Wednesday, May 27, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அறிவும் வியாபாரம் ஆனதோ?


புது உத்தியும் புகுவது இவனாலே!


சேமிப்பின் பயன் சொல்லும் இவனும்

அதிகப்படியான அறிவால் 

ஓர் நாள் அழிவானோ? 


நம் செல்வாக்கை 

உயர்த்தியும்


சில சமயம் அடுத்தவரால் செல்லாக் காசாக ஆக்கப்படுபவனும் இவனாலே!


 பொன் முட்டை இடுகின்ற வாத்து

இப்போது உடைபட்டு

நிற்கிறது

காலத்தின் சுயநலத்தால்


 வங்கியில் சேர்த்து வைத்த 

சேமிப்பல்ல இது

தன் அறிவு கொண்ட மூளையை

பயன்படுத்தியதால்

வீழ்ந்து கிடக்கும் பணம்

அறிவு கொட்டிக்கிடக்கின்றவனுக்கு

செல்வம் கொட்டிக் கிடக்கின்றவனின் 

அன்பு பரிசு

எதற்கும் விலை

காணும் உலகில்

-Veena 

இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி

இருக்கும்,

தலைக்கு பூட்டு போட

 வேண்டுமோ...

கடன் கேட்க வருபவன்

 சுத்தியலோடு திரிவானோ..

டிஜிட்டல் முறையில் லாக்கர் போட

 வேண்டுமா...

இங்கு சேமித்தால் எவரும் திருட

 முடியாது,நாமும் பயன்படுத்த

 முடியாது!

- Vidhya 




Sunday, May 24, 2026

படமும் கருத்தும் by Veena Shankar

 


கைத்தலம் பற்றியதால் 

மட்டுமே இந்த உரிமை

கால்கள் பற்றிக்கொள்ள

மோகங்கள் மௌனமாய் பேசும்

விடியல் வரை

அரங்கேறும் 

வாசலில் கோலம் பூக்க

ஜாலம் அறைக்குள்ளே என்றென்றும்

 தொடர்கதையாய்


நர்த்தனம் கால்களால் ஆட

உடல் அசைவுகள்

மொழி பேச

முகம் அபிநயங்கள் காட்ட

உதடுகள் ஆட்டத்திற்கேற்ப 

அசைந்து கொடுக்க

வார்த்தைகள் மட்டும்

மௌனமாய் இருக்க

அரங்கம் இசையில் குளிர

யாருக்காக இந்த 

படைத்தவனின் நடனம்

அவன் கண் அசைவில்

நாம் ஆடுகின்ற நிலையில்

அவன் நாட்டியமும் 

சபையில் அரங்கேறி

நம்மை சிலிர்க்க வைக்கிறதே

அவன் ஆட நாம் ஆட

உலகம் எனும் நாடக

மேடையில் அவன் 

ஆட்டுவிக்கும் நடிகர்கள்

 நாம் தானே!

Saturday, May 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மகிழ்ச்சி என்பதை பட்டுப்புடவை

மட்டும் தருவதில்லை

பட்டாம்பூச்சி போல் 

இலகுவாய், வண்ணமாய்

இருப்பதில் கூட உண்டு

சிரிப்பில் கவலை மறக்க

குடம் கூட நிறைக்கும்

தாகத்திற்கு தண்ணீர் வேண்டி

பச்சைப்பசேல் வயல்வெளியும்

காட்டியது மகிழ்ச்சியை

தன் செழிப்பால்

செவி குளிர அடுத்தவர் மொழி கேட்டும்

மனம் நிறையும் 

மன நிறைவு என்பது

செல்வத்தில் இல்லை

வயலோரம் சொல்லும் கதை கூட

பாடம் சொல்லும்

கருத்தை கூட்டும்

ஆனந்த பூங்காற்றில்

அன்ன நடையும்

அருமருந்தே 

அதை வாழ்ந்து உணரத் தெரிந்தவருக்கு

- Veena 

இந்த சுகத்துக்காக எத்தனை

 மைல்கல்க்கூட சுமையை சுமக்க

 தயார், காலாற கதைப்பேசி 

 வழிநெடுக சிரிக்க, அழுக,கத்த

 ஒரு துணை வேண்டும் ,இந்த

 துணையை பறித்துச்சென்ற நவீன

 காலம், தன்னை தானே காணொளி

 ஆக்கி, தனிமையை போக்க ஆடும்

 நாடகங்கள் எத்தனை!


விலையில்லா மருந்து

 வினையாகாத வரை சுகமே!


- Vidhya 

Friday, May 22, 2026

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


ஓரிடம் விட்டு ஓரிடம்

பொழிந்தாலும் மாரி 

தன் துளிர்களை

இயற்கையாய் கொடுக்கிறதே!

பூ நினைய பூச்சியும் நினைந்ததே 

இயற்கையின் அதிகாரத்தில்

அகங்காரம் இல்லையே

சிறகு விரிக்க 

பூ காத்திருக்க 

பூவின் அழகை

தான் மட்டுமே ரசிக்க

தன் இறக்கையால்

பூவை பூச்சியும் அணைக்கிறதே

அழையா விருந்தாளியான

அவனை பூவும்

காதலிக்கிறதே

எதிர்ப்பு ஏதும் தராமல்

இயற்கையின் பால்

எதுவும் சாத்தியமே

விதை பூவாய் விரிந்து

காண்பவருக்கு விருந்தளிக்கிறதே

பூவில் பெண்மை உண்டு

பெண்மையும் பூவாய் மலரும் தானே 

பருவத்தில் மலரும்

காதலும் ஜெயிக்க

வேண்டி காதலர்கள்

காத்திருப்பதும் சரி தானே

பூவும் பூச்சியும் காதலிக்க

நிறைகிறது இயற்கை

என்னும் தோட்டத்தில்

- Veena 


திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக 

அதிக NICK NAME கொண்டது நீதான்

தட்டாம் பூச்சி 

தும்பி 

டிராகன் பிளை 

புட்டான் பூச்சி ...


வேட்டையாடுவதில் அந்த வேட்டைக்காரனையே 

மிஞ்சியது நீ 

உனது சதவீதம் 95% !!

மற்றவையின் உச்சம் 35% 


தண்ணீரிலும் வாழ்வாய் என்று 

இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் 

பாம்பைப் போல தோலுரித்து 

உன் பயணம் வான வீதி எங்கும் 


எங்களுக்கு மூதாதையர் நீ 

300 மில்லியன் வருடம் முன் தோன்றிய வானூர்தி நீ

மறக்கவில்லை 


கல்லை தூக்கு கருப்பட்டி தாரேன் 

கல்லை தூக்கு கருப்பட்டி தாரேன் 

என்று கூறியது 


உன் புகழை 

புலிகேசியும் பாடியுள்ளார் 

தட்டானுக்கு சட்டை போட்டால் 

குட்டை பையன் 

கட்டையால் அடிப்பான் 

அவன் யார் ??

யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் 


---பிரியா


சத்தமில்லாமல் முத்தமிட 

வான் வந்து குடைபிடிக்க

கலவரத்தில் இருவரும் நனைய 

நான் இன்னும் மலரவே

 இல்லையே அதற்குள் வேட்டையாட

வந்தாயோ!

இயற்கையின் அழகில் கொஞ்சும்

சிறுபிள்ளைகள்!

- Vidhya 




Thursday, May 21, 2026

"ஆம்" என்பதால் by Veena and Vidhya

 


 "ஆம்" என்பதால்


யாருக்கும் கற்பனைகள் இருக்கலாம்

இங்கே மாயைகள் கடக்கலாம்

இருக்கும் நிஜங்கள் ரசிக்கலாம்

அடுத்தவர் நிழல்கள் தொடரலாம்

என்றாவது சந்தர்ப்பம் கிடைக்கலாம்

அழகான கருத்துகள்

பேசலாம்

சிறப்பு கவிதைகள் வரையலாம் 

அறிவான எழுத்துகள் விரியலாம்


சில நேரம்


விரிந்த சிறகுகள் ஒடியலாம் 

காத்திருந்து எதிர்ப்புகள் உருவாகலாம்

அடுத்தவர் எதிர்பார்ப்புகள் ஏமாற்றலாம்

மட்டற்ற வேதனைகள் தரலாம் 

சிற்சில உண்மைகள் கசக்கலாம்

சிறப்பான பொய்கள் இனிக்கலாம்

அமைதியாய் எதுவும் விலகலாம்

துன்பத்தில் சுற்றாரை விளங்கிக்கலாம்


எனினும்


சரித்திரம் படைக்கலாம்

மீண்டு வா மனமே!

வரும் போது மறக்காமல்

இலகுவான இதயத்துடன் வா!

இணைந்து திரியலாம்

- Veena 


உண்மை வீணா,

தொடர நினைத்தால் எதும்

 சாத்தியமே,அது வளரும்,

அலைகள் வந்து அடிக்காத

 வரை,அழிக்காத வரை..


சில நேரம் "ஆம் " யை விட


இல்லை என்று சொல்ல தைரியம் 

வேண்டும் ,ஆம் என்ற பாதுகாப்பில்

 இருந்து விலக, பழக வேண்டும் ...

இல்லையேல் அது தரும் வலி

 கொடியது!

- Vidhya 



Wednesday, May 20, 2026

ரயில் பரிதாபம் by Veena Shankar

 


ரயில் பரிதாபம்


எப்போதும் ஏசி பெட்டியில் பயணிக்கும் சுந்தர் மிக முக்கியமான வேலையாக மதுரை வரை பயணிக்க வேண்டியிருந்ததால் இரண்டாம் வகுப்பில் டிக்கெட் போட்டான். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சரியாக இரவு ஒன்பது மணிக்கு ரயிலும் புறப்பட்டது. 


இவனுக்கு ஒரு நாளாவது கீழ் படுக்கையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ரயில்வே ஒத்துழைத்தாலும் பயணியரின் நிலை கண்டு எப்போதும் இவனே தன் இருக்கையை தாரை வார்ப்பான்.


அன்றும் அப்படித்தான். ஒரு பெண் சிறிய குழந்தையோடு இவன் எதிர் பக்கத்தில் பயணித்தாள். அவளுக்கு கீழ் இருக்கையை தாரை வார்த்து விட வேண்டும் என்று எண்ணி சன்னலை பார்த்துக் கொண்டிருக்கையில் " சார்! நீங்க சாப்பிட்டீங்களா?" என்ற குரல் கேட்டு திரும்பினான். "ஆம்" என்று தலையாட்டவும் "இல்ல , என் மிசஸ் குழந்தை வச்சிருக்காங்க. நடு சீட்ல படுக்க முடியாது, அதனால..." என்று தயங்கியவனுக்கு, "ஓகே!ஓகே! " நான் மாறிக்கிறேன் என கேஷுவலாக விட்டுக் கொடுத்து நடு படுக்கைக்கு மாறினான்.


அப்படியே படுத்தவாறே செல்போன் பார்த்து கொண்டிருக்கையில் அடுத்த ஸ்டேஷன் வர, மேலும் சில பயணியர் பெட்டியில் ஏறினர். மேலும் ஒரு பெண் கைக்குழந்தையோடு கீழ் படுக்கையில் படுப்பதை பார்த்தான்


பத்து நிமிடங்கள் ஆன நிலையில் ஆண் ஒருவர் "சார்! கீழே இரண்டு பெண்கள் குழந்தைகளோடு இருக்காங்க. என்னால அப்பர் பெர்த் ல ஏற முடியாது, அதனாலே கொஞ்சம் பிளீஸ் மேல் படுக்கைக்கு மாறலாமா?" என்று கேட்க, அவர் நிலைமையை புரிந்து கொண்டு மேல் படுக்கைக்கு மாறினான். 


நேரம் மெல்ல நகர, ரயிலும் அடுத்த இரு நிறுத்தங்களைக் கடக்க, ஒருவர் மட்டும் ஏறினார். சிறிது சுற்றும் முற்றும் பார்த்தவர் உறங்காமல் இருந்த சுந்தரிடம் "தம்பி! எனக்கு சைட் அப்பர் ல சீட் அலாட் ஆகியிருக்கு. ஆனால் நான் உயரமாக இருப்பதால் எனக்கு கால் நீட்டி படுக்க முடியாது. கொஞ்சம் கஷ்டமா இருக்கும். நீங்கள் கொஞ்சம் மாறிக்கலாமா?" என்று கேட்டதும் அவர் உண்மை நிலையை புரிந்து கொண்ட சுந்தர், மனதால் நொந்தபடியே அவர் சொன்ன படுக்கைக்கு மாறினான் .


அங்கேயாவது நிம்மதியாக படுக்க விட்டார்களா அவனை? அவன் விதி பரிசோதகர் ரூபத்தில் வந்தது. அவரும் தன் பங்கிற்கு சும்மா இருக்காமல் கீழ் படுக்கைகாரர் கேட்டுக் கொண்டதன் பேரில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரை எழுப்பினார். "சார்! கீழ இருக்கிறவங்களுக்கு ஆர். ஏ. சி. ஃபேமிலியா வந்திருக்காங்க. அந்த அம்மாவல கீழ் படுக்கையில் இரண்டு குழந்தைகளோட படுக்க முடியாது. அவங்களோட இன்னொரு சீட் ஏசி ல இருக்கு, நீங்க ஏசிக்கு மாறலாமா ?" என்று கேட்க , கேட்பவர் பரிசோதகர் ஆயிற்றே? இல்லை என்று சொல்ல முடியாதே என்று நினைத்துக் கொண்டே தன் லக்கேஜோடு அவர் சொன்ன இருக்கைக்கு நடையை கட்டினான்..  


படுக்க விட்டார்களா என்னை? ஓடினேன் ஓடினேன், ஏசி பெட்டிக்கே ஓடினேன் என்று அவன் மனம் சொன்னது. ஆனால் அங்கிருந்தவர்கள் "பாவம் அந்த தம்பி, எத்தனை தடவை தான் சளைக்காம சீட்ட மாத்துமோ? " என்று பேசியது அவன் காதிலும் விழுந்தது.

Tuesday, May 19, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


உடலமைப்பு கொண்டு

எடை போட முடியாது

வலிமையே பெரியது


 வலிமை என்பது

உடலாலும் மனதாலும் பிறப்பதே


எவன் ஒருவன் தாங்குகிறானோ

அவனுக்கே பலமும்

பலவீனமும் அதிகம்


 பாரத்தை சுமப்பது

பெரிதல்ல அடுத்த பாரத்தை ஏற்கும் வரை

அவனுக்கும் தேவை 

ஓர் சுவாசம்

ஆசுவாசமாய்


 தாங்கும் நோக்கம் இருந்துவிட்டால்

அங்கே பாரம் பெரிதல்ல

மன வலிமையின் உதவியோடு


 வலியும் வலிமையும்

ஒரு சேர வந்தது  

எறும்பின் பாரம் வலியோடு

இரும்பின் தன்மை வலிமையோடு

- Veena 


உடல் வலிமைக்கான போட்டி

 இல்லை

ஆளைபார்த்து எடைப்போட

பளுதூக்கும் போட்டி மனவலிமை

 இருந்தால் போதும் 

பாரம்க்கூட தூசியாகும் தூக்கி

 தூக்கி பழகியவருக்கு,

மீண்டும் மீண்டும் சுமக்க

 சொன்னால் தான் வலிக்கும். ?

- Vidhya 



 

Monday, May 18, 2026

கிழவியின் ஆசை by Veena Shankar

 


கிழவியின் ஆசை


எப்போதும் ஞாயிற்றுகிழமை காலை சரியாக பத்து மணிக்கு செண்பகத்தின் போன் வரும். அன்றும் வந்தது. இன்று அம்மா என்ன புலம்ப போகிறாளோ என்றவாறே போனை எடுத்தான் கதிர். வாரா வாரம் அவள் புலம்பல்கள் கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது. சரி! சரி! என்று தலையாட்டியவாறே போனை கீழே வைக்க, "என்ன? எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரியா இருக்கு, இருக்குற கொஞ்ச காலத்தை பேரன் பேத்திகளோடு இருக்கணும். இப்போ பள்ளிக்கூடம் லீவு தானே? பிள்ளைகளை அனுப்ப வேண்டியது தானே? அவ பிள்ளைகளை எங்கிட்ட விட மாட்டா? எனக்கு தெரியும். எல்லாம் நகரத்துல பொறந்த பிறப்பு அப்படி பேச வைக்குது. எனக்கு கிராமத்துல இருக்குற வசதி அங்க இல்லை. இந்த கட்டை எப்போ போகும்னு தெரியாது, அதுக்குள்ள பேரப்பிள்ளைகளோடு இருக்கணும்னு நினைக்கிறேன். உன் அண்ணன் கிட்டையும் சொல்லிட்டேன். அவனும் பிள்ளைகளை அனுப்பல. ஏதோ அந்த படிப்பு இந்த படிப்பு படிக்கிறாங்களாம். பிள்ளைங்களுக்கு நேரமே இல்லையாம். நீயும் அதையேத்தான் சொல்லப்போற. ம்ம்... ஏதோ செய்யுங்க. மாசம் ஒருக்க நீயும் உன் அண்ணனும் வந்து பார்த்துட்டு போறீங்க? அது கொஞ்சம் எனக்கு ஆறுதலா இருக்கு என்று தானே சொல்லியிருப்பாங்க. உங்கம்மா. உங்களுக்கு முன்னாடி பெரிய அத்தானுக்கும் போன் போயிருக்கும்" என்று மீனா சொன்னதும் "போனை ஒட்டுக் கேட்டதலையே உனக்கு இவ்வளவு விசயம் தெரியுதா?" என்று சொல்லி மீனாவை பார்த்து கிண்டலடித்தான் கதிர். 


அவள் சொன்ன வாய் முகூர்த்தம் அவன் அண்ணனிடமிருந்து அழைப்பு வர, "தம்பி ! போனை மீனாட்ட குடுங்க" என்று அவன் அண்ணி பேச, "சரி" என்று சொல்லி மீனாவிடம் போனை நீட்டினான்.


"அக்கா! சொல்லுங்க" என்றாள் மீனா. "இந்த லீவுக்கு என்னடி பண்ணலாம் ? எங்கே போகலாம்?" என்று கேட்டவளுக்கு "இந்த முறை நாம குடும்பத்தோடு போக வேண்டாம் க்கா. பிள்ளைகளை மட்டும் நம்ம கிராமத்திற்கு அனுப்பி விடுவோம். வாரா வாராம் கிழவியோட புலம்பல் தாங்கல. பிள்ளைகளுக்கும் ஆன் லைன் கிளாஸ் தானே! என்ன சொல்றீங்க? " என்று கேட்டதும் "நீ எடுக்கும் முடிவு சரியாத்தான் இருக்கும். அப்படியே செஞ்சிடலாம். நீ உன் புருஷன் ட்ட சொல்லிட்டியா?" என்று கேட்க, "இல்லைக்கா, இனி மேல்தான் சொல்லணும் " என்று சொல்லி போனை வைத்து விட்டாள். 


இவள் பேசியதை பக்கத்திலிருந்த கதிருக்கு கேட்கவே, "சூப்பர் ! என் அம்மா நம்ம பிள்ளைகளை தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க " என்றான். " நீங்களும் ஒட்டு கேட்குறீங்களே!" என்று புன்னகைத்தவாறே மீனா நகர்ந்தாள். 


ஒரு வழியாக பேரப்பிள்ளைகள் செண்பகத்தின் ஊர் வந்து சேர்ந்தனர். கிழவிக்கு கொள்ளை மகிழ்ச்சி. பணியாரம், ஆப்பம், சுசியம் என வித விதமான கிராமத்து பலகாரங்களை செய்து கொடுத்தாள். ஆனால் என்ன! வகுப்பு இருப்பதால் ஒவ்வொரு முறையும் செண்பகம் தான் பேரப்பிள்ளைகளின் அறைக்கு கொண்டு போய் கொடுத்தாள். பேரப்பிள்ளைகள் கேட்காமலேயே பலகாரங்கள், தின்பண்டங்கள் அந்த பெரிய வீட்டிற்குள் படையெடுத்தன. 


ஒரு வாரம் செல்ல கிழவிக்கு கொஞ்சம் சுறுசுறுப்பு குறைந்தது. ஆமாம். அவளோடு கூடமாட வேலை செய்ய யாருமில்லையே! ஆபிசில் வேலை பார்ப்பதால் இரு வீட்டு தம்பதிகளும் செல்லவில்லை. 


மேலும் ஒரு வாரம் போனது. செண்பகம் கொஞ்சம் அசந்து போனாள். இருந்தாலும் காலையில் எழுந்து சிற்றுண்டிக்கு இடியாப்பம் செய்ய தயார் ஆன நிலையில் அச்சில் போட்டு பிழிய பேரப்பிள்ளைகளை கூப்பிட்டாள். ஆனால் அடுக்களை பக்கம் அவர்கள் தலை கூட வைக்கவில்லை. பின் தானே செய்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் கிழவி தடுமாற , அடுத்த ஞாயிற்று கிழமை வரும் வரை காத்திருந்து பிள்ளைகளை அழைத்துக் கொள்ளும் படி கதிருக்கு போன் போட, ஒன்றும் புரியாமல் "சரியென்று " பதில் சொல்லி திரும்பியவனிடம் "என்ன! குழந்தைகளை கூட்டிக் கொண்டு போக கிழவி சொல்லிச்சா ?" என மீனா கேட்க, ஆம் என்றவன் "அது எப்படி உனக்கு தெரியும்.? நீ இப்பதானே வெளியிலிருந்து வர " என கேட்க, "எனக்கு தெரியும் . இவங்கள அத்தை பதினைந்து நாட்கள் சமாளிச்சதே பெரிய விஷயம். என்னமோ நாங்க பிள்ளைகளை கிராமத்திற்கு அனுப்பல ன்னு சடச்சாங்களே! இப்ப புரியுதா? இதுங்க நான் சொன்னாலே படிக்கணும்னு சொல்லி வேலை செய்யாதுங்க. இப்ப அத்தைக்கு நாங்க ஏன் அனுப்பல என்ற விசயம் புரிந்திருக்கும்" என்று சொல்லி தன் மூத்த பிள்ளைக்கு போனை போட்டு கிராமத்திலிருந்து கிளம்பி வரும்படி சொன்னாள் மீனா.

Sunday, May 17, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பகல் அல்ல , இரவு என்று உணர

ஓர் வினாடி ஆனது

உன் ஒளி வீச்சால்

களை கட்டிய ஒளியில்

மயங்கியது என் மனம் 

மாலைகள் இடம் மாற

மாலையில்

மறைந்தே ஒளி

தந்தது வாழ்வில்

கருவறை இருட்டு என்றாலும்

அங்கே ஜெனிக்கும் கரு , உரு கொண்டு வெளிவந்து

ஒளி தரும் என்பது உண்மையே !

மனம், உடல் ஒருமித்த தம்பதியருக்கு பரிசாக

ஒளிதரும் விளக்காக

பல வண்ணத்தில் இருந்தாலும்

ஒளியின் அளவு குறைவில்லை

விளக்கின் பரவல் இருளை நீக்கவே!

