Monday, June 27, 2022
இந்த வாரத்தலைப்பு "தந்தை" by Vidhya Nivash
தன்னலமற்ற தன்னிகரற்ற
தந்தையே
உம்மை கண்டு வியந்தேன்..
எங்களின் கர்வம்
எங்களின் சலுகை
எங்களின் அடிமை(அன்பால்,அடத்தால்)
எங்களின் சுதந்திரம்...
ஒரு சொல் பல அர்த்தம்
பலவற்றிற்கு தடை சிலவற்றிற்கு எல்லையற்ற விடை
இளமையில் கண்டிப்பு முதுமையில் குழந்தை
பலரின் வில்லன் பலரின் நண்பன்
தனிமையில் தேடும் விடை
நேன்றும் இன்றும் என்றும் எங்களின் சொத்து
ஒரு போதும் மறவாமல் எங்களை இன்றும் குழந்தையாக பாவிக்கும் தந்தையே
நான் உங்கள் இடத்திற்கு வந்த பின்பு தான் உணர்ந்தேன் பல தடையுக்கு விடை..
இன்றும் பல நேரம் பலவற்றை நினைவில் கொண்டு மகிழும் அன்பு மகள்
Sunday, June 19, 2022
இந்த வாரத்தலைப்பு "முயற்சி" by Vidhya Nivash
முயற்சி என்ற படிக்கட்டுகள்
இல்லாமல் வெற்றியை அடைய முடியாது.
முட்டி மோதி முயன்று உன் ஓட்டை உடைத்து வா வெளியே..இந்த சுதந்திர காற்றை சுசிக்க,வண்ண வண்ண காட்சிகளை காண,இனிக்கும் ஓசையை கேட்க, ஆவலாக காத்திருக்கும் அன்னையும்,புகைப்படம் எடுக்க அகிலாவும்,உன்னை காண பல கண்களும் காத்திருக்க...
முயன்று வா
முயலாமல் மூழ்காதே
சிறிய குச்சிகள்,சிறிய இடுக்கு இதிலே ஒரு அழகிய வீடு,சில ஜீவனும் ஜனிக்கிறது...
முட்டி மோதி வெளி வர பல ஜீவன்களும் துடிக்கிறது.
நமக்கெல்லாம் இல்லை அறுவை சிகிச்சை..
முயற்சி இல்லையேல்..
மூச்சு இல்லை.
என்ன முயற்சி செய்தாலும் விடாமல் தொடரும் கொரோனா..
அதுவும் தொடர முயற்சி செய்ய, நாமும் வர வேண்டாம் என முயற்சி செய்ய...
இடையில் என்னை விட்டு விடுங்க என கதரும் மூக்கும்,மாஸ்க்கும்😃
Saturday, June 18, 2022
இந்த வாரத்தலைப்பு "முயற்சி" by Veena Shankar
வழியில்லா இடத்திற்கும் பாதையென்றானது மனிதனின் முயற்சியால்
மூன்று முத்துக்கள் வெளி வர துடிப்பதும் தாயின் முயற்சியினால்👍
Tuesday, June 14, 2022
இந்த வாரத்தலைப்பு "முயற்சி" - Title by Akhila Devi Kumaran & சிறுகதை by Veena Sankar
முயற்சி
“சங்கீதா! உன்னால முடியும். மனம் தளராதே! இவ்வளவு நாள் நீ செய்த முயற்சி, பயிற்சி எல்லாமே வீணாக போய்விடும்.” என்று வாசு, சங்கீதாவின் தலையை மெல்ல வருடி சொல்லிக் கொண்டிருந்தான். “பயிற்சி எடுத்திருந்தாலும் முன் போல ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.” என்றாள் சங்கீதா. “அதெல்லாம் ஒன்னும் இல்லை சங்கீ. இந்த மேடை கிடைக்கிறது பெரிய கஷ்டம். இருந்தாலும் இந்த வாய்ப்பு உனக்கு பெருசா கிளிக் ஆகும் பாரு.” என்று மீண்டும் சங்கீதாவை எப்படியாவது பாட வைக்கும் முயற்சியில் இருந்தான் வாசு. “சரிங்க,” என்று தலையசைத்தாள். அதற்கான பாட்டு பயிற்சியையும் தொடர்ந்தாள்.
