhya 

Wednesday, May 13, 2026

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya



அடைபட்டிருந்தது போதும் 
வெளியில் வா! 
என்றதும் உலகை காண வந்தது பறவை
எங்கெங்கோ பறந்த பின் 
மீண்டும் கூண்டை
அடையவே துடிக்கிறது
வெளி உலகம் வண்ணமாய்
இருந்தாலும் - அங்கே
வஞ்சகர் கூட்டம் சூழ
வாழ்வது கடினமே!
மனிதனும் சிந்திக்கிறான்
வெளியில் பறக்கவா?
கூண்டில் அடையவா? என்று
அடைபட்டாலும் கூண்டை 
விட பாதுகாப்பு
 இல்லையென்றே
ஒருவர் ஏற்றத்தில் 
பலர் மாற்றம் அடையலாம்
அந்த ஏற்றத்தின் ஊடே
தோற்றும் போகலாம்
தோற்று நிற்கும் வேளையில்
எழுச்சி கொண்டு
இலக்கை அடைய
நினைக்கையில்
சுற்றியுள்ளவர்கள் சறுக்கி விடவும்
செய்யலாம்
கூண்டுப்பறவையும்
மனிதனும் சமமே
சூழ்நிலைக் கருதி!

- Veena 

கூட்டில் பறவை மாலையில் 
ஆனந்தம் அடைந்ததடி...

என் காதல் சிறகுகள் முளைத்து
இரவெல்லாம் பறக்குதடி

தூங்காமல் எந்தன் இரவு ஓ...
நித்தம் நித்தம் விடியுதடி

மண்ணுக்குள் மரித்த களையாய்
என் காதல் தவிக்குதடி

 தனிமையை எந்தன் மனது 
தாழிட்டுக் கொண்டதடி....

உன் காதலை என் மனது 
தேடியே திரியுதடி..

-பிரியா

அடைக்கப்படும் போதே

 சுதந்திரத்தை உணர முடியும்,

தைரியம் மட்டுமே தடையை

 உடைக்கும்,

முயற்சியால் மட்டுமே முன்னேற

 முடியும்,

இல்லையேல் கூண்டுக்குள்

 எடுப்பார் கைப்பிள்ளையே !

- Vidhya 

 

Sunday, May 3, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காதலின் சின்னத்தை பற்றியவர்

காதல் தீயால் பற்றிக் கொண்டனர் 

காதல் மலர்ந்தும்

பிடி தளர்ந்தது

முகம் பார்க்கும் கண்ணாடியாய் 

ஒருவரை ஒருவர்

நினைக்க வார்த்தைகள் மறந்தன

அழகில் புரட்சி நடக்க

ஆனந்தம் கொண்டது

காதல் சின்னம்

கரங்களாய் இருப்பதைக் காட்டிலும்

சின்னமாய் மாறுவதில்

எத்தனை ஆனந்தம்?

கரங்களின் தியாகம் மறைந்தாலும்

சின்னமாய் 

மறுபிறப்பு எடுக்குமே!

- Veena 

அவள் அழகில் அவன்

 நாணுகிறான், 

அந்த கண்ணனே ஆனாலும்

 ராதாவின் பிடியிலே, கண்

 அசைவிலே...

- Vidhya 

Thursday, April 30, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நடராஜரின் பிம்பமா

ஆடுவதில்?

நீ ஆட்டம் கொண்டால்

பூமியும் பிளவு கொள்ளுமே

வாழ்வில் மேடு பள்ளம் 

உண்டென கொண்டால்

மட்டுமே எதுவும் புலப்படும்

இறையின் பார்வைக்காக ஏங்கும் கண்க


நீரில் உன் பிம்பமா?

நீரலையின் ஊடே

நினைவலைகள்

கண்ட காட்சியின் 

நினைவுகள்

தண்ணீரில் கண்ணாடியாய் 


கண்ணாடியில் உன் பிம்பமா?

அழிக்க முடியாது

உன் நிஜம் நிற்கையில்

அசைந்தால் அசையும்

விரித்தால் விரியும்

எதிரணியின் அமைப்பே தன் கோலம் 


கலைஞனிட த்தில் உன் பிம்பமா?

படைத்தவன் தூரிகையால் 

பல நடன அமைப்புகள்

மேலும் கீழும் 

ஓர் காட்சியே!

