Wednesday, April 1, 2026

இன்றைய சம்பவம் by Veena Shankar



 இன்றைய சம்பவம் 


செல்போன் மணி அடித்ததும் அம்மா , 

" இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை, வேற வேலை இல்லை எனக்கு" என்று கடிந்து கொண்டே தன் இரட்டைப்பிள்ளைகளை "ராமா! கிருஷ்ணா!" என்று அழைத்தாள். இவள் அழைப்பை ஏற்று இருவரும் வந்தாலும் கிருஷ்ணன் வருவானா? ராமன் மட்டுமே அம்மாவிடம் வர கிருஷ்ணன் பக்கத்திலிருந்து எட்டி பார்த்தான்.


 வந்த ராமனிடம்

 " இந்தா ! இதை போய் அப்பாவிடம் கொடு." என்றதும் "ஆமாம்மா! அப்பாவுக்கு இப்பப்ப நிறைய போன் கால் வருது " என்றபடி ஓடி வந்து தன் பங்கிற்கு வத்தி வைத்து விட்டு ராமனிடம் இருந்து செல்போனை பிடிங்கிக் கொண்டு பக்கத்திலிருக்கும் அப்பாவின் கடைக்கு ஓடி சென்றான் கிருஷ்ணன். 


ஆனாலும் அலைபேசியின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலிக்க, "ச்சே! " என்று எழுந்த அம்மா, ஒலி வந்த பக்கம் தன் கையை கொண்டு சென்று பார்க்க , அது அவள் காலையில் எழ வேண்டி வைத்த அலாரம் சத்தம் என்றும் தான் கண்டது கனவு என்பதை உணர்ந்து கொண்டு சிரித்தாள்.


 செல்போன் எடுத்து கொண்டு அப்பாவிடம் கொடுக்க அவளோடு பிள்ளைகள் ராமனும் இல்லை கிருஷ்ணனும் இல்லை. இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். அதை வாங்கிக் கொள்ள அவள் கணவனும் உயிரோடு இல்லை. யாருடைய பராமரிப்பும் இன்றி தனித்து வளரும் செடி போல் வாழ்கிறாள் அம்மா. 


பின் குறிப்பு: மரம் என்று சொன்னால் கொஞ்சம் உறுதியாய் இருக்கும். அதனால் தான் செடி என்று குறிப்பிட்டேன்.

Tuesday, March 31, 2026

நெற்றிப்பொட்டு by Veena Shankar

 


நெற்றிப்பொட்டு 


எனை நான் கண்ணாடியில் நோக்க 

அங்கே உன் பிரவேசம்

என் பிம்பத்தில் உன் பிம்பத்தை சரி செய்கிறேன் நித்தமும் 

ஒருநாள் குங்குமத்தினால்

மறுநாள் செயற்கையாய் 

ஒட்டிக்கொண்டு

நிறைவு செய்வேன் நெற்றியை

அமாவாசையாய் இருந்த நீ இன்று காலப்போக்கில் 

கொசுவின் கால் அளவு சுருங்கி போனதென்ன?

அதுவும் பொறுத்தேன் 

ஆயினும் வெறும் நெற்றியாய் வலம் வரும் பெண்டிரை காண்கையில் ஈடுபாடு கொள்ள செய்யவில்லை 

அயல்நாட்டவர் போலே மனது எண்ணுவதால்

எதுவும் நிரந்தரமல்ல பூமியில்

இரவு - பகல், சூரியன் - சந்திரன் 

என்பது போலே

இன்றைய நாள்

சுருங்கியும் 

மறுநாள் விரிந்தும் 

சிலநாள் உருண்டும் 

பலநாள் நீண்டும்

இருக்கும் உன் உருவம்

வண்ண வண்ண சித்திரம் போலே 

நெற்றியில் வித்தை காட்டுகிறது

Monday, March 30, 2026

இன்றைய சம்பவம் by Veena Shankar

 


