Wednesday, September 14, 2022

" அன்னிய மொழி " சிறுகதை by Veena Sankar


   அன்னிய மொழி


                                             கோடைகால விடுமுறையில் தன் அப்பாவின் தூண்டுதலால் ஏழாம் வகுப்பு படிக்கும் செல்வா  இந்தி வகுப்பிற்கு சேர்ந்தான். அரசு பள்ளியில் படிப்பதால் பிற்காலத்தில் இந்திமொழி தேவைப்படும் என்று நினைத்து சேர்த்துவிட்டார் செல்வாவின் அப்பா. ஆனால் துளிகூட விருப்பம் இல்லாமல் வகுப்பிற்குச் சென்றான் செல்வா. தனக்கு ஆங்கில மொழியறிவு மட்டும் போதும் என்று நினைத்து சில நேரம் வகுப்பை புறக்கணித்து  வந்தான்.  இது செல்வாவின் அப்பாவிற்கு தெரிய வர, தானே செல்வாவை வகுப்பிற்கு விட்டு வந்தார்.  இந்தி ஆசிரியரும் பெருமுயற்சி எடுத்து  அவனுக்கு இந்தி எழுத்துக்களை அறிமுகம் செய்து வைத்தார். 


                                       தட்டுத் தடுமாறி வார்த்தைகளை சேர்த்து படிக்கும் முன் முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு வர, வேறு வழியில்லாமல் செல்வா கொஞ்சம் படிக்கவும் ஆரம்பித்தான். தேர்வு எழுதிய போது கூட  பயம் இல்லாத  செல்வா, தேர்வு முடிவுக்கு பயந்தான். அவன் நினைத்தது போலவே தேர்வில்  தோல்வி அடைந்தான். இந்தி ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளானான். தேர்வு முடிவை தன் தந்தையிடம் அவன் சொல்ல, அதற்கு அவன் தந்தையோ “பரவாயில்லை செல்வா. இந்த பாடம் உனக்கு  புதிது தானே. வாய்க்குள் நுழையாத  மொழியாகவும் இருக்கிறது. நீ  இந்தி மொழியின் எழுத்துகளை கற்றுக் கொண்டாயே அதுவே எனக்கு மகிழ்ச்சி. அடுத்த முறை தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஆயத்தமாகு.” என்று சொல்லி தன் மகனை  தேற்றினார். 


                                           அப்பாவின் பேச்சு செல்வாவிற்கு இந்தி படிக்க சொல்லி தூண்டியது. அடுத்த முறை தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். அடுத்து இந்தியில் உள்ள எட்டு நிலைகளையும் படித்து முடித்து விட்டால் மீண்டும் இந்தி படி என்று அப்பா தன்னை நச்சரிக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டே  படித்தான். வருடத்திற்கு ஒன்றாகத் தேர்வு எழுதி வெற்றி அடைந்தான். இதற்குள்ளாக செல்வா கல்லூரியிலும் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆனது.


                                      கல்லூரியில் இந்தி - தமிழ் மொழி பெயர்ப்பு போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. விளையாட்டாக அதில் தன் பெயரை செல்வா கொடுத்தான். எதிர்பாராதவிதமாக போட்டியில் கலந்து கொண்ட செல்வாவிற்கு முதல் பரிசு கிடைத்தது.   இந்தி துறையின் உயர் பதவியில் இருந்த பேராசிரியரின் கையில் பரிசை செல்வா வாங்க, அவர்  செல்வாவின் மொழி அறிவை பற்றி விசாரித்தார். மேலும் தான் உரையாற்றும்போது தன் தாய் மொழி தமிழ் தான் என்றாலும் தனக்கு  தமிழ் சரி வர வராது என்றும் இந்தி மொழி தெரிந்த தனக்கு கூட இவ்வளவு அழகாக இந்தி -  தமிழ் மொழிபெயர்ப்பை செய்திருக்க முடியாது என்றும் சொல்லி செல்வாவை பாராட்டி பேச, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. மேலும் செல்வாவின் படைப்பு சர்வதேச  போட்டிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார். 


                                             அந்த நேரத்தில் செல்வா, தன் இறந்த தந்தையை நினைத்து    கண்ணீர் சிந்தி,   தன் அப்பா  தனக்காக  செய்த    நல்ல செயலை  அரங்கத்திற்கு  வெளிப்படுத்த, அரங்கம்  செல்வாவின் வார்த்தையில் மௌனமானது. மேலும் ஒரு மொழியை கூடுதலாக கற்பதால் ஒன்றும் நாம் குறைந்து விடப் போவதில்லை என்பதை தன் சக மாணவர்களுக்கும்  கூறினான்.