திரும்பி திரும்பப் பார்க்க வைக்குதே!


யார் கையில் எது

என்பது சிறப்பல்ல 

எவர் கையில் எது சிறப்பு கொடுக்கும் என்பதே அறிவு!

-Veena 

மனிதன் கையில் மரம் கிடைத்தால்

 சித்திரம்,அது சொல்லும் மந்திரமே

 தந்திரம் தான்,

பட்டதும் தழைக்கும், திகைக்க

செய்யும்,அடி நுனி தெரியா

 ரகசியம்!

- Vidhya 


Wednesday, April 29, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


படுத்துக் கொண்டிருந்த என்னை

நகர பணித்தான்

நகர்ந்து சென்ற என்னை

நடக்க பணித்தான்

நடந்து சென்ற என்னை 

ஓடப் பணித்தான்

ஓடிக் கொண்டிருந்த என்னை

நிற்கப் பணித்தான்

நின்ற போது தான்

அறிந்து கொண்டேன்

நான் சென்றது தொடர் ஓட்டமென்று

தொடர் ஓட்டத்தை

நிறுத்த பணித்தான் 

என்னை படுக்கையிலிட்டு

எதுவும் சாத்தியம் அவனாலே!

அவனே மனித மனம் 


இப்படிக்கு

மனிதக் (குரல்) குமுறல்


 சகதியில் மூழ்கினால் கூட ஓராயிரம்

கதை சொல்லும் 

இளமைபருவம்


இரவு அல்ல அது

எங்கும் இருள் சூழ

இரவிலும் நிலா வெளிச்சத்திலும்

விளையாடும் கூட்டத்தின் மத்தியில் இல்லை பாகுபாடு நிரந்தரமாய்

வீட்டிற்கு ஓர் நிலவு

கொண்டால் கூட அதிசயம் இராது வருங்காலத்தில்

இருப்பினும் விளையாட்டு மட்டுமே தனித்து

இருக்கும் அவரவர் கையில் 

உலகம் அடக்கம் என்பதால்

சிந்திக்க ஒன்று

செயல்படுத்த ஒன்று

வஞ்சிக்க ஒன்று

வாரி அணைக்க ஒன்று

என பிரிந்து நிற்பவை

சேரும் நாளும் நேரமும் அறியாது

நகைத்திருப்போம்

நன்றாய் வாழ்வோம்

வஞ்சகம் ஒழிப்போம்

வசந்தம் வரவேற்போம்

-Veena

சேற்றில் விளையாட சொறிசிரங்கு

 என்றனர் இன்று அதற்கு ஒரு

 பெயர் வைத்து தேகத்திற்கு நன்று

 என்று விற்கின்றனர்.

மண்ணில் புரண்டவனுக்கு நோய்

 அண்டாது ,தன் உடம்பையும்

 மண்ணையும் ஆள்வான்..

அள்ளி அள்ளி துள்ளி துள்ளி

விளையாடிய காலம்,குழந்தை

 பருவமே வரம் !

- Vidhya 

Sunday, April 26, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நாவில் நீர் சுரக்கும்

சுவை ஊட்டும் பதார்த்தங்கள்

தட்டில் நிறைய

கண்டதும் நிறைவு கொண்டது

என் மனம்

அள்ளி அள்ளி சுவைக்க

ஆசை தான் - அருமருந்து

கொஞ்சம் கூட எடுத்தால் போதுமே!

வில்லைகள் தான்

 அருமருந்து இங்கே

உயிரும் அதன் வழியே உயிர் பெறுகிறது

- Veena 

நா சுவைக்கும் முன்னே

கண்கள் துவைக்க 

உமிழ்நீர் நாவில் சுரக்க

அமிலம் வயிற்றில் சுரக்குதே

வண்ண கலவை கண்ணுக்கு

 விருந்தாக, தட்டில் காட்சியாக ,

உண்டபின் சொர்க்கத்திற்கு

 இழுக்குமே   ..

உழைப்பு,நல்ல உணவு ,உறக்கம்

அதுவே சொர்க்கம்!