இரு ஆண்டுகளுக்கு முன் அவள் பாட வேண்டிய இடத்தில் அவளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. எதிர்திசையில் இருந்த ஹோட்டல் கடையில் எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடிக்க, பொருட்கள் நாலா பக்கமும் சிதற, அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு பொருள் சங்கீதாவின் தொண்டையை பதம் பார்க்க வைத்து விட்டது. எனவே சங்கீதாவின் குரல்வளம் பாதிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கும் பெரிய முயற்சிக்கும் பின் இன்று எப்படியோ மீண்டும் அதே இடத்தில் மேடையில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது தான் ஆச்சரியம். சங்கீதா பாட முடியாது என்று பலரும் நினைக்க, முயற்சி கொண்டு தன் குரல் வளத்தை பயிற்சி கொண்டு மீண்டும் வளப்படுத்த, கடைசி நிமிடத்தில் வாசுவின் பேச்சும் ஊக்கத்தை கொடுக்க, மேடையில் பாட தயாரானாள் சங்கீதா.
அவள் பாட ஆரம்பிக்கும் முன் கரகோஷம் ஒலிக்க, தன் கடந்த கால வாழ்க்கையை தன் ரசிகர்களிடம் சுருக்கமாக பகிர்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தாள், “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!” என்ற பாடலை.
ஆம். நம் உடலில் குறை இருந்தாலும் கூட மனதில் குறை இல்லாமல் வாழ பழகிக் கொள்ள வேண்டும். பாடுவதற்கு முழு முயற்சி எடுத்த தன் கணவன் வாசுவையும் நினைத்து மேடையில் நன்றியோடு கையெடுத்து கும்பிட்டாள் சங்கீதா.
முயற்சியும் பயிற்சியும் சிறந்தது, வாழ்வை உருமாற்றி எதிர்கொள்ள.
Monday, June 13, 2022
இந்த வாரத்தலைப்பு "மிதிவண்டி" by Vidhya Nivash
மிதிக்க மிதிக்க மனம் லேசாகி
மிதவை போல நீரில் மிதக்க
மயக்கத்தில் போவது சாலையிலா?
காற்றில் பறக்கும் பறவை போல் வானத்திலா?
அலைகள் இல்லா ஆழியிலா?
இல்லை இல்லை கனவில் ..
என்னை தழுவி மிதிக்க மிதிக்க
சொல்வோம் வா அங்கு நிஜத்தில் தோழியே!!!
இந்த வாரத்தலைப்பு "மிதிவண்டி" by Veena Shankar
மிதிவண்டியின் சக்கரமும் வாழ்க்கை சக்கரமும் முன்னேற்றும் பாதைக்காக
மிதிபட்டாலும் மனிதரை முன்னேறிய பெருமை மிதிவண்டிக்கு மட்டும் தான் உண்டு.
மிதிவண்டியும் மிதவைக் கப்பலானது அன்று. இன்றோ உடலை காக்கும் பொருளானதே
கலங்காதே மிதிவண்டியே! மறுபடியும் மனிதன் உன்னை தீண்டும் காலம் வந்துவிட்டது உயரும் பெட்ரோல் விலையிலே.
உதறாதே மனிதனை, நீ உதிரும் பூவல்ல என்பதால்.
ஆரோக்கியமான மிதிவண்டி இருக்க ஆடம்பரமான மிதவை வண்டி எதற்கு😊
கால்கள் அழுத்த வீல்களில் முன்னேற்றம்
Saturday, June 4, 2022
நாட்டில் என் பங்கு by Veena Sankar
நாட்டில் என் பங்கு
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு கொண்டு சென்றது நம் மண்ணின் மைந்தர்கள் தான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நம் முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வையாலும் தற்போதைய ஆளுமை பண்புடையவர்களாலும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். இருப்பினும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு என் பங்கும் வேண்டும் என்று நினைத்ததால் இதை எழுத தூண்டியது. மேலும் நான் என்னை பன்முகத் தன்மை கொண்டவளாக நினைப்பதால் ஒவ்வொரு நிலையில் இருந்தும் என் கடமை, பங்கு ஆகியவற்றை சிந்தனை செய்த பின் என் கருத்தை எடுத்து வைக்க ஆசை பட்டேன்.