                              நாம் நிராகரிக்கும்  பொருளும், செயலும்,  மனிதர்களும் கூட  சில சமயங்களில் நம் வாழ்க்கை பாதையை  மாற்றக்   கூடும். 


" பின்னல்கள் "கவிதை by Veena Sankar

 பின்னல்கள்



இழைகளின் ஒற்றுமையை பறைசாற்றுவது 

நேர்த்தியான பின்னல்கள் 

பகுதியாய் பிரிந்திருந்தாலும் அதை ஒன்று 

சேர்ப்பது அழகான பின்னல்கள்  

மாலையாகி கோர்க்கப்படுவதும் 

பூக்களின் பின்னல்கள்

மரத்தின் விழுதுகளும் கொடிகளின் வளைவுகளும்

இயற்கையின்  பின்னல்கள் 

சிகரத்தை தொட்டாலும் ஒன்றுபடுவது 

மனிதநேயம்  எனும்  பின்னல்கள் 

சிக்கிக்கொண்ட வாழ்க்கையை சமாளிக்க 

பழகுவது பின்னலிட்ட கோலங்கள் 

மின்சார  இணைப்பிற்கு தேவைப்படுவது 

உலோகங்களின் பின்னல்கள் 

மொத்தத்தில் உலகமே பல கலவைகளின் பின்னல்கள்

Tuesday, September 13, 2022

பின்னல்கள் by Vidhya Nivash

 


நுண்ணிய பின்னல்கள்,

நுண்ணிய மணித்துளிகள்,

வண்ண வண்ண பின்னல்கள்,

எண்ணற்ற ஆசைகளுடன் வண்ண கனவுகள் சேர்த்து

நுணுக்கமாக பின்னி எடுத்தேன் என் பிள்ளை போல் வாரி அனைத்தேன்..

பண்ணிய பின்னே உணர்ந்தேன் எத்தனை அழகு!

பார்ப்போர் கண்ணை பறிக்கும் என் வண்ண பின்னல்கள் சேர்ந்து ஓர் சேய் பிறந்த மகிழ்ச்சி!

சர்வதேச பின்னல்கள் தின வாழ்த்துகள்💐💐

"அந்த ஒரு நிமிடம் " கவிதை by Veena Sankar

 


அந்த ஒரு நிமிடம்


அந்த ஒரு நிமிடம்   நான்  பேசியிருந்தால்

உண்மையின் தத்துவத்தை விளக்கியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான்  உதவி  செய்திருந்தால் 

என் வாழ்வில்   மனநிம்மதி கொண்டிருப்பேன்


அந்த ஒரு நிமிடம் நான் தாமதமாக  போயிருந்தால் 

என் வாழ்வில் பெரிய வாய்ப்பை   இழந்திருப்பேன்


அந்த ஒரு நிமிடம் நான்  விழித்திருந்தால்  

என்   கணவனின்  அன்புக்கு   பாத்திரமாகியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான்  கணவனோடு  சென்றிருந்தால் 

என் கணவனின் மனத்தை மாற்றியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான் மௌனமாக  இருந்திருந்தால்

கணவனிடமிருந்து விவாகரத்து  பெறாமலிருந்திருப்பேன்

 

அந்த ஒரு நிமிடம் நான் தூங்காமல் இருந்திருந்தால் 

என் தந்தையின்  உயிரை காப்பாற்றியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான் தனித்திருந்தால்

வேலையில்  கூடுதல் கவனம் செலுத்தியிருப்பேன் 


அந்த ஒரு நிமிடம்   நான் மனம் மகிழ்ந்திருந்தால்

காதலுக்கு வெற்றி கொடுத்திருப்பேன் 


அந்த ஒரு நிமிடம் நான்  மௌனமாய்  இருந்திருந்தால்

என்  பொறாமை குணத்தை புதைத்திருப்பேன்


அந்த ஒரு நிமிடம்   நான் சமாதானம் அடைந்திருந்தால் 

பேராசை வேண்டாம் என முடிவெடுத்திருப்பேன் 


அந்த ஒரு நிமிடம் நான் சோர்ந்து  இருந்திருந்தால் 

அடுத்த தலைமுறைக்கு  நல்லவளாகயிருந்திருப்பேன்


அந்த ஒரு நிமிடம் நான் உண்மையை சொல்லியிருந்தால் 

தோழியிடம்  நம்பிக்கையற்றவளாக  மாறியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான்  பொய் சொல்லியிருந்திருந்தால் 