- Vidhya 

சிந்தனை துளி by Veena Shankar

 


ஒரு குப்பிக்கு ஒரு குப்பி 

இலவசம் என்றான்

மது விற்பனையாளன் 

ஒரு குப்பி மதுவுடன் 

ஒரு குப்பி தண்ணீர்

இலவசம் என்பதால்

தண்ணீருக்காக சென்றேன் அங்கே

மதுவை விடுத்து தண்ணீரை 

பத்திரப்படுத்தினேன் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் 

தாகம் கொண்டதால்

தண்ணீர் குடித்தேன் 

தாகம் தீர்ந்தேன்

எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு துளி மதுவை குடித்தேன்

என்னையே மறந்தேன்

எதுவும் தன்னாலே மறைந்து தீர்ந்ததாலே !


இப்படிக்கு 

மதுவை முதன் முதலில் குடித்து பழகியவன்

Wednesday, April 22, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 




நாவின் வலியை எவர் அறிவார்?

 மனது ஆறுதல் சொல்லும் அடங்கி நிற்க

நாவின் வலிமையையும் யார் அறிவார்?

மனதின் வலி மட்டுமே சொல்லும் அடங்கி நிற்க

சூழ்நிலை அறியாது

விரியும் வார்த்தைகளும்

அடுத்தவருக்கு வலியை மட்டுமே கொடுக்கும்

உன் காயத்திற்கு

அடுத்தவரை இலக்காக்காதே!

- Veena 

இதயத்தை ரணப்படுத்தும்

 வார்த்தையின் பிறப்பிடம் நான்

 என்றும் ,பல பழி பெயரும் உண்டு

 எனக்கு,நரம்பில்லாத நாக்கிற்கு

 மூளை மட்டும் உண்டா எது நல்லது,

 கெட்டது என்று பிரித்தறிய..

 யோசிக்க தெரிந்த உங்களிடம்

 இருக்கும்  என் நண்பனை

 கேளுங்க !

- Vidhya 

Monday, April 20, 2026

பாடம் by Veena Shankar

 


பாடம் 


"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது எவ்வளவு பெரிய உண்மை. ஒருவரின் உணர்ச்சிகளை அறிந்து கொள்வதும் அதன் கண் வரும் விளைவுகளும் அதுவுமே பாடமாகிறது என்பதை கடந்த சில வருடங்களாக பல நிகழ்வுகளால் உணர்கிறேன். 


நேற்று பிறந்த குழந்தை கூட புன்னகைத்துக் கொண்டு நமக்கு பாடம் சொல்லித் தருகிறது. 


 இப்படித்தான் நான் பார்த்து வளர்ந்த பக்கத்து வீட்டு பெண் ஒருத்தி, திருமணமாகி வேறு ஊருக்கு சென்று, ஒரு குழந்தைக்கு தாயான பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள்.  

அவளுக்கு தற்போது பத்து வயதில் ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான்.


 விவாகரத்துக்கு பின் மீண்டும் எங்கள் ஊரிலே தான் வேலைப் பார்த்து வசித்து வருகிறாள். அவள் குடும்பம் வேறு பகுதிக்கு மாற்றலாகி விட்டதால் இந்த பெண்ணை சந்திக்க முடியவில்லை.  


ஒருமுறை என்னைப் பார்க்க வந்தவளிடம் அவள் கணவனைப் பற்றி விசாரிக்க அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னாள். இவ்வளவு கஷ்டப்படுகிறாயே ஏதாவது ஜீவனாம்சம் கொடுத்தானா? என்று நான் கேட்க, அவன் யார் எனக்கு ஜீவனாம்சம் கொடுக்க? அவன் பணம் தேவையில்லை. எனக்கு சக்தி உள்ள வரை நான் வேலைப்பார்த்து என் பிள்ளையை காப்பாற்ற எனக்கு தெரியும் என்றாள் மிக தைரியத்துடன். 


 மேலும் அவள் தன் மாமியார் வீட்டில் உள்ளாள். மாமியார் வேலைக்கு செல்கிறார். காலைக்கும் மதியத்திற்கும் அவர் சமைக்க , இரவிற்கு இவள் செய்வாள் என்று கூறினாள். 


மாரியார் நல்லவர் என்றும் ஏதாவது அவர் சொன்னால் கூட தான் ஏதும் விவாதிக்காமல் அவ்விடம் விட்டு சென்று விடுவதாகவும் சொன்னாள்.


