குழந்தை

கோயில் திருவிழா என்றால் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அன்றும் அத்திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல கடைகள் புதிதாக முளைத்து, எப்போதும் இருக்கும் கடைகளுக்கு போட்டியை உண்டாக்கியது. இது இப்படி இருக்க கோயில் வாசல் அருகே மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை அழுதபடியே நின்றுக் கொண்டிருந்தது.திருவிழாவின் போது குழந்தைகள் காணாமல் போவதும் பிறகு பெற்றோரால் மீட்டு எடுப்பதும் ஒரு சுவாரசியமான நிகழ்வு.
அன்றும் அப்படித்தான். குழந்தையை யார்? எவர்? என்று விசாரிக்க சென்றாலும் அந்த குழந்தை அழுதபடியே இருந்ததே தவிர வாயைத் திறக்கவில்லை . ஒருவர் சாக்லேட் காட்டிப் பேச வைக்க முயல, மற்றவர் பொம்மையைக் காட்டி சிரிக்க வைத்து விஷயத்தை வாங்க நினைத்தார். ஆனால் அவர்களுடைய பேச்சுக்கும் கேள்விகளுக்கும் செவிமடுக்காமல் குழந்தை நிற்க,சமாதனம் செய்ய வந்தவர்கள் அவரவர் பாதையில் சென்றனர். பக்கத்தில் இருக்கும் போலீஸ் பூத்தில் சொன்னால் அவர்கள் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள் என்று கூட்டம் பேசிக்கொண்டாலும் யாரும் அங்கு சென்று சொன்னதாக தெரியவில்லை .
அப்போது கோயிலுக்கு வந்த வெங்கட் குழந்தை தனியாக நிற்பதைப் பார்த்து, குழந்தை யின் அருகே செல்ல வாயை மூடிக்கொண்டிருந்த குழந்தை , அழத்தொடங்கியது. இது என்ன வம்பாக போய்விட்டதே என நினைத்து வெங்கட், அங்கே ஒன்றும் நடக்காதது போல கோயிலுக்கு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவன் திரும்பி வரும்வரை இந்த குழந்தை தன் இடத்தை விட்டு நகரவில்லை . வெங்கட் வருவதை குழந்தை பார்த்தது. வெங்கட்டும் ஏதேச்சையாக குழந்தை இருக்கிறதா என பார்க்க, குழந்தை தன்னைப் பார்ப்பதை அறிந்த அவன், மறுபடியும் குழந்தை இடம் சென்று, தன் செல்போனை காட்ட, இப்பொழுது குழந்தையின் முகத்தில் புன்னகை வருவதை கவனித்து, அதன்பக்கத்தில் சென்றான். செல்போனை வாங்கிய குழந்தை அப்படி இப்படி திருப்பி பார்த்து “ அப்பா! அப்பா! “ என்று சொல்லியது.
குழந்தையின் அப்பாவிடம் இந்த மாதிரியான செல்போன் இருக்கும் போல என நினைத்தான் வெங்கட். செல்போனில் பாஸ்வேர்டு ஏதுமில்லாததால் செல்போன் திரை திறந்து, அதில் தன் அப்பா அம்மாவின் போட்டோவை தேடியது அக்குழந்தை . மெல்ல குழந்தையுடன் பேச்சு கொடுத்தான் வெங்கட். அப்பா யார்? எந்த ஊர்? என்று வெங்கட் கேட்க, குழந்தை தன் மழலை மொழியில் பேசியது. என்ன பேசியது என்பதை துளிகூட யூகிக்க முடியவில்லை . இருந்தாலும் அந்த குழந்தையை அப்படி விட்டுச்செல்ல மனம் இல்லாததால் என்ன செய்வது? குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது? என்று தெரியாமல் நின்றான்.
போலீஸ்காரர்களுக்கு இருக்கும் திருவிழா வேலையில் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வார்களா என்ற சந்தேகம் வெங்கட்டுக்கு வர, அந்த குழந்தையை தன்னனோடு அழைத்துச் செல்ல முடிவு செய்து,குழந்தையின் கையைப் பற்றி இழுத்தான். ஆனால் குழந்தை வர மறுத்து,மறுபடியும் சிணுங்கியது. ஆனாலும் வெங்கட்டின் செல்போனையும் தர மறுத்தது. இப்படியே இருவருக்குமான போராட்டம் தொடர, ஒரு வழியாக வந்து சேர்ந்தார் குழந்தையின் அப்பா. “சார்! இது என் குழந்தை. எங்கே நின்று கொண்டிருந்தாள் என் ஜனனி?” என்று தன் குழந்தையை உச்சிமுகர்ந்து, தன் பாசத்தை காட்டினார். நீண்ட நேரமாக இங்குதான் அழுது கொண்டிருக்கிறாள் என்று சொல்லி, குழந்தையின் அப்பா அவர்தான் என்பதை யோசித்த வேளையில், குழந்தையும் வந்தவரை அப்பா என்று கூப்பிட்டது. வேறு வழியில்லாமல் ஜனனி குழந்தையை அவரிடம் ஒப்படைத்தான். “சார்! ரொம்ப நன்றி” என்று சொல்லி வெங்கட்டின் செல்போனை குழந்தையிடமிருந்து வாங்கி கொடுக்க குழந்தையின் அப்பா முயல, குழந்தை செல்போனை தர மறுத்தது.உடனே தன் சட்டைப்பையில் இருந்து தன் செல்போனை காட்டியதும் வெங்கட்டின் செல்போனை அவனிடமே திருப்பிக் கொடுத்து, மழலை சிரிப்பை உதிர்த்தது குழந்தை ஜனனி.
தன் மனைவிக்கு குழந்தைப் பேறு இல்லை என்பதால் குழந்தை ஜனனியை தானே வளர்க்கலாம் என்று எண்ணி கொண்டிருந்த வெங்கட்டுக்கு அது நடக்காமல் போனது ஏக்கத்தை தந்தாலும் அந்த குழந்தை , தன் அப்பாவிடம் போய் சேர்வது தான் சரி என்பதை உணர்ந்தான்.
குழந்தைப்பேறு இருந்தாலும் இல்லை என்றாலும் உண்மையான பாசம் என்பது பிரிவு ஏற்படும் போது ஏக்கத்தை ஏற்படுத்தும்.
அழகான கதை வீணா
ReplyDeleteநன்றி வித்யா
ReplyDelete