இன்றைய சம்பவம்


நான் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் இன்று எட்டாம் நாள் திருவிழா என்பதால் அதை கொண்டாட எண்ணி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கோயிலுக்கு சென்று விழாவில் கலந்து கொள்ள நினைத்தேன். கோயிலுக்கு சென்று சாமியை பார்த்து விட்டு வீடு திரும்புகையில் எனக்கு சிறு தொன்னையில் புளியோதரை பிரசாதமும் கிடைத்தது. சிறு துளி வாயில் இட்டு பார்க்கையில் அது தேவாமிருதமாக இருக்க, அதன் ருசியில் மயங்கியவாறே வீட்டை நோக்கி நானும் நடக்க, என் கையிலிருந்த தொன்னையை அருகிலிருந்த சிறுவன் ஒருவன் பார்க்க, அவன் கையில் அதை கொடுத்து நடையை கட்டினேன். 


சாமி திருவீதி உலா வருவதற்கு முன் அனைத்து வீடுகளிலும் வாசல் தெளித்து கோலமிட்டு சாமிக்கு படைக்க பூ , பழம் சகிதமாக நிற்பர். எங்கள் வீடும் அங்கே இருப்பதால் ஒரே கோலாகலம் தான் மனதில் குதூகலத்தோடு. கொட்டு மேளம் இசைக்க, சாமியின் தரிசனம் மீண்டும் கிடைத்தது. சாமி எங்கள் வீட்டை கடந்ததும் எதிர்வீட்டு மாமியின் திருவாய் மொழிதளுக்காக காத்திருந்தேன். அவர் என்னை எப்போது கூப்பிடுவார் என்று நினைத்திருக்க ஏமாற்றமே மிச்சம். மாமி என்னை கண்டுகொள்ளாமல் வீட்டினுள் சென்று விட்டார். 


நானும் வீட்டிற்குள் வந்து என் அலைபேசியை பக்கத்தில் வைத்து அங்கிங்கும் அசையாமல் காத்து கிடந்தேன். அலைபேசியின் வெளிச்சம் தான் என் ஆசைக்கு வடிகால் கொடுக்கும். ஆஹா! அலைபேசியில் வெளிச்சம் வர உசாரானேன். அவசரமாய் எடுத்து பேசுகையில் அண்ணே! சாமி திருவீதி உலா புறப்பட்டாரா? என்று எதிர்முனையில் தெரிந்தவர் ஒருவர் கேட்க, ஒப்புக்கு சிரித்து பதில் கொடுத்தேன் .நான் காத்திருந்தது எதிர்வீட்டு மாமியின் அழைப்பிற்காக.


 முன்பெல்லாம் எங்கள் வீடு தேடி பிரசாதம் கொடுத்தவர் இப்போது வயது மூப்பு காரணமாய் ஒரு சில நேரம் அலைபேசியிலும் அழைப்பார்.


நான் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் மாமியின் அழைப்பு வர, சமையற்கட்டு பக்கம் ஓடி போய் அலமாரியில் கவிழ்த்தப்பட்டிருந்த பாத்திரத்தை எடுத்து தயாராய் நிற்க, "அப்பா!! இன்று புளியோதரை கொஞ்சமாய் தான் வந்திருக்கு, தொன்னையில் எடுத்து வைத்திருக்கிறேன், வந்து எடுத்துட்டு போ " என்று மாமியின் குரல் சொல்ல, பாத்திரம் என்னை ஏளனமாய் சிரித்தது. இந்த மாமியை நம்பி கையிலிருந்த பிரசாதத்தை வேறு தானம் பண்ணிட்டேனே என்று என் உள் மனது சொன்னாலும் என்னிடமிருந்து வாங்கிய அந்த சிறுவனும் தனக்கு கிடைக்காமல் எனக்கு மட்டும் பிரசாதம் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணி பார்த்திருப்பான் தானே? கொடுத்ததில் எனக்கு பெரிய இழப்பேதுமில்லையே


எதுவும் எப்போதும் கிடைப்பதை விட எப்போதாவது கிடைப்பதில் தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன் நான்.