மேலும் அவள் பிள்ளையை பற்றி நான் விசாரிக்க, அரசு பள்ளியில் படிப்பதாகவும் மேற்படிப்பும் அரசு கல்லூரியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் அப்படியும் அவன் விரும்பும் பாடம் தனியார் கல்லூரியில் இருந்தால் அவனிடமே படிப்பிற்காக வங்கியில் கடன் வாங்கி அதனை அவனே அடைக்க சொல்லியுள்ளதாகவும் அவள் சொல்ல , ஒரு நிமிடம் நான் அவள் முன் தலை குனிந்தேன். 


வீடு கட்டுவதற்காகவும் பிள்ளைகளின் படிப்பிற்காகவும் குடும்பத்தின் மருத்துவ செலவிற்காகவும் நான் பெற்ற கடனை எப்படி திரும்ப செலுத்துவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் உன் கடனை மட்டும் நீ பார்! உன் பிள்ளைகளின் கல்விக்கடன் உனக்கானதல்ல ! என்று நேரே சொல்லாமல் என் தலையில் புகுத்தி விட்டாள் அவள். 


கணவர் பிரிந்த நிலையிலும் தன் மாமியாரின் அரவணைப்பில் அவள் இருப்பதும் அவரை அனுசரித்து போவதும் இன்றைய நிலையில் மிக பெரியதான ஒரு விஷயமாக எனக்கு தோன்றியது. 


 சூழ்நிலைக்கேற்ப கிடைக்கும் அனுபவ பாடமே எதிலும் சிறந்தது என்பதை நான் அவள் மூலம் அறிந்து கொண்டேன்.

Thursday, April 16, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஏந்தும் கரங்கள் தன் 

பசிக்காக மட்டுமல்ல

அடுத்தவரின் பிணி

போக்க கூட இருக்கலாம்.

பிணி என்பது நோய்

என்ற பொருள் அன்றி 

அடுத்தவரின் வயிற்றுப்பசி போக்க கூட இருக்கலாம் தானே?


 ஏதும் கிடைக்கவில்லை என்ற

ஏக்கத்தில் கேட்கும் யாசகம்

ஏந்துபவருக்கு மட்டுமல்ல

கொடுப்பவருக்கும் இழிவே!

எல்லாம் உள்ள நாட்டில்

ஏற்றத்தாழ்வு என்பது சரியோ?

சமநிலை என்பது 

என்று தான் உருவாகும்?

இது மனிதனிடத்து மனதில் 

தோன்றும் சுயநல

 உணர்வே அன்றி 

வேறு காரணம் இல்லை.

சிலவற்றை காரணம் காட்டி 

பலவற்றை இழக்கிறோம்

அன்பும் மனிதநேயமும் கொள்ளும் இடத்தில் 

ஏந்துதல் இருக்காது

கொடுப்பவர் கை மேலும்

பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதாலேயே 

சொல்ல முடியாத ஓர் உணர்வு 

சொல்லும் தன் நிலை

இழிவு என

பணத்தாலும் செல்வத்தாலும் 

மேன்மை நிலை அடைவதை 

விட மனத்தால் ஒன்றிணைந்து

கரம் கோர்ப்பீர் இந்நிலை 

மாற வேண்டி

கரம் கோர்க்கையில் 

பிரிந்திருக்கும் விரல்கள் இணைவது போலே

எவரையும் அழகாய்

மனத்தால் இணைப்போம்

- Veena Shankar 

கொடுத்து கொடுத்து தேய்ந்த

 கைகள் இன்று ஏந்த..

பசிக்காக மட்டும் அல்ல பாசத்திற்கு, 

அரவணைப்பிற்காக, நேரத்திற்கு..

ஏந்தும் எவரும்

 நினைத்திருக்கமாட்டார்கள்

 கொடுக்கும் போது இந்நிலை

 வருமென்று..

- Vidhya 



Tuesday, April 14, 2026

வெகுளித்தனம் வரவேற்கப்படுமா? by Veena Shankar

 


வெகுளித்தனம் வரவேற்கப்படுமா?


எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது. மறைந்த என் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நான் என்னவளை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டேன். வடமாநிலத்தையும் தென்மாநிலத்தையும் இணைத்து நடந்த திருமணம் எங்களுடையது. 


