இன்றைய சம்பவம்
நான் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் இன்று எட்டாம் நாள் திருவிழா என்பதால் அதை கொண்டாட எண்ணி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து கோயிலுக்கு சென்று விழாவில் கலந்து கொள்ள நினைத்தேன். கோயிலுக்கு சென்று சாமியை பார்த்து விட்டு வீடு திரும்புகையில் எனக்கு சிறு தொன்னையில் புளியோதரை பிரசாதமும் கிடைத்தது. சிறு துளி வாயில் இட்டு பார்க்கையில் அது தேவாமிருதமாக இருக்க, அதன் ருசியில் மயங்கியவாறே வீட்டை நோக்கி நானும் நடக்க, என் கையிலிருந்த தொன்னையை அருகிலிருந்த சிறுவன் ஒருவன் பார்க்க, அவன் கையில் அதை கொடுத்து நடையை கட்டினேன்.
சாமி திருவீதி உலா வருவதற்கு முன் அனைத்து வீடுகளிலும் வாசல் தெளித்து கோலமிட்டு சாமிக்கு படைக்க பூ , பழம் சகிதமாக நிற்பர். எங்கள் வீடும் அங்கே இருப்பதால் ஒரே கோலாகலம் தான் மனதில் குதூகலத்தோடு. கொட்டு மேளம் இசைக்க, சாமியின் தரிசனம் மீண்டும் கிடைத்தது. சாமி எங்கள் வீட்டை கடந்ததும் எதிர்வீட்டு மாமியின் திருவாய் மொழிதளுக்காக காத்திருந்தேன். அவர் என்னை எப்போது கூப்பிடுவார் என்று நினைத்திருக்க ஏமாற்றமே மிச்சம். மாமி என்னை கண்டுகொள்ளாமல் வீட்டினுள் சென்று விட்டார்.
நானும் வீட்டிற்குள் வந்து என் அலைபேசியை பக்கத்தில் வைத்து அங்கிங்கும் அசையாமல் காத்து கிடந்தேன். அலைபேசியின் வெளிச்சம் தான் என் ஆசைக்கு வடிகால் கொடுக்கும். ஆஹா! அலைபேசியில் வெளிச்சம் வர உசாரானேன். அவசரமாய் எடுத்து பேசுகையில் அண்ணே! சாமி திருவீதி உலா புறப்பட்டாரா? என்று எதிர்முனையில் தெரிந்தவர் ஒருவர் கேட்க, ஒப்புக்கு சிரித்து பதில் கொடுத்தேன் .நான் காத்திருந்தது எதிர்வீட்டு மாமியின் அழைப்பிற்காக.
முன்பெல்லாம் எங்கள் வீடு தேடி பிரசாதம் கொடுத்தவர் இப்போது வயது மூப்பு காரணமாய் ஒரு சில நேரம் அலைபேசியிலும் அழைப்பார்.
நான் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் மாமியின் அழைப்பு வர, சமையற்கட்டு பக்கம் ஓடி போய் அலமாரியில் கவிழ்த்தப்பட்டிருந்த பாத்திரத்தை எடுத்து தயாராய் நிற்க, "அப்பா!! இன்று புளியோதரை கொஞ்சமாய் தான் வந்திருக்கு, தொன்னையில் எடுத்து வைத்திருக்கிறேன், வந்து எடுத்துட்டு போ " என்று மாமியின் குரல் சொல்ல, பாத்திரம் என்னை ஏளனமாய் சிரித்தது. இந்த மாமியை நம்பி கையிலிருந்த பிரசாதத்தை வேறு தானம் பண்ணிட்டேனே என்று என் உள் மனது சொன்னாலும் என்னிடமிருந்து வாங்கிய அந்த சிறுவனும் தனக்கு கிடைக்காமல் எனக்கு மட்டும் பிரசாதம் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணி பார்த்திருப்பான் தானே? கொடுத்ததில் எனக்கு பெரிய இழப்பேதுமில்லையே
எதுவும் எப்போதும் கிடைப்பதை விட எப்போதாவது கிடைப்பதில் தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை முன்பே உணர்ந்திருந்தேன் நான்.

No comments:
Post a Comment