தொட்டியில் உன்னை பிரசவிக்கும் மண்ணோடு
உன் விதையை இட்டு
அதற்கு தினமும் தண்ணீர் விட்டு
உன் வருகைக்காக நான் காத்திருப்பதும்
உன் முயற்சியாலும் சூரியனின் அனுகிரகத்தாலும்
மண்ணில் நீ, உன் தலையை மேலே எழும்பச் செய்வதும்
உன் பிறப்பை பார்த்து நான் முதலில்
ஆச்சரியப்பட்டு நிற்பதும் பின் நீ யார்? என்பதை மறந்து,
நான் தவிப்பதும்
ஓரிரு நாட்களில் உன்னை உன் இலைகள் கொண்டு
என்னை நீ சிலிர்க்க செய்வதும்
அதற்குள் நீ இன்னவள் தான் என நான் உன்னை ஓரளவு
யூகித்துக் கொள்வதும்
ஏழு நாட்களுக்குள் என்னை நான் விஞ்ஞானியாய்
பாவித்து உன்னை முழுமையாய் அடையாளம்
தெரிந்து கொள்வதும்
மேலும் சொற்ப நாட்களில் உன்னை
நீயே தோட்டத்தில் விஸ்தரித்துக் கொள்வதும்
என் கொல்லைப்புற தோட்டத்திலும் என் மாடி வீட்டு
தோட்டத்திலும் உன்னை நான் வைத்து அழகு பார்ப்பதும்
வீட்டிற்கு வருவோரிடம் உன்னை காட்டி நான் மகிழ்வதும்
என் மாடி சுவறில் உன்னை வரிசைப்படுத்தி நான் வைக்க,
வழியில் செல்வோர் உன்னை பார்த்தும்
என் கண்களில் படாதவாறு ஓரக்கண்ணால்
உன்னை ரசிப்பதும்
பக்க கிளைகளாலும் இலைகளாலும் நீ உன்னை
உருமாற்றிக் கொண்டு என் தோட்டத்தை அடைத்து
கொண்டு அழகு படுத்துவதும்
உன் வரவில் எனக்கு உன் மேல் ஈர்ப்பு வந்து, மறுபடியும்
பல புதிய விதைக் கொண்டும் சிறிய செடி கொண்டும்
உன்னை நான் தோட்டத்தில் நட்டு வைப்பதும்
சுப நிகழ்ச்சிகளில் நீ இலவசமாக கிடைத்ததும்
என் சகோதர சகோதரியர் ஆர்வ மிகுதியால் உன்னை
வீட்டிற்கு அழைத்து வருவதும்
உன்னை தோட்டம் அமைத்தும்
வரிசையில் வகுப்பில் அமர்த்தும் புது மாணாக்கன்
போல சேர்த்து வைப்பதும்
தோட்டம் இல்லாதோர் உன்னை ஒரு பொது
இடத்தில் நட்டு வைப்பதும்
அடர்ந்த இலைகளுக்கு நடுவே மலர்களாய் நீ உன்
புன்னகையை உதிர்த்ததும்
அதில் தோன்றும் காய்கள் கொண்டு நிதமும்
உன் வளர்ச்சியை நான் சோதிப்பதும்
பக்குவம் அடைந்த பின் அதை சுயநலத்தோடு பறித்து
இறைவனுக்கு படைத்து
என் மனத்தை சுருக்கி முதலில் நான் புசிக்க
ஆவல் கொள்வதும்
உன் விளைச்சல் என்னும் வளர்ச்சியால்
நீ என்னை திக்குமுக்காட வைப்பதும்
உன்னை, உண்டு உண்டு களைத்து
தேகத்திற்கும் மனதிற்கும் நீ போதும் என்று தோன்றும்
போது என் அகம் விரித்து அடுத்தவருக்கு
கொடுத்து உன்னை நான் கரை சேர்ப்பதும்
காணக் கிடைக்காத பொக்கிஷமாய் வாங்கியவர்,
உன் பலனை நினைப்பதும் அனுபவிப்பதும்
அவர் வீட்டில் வளர்த்த உன் இனத்தாரை பண்ட மாற்று
முறை செய்து அவர் தன் மனதை என் முன்னால்
பெருமிதப்படுத்திக் கொள்வதும்
கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு குளிர்ச்சியை
ஏற்படுத்த நினைத்து கதிரவன் கூட இல்லாமல் நீ
வளர்ந்து செழித்து நிற்பதும்
அழகுக்காகவே நீ என் வீட்டு வரவேற்பறை வரை
வந்து என் இருப்பிடத்தை ஆட்கொள்வதும்
பூமியில் பரந்து விரிந்த உன்னை நான் ஆராதிக்க நினைப்பதும்
அதற்காக சில நாட்கள் உனக்காக ஒதுக்கி வைப்பதும்
உன் பன்முகத் தோற்றத்தை, வளர்ந்து நின்ற முளைப்பாரியிலும்
ஆறு குளங்களுக்கிடையேயும் மலையில் விரிந்து கிடக்கும்
பச்சை கம்பளமாயும் வறண்ட பூமியிலும் நீ
தட்டுத் தடுமாறி வளர்வதும்
உன் புன்னகையின் செழிப்பாலும் பசுமையாலும்
மாறிக் கொள்வது என் தோட்டம் மட்டுமல்ல என்
மனதும் தான்
அப்பப்பா! இத்தனை வடிவம் கொண்ட உன்னை என்றும்
என்னில் நினைக்க வரம் கொடுக்க பணித்து விடு இறைவனை
உன்னை போல் மலர்ந்து சிரித்து மகிழ்ந்து வாழ்ந்திட!
தாவரமே! எனக்கும் தா! வரமே!