 என்னவள் பிறந்த இடம் எந்த ஒரு வசதியும் இல்லாத குக்கிராமம். பட்டன் போன் மட்டுமே ஒரு சிலருக்கு தெரியும். அதுவும் அவளுக்கு படிப்பறிவும் அவ்வளவாக இல்லை. மொழி மட்டுமே எங்களை இணைத்தது. வேலை நிமித்தமாக நான் வட மாநிலத்திற்கு செல்ல என்னவள் அழகிலும் மொழியிலும் என்னால் கவரப்பட்டாள். இங்கிருந்து புலம் பெயர்ந்த குடும்பம் அவளுடையது என்பது மட்டுமே சிறப்பு. பொருளாதார வசதியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் நான் அவளை இங்கு எந்த குறையும் இல்லாமல் கவனித்து வருகிறேன் .


தற்போது சென்னையில் இருக்கிறோம். நான் வேலைக்கு செல்லும் சமயம் அவள் தனியாக இருப்பாள். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நான், அவளுக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் , வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் வீடியோவை நேரம் இருக்கும் போது காண்பிப்பேன். 


இப்படி தான் ஒரு நாள் நான் குளிக்க சென்ற போது என் போனை எடுத்து என்னவள் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள் போல. அப்போது திடீரென்று " ஆ!" என்று என் மனைவியின் சத்தம் கேட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தேன். அப்போது அவள் தலை குப்புற விழுந்து கிடந்தாள். அவளுக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் அவளை நிமிர்த்தி, முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஆசுவாசப்படுத்திய பின்னரே அவளிடம் என்ன ஆனது என காரணம் கேட்டேன்.


 "ஏங்க! நான் எத்தனை முறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன் கல்யாணம் ஆகி இங்க வந்த பின் நான் ரொம்ப குண்டாயிட்டேன், வயிறு கூட பெருசா இருக்குன்னு சொன்னேன். நீங்க நம்பவேயில்லை. " என்று வெகுளியாய் சொல்ல, " சரி அதுக்கென்ன இப்ப? " என்று சூடாய் கேட்டேன். 


அதற்கு அவள் 

 " நீங்க போன்ல பார்த்துக்கிட்டு இருந்த யூடியூப் வீடியோவை நானும் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் வயிறு பெருசா இருந்தா இந்த உடற்பயிற்சி பண்ணுங்க ன்னு ஒருவர் சொல்லி கொடுத்தார். நானும் அதைத் தான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எப்படியோ என் கை தவறி தரையில விழுந்துட்டேன்" என்றுமில்லாமல் இதோ இப்படி" என்று தன் வயிற்றுப்பகுதியை தரையில் வைத்து தன் காலை பிடிக்க முயன்றாள் . " அம்மா! தாயே! நீ ஒன்றும் செய்ய வேண்டாம் " என்று சொல்லி அவளை நான் நிறுத்தி பிடிக்க, அவள் வலி தாங்க மாட்டாமல் மேலும் அழ , அவளை திட்டாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.


 அப்போது சில பல கேள்விகளை என்னிடம் கேட்டு பரிசோதனைகளை செய்த அந்த பெண் மருத்துவர் , அவள் மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்.


 நல்லவேளை இவள் செய்த சாகசத்தில் கருவிற்கு ஒன்றும் ஆகவில்லை என்று நினைத்து , அவளின் வெகுளித்தனத்தை ரசிக்காமல் கண்டித்தேன்.  


சமூக பக்கத்தில் வரும் எல்லாம் சரியானவை என்று சொல்ல இயலாது தானே?

Saturday, April 11, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


இருமுகம் காட்டின் ஒன்றும் இல்லாமல் போகும்... ஐயோ பாவம்


தக்க நேரத்தில் தோன்றாத 

அன்பும்,

தர்க்க நேரத்தில் 

தோன்றாத 

கோபமும்,

உதவிடுமோ தோழி?

- Akhila


 முகங்கள் பல உண்டு இங்கே

தேவைக்கு மாற்றிக் கொள்ள

இதில் உண்மையான முகம்

எதுவென்ற கேள்விதான்

குழப்பமாய் மனதில்

வியாபிக்கிறது

கரத்தில் உள்ள முகங்கள்

சபையே றா விட்டாலும்

சந்தர்ப்பங்கள் வரும் போது

சுயநலம் கொள்ளும்

பகிரப்படும் வார்த்தைகள்,

காதல், அன்பு, நட்பும்

எல்லாமும் மறந்து போகும்

நீ நீயாய் இருந்

என்பதைக் காட்டிலும்

எதுவும் நிரந்தரமாய் காட்டு

என்று சொல்வதே சிறப்பு


முகமூடி மாற்றினால் மட்டும் என்ன குணம் மாறி விடுமா?


