Thursday, November 18, 2021

கடற்கரை சிந்தனை துளிகள் by Veena Shankar


 

கடற்கரை  நினைவுகள்


                                    என் பள்ளி பருவ காலத்தில்  பொழுதுபோக்கு என்று சொன்னால் அது சினிமா, கோயில்  அல்லது கடற்கரையாகத்தான் இருக்கும். தற்போதுள்ளதுபோல்  பொழுதுபோக்கிற்காக நிறைய  இடங்கள் இல்லாத காலம். 


                         எத்தனை முறை குடும்பத்தோடு கடற்கரைக்கு சென்றாலும் எனக்கு முதலில் நினைவு வருவது எங்கள் பள்ளியில் சென்ற ஒரு நாள் இன்ப சுற்றுலா தான். முதன் முதலில் செல்லும் பள்ளி சுற்றுலா என்பதால் அவ்வளவு சந்தோஷம். அதுவும் கடற்கரை என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. சிறிய வகுப்பில் இருந்த போது கடலின் எதிர்புறத்தில் உள்ள தியான மண்டபத்தில்  தியானம் செய்ய  மாணவர்கள்   அழைக்கப்பட்டிருந்தாலும்  கடலையும் கடற்கரையையும் ரசிக்க முடியாத சூழ்நிலை.  


                                          சுற்றுலா தினத்தன்று முதலில் சென்னையில் உள்ள பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலுக்கு செல்வது தான் திட்டம். கோயிலையும் கடலையும் ஒருசேர ரசித்தவாறே இருக்கலாம் என்பதால்  அந்த ஏற்பாடு. பள்ளி குழந்தைகள் என்பதால் கோயிலில் சிறப்பு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும்  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


                              கோயில் தரிசனம் முடிந்து, கடற்கரைக்கு வந்து அமர்ந்து,  அவரவர் கொண்டுவந்த காலை உணவினை சாப்பிட, அப்போதுதான் பார்த்தேன் என் கிறிஸ்டல் மாலையில் டாலர் இல்லை என்பதை. அவ்வளவு தான். கடலை  ரசிக்க முடியாமல் தொலைந்து போன டாலரோடு நானும் தொலைந்தேன் என நினைத்துகொண்டிருந்தேன். ஏனென்றால் என் அக்காவின் செயினையும், அதில்  கோர்க்க புதிதாக வாங்கிய கிறிஸ்டல் டாலரையும் மன்றாடி வாங்கி  அன்று அணிந்து  வந்திருந்தேன். எது எப்படியோ கடலில் கிடைக்கும் முத்து போல மண்ணில் என் டாலர்  மின்னியது  தான்  அதிசயம். 


                           பிறகென்ன  அடுத்து மகாபலிபுரம் கடலில் ஆட்டம் ஆரம்பித்தது. அலைமோதும் கூட்டத்திலும் காட்சிகள் விரிய ஆரம்பித்தது. எங்கள் பார்வை கடற்கரையை  கோயிலை பார்த்து ரசிக்க,    அங்கேயே மதிய சாப்பாடும் அரங்கேறியது. அந்நிய நாட்டவரின் பிரவேசமும் எங்களை ஆச்சரியப்படுத்தியது.  பலவித பொருட்களை வாங்கியதாகவும் ஞாபகம்.


                           இதேபோலத்தான் மற்றொரு நாள் குடும்பத்தோடு அதே பெசன்ட்நகர் கோயிலுக்கு செல்ல, அங்கே இரண்டாவது முறையாக சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது மாநகர காவல்துறை. இதனால் மளமளவென்று கடைகள் அடைக்கப்பட்டு, நாங்கள் செல்லும்  நேரம் கோயிலும்  அடைக்கப்பட்டது. கடலும் மிகுந்த சீற்றமாக காணப்பட்டது.  நேரம் ஆக ஆக கடல்அலைகள் கரையை நோக்கி  ஆக்ரோஷமாக வர ஆரம்பிக்க, அது வரை  கடலை ரசித்து வந்த நாங்கள், நிலைமை மோசம்  என்பதை உணர்ந்து புறப்பட தயாரானோம். உயிர் பயத்திற்கும் அப்பாற்பட்டு,  இன்னும் சிறிது நேரம் கடலை ரசித்து செல்லலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு சிறிது வருத்தம் தான் மிஞ்சியது. மாங்காய், சுண்டல், முறுக்கு போன்றவற்றை    ருசிக்காமல் திரும்பியது எங்களுக்கு ஒருவித  ஏமாற்றத்தை தந்தது. 


                            கோயில் அடைக்கப்பட்டு இருந்தாலும் அங்குள்ள சர்ச்சுக்கு சென்று வழிபட்டதையும் மறக்க முடியாது. இந்த  இரண்டும் என்  என் மனதில் என்றும் நீங்கா இடம் பெறும்  நிகழ்வுகளாகும்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...