என் வாழ்வில் முன்னேறியிருப்பேன் 


இவை யாவும் நாம் காணும் சந்தர்ப்பத்தின் அந்த ஒரு  நிமிடம் தான்


Monday, September 12, 2022

"தங்க நகை " சிறுகதை by Veena Sankar

   


தங்க நகை 


                                       ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் நாட்டம் கொண்ட சுகுமார், தன் செல்போனை ஆன் செய்ததும்  30%  முதல் 50% வரை தள்ளுபடி என்று ஆளாளுக்கு விளம்பரம் செய்திருக்கிறார்கள் இந்த தங்க நகை கடைக்காரர்கள்.  என்னவாக இருக்கும் என்று  பார்க்க சுகுமார் அந்த ஆப்பை திறந்து பார்த்தான். அதில் விதவிதமான தங்க நகைகள் மூக்குத்தி முதல்  ஒட்டியானம் வரை  குறைந்த விலையில், சிறந்த தள்ளுபடியில் தருகிறோம் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. அதன் விலை, டிசைன்,  நேர்த்தியை கண்டு, முன்பெல்லாம் பிறந்தநாள், திருமணம்  போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு நகை கடைக்கு சென்று வாங்குவோம். ஆனால் இப்போது எல்லாமே நம் கையடக்க செல்போனிலேயே வந்துவிட்டது.  அதுவும் விலைப்பட்டியலோடு என்று நினைத்து பிரமித்துப் போனான்.


                                         பெண்களின் கண்களில் பட்டால் ஒரே நாளில்  எல்லா நகைகளும் விற்று தீர்ந்து விடும் என்று தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டான்.  தள்ளுபடி  என்று பார்த்ததால்  தானும்  தன் மனைவிக்கும் குழந்தைக்கும் தங்க நகை வாங்க ஆசைப்பட்டான் சுகுமார். இது ஒரு  மாதத்திற்கு முன்னே சுகுமாரின் நண்பனொருவன் மூலம் அவன் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் அதை நேரமின்மையால் பார்க்க முடியவில்லை. இதை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.  


                                 எப்போதும்  தான் வாங்க நினைக்கும் ஒரு பொருளை  அலசி ஆராய்ந்து தான் சுகுமார் வாங்குவான். ஆன்லைனில் வாங்கும் முன் அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமெண்ட் பாக்ஸில் இடப்பட்டிருக்கும் கமெண்ட்டை பார்த்தே அந்த பொருளை வாங்க திட்டமிடுவான். அதனால் கமெண்ட் பாக்ஸ்க்கு  கீழ் நோக்கி தன் கண்களை தேட விட்டான். “என்ன ஆச்சரியம்! யாரும் நகை வாங்கவில்லையா? எத்தனையோ  நாட்களாக இந்த விளம்பரம் வருகிறது என்று  சரண் சொன்னானே?” என்று தன் நெற்றியை சுருக்கி,  தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் கண்ணை மூடிக்கொண்டு தன் குழந்தைக்கும் மனைவிக்கும் விதவிதமாக நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற மனதோடு அதில் இடம்பெற்றிருந்த நகைகளை வாங்கி அவர்களுக்கு சர்ப்ரைஸாக பரிசளிக்க நினைத்திருந்தான். ஆனால்  ஏதோ ஒரு சந்தேகம்  மனதில் இருக்கவே  தன்னை அறியாமல் அப்படியே தூங்கிப்  போனான்.


