Monday, September 12, 2022

"தங்க நகை " சிறுகதை by Veena Sankar

   


தங்க நகை 


                                       ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகம் நாட்டம் கொண்ட சுகுமார், தன் செல்போனை ஆன் செய்ததும்  30%  முதல் 50% வரை தள்ளுபடி என்று ஆளாளுக்கு விளம்பரம் செய்திருக்கிறார்கள் இந்த தங்க நகை கடைக்காரர்கள்.  என்னவாக இருக்கும் என்று  பார்க்க சுகுமார் அந்த ஆப்பை திறந்து பார்த்தான். அதில் விதவிதமான தங்க நகைகள் மூக்குத்தி முதல்  ஒட்டியானம் வரை  குறைந்த விலையில், சிறந்த தள்ளுபடியில் தருகிறோம் என்று காண்பிக்கப்பட்டு இருந்தது. அதன் விலை, டிசைன்,  நேர்த்தியை கண்டு, முன்பெல்லாம் பிறந்தநாள், திருமணம்  போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு நகை கடைக்கு சென்று வாங்குவோம். ஆனால் இப்போது எல்லாமே நம் கையடக்க செல்போனிலேயே வந்துவிட்டது.  அதுவும் விலைப்பட்டியலோடு என்று நினைத்து பிரமித்துப் போனான்.


                                         பெண்களின் கண்களில் பட்டால் ஒரே நாளில்  எல்லா நகைகளும் விற்று தீர்ந்து விடும் என்று தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டான்.  தள்ளுபடி  என்று பார்த்ததால்  தானும்  தன் மனைவிக்கும் குழந்தைக்கும் தங்க நகை வாங்க ஆசைப்பட்டான் சுகுமார். இது ஒரு  மாதத்திற்கு முன்னே சுகுமாரின் நண்பனொருவன் மூலம் அவன் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் அதை நேரமின்மையால் பார்க்க முடியவில்லை. இதை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு இருப்பார்கள்.  


                                 எப்போதும்  தான் வாங்க நினைக்கும் ஒரு பொருளை  அலசி ஆராய்ந்து தான் சுகுமார் வாங்குவான். ஆன்லைனில் வாங்கும் முன் அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கமெண்ட் பாக்ஸில் இடப்பட்டிருக்கும் கமெண்ட்டை பார்த்தே அந்த பொருளை வாங்க திட்டமிடுவான். அதனால் கமெண்ட் பாக்ஸ்க்கு  கீழ் நோக்கி தன் கண்களை தேட விட்டான். “என்ன ஆச்சரியம்! யாரும் நகை வாங்கவில்லையா? எத்தனையோ  நாட்களாக இந்த விளம்பரம் வருகிறது என்று  சரண் சொன்னானே?” என்று தன் நெற்றியை சுருக்கி,  தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் கண்ணை மூடிக்கொண்டு தன் குழந்தைக்கும் மனைவிக்கும் விதவிதமாக நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்ற மனதோடு அதில் இடம்பெற்றிருந்த நகைகளை வாங்கி அவர்களுக்கு சர்ப்ரைஸாக பரிசளிக்க நினைத்திருந்தான். ஆனால்  ஏதோ ஒரு சந்தேகம்  மனதில் இருக்கவே  தன்னை அறியாமல் அப்படியே தூங்கிப்  போனான்.


                                       உறக்கத்திற்கு முன்       இந்த சிந்தனையிலேயே  படுத்ததால் கனவிலும் அவன் இதைப் பற்றியே நினைத்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் கண் முன் கடவுள் தோன்றினார்.  தன் முன் தோன்றிய கடவுளிடம்   ஏன் யாரும் தங்க நகை வாங்கவில்லை?  என்ற தன் சந்தேகத்தைக்  கேட்டான். அதற்கு கடவுள், “ நாடு செழிப்பாக  இருக்கிறது. பெண்கள் யாரும்  தங்கத்தை  அணிய விரும்பாததால் தங்க நகையை  வாங்குவதில்லை. இவ்வளவு  காலம் வரை பெண்கள்   தங்க நகை அணிந்தால் அழகு கூடும் என்று நினைத்திருந்தனர்.  ஆனால் தற்போது அதை போகப் பொருளாக நினைத்து வாங்க ஆசைப்படுவதில்லை.  முன்பு தங்கத்தை  வைத்து கடன்   வாங்குவதுமாக இருந்தார்கள். ஆனால்  நிறைவான வாழ்க்கை அமைந்ததாலும்  தங்கம்  என்ற உலோகம் அவர்களுக்கு  தேவைப்படவில்லை.  அதற்கு பதிலாக  அந்த பணத்தை தங்கள்  கேளிக்கை விழாக்களுக்கு   செலவிடுகிறார்கள்.”  என்று பதிலளித்தார்.


                                                   “யார்?  எப்படியோ! ஆனால்  நான் என் மனைவிக்கு  ஒட்டியானம் பரிசளிக்க விரும்புகிறேன்.  ஆனால் அதை வாங்க அவள் மறுத்தால்  என்ன செய்வது என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.  அதனால் நான் கொடுக்கும் பரிசினை வாங்குமாறு  அவளுக்கு நீங்கள் யோசனை சொல்ல வேண்டும்.” என்று கடவுளிடம் கேட்டுக் கொண்டான் சுகுமார்.  கடவுள் புன்சிரிப்போடு மறைய, நான்  சுகுணாவுக்கு ஒட்டியானம் வாங்கித் தரவேண்டும். ப்ளீஸ் அவளிடம் சொல்லுங்கள்! சொல்லுங்கள்!  சுகுணா உனக்கு ஒட்டியானம் போட்டா ரொம்ப அழகா இருக்கும் என்று தூக்கத்திலே கத்திக் கொண்டிருந்தான்.  


                                    “ என்னது!  ஒட்டியானமா ? இங்க மூக்குத்தி வாங்கி கொடுக்கவே வழி இல்ல. நீங்க போய் எனக்கு ஒட்டியானம் வாங்கித் தர போறீங்களா?” என்று  பதிலுக்கு கத்திக்கொண்டே ஒரு வாளி தண்ணியை எடுத்து   சுகுமார் மீது ஊற்றினாள் அவன் மனைவி சுகுணா.  தண்ணீர் ஊற்றப்பட்டதும்  தூக்கம் கலைந்த சுகுமார்,  தான் கண்டது கனவு தானோ? தங்கம் விலை குறையுமா அது இந்த கலியுகத்தில் நடக்குமா என்று எண்ணிக் கொண்டு, நிஜத்தில் தான்  என்னால் சுகுணாவுக்கு ஏதும் வாங்கி தர முடியவில்லை.  கனவிலும் கூட அவளுக்கு தங்க நகை வாங்கி தர முடியாமல் போய்விட்டதே   என்று   தன்   ஏழ்மையை நினைத்து  வருத்தப் பட்டான். 


                             தினமும் விடியும் ஏதாவது ஒரு ஏழையின் வாழ்க்கையில்   என்ற நம்பிக்கையோடு இருப்போம்.


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...