இல்லையே!


மாற்றும் முகமூடியிற்கேற்ப

மாற்றம் கொள்வது

சாத்தியம் கலைஞனுக்கு மட்டுமே!


என்றாலும் உண்மை

இயல்பு மாறாது

வேடம் கலைத்து 

முகமூடி நீக்கிய பின்னால் 


உனக்கு நீயே யாரென்று

தெரியாத போது

அடுத்தவரை குறை சொல்லவும்

விமர்சிக்கவும் எவர் 

கொடுத்தார் உரிமையை?


ஒருவருக்கான வாய்ப்பை

தட்டி பறிப்பதும் 

ஏமாற்றி கைப்பற்றுவதும் 

இந்த முகமூடி எனும்

மாயவலையினாலேயே!


ஓர் உடம்பிற்குள் எத்தனை

முகங்களை பொருத்துவது?

எத்தனை சிந்தனைகளை அடக்குவது?

எத்தனை பாவனைகளை காட்டுவது?


எல்லாம் வீணாகும் ஓர் நாள்

நம் உடல் மண்ணில்

புதையும் வரையில்

எதுவும் இல்லை நம்மிடம் படைத்தவன் முன்னால்

-Veena 

உலகிற்கு கோமாளி

தன்னை யார் என்று அவனுக்கு

 மட்டுமே தெரியும்,

ஒன்றின் நிஜம் மற்றொன்று

 அறியா,

முகமறியா முகவரியற்ற உலகில்

 எதுவும் தேவையில்லை ,

அடையாளம் இரண்டு எது

 வேண்டுமோ பொட்டு கொள்ளலாம்,

எது பொருந்தும் அறுசிகிச்சை

 அறையில்... கண்கள் சிதைந்த

 பின்!

- Vidhya 

Wednesday, April 8, 2026

பயணத்தில் ஓர் காட்சி by Veena Shankar

 


பயணத்தில் ஓர் காட்சி


நானும் எனது கணவரும் கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டி எங்களிடத்திலிருந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டோம். ரயில் பயணம் இதற்கு ஏற்புடையதல்ல என்பதாலும் ஒரே பேருந்தில் பயணம் செய்தால் சில மணி நேரங்கள் கூடுதல் ஆகும் என்பதாலும் முக்கிய இடங்களில் இறங்கி ஏறி அடுத்த பேருந்திற்காக தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் காத்து நின்ற வேளையில் ஒரு கார் காரர் எங்கள் பக்கம் வந்து நின்று "திருநெல்வேலி போக வேண்டுமா? வாருங்கள் வெறும் ஐம்பது ரூபாய் தான்" என்றார்.


 சற்று யோசித்து விட்டு இருவரும் ஆமோதித்து, காரின் பின் பக்கம் ஏறி அமர்ந்தோம். ஐம்பது ரூபாய் என்பது மலிவு தான் அதுவும் குளிரூட்டப்பட்ட காரில். அவர் அனுமதியோடு மதிய உணவையும் உண்டோம்.  


போகும் வழியில் ஓர் இடத்தில் கல்லூரி பெண் ஒருவளின் அருகே காரை நிறுத்தி "திருநெல்வேலி போகணுமா? வாம்மா ! ஐம்பது ரூபாய் தான் என்று சொல்ல, அம்மாணவி வர மறுத்தாள். வெயில் அதிகமாய் உள்ளது என்பதை காரணம் காட்டி இருமுறை அவளை வற்புறுத்தியவர் அவள் ஏற மறுத்ததால் காரை அவ்விடம் விட்டு நகர்த்தினார்.


பின் பக்கம் திரும்பி எங்களிடம் "பாருங்க! ஐம்பது ரூபாய்க்கு யாரு திருநெல்வேலிக்கு கொண்டு விடுவார்கள் ? வெயில் வேற அடிக்குது" என்றார். நாங்கள் அவருக்கு மௌனத்தை பதிலாய் தந்தோம்.