மாணவர் பங்கு :
களிமண் பொம்மைகளுக்கு வர்ணம் பூசி உயிர் கொடுப்பது போன்று தான் நம் மாணவர்களின் நிலை. சிறு வயது முதலே மாணவர்களுக்கு வெற்றி என்பது எளிது அல்ல என்பதையும் சில நேரங்களில் போராட்டத்தாலும் கிடைப்பது வெற்றி என்று தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் தான் எதற்காக போராடுகிறோம் என்று அறிய வேண்டும். மேம்போக்காக போராடுவதும் பலனை தராது. நம் நாட்டிற்கு சாதகமான சூழ்நிலையில் வீறு கொண்டு போராட வேண்டும். ஏற்றி விட்ட ஏணியை மறவாமல் மாணவர் ஆற்றும் பணிக்கு ஈடு இல்லை. சுயமாக போராடும் பொழுது அது அவர் தம் வாழ்க்கையை பாதிக்க கூடாது. போராட்டம் என்பது தங்களின் கடமையை நிராகரித்து செயல்படுத்தக் கூடாது.
என்னை பொருத்தவரை மாணவர்கள் நாட்டின் தூண்கள் என்பதால் போராட்டம் என்ற சொல்லை மறந்துவிட வேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்குப் பின்னால் ஒருவர் இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு, தான் அவர்கள் பின்னால் இருந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
குடும்பத்தின் பங்கு :
குடும்பமானது தங்களுடைய ஒற்றுமை குறையாத வண்ணம் இருந்தாலே அது நமக்கு வளர்ச்சியை தரும். நாம் நம் மனத்தால் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். “நிலாச் சோறு” உண்பது முதல் நிலவில் கால் வைப்பது வரை நடக்கும் கலாச்சார நிகழ்வுகளில் நம் குடும்ப உறுப்பினர்களோடு பங்கு கொள்ள வேண்டும். தற்போது கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வேலை நிமித்தமாக தனிக் குடும்பங்கள் பெருகி விட்டன. இருந்தாலும் குடும்பத்தில் நிகழும் விழாக்கள் மூலமே நாம் நம் உறவுகளை தெரிந்து கொண்டு உறவுகளை மேம்படுத்த முடியும். நம் நாட்டின் கலாச்சாரம் நமக்கு தெரிந்திருந்த போதிலும் அதனை மறக்காமல் காப்பாற்றிட வேண்டும். மேலை நாட்டவரின் நல்ல விஷயங்களை கிரகித்துக் கொண்டு நம் குடும்பத்தினரிடம் நல்ல நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
குடிமகன்களின் பங்கு :
“குடி உயர நாடு உயரும்” என்பதே வாக்கு. அதன்படி தனி மனித ஒழுக்கம் முற்றிலும் பேணப்பட வேண்டியது அவசியம். லஞ்சத்தை உருவாக்குவதும் ஒழிப்பதும் தனி மனிதனின் பண்பையே சாரும். மேலும் தனக்கு விதிக்கப்பட்ட அரசாங்க வரியை செலுத்தி தேசத்தின் நிதி நிலையை உயர்த்திட வேண்டும். அதே சமயம் ஓட்டுக்காக காசு வாங்குவதை மனதாலும் நினைக்கக் கூடாது. அது அவர் தன் கடமையை அடமானம் வைப்பதற்கு சமமாகும். ஒரு போதும் தனி மனிதனின் மகிழ்ச்சிக்காகவும் பேராசைக்கும் அவன் தன்னை இழக்க கூடாது.
மாநிலங்களின் பங்கு :
நதி நீர் பங்கீடு செய்வது முதல் வணிக தொடர்புகள் வரை மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வு இருப்பது அவசியம் என்பதை மறுக்க முடியாது. “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என்பதை புரிந்து மாநிலங்கள் செயலாற்றினால் நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுக்க இயலாது.
சமுதாய பங்கு :
“ஒற்றுமையே பலம்”. ஒவ்வொரு தனி மனிதனின் கூட்டமைப்பே சமுதாயம் ஆகும். விவசாயமும் தொழில் நுட்பத்தால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும். “விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதையும் ஜாதி, மதம், கலை, பண்பாடு, கலாச்சாரம் என்று மக்கள் வேறுபட்டாலும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும். கலாச்சார சீரழிவு விழாக்களை ஒதுக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழிலதிபரும் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுக்க முன் வர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தேவைப்படும் எனில் வெளிநாட்டு முதலீடுகளையும் தொழில்களையும் வரவேற்று, நம் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். “மின்னணு இந்தியாவை” பாமரனுக்கும் எளிதில் புரியும் வகையில் அமைத்திட வேண்டும்.