Sunday, March 29, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மனம் புண்பட்ட நேரத்தில் கூட 

அதை இதமாக்க

பதப்பட்ட இலைகளால் 

தயாரிக்கப்பட்ட தேநீர்

மெல்ல இறங்கும்

தொண்டையின் வழியே 

புது உற்சாகம் பிறக்க


 அவாவினால் பிறந்த தேநீரின் ஆவி

என் ஆவி குளிர வைத்து

அவாவினை நிறைவேற்றியது


ஆசையின் விளைவு


" சரி! இந்த பேச்சை இத்தோடு விடு" என்று சொல்லி விருட்டென்று எழுந்து அறைக்குள் போனான் விமல். " இப்ப என்ன சொல்லிட்டேன்? எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. என் வேலையும் கெடுது. கொஞ்சம் நான் கேரியர்ல மேலே வந்துக்கிறேனே? உங்களால எல்லாம் சிறப்பா செய்ய முடியும். ஆனால் நீங்க செய்யறது இல்லை நான் கொஞ்சம் ஸ்லோ தான். " என்று சத்தமாய் கத்தினாள் சுஜாதா. 


 "நீ என்ன கத்தினாலும் சரி, நீ பண்ணினது தப்புதான். என்ன கேட்டுட்டேன் பெரிசா?" என்று பதிலுக்கு உள்ளிருந்தபடியே தான் தப்பு செய்ததாக எண்ணி தன் அம்மாவை மனதால் கடிந்து கொண்டான். 


 பொண்ணு பார்க்க வரும்போதே இந்த கண்டிசன் போட்டு சரின்னு சொன்னா மட்டுமே கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்லி இருந்தான் விமல்.


"அதெல்லாம் போக போக சரியாயிடும் ன்னு என்கிட்ட சமாதானம் சொன்னாங்க அம்மா. அதுவுமில்லாம அவ சின்ன பொண்ணுதானே, உன் ஆசையை தள்ளி வைத்து அவ ஆசைப்படி கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்று தன் வருங்கால மருமகளுக்கு வக்காலத்து வாங்கினாள்" என்று மறுபடியும் விமல் சுஜாதா மேல் எகிற, 

" எனக்கு தெரியும் . இந்த ஆம்பளைங்களால ஆசையை அடக்கவே முடியாது" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்கு போனாள். ஏதேதோ உருட்டும் சத்தம் கேட்டது. 


"இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!" என்றபடி இரு கோப்பையில் தேநீரை கொண்டு வந்து விமல் பக்கம் வைத்தாள் சுஜாதா. "இதை நான் கேட்கும் போதே செய்திருக்க வேண்டியது தானே?" என்றபடி இரு கப்பில் எதில் அதிகம் தேநீர் இருக்கிறது என்று ஆராய்ந்து அதை எடுத்தான் தேநீர் பிரியரான விமல்.

- Veena


உனக்கும் எனக்கும் மட்டுமே உரையாடல்,

அது ஒரு தவம்

தடங்கல் கூடாது

மௌன மொழி வழி

விழிகள் மூடி

உன்னை பருக 

கிடைக்கும் புத்துணர்ச்சி 

- Vidhya 



Saturday, March 28, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அன்பின் வழியில்

எதுவும் இன்பமே!

அறிந்தவர் நோக்கத்தில்

எதுவும் இயல்பே!


மனதால் கொண்ட சிநேகம்

காலத்தால் பேசப்படும்

அறிவு பேசப்படா நேரத்தில்

அன்பின் மொழி மட்டுமே

இயம்பும் வார்த்தை நீங்கலாக


 யாருக்கு யார் சொல்வது நன்றி?

ஒருவேளை உணவு கொடுத்ததற்கு

ஞமிலி 

குழந்தைக்கு சொல்லும் நன்றியா?

தன் தனிமை போக்கியவனுக்கு

குழந்தை 

சொல்லும் நன்றியா?

இல்லை கூட்டு சேர்ந்து

அடுத்தவரை கவிழ்த்த நினைக்கும் சங்கதியா?