 அப்போது என்னவரிடம் எங்கள் மொழியில் "அந்த மாணவி ஏறி இருக்கலாம். அதான் நாம் இருக்கிறோமே ? என்ன பயம்? " என்று நான் சொல்ல, " நீ சொல்வது சரிதான். நாமும் கார் காரரும் கூட்டாளிகள் என்று அவள் நினைத்திருக்கலாம் அல்லவா? அவள் வர மறுத்ததும் சரி தான் " என்றார். ஆம் . நான் எப்படி இப்படி தவறாக நினைத்தேன் என்று யோசித்துக் கொண்டே என் மகளிடமும் இதை கண்டிப்பாக பகிர வேண்டும் என மனதினிலிட்டேன்.  


 எவர் வழியில் எவர் சரி என்பதை கணிக்க முடியாத காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் எண்ணிக் கொண்டேன். ஆனால் கார் காரர் நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு சரியாக கொண்டு போய் விட்டார் என்பது மகிழ்ச்சி தான் என்றாலும் நானும் அப்பெண்ணை போல் தனியாக நின்றிருந்தால் காரில் ஏறி இருக்கமாட்டேன் என்பது தான் உண்மை .

Tuesday, April 7, 2026

படமும் கருத்தும் by winmeengal



 அம்பேத்கர் உயரவில்லையா?

அப்துல்கலாம்

சிறப்பு அடையவில்லையா?

சாதாரண சித்தாந்தன் கெளதம புத்தன் ஆகவில்லையா?

முடியும்!முடியும்!முடியும்!-என்று உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்குள்💯பாறையின் இடுக்கே கூட வேரூன்றி வளரும் இம்மரத்தைப் போல - விடாமுயற்சியும் நம்பிக்கையும்

நேர்மறைச் சிந்தனைகளும் நமக்குள்ளும் வேரூன்றச் செய்திடுவோம்🩷

-ரேவதி சக்தி


எவர் எதை தாங்க, 

இடம் கொடுத்தவருக்கு உயிரை கொடுக்க ஒன்று,

தன்னை நம்பி வந்தவனுக்கு தன் பலத்தை,அடையாளத்தை விட்ட ஒன்று,

இதில் எது பெரியவர் என்ற அலங்காரம் அழிய குணத்தால் உயர்ந்த இருவர்,

இவர்களை யாரும் தொந்தரவு செய்யாவிடில் பல உயிருக்கு பாலமாகும் இந்த நட்பு!

-Vidhya Nivash


உயர்ந்தவர் யாரென்ற

தர்க்கம் இல்லை

ஒருவரை ஒருவர்

மதிக்க தெரிந்த இடத்தில்

பாறையிலும் நீர் சுரக்கும்

மரத்திலும் வலிமை இருக்கும்

ஒருவரின் குணம்

மற்றவர் அறிந்த போதும்

அமைதி ஒன்றே என்றும்

உயிர்த்திருக்கும் என்ற 

சிந்தனை மனதில்

எழுந்தால் எதுவும்

துச்சமே!

இருவர் கூட்டணியில்

ஓர் அணியாய்

வலம் வர

வெற்றி என்றும் அதற்கே!

மறப்பதும் சிறப்பே

அடுத்தவர் பிழையை 

பதவியின் பால் போதை 

கொள்ளாது - பிறர்

நன்மை கருதி

எதிரியை எதிர்க்க

வளம் கொள்ளும்

எண்ணிய வாழ்வு

என்ற போது மட்டுமே 

இந்நட்பு என்றும் தொடரும்

- VeenaShankar


இணையர் வேர்கள் வலுவாக இருப்பின் -


எந்த கொம்பனாலும் 

(பாறையானாலும்😎)

வீழ்த்த முடியாது! 


பெண் மரம் - கீர்த்தி சிறிதோ, பெரிதோ- அது தோளிலே தாங்கும்💪

குலம் காக்கும்🫂🥰

- Akhila 

Sunday, April 5, 2026

படமும் கருத்தும் by winmeengal



 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்!

கஷ்டம் தானே வருகிறது;

கழுத்துக்கு என்ன கத்தியா வருகிறது ?

பெண்களே!