பண்டைய காலத்தில் “வீட்டுக்கு ஒரு வீரன்” என்ற அடிப்படையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். எல்லையில் துப்பாக்கி ஏந்தி நாட்டை காப்பவர்களுக்கும் எல்லை பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பு தந்திட வேண்டும் . இதற்கு நாம் ஒன்றாக இணைய வேண்டும். தீய சக்திகளுக்கு விடை கொடுத்தும் அறிவியலார் தந்த கருத்துகளை ஏற்றும் நம் பங்கினை நாம் ஆற்ற வேண்டும்.
“பெண்ணிற்கு பொன் அழகு சேர்க்கும்” என்பது போல நம் பங்கினை அளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும் நம் பங்கு என்பது “மலைத்தேன் அல்ல. நாமும் முடவர் அல்ல”. என் பங்கு என்ன என்பதை தெரிந்து கொண்டு நம் பங்கினை செய்ய வேண்டும் என்பதே என் ஆவல்.
ஒலி " சிறுகதை by Veena Sankar
எப்போதும் தன் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கும் ரூபா, தனக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின் வேகமாக இயக்குவதை நிறுத்திக் கொண்டாள். அன்று கடைத் தெருவிற்கு சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் தன் இரு சக்கர வாகனத்தில் பயணித்தாள். ஒவ்வொரு இடத்திலும் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்கிய பின் பையில் திணித்துக் கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தாள்.
மெதுவாக வந்து கொண்டிருந்த அவளுக்குப் பின்னால் ஒரு இருசக்கர வாகனம் வருவதை உணர்ந்து தன் வண்டியை ரோட்டின் இடது பக்கமாக ஒதுங்கி சென்றாள். இருந்தாலும் தன்னை பின் தொடர்ந்து வந்த வண்டி ஓயாமல் ஒலி எழுப்பி கொண்டு வந்ததை பார்த்து சற்று எரிச்சல் அடைந்தாள். இதற்கு மேல் தன் வண்டியை இடது பக்கமாக ஒதுக்க முடியாது என்ற காரணத்தினால் தன் வண்டியை நிறுத்தி, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குப் பின்னால் வந்த வண்டியில் இருந்தவனை பார்த்து, “ஓயாமல் ஒலி எழுப்பி கொண்டு வருகிறீர்களே?” இதற்கு மேல் நான் ஒதுங்க இடம் கிடையாது என்று காட்டமாக சொன்னாள்.
அதற்கு அவர் “மன்னிச்சுக்கோங்க. நான் ஏதும் ஒலி எழுப்பவில்லை. நான் வண்டியில் வைத்திருக்கும் இந்தப் பெட்டியானது ஒலிப்பான் மீது பட்டு பட்டு ஒலி எழுப்பி விட்டது.” என்று சொன்னார். அவர் நிலைமையை பார்த்து மனதிற்குள் சிரித்தாள். அவரை தவறாக நினைத்த தன்னையும் மன்னிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டாள்.
பிறரை சாடும் முன் உண்மை நிலையை தெரிந்து கொள்வது நன்று.
Friday, June 3, 2022
இந்த வாரத்தலைப்பு"கண்ணாடி" by Vidhya Nivash
கண்ணுக்கு தெரியாதை காட்ட நீ வந்தயோ
என்னை என் கண்ணுக்கு காட்டியது நீ அன்றோ
குழந்தையிலிருந்து உன்னை கண்டு நான் என்னை ரசிக்கிறேன்..
குழந்தைகள் வந்தவுடன் உன்னை காண நேரமில்லை அதனால் என் மகள் வருவாள் மகனும் வருவான் மீசை அரும்பும் போது..
கோபத்தில் உன் முகத்தை போய் கண்ணாடியில் பார் என்பர்..எனக்கு பாவமாய் காட்டுவாய்..
மகிழ்ச்சியில் துள்ளும்போது எவரும் சொல்வதில்லை...
மீண்டும் உன் முன் வருவேன் நான் மனதில் குழந்தையாகும் போது ..