இருக்காது

இருவர் மனதிலும்

வஞ்சம் இல்லை

வயதின் கண் 

நட்பு ஒன்றே பிரதானம் என்றும்

இவர்கள் மனதிற்குள்

- Veena 


God bless you!

நல்ல ஓடியாடி விளையாடு என்னை

விட்டுவிடு நிறைய வேலையிருக்கு

முதல்ல அந்த ரீல்ஸ் 

 முடிக்கணும் இல்லே ஜீலி

 திட்டுவா!

இவங்க கூட சேர்ந்து வாக்கிங் கூட

 போக முடியல ஒண்ணு மழை,

ஆன்லைன் கிளாஸ் வேற,

வளர்ந்துவிடாதே வீட்டு

 செல்லப்பிள்ளையா இருந்து விடு

 இல்ல ,புலம்பியபடி கடவுளை

 கூப்பிட வேண்டும்,அவரும் பிஸி

 எத்தனைய தீர்ப்பாரு!

இன்றைய முக்கிய செய்திகள்

 என்று 24/7 😇 கடைசில என்னையும்

 அவங்க மாதிரி ஆக்கிட்டாங்க 🙄

- Vidhya 


Friday, March 27, 2026

எவரிடம் எது காத்திருக்கிறது? by Veena Shankar

 



எவரிடம் எது காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை அழகு என்று நிரூபிக்க 
மலர் பூக்க காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை பிரமாண்டம் என்று நிரூபிக்க மலை காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை பலசாலி என்று நிரூபிக்க காற்று காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை எளிமை என்று நிரூபிக்க தண்ணீர் காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை சிறப்பு என்று நிரூபிக்க மழலையின் சிரிப்பு காத்திருக்கிறது?

எவரிடம் தன்னை கொடுப்பவன் என்று நிரூபிக்க அன்பு காத்திருக்கிறது?

எவரிடம் எவரும்
வெளிப்படையாக இருக்கும் வரை எதுவும்
 காத்து நிற்கும். 

படமும் கருத்தும் by winmeengal

 


Veena Shankar: 

உன் வாழ்வும் மரணமும் 

என் கையில்

நிலத்தில் வந்த 

உன் உயிர் மீண்டும்

 நீரை அடையும் வரை


 வகை வகையாய் நீர்நிலைகளில்

வளர்கிறாய்

அலங்காரமாய் தொட்டியில் நீந்துகிறாய்

 இறந்தும் கண் விழிக்கிறாய்

பசி ஆற்றுகிறாய்

மனிதனுக்கு மருந்தாகிறாய்

அழகாய் இருக்கும்

உன்னை ஆவலாய் உண்ண நினைக்கிறேன்

நான் காகை கூட்டமல்ல 

ஒன்றிணைந்து தின்ன

என் தேவை போய்

எவரும் ருசிக்கலாம்

உன்னை யாரும்

ருசிக்கும் வேளையில்

உன் பெரிய இனமும்

கடலில் மனிதனை

பதம் பார்க்கிறது

உன்னை உண்டு 

நான் சிறக்க

மனிதனை உண்டு

நீயும் பசியாருகிறாய்


 Akhila : 

*பூனையின் mind voice🤔*


இது....

நிஜ மீனா? AI மீனா??🤔


கண் முன்னே...

என் முன்னே...

கைக்கெட்டும் தூரத்தில்!

ஆயினும், நான் தொட மாட்டேன்‍‍ - நீ 

என் இரை அல்ல; ‍ 

நான் உன்னை வேட்டையாடவில்லை

யாரும் சாட்சி இல்லை தான்‍ - ஆயினும்

என் மனசாட்சிக்குத் தெரியும்!

Vidhya:

உனக்கும் பசி எனக்கும்

கண்கள் நோக்க

மனிதாபிமானமா, சுயநலமா

எது வெல்லும்?

இரண்டில் ஒன்று  விட்டுக்கொடுக்க

ஒன்று வெல்லும் 

 இல்லையேல் இரண்டும்

 மடியும்!


 



இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...