எத்தனை முறை நன்மையான அல்லது நமக்குப் பிடித்த விஷயங்களை செய்ய முற்படும்போதும் வீட்டிலிருந்தே அனுமதி மறுக்கப்படுகிறதோ அத்தனை முறையும் குரல் கொடுங்கள் பல தலைமுறைகளாக பின்பற்றும் அர்த்தமில்லா வரைமுறைகள் தைத்த கயிற்றை அவிழ்த்தோ☝️ அறுத்தோ☝️

-ரேவதி சக்தி

 

 நூறு இழைகள் இணைந்தாலும்

தாங்கும் சக்தி 

ஓரிழைக்கு கூட உண்டு

 பிணைப்பது எளிதல்ல

பிணைந்திருப்பதும் எளிதல்ல 

ஆனால் பிரிவதும் பிரிந்திருப்பதும்

அதனின்று

மீள்ந்து வாழ்வதும் கடினமே!

தாங்க கூடிய பாரத்தை பொறுத்தே

கயிற்றின் உறுதி தன்மையை அளவிட முடியும்

அதுபோலத்தான்

எந்த ஒரு உறவும்

மனதின் வலியை

பொறுத்தே அமையும்

சேர்வதும் பிரிவதும் 

பிரிந்தும் விலகாமல்

எட்ட நின்று பார்ப்பதும்

உறவின் உறுதியே!

கயிற்றை பின்ன தெரிந்த

மனிதனுக்கு உறவுகளிடம் பின்னியிருக்க

மறப்பது ஏன்?

- Veena Shankar 

 *அறுத்தலும் தேவை* 

தேவை- சினமும் தேவை; அன்பை போலே!!

தேவை- கசப்பும் தேவை; இனிப்பை போலே!!

தேவை- பிரித்தலும் தேவை; சேர்த்தலை போலே!!

தேவை- அறுத்தலும் தேவை -ஆக்கத்தை போலே!!

அறுத்தெறிவோம்- தலை கீழ் விகிதங்களை✨️

- Akhila 

 நூலிழை போதும் நம்பிக்கையில் அது சேர..

ஆயிரம் கண்கள் சொல்லும் அது பிரியும் என்று,

 இரண்டோ பல கைகள் பின்ன இணைந்தன! ஒற்றை விரல் நுனி பட்டால் ஐயோ?

 பலம் வலுவிழக்க ஒரு பாலம் உடையுதே! பிரிந்தன என்று தூக்கி எறிய...

 இல்லை முடிச்சு போட, அது உறுதியாக அல்ல.. முடிச்சாக உறுத்தாத! எதுவும் சாத்தியமே மனமிருந்தால்...

- Vidhya Nivash 

என்ன சத்தம் இங்கே?

புரிதல் இல்லாத

 இழைகள் பிரியும் சத்தமா?

சேர்ந்து கைகோர்த்த

நொடிகள் வெற்றிக் 

கொண்டாட்டமே!

இணைக்கும் வகையில் 

இணையும் இழைகள் 

அல்லாது 

இணைப்பவர் கூட

இணைந்து கைகோர்க்கும் 

பலரது உழைப்பிற்கு

ஓர் அடையாளம்

பிரிவு ஒன்று இல்லை எப்போதும் 

திரிக்கப்படுவது தாம்புக் கயிறோ,

தாலிக்கயிறோ!

திரியாமல் மனம் இருக்கவே

வேண்டுவோம்

தீர்வு காணா செயலுக்கு

தவறாக துணை

 போகும் போது

இழையில் பிரிதல்

கொண்டால் தவறில்லை

ஓர் உயிர் பிரியாமல்

இருக்கவே 

சரியான நேரத்தில்

சரியான பாதைக்கு

மேற்கொள்ளும் முடிவு

ஒன்றிணைந்த இழைகள்

போலே உறுதி அடையும்

பிரியும் இழைகளாய் 

இல்லாமல் ஒன்றிணைக்கும் செயலாய் 

இருப்பது என்றும் அறிவே!


 பணமா? பாசமா?

யாருக்கு பலம் அதிகம்

என்ற இருதரப்பினர் 

போட்டியில் அறுப்பட

காத்திருக்கிறது கயிறு

இரண்டிற்கும் காரணமாய் 

இழைகள் பிரிய பிரிய 

எதற்கும் நம்பிக்கை

மட்டுமே விடை என்று

சொல்லி பாலமாய் நின்று

ஓரிழை நம்பிக்கை தந்தது

- Veena Shankar 

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...