                                       உறக்கத்திற்கு முன்       இந்த சிந்தனையிலேயே  படுத்ததால் கனவிலும் அவன் இதைப் பற்றியே நினைத்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் கண் முன் கடவுள் தோன்றினார்.  தன் முன் தோன்றிய கடவுளிடம்   ஏன் யாரும் தங்க நகை வாங்கவில்லை?  என்ற தன் சந்தேகத்தைக்  கேட்டான். அதற்கு கடவுள், “ நாடு செழிப்பாக  இருக்கிறது. பெண்கள் யாரும்  தங்கத்தை  அணிய விரும்பாததால் தங்க நகையை  வாங்குவதில்லை. இவ்வளவு  காலம் வரை பெண்கள்   தங்க நகை அணிந்தால் அழகு கூடும் என்று நினைத்திருந்தனர்.  ஆனால் தற்போது அதை போகப் பொருளாக நினைத்து வாங்க ஆசைப்படுவதில்லை.  முன்பு தங்கத்தை  வைத்து கடன்   வாங்குவதுமாக இருந்தார்கள். ஆனால்  நிறைவான வாழ்க்கை அமைந்ததாலும்  தங்கம்  என்ற உலோகம் அவர்களுக்கு  தேவைப்படவில்லை.  அதற்கு பதிலாக  அந்த பணத்தை தங்கள்  கேளிக்கை விழாக்களுக்கு   செலவிடுகிறார்கள்.”  என்று பதிலளித்தார்.


                                                   “யார்?  எப்படியோ! ஆனால்  நான் என் மனைவிக்கு  ஒட்டியானம் பரிசளிக்க விரும்புகிறேன்.  ஆனால் அதை வாங்க அவள் மறுத்தால்  என்ன செய்வது என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.  அதனால் நான் கொடுக்கும் பரிசினை வாங்குமாறு  அவளுக்கு நீங்கள் யோசனை சொல்ல வேண்டும்.” என்று கடவுளிடம் கேட்டுக் கொண்டான் சுகுமார்.  கடவுள் புன்சிரிப்போடு மறைய, நான்  சுகுணாவுக்கு ஒட்டியானம் வாங்கித் தரவேண்டும். ப்ளீஸ் அவளிடம் சொல்லுங்கள்! சொல்லுங்கள்!  சுகுணா உனக்கு ஒட்டியானம் போட்டா ரொம்ப அழகா இருக்கும் என்று தூக்கத்திலே கத்திக் கொண்டிருந்தான்.  


                                    “ என்னது!  ஒட்டியானமா ? இங்க மூக்குத்தி வாங்கி கொடுக்கவே வழி இல்ல. நீங்க போய் எனக்கு ஒட்டியானம் வாங்கித் தர போறீங்களா?” என்று  பதிலுக்கு கத்திக்கொண்டே ஒரு வாளி தண்ணியை எடுத்து   சுகுமார் மீது ஊற்றினாள் அவன் மனைவி சுகுணா.  தண்ணீர் ஊற்றப்பட்டதும்  தூக்கம் கலைந்த சுகுமார்,  தான் கண்டது கனவு தானோ? தங்கம் விலை குறையுமா அது இந்த கலியுகத்தில் நடக்குமா என்று எண்ணிக் கொண்டு, நிஜத்தில் தான்  என்னால் சுகுணாவுக்கு ஏதும் வாங்கி தர முடியவில்லை.  கனவிலும் கூட அவளுக்கு தங்க நகை வாங்கி தர முடியாமல் போய்விட்டதே   என்று   தன்   ஏழ்மையை நினைத்து  வருத்தப் பட்டான். 


                             தினமும் விடியும் ஏதாவது ஒரு ஏழையின் வாழ்க்கையில்   என்ற நம்பிக்கையோடு இருப்போம்.


Tuesday, September 6, 2022

டி-ஷர்ட்டில் ஒரு வாசகம் by Ramalakshmi

 



"Keep smiling"


டி-ஷர்ட்டில் ஒரு வாசகம் by Rishi

 



"நீ நீயாக இரு"

டி-ஷர்ட்டில் ஒரு வாசகம் by Akhiladevi Kumaran

 

 

My few choice of words for t-shirt:


(1) Glow … and Grow 🌹
(2) Rise and Shine ☀️ 
(3) Bow your head to the beauty on my head 🤩
(4) I AM the super power .. What’s yours 💪🏼 ??
(5) B”old” and Be(YOU)tee full 😎


(1) விண்ணை தாண்டும் மீன்கள் விற்பனைக்கு அல்ல- கற்பனைக்கு மட்டும்!

(2) வாட்ஸப் வாலிபர் சங்கம் நாங்க!

(3) கதவைத் திற…கற்றல் பெருகட்டும்!
மனதைத் திற… மானுடம் வெல்லட்டும்!!
 (4) விடு… ஓடு.. தேடு.. கிடைக்கும்!