காத்திரு கண்ணாடியே
இந்த வாரத்தலைப்பு"கண்ணாடி" by Veena Shankar
முடிவு தெரியா என் பயணத்தில் என்னை, முடிசூடா மன்னனாக்கியது என் முன் இருந்த பள பள கண்ணாடி
என் பருவ மாற்றத்தையும் இயல்பாய் என்னிடம் சொல்ல துணிந்தவன், என் மனத்தையும் பக்குவமடைய துடித்தவன் என் தோழன் கண்ணாடி
தான் உடைந்தாலும் என்னை வெவ்வேறாக காட்ட தெரியாதவன்
என் தோற்றத்தின் முடிவு உன் கையில், நன்றாக பிரதிபலித்தால் சொற்ப நேரம் மிச்சமே
பாதரசம் தடவிய கண்ணாடியில் நான் அழகு, அது இல்லாத கண்ணாடியை நான் அணிந்தால் நான் காணும் பொருள் அழகு
என் பிரதிபலிப்பாக நீ இருந்தாலும் என் பேச்சை மட்டும் ஏன் நிராகிக்கிறாய் கண்ணாடியே?
Wednesday, June 1, 2022
நகரத்து வாழ்க்கை
"நகரத்து வாழ்க்கை" சிறுகதை by Veena Sankar
நகரத்து வாழ்க்கை
கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெரியசாமிக்கு சொந்த பந்தங்கள் என்று புடை சூழ வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அவர் பையனுக்கு நகரத்தில் ஒரு பெரிய வேலை கிடைக்க, நகரத்தில் குடிபெயரும் நிலை வந்தது. தன் சொந்தங்களையும் தான் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை அப்படியே விட்டு செல்லவும் மனமில்லாமல் தன் வீட்டில் ஒருவரை குடியமர்த்தினார்.
நகரத்திற்கு சென்றவுடன் சிலர் அந்த வாழ்க்கைக்கு மாறிப் போவார்கள். ஆனால் பெரியசாமிக்கு அது முடியாமல் போனது. காலையில் வீட்டை விட்டு செல்லும் மகன் இரவு தான் திரும்பி வருகிறான். எத்தனை நேரம் தான் தொலைக்காட்சியில் வரும் தொடர்களையும் சினிமாக்களையும் பார்ப்பது? ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் என கழித்து வந்தார். தான் காலார நடந்து வந்த வாய்க்கால், வரப்புகளையும் காலையில் எழுந்தவுடன் டீக்கடைக்கு சென்று அங்கே இருக்கும் பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்த நாட்களும், முண்டியடித்துக் கொண்டு சினிமா கொட்டகையில் முதல் வரிசையில் தலைவர் படம் பார்த்ததும், மாரியம்மன் பொங்கல் திருவிழாவிற்கு காப்பு கட்டி நேர்த்திக்கடனை செலுத்துபவர்களையும், தன்னிடம் தம்பி போல் பழகிய உறவுகளையும் நண்பர்களையும் மறக்க முடியாமல் தவித்தார். எல்லாவற்றையும் விட கிராமத்தின் மண் வாசனையையும், பசுமையான பூமியையும் காணாமல் ஏங்கினார். முடிந்தவரை தனிமையை தவிர்க்கும் கிராம மக்களும், இரவில் தொலைக்காட்சியில் அன்றைய செய்திகளை கண்டும், பழைய பாடல்களை ரசித்தும், நிலாச் சோறு சாப்பிட்ட நினைவும் அவர் மனதில் நீங்காமல் இருந்தது.
கிராம மக்களிடையே அலைபேசி கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்ததும் மேற்படியானவை கொஞ்சம் குறைந்து போய் இருந்தாலும் நகரத்தை போல முற்றிலுமாக வாழ்க்கையை மாற்றி விடவில்லை. மனிதர்களிடையே நேரடி பேச்சு குறைந்து விட்டது என பெரியசாமி வருத்தப்பட்டுக் கொண்டார். குதூகலத்துடன் இருந்தபோது தன் அலைபேசியில் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை பார்த்து தன் மனதைத் தேற்றிக் கொண்டார்.
