இன்றைய சம்பவம்
செல்போன் மணி அடித்ததும் அம்மா ,
" இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை, வேற வேலை இல்லை எனக்கு" என்று கடிந்து கொண்டே தன் இரட்டைப்பிள்ளைகளை "ராமா! கிருஷ்ணா!" என்று அழைத்தாள். இவள் அழைப்பை ஏற்று இருவரும் வந்தாலும் கிருஷ்ணன் வருவானா? ராமன் மட்டுமே அம்மாவிடம் வர கிருஷ்ணன் பக்கத்திலிருந்து எட்டி பார்த்தான்.
வந்த ராமனிடம்
" இந்தா ! இதை போய் அப்பாவிடம் கொடு." என்றதும் "ஆமாம்மா! அப்பாவுக்கு இப்பப்ப நிறைய போன் கால் வருது " என்றபடி ஓடி வந்து தன் பங்கிற்கு வத்தி வைத்து விட்டு ராமனிடம் இருந்து செல்போனை பிடிங்கிக் கொண்டு பக்கத்திலிருக்கும் அப்பாவின் கடைக்கு ஓடி சென்றான் கிருஷ்ணன்.
ஆனாலும் அலைபேசியின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலிக்க, "ச்சே! " என்று எழுந்த அம்மா, ஒலி வந்த பக்கம் தன் கையை கொண்டு சென்று பார்க்க , அது அவள் காலையில் எழ வேண்டி வைத்த அலாரம் சத்தம் என்றும் தான் கண்டது கனவு என்பதை உணர்ந்து கொண்டு சிரித்தாள்.
செல்போன் எடுத்து கொண்டு அப்பாவிடம் கொடுக்க அவளோடு பிள்ளைகள் ராமனும் இல்லை கிருஷ்ணனும் இல்லை. இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். அதை வாங்கிக் கொள்ள அவள் கணவனும் உயிரோடு இல்லை. யாருடைய பராமரிப்பும் இன்றி தனித்து வளரும் செடி போல் வாழ்கிறாள் அம்மா.
பின் குறிப்பு: மரம் என்று சொன்னால் கொஞ்சம் உறுதியாய் இருக்கும். அதனால் தான் செடி என்று குறிப்பிட்டேன்.