புதுமொழி: 
Talk less… cook less…work less.. Relax more!😎

டி-ஷர்ட்டில் ஒரு வாசகம் by Vidhya Nivash

 


"காற்றை போல் மிதக்க 

கடலை போல் ஆழமாக 

நெருப்பை போல் சுட

ஆகாயம் போல் விரிய

நிலத்தைப் போல் கிடக்க 

பஞ்சபூதங்களும் கலந்த கலவை"


"என்ன கேட்க 

யார் சொல்ல 

என்ன செய்ய 

யார் பார்க்க 

என்ன நினைக்க

யார் மகிழ

நீ மகிழ ...

சும்மா இரு"


"எடுக்க எடுக்க 

கொடுக்க கொடுக்க 

நிறையும் அன்பும் பண்பும்"


"இதுவும் கடந்து போகும்

எதுவும் மறந்து போகும்

நிலைத்திருக்க மௌனத்தில்"


"தன்னலமற்ற பொதுநலத்திற்கு

ஒரு கணம் போதுமே"

டி-ஷர்ட்டில் ஒரு வாசகம் by Veena Shankar

 

 

 "Hire me for fire life😊"


"வா வா வாகை சூட வா"


"உன்னையும் நேசி"


 "Set your goal get your gold"


"துள்ளும் மீன்களும் ஓடும் மான்களும் என்

 பின்னால்"


 "செடி வளர்ந்து மரமாகி காடாவது நம் கையில்"


"Your space makes your face fresh"

Friday, September 2, 2022

" தேடுதல் " சிறுகதை by Veena Sankar

  



                                            என்னை வசுமதி எங்கே தேடுகிறாள்? கொல்லைப்புறம் சென்று பார்க்கிறாள், ஏமாற்றத்தோடு வாசல் பக்கம் செல்லும் முன் அவள் அறையில் பதுங்கி இருக்கிறேனா? என தேடுகிறாள். டைனிங் டேபிளில் நான் இல்லாதது கண்டு கீழே குனிந்து பார்க்கிறாள். முகம் சுருங்கி, மெய்யும் தளர்ந்து போனாலும் அவளுக்கு நான் பிடிபடாமல் அவளை  அலை கழிக்கிறேன். அவள் என்னை உதாசீனப்படுத்துவது எனக்கு பிடிக்காததால் தான் அங்கே இங்கே என்று   உள்ளே இருந்தே  அவள் தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறேன்.


                              அலுவலகத்திலிருந்து வந்து அரைமணி நேரம் என்னை கண்டுகொள்ளாமல் அனாதையாய் தவிக்கவிட்டு அவள் தேநீர் அருந்துவதும் டிவி பார்ப்பதுமாக இருந்து தற்போது என்னை  காணாது தவிப்பது வசுமதிக்கு வழக்கமாகிவிட்டது. அதனால் தான் அவளை பழி வாங்குகிறேன். என் மேல்  அவளுக்கு அக்கறை இருக்கிறதா?  கண்ணாடி முன் தன் முகத்தை பார்ப்பதும்  தன் தலையைத் தொட்டுப் பார்ப்பதுமாய்   இருக்கிறாளே?


                                   இன்னும் பத்து நிமிடத்தில்  அவள் பிள்ளைகள் வந்து விடுவார்கள். அவர்களுக்கு பாடம் சொல்லி தர வேண்டும் என்பதற்காக மட்டுமே  என்னை தேடுகிறாள். இதற்கு மட்டும் நான் வேண்டுமோ? என்ற எண்ணத்தில் இருந்த அவளின் தேடுதல் வேட்டை  தொடரட்டும் என்று எண்ணி இருந்தேன். கடைசியில்  ஒரு வழியாக அவள் ஹேன்ட் பேக்கில் கழற்றி வைத்தது  நினைவுக்கு வர நானும் என்  தோழியான கைகடிகாரம் மாட்டிக் கொண்டோம்.  அய்யோ நாம் மாட்டிக் கொண்டோமே! என நான் சொல்ல, இப்போதாவது வசுமதிக்கு உன் நினைவு  வந்ததே!  இது கூட பரவாயில்லை இன்னும் சில பேர் தங்கள் தலை மேல் உன்னை தாங்கி கொண்டு தேடு தேடு என்று தேடுவார்கள் என்று சொன்னது கைக்கடிகாரம். 


                                           மேலும்  இந்த தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, செல்போன் போல நமக்கும் ஜிபிஎஸ் சிஸ்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்கிறேன் என்று பதிலுக்கு சொல்லி வைத்தது கைகடிகாரம் மூக்கு  கண்ணாடியிடம்.


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...