தன்னைப் போலவே தன் வீட்டு பக்கத்தில் தனியே குடி இருந்த பெண்மணியிடம் ஸ்நேகம் கொள்ளலாம் என நினைத்து பெரியசாமி அங்கே செல்ல அந்தப் பெண், அவளின் உறவினர் ஒருவரால் வீல் சேரில் அமர வைக்கப்பட்டு ஆட்டோவில் ஏற்றப்பட்டு கொண்டு இருந்தார். அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது என்று தவித்த பெரியசாமி, அந்தப் பெண்ணை ஏற்றிவிட வந்தவரை விசாரிக்க, இத்தனை நாள் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்ததாலும் அக்கம்பக்கத்தினரிடம் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாது என அவர் மகன் கட்டளை இட்டதால் யாரிடமும் பேசாமல் இருந்தாலும் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டதாக சொன்னார்.
மேலும் தான் தற்செயலாக உறவின பெண்மணியை பார்க்க வீட்டிற்கு வந்ததாகவும், அவரின் நிலையை கண்டதும் அவர் மகனுக்கு விவரத்தை தெரிவித்ததாகவும் சொன்னார். தன் தாயை பார்க்க வந்த உறவினரிடமே தாயை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல சொன்னதாகவும் தெரிவித்தார்.
இது என்ன கொடுமை! நகரத்தில் சம்பளத்திற்கு பஞ்சம் இல்லை என்றாலும் மனிதர்களுக்கு நோயும் இலவசமாக கிடைக்கும் போலவே! என்று ஆச்சரியப்பட்டு, தானும் இப்படியே வாழ்ந்தால் நகரத்து சூழ்நிலை தன்னை மாற்றிவிடும் என்று நினைத்து ஒரு முடிவை எடுத்து, தன் வீட்டை நோக்கி நடந்தார்.
அலைபேசியில் தான் வைத்திருந்த அனைவரின் தொலைபேசி எண்ணையும் ஒரு பேப்பரில் எழுதினார். அதில் முக்கிய உறவினர்கள், நண்பர்களின் எண்களை மட்டும் தன் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டார். தன் வீட்டு உறவினர் அல்லாது மனைவி வீட்டு உறவினர்களின் பெயரையும் மறக்காமல் குறித்துக் கொண்டார்.
தனக்கு எல்லா நாட்களும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தினமும் ஐந்து நபர்களிடம் ஒரு துளி நிமிடமாவது அலைபேசியில் பேசி தங்கள் உறவை மேம்படுத்தி கொண்டார். மேலும் உறவினர்கள், நண்பர்களின் அன்புக்கு பாத்திரமானார் பெரியசாமி.
உடல் குன்றினால் கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் மனம் குன்றிய வாழ்க்கையை மருத்துவமனையில் தான் கழிக்க முடியும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.
மணம் வீசும் பேச்சில் மனம் குளிரும்.
அம்மா வீடு
"அம்மா வீடு" சிறுகதை by Veena Sankar
தன்னை அபிஷேக் கூப்பிடுகிறானா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு, “அர்ச்சனா! அர்ச்சனா!” என்ற அபிஷேக்கின் குரல் கேட்டது. இருந்தாலும் கேட்காதது போல் உள்ளேயே இருந்தாள். வழக்கமாக அபிஷேக் அலுவலகத்திற்கு செல்லும் போது அர்ச்சனா அவன் முன் நின்று டாட்டா காட்டிய பிறகே அபிஷேக் செல்வான். அன்று அபிஷேக் அழைத்தும் அர்ச்சனா வராததால் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அபிஷேக் சென்றதும் அரை மணி நேரத்திற்குப் பிறகு தன்னுடைய சிற்றுண்டியை முடித்து ரூமிற்கு சென்று தாழிட்டுக் கொண்டாள் அர்ச்சனா. அவளின் மாமியாரோ பக்கத்தில் இருக்கும் தன் மகள் வீட்டிற்கு செல்வதாக சொல்லி கிளம்பினாள். தனியே இருந்த அர்ச்சனா அங்குமிங்குமாய் அமர்ந்து யோசனை செய்தபடியே இருந்தாள். எப்படி என்னை பார்த்து அத்தை இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாம்? அதற்கு அபிஷேக் ஒன்றும் சொல்லவில்லையே என்ற கோபம் தான் அவளுக்கு அபிஷேக்கின் மீது இருந்தது.
முன்னாளில் பெண்ணுரிமை பற்றி பேசிய அவள், தன் மாமியாரின் முன் வாயடைத்து தான் நின்றிருந்தாள். சுற்றி சுற்றி வந்து நேரத்தை கடத்தி, ஒருவழியாக தன் சூட்கேசை எடுத்தாள். நாலைந்து சுடிதார்களை திணித்து கதவை தாழிட்டு, தன் அத்தையிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் தன் அம்மா வீட்டிற்கு கிளம்பினாள். பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள். அரை மணி நேர பயணத்திற்கு அரை மணி நேரம் பேருந்துக்காக காத்து இருந்தாள். தான் வளர்க்கப்பட்ட விதம், தன் தாய் - தந்தையர் தன் மீது வைத்துள்ள பாசம் எல்லாவற்றையும் நினைக்கையில் அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. விழியோரம் கசிந்த கண்ணீரை அடுத்தவர் கவனிக்காமல் இருக்க அவ்வப்போது தன் சுடிதார் சாலில் துடைத்துக் கொண்டாள்.
பேருந்து வர அதில் ஏறி அமர்ந்தவளுக்கு, மீண்டும் மீண்டும் மாமியாரின் பேச்சு மனதை குழப்பிக் கொள்ள வைத்தது. பெண்ணை கட்டி கொடுத்து விட்டால் அவள், கணவனுக்கும் அவள் அம்மாவுக்கும் அடிமையா? கல்லூரியில் பெண்ணுரிமை பற்றி பேச்சுப் போட்டியில் பேசி தான் பரிசை தட்டிச் சென்றதும் அவள் முன் நிழலாடியது. தான் மட்டும் செல்வதால் மாப்பிள்ளையை காணாது தன்னுடைய அம்மா தவிப்பாள் என்று தெரிந்திருந்தும் தனியே பயணித்தாள்.
என்ன? ஏது? என்று பதறிப் போவாள் அர்ச்சனாவின் அம்மா. ஆனால் இந்த ஏச்சுப் பேச்சுகளை தவிர்த்து விட எனக்கு மனம் வரவில்லையே என நினைத்துக் கொண்டே இருக்கையில் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கியவள், பத்து நிமிட நடைபயணத்தில் தன் அம்மா வீட்டை அடைந்தாள்.
அர்ச்சனா உள்ளே செல்லும் பொழுதே அவள் அம்மா, அண்ணியை பார்த்து “என்ன வளர்த்திருக்கிறார்கள் உன் வீட்டில்? இதை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே?” என்ற கேள்விகள் தன் மாமியாரை நினைவுபடுத்தியது அவளுக்கு. தன் அம்மா பலவாறு வசைபாடி கொண்டிருந்ததை முதன் முறையாக கேட்டாள். பெண்ணியம் பேசி என்னை வளர்த்த அம்மாவா இது? பெண்ணிற்கு ஆண் எதிரியல்ல. பெண்ணிற்கு பெண்ணே தான் எதிரி என்பது போல இருந்தது அவள் அம்மாவின் பேச்சு. தொப்பென்று தன் பெட்டியை சோபாவில் கிடத்தினாள். சத்தம் கேட்டு திரும்பிய அம்மா, “மாப்பிள்ளை வரவில்லையா? நீ மட்டும் தான் வந்தாயா?” என கேட்டதும் தன் அம்மாவை கண்களால் மட்டும் முறைத்தாள்.
“என்னமா! நீ இப்படி? உன்னை போல் பெண்களை அனுசரணையாக நடத்துபவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து இருந்தேன். ஆனால் நீ என் அண்ணியை இப்படி திட்டுகிறாயே?” என்று அண்ணி பக்கம் அர்ச்சனா பேச, தன் அண்ணியின் கண்களில் இருந்து நீர் பெருகுவதையும் கவனிக்க தவறவில்லை அவள்.