இடம் நகர்ந்து ஒளிர

நீ மெழுகுவர்த்தி அல்ல!

ஒளிர்வு கொடுக்கா விளக்கும்

பகிர்தல் இல்லா மனமும் இருளே என்றென்றும்!


- Veena 


இருளில் இவன் துணை தேடும்,

தொலைவில் கசியும் இவன் நிழல்

 மூக்கை நீட்டி தூக்கம் தொலைக்க,

 கனவில் வர்ணஜாலம் காட்டும்

 இவன் விரல்கள் கண்களை இறுக

 மூட,கூசும் தேகம்,

இருந்தாலும் தொல்லை,

தொலைந்தாலும் தேடும் நண்பன்!

- Vidhya 

Wednesday, May 13, 2026

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya



அடைபட்டிருந்தது போதும் 
வெளியில் வா! 
என்றதும் உலகை காண வந்தது பறவை
எங்கெங்கோ பறந்த பின் 
மீண்டும் கூண்டை
அடையவே துடிக்கிறது
வெளி உலகம் வண்ணமாய்
இருந்தாலும் - அங்கே
வஞ்சகர் கூட்டம் சூழ
வாழ்வது கடினமே!
மனிதனும் சிந்திக்கிறான்
வெளியில் பறக்கவா?
கூண்டில் அடையவா? என்று
அடைபட்டாலும் கூண்டை 
விட பாதுகாப்பு
 இல்லையென்றே
ஒருவர் ஏற்றத்தில் 
பலர் மாற்றம் அடையலாம்
அந்த ஏற்றத்தின் ஊடே
தோற்றும் போகலாம்
தோற்று நிற்கும் வேளையில்
எழுச்சி கொண்டு
இலக்கை அடைய
நினைக்கையில்
சுற்றியுள்ளவர்கள் சறுக்கி விடவும்
செய்யலாம்
கூண்டுப்பறவையும்
மனிதனும் சமமே
சூழ்நிலைக் கருதி!

- Veena 

கூட்டில் பறவை மாலையில் 
ஆனந்தம் அடைந்ததடி...

என் காதல் சிறகுகள் முளைத்து
இரவெல்லாம் பறக்குதடி

தூங்காமல் எந்தன் இரவு ஓ...
நித்தம் நித்தம் விடியுதடி

மண்ணுக்குள் மரித்த களையாய்
என் காதல் தவிக்குதடி

 தனிமையை எந்தன் மனது 
தாழிட்டுக் கொண்டதடி....

உன் காதலை என் மனது 
தேடியே திரியுதடி..

-பிரியா

அடைக்கப்படும் போதே

 சுதந்திரத்தை உணர முடியும்,

தைரியம் மட்டுமே தடையை

 உடைக்கும்,

முயற்சியால் மட்டுமே முன்னேற

 முடியும்,

இல்லையேல் கூண்டுக்குள்

 எடுப்பார் கைப்பிள்ளையே !

- Vidhya 

 

Sunday, May 3, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காதலின் சின்னத்தை பற்றியவர்

காதல் தீயால் பற்றிக் கொண்டனர் 

காதல் மலர்ந்தும்

பிடி தளர்ந்தது

முகம் பார்க்கும் கண்ணாடியாய் 

ஒருவரை ஒருவர்

நினைக்க வார்த்தைகள் மறந்தன

அழகில் புரட்சி நடக்க

ஆனந்தம் கொண்டது

காதல் சின்னம்

கரங்களாய் இருப்பதைக் காட்டிலும்

சின்னமாய் மாறுவதில்

எத்தனை ஆனந்தம்?

கரங்களின் தியாகம் மறைந்தாலும்

சின்னமாய் 

மறுபிறப்பு எடுக்குமே!

- Veena 

அவள் அழகில் அவன்

 நாணுகிறான், 

அந்த கண்ணனே ஆனாலும்

 ராதாவின் பிடியிலே, கண்

 அசைவிலே...

- Vidhya 

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...