“இதெல்லாம் உனக்கு வேண்டாம். நீ இந்த வீட்டுப்பெண். அவள் இந்த வீட்டு மருமகள். எப்போதும் இந்த வித்தியாசம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும்.” என சொல்லி அர்ச்சனாவின் வாயை அடைத்தாள் அம்மா. மெல்ல அர்ச்சனாவின் பக்கம் வந்த அவள் அண்ணி, “ப்ளீஸ்! அர்ச்சனா நீ எனக்காக சப்போர்ட் பண்ணி பேசாதே. நீ போன பிறகு அதற்கும் சேர்த்து எனக்கு திட்டு விழும். தயவு செய்து நீ உன் வீட்டிற்குப் போய் விடு.” என்று மெல்லிய குரலில் சொல்ல, சரி இதுதான் பெண்களின் மாறுபட்ட வேடம் போல என தன் அம்மாவின் குணத்தை எண்ணி கொண்டே தன் புகுந்த வீட்டுக்கு நடையைக் கட்டினாள் அர்ச்சனா. அர்ச்சனா இப்படி பலமுறை தன் கணவன் வீட்டிலிருந்து கோபத்தில் இங்கே வருவது அவர்களுக்கு புதிதல்ல என்றாலும் தொடரக் கூடாது என்று நினைத்தே, அர்ச்சனாவின் அம்மாவும் அண்ணியும் செய்த சிறு சம்பவம் தான் இது. அர்ச்சனாவின் கோபம் இரண்டு நாளுக்கு மேல் தாங்காது என்பதும் அவள் அம்மாவிற்கு தெரிந்துதான்.
“ அப்பாடா! இனி இந்த அர்ச்சனா இங்க வந்து உன்னை அடிக்கடி தொந்தரவு செய்யமாட்டாள்.” உனக்கு விஷயம் தெரியாவிட்டாலும் உன் நடிப்பு பிரமாதம் தான்”. என்று தன் மருமகளிடம் சொன்னாள் அர்ச்சனாவின் அம்மா. “அவள் தன் மாமியாரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து வந்து இருக்கிறாள். தாழிட்ட வீட்டை பார்த்த அவள் மாமியார், என் கிட்ட போன் பண்ணி, அர்ச்சனா இங்கே வந்து இருக்கிறாளா? என்று விசாரித்து, அங்கே நடந்ததை சொன்னது போது தான் எனக்கு தெரிந்தது அவள் இங்கே வருகிறாள் என்று. என்ன பெருசா கேட்டுட்டாங்க அவங்க? பெண் பிள்ளைங்க தேவைப்படும் இடத்தில் அடக்கத்தோடு இருக்கத்தான் வேண்டும். அதை விட்டுட்டு இங்க அடிக்கடி வந்து புதுசா வாழ வந்த பெண்ணை டிஸ்டர்ப் செய்கிறதா?”
“ நம்ம அர்ச்சனா பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தாலும் அவளை மனம் கோணாமல் அனுசரணையாக பேசி மறுபடியும் வீட்டுக்கு அனுப்பி விடுங்க என்றும் கல்யாணம் ஆகி குழந்தை இல்லாததால் அவ ரொம்ப ஆதங்கப்பட்டிருக்கிறாள் என்று அவளுக்காக சப்போர்ட் பண்ணி அவள் மாமியார் பேசறாங்க.” என்று தன் சம்பந்தி அம்மாவின் நல்ல குணத்தை பாராட்டி கணவனிடம் சொன்னாள் அர்ச்சனாவின் அம்மா.
“ஆமா அத்தை! அர்ச்சனாவை அவங்க என்ன தான் சொன்னாங்க? எனக்கு தெரியவே இல்லையே!” என கேட்ட தன் மருமகளிடம் உனக்கு அது தேவையில்லாத விஷயம்.” என மிரட்ட, “அத்தை! அர்ச்சனா போய் பத்து நிமிஷம் ஆயிடுச்சு. அர்ச்சனா வீட்டிற்கும் நம் வீட்டிற்கும் அரை மணி நேர பயணம் தான். வேறு ஊரிலே அர்ச்சனா இருந்திருந்தால் அவள் வாழ்க்கை முழுவதையும் பயணத்திலேயே கடத்தி இருப்பா” என சொல்ல, என் பெண்ணையா ஏளனம் செய்யுற?” என தன் மருமகளின் கன்னத்தை அர்ச்சனாவின் அம்மா கிள்ள, “ இனிமே என் பொண்ணு குழந்தையோட தான் இங்கே வருவாள். அதற்குள் நீயும் குழந்தை பேறுக்காக உன் அம்மா வீட்டுக்கு சென்று விடு” என்று அன்போடு ஆணையிட்டாள் அர்ச்சனாவின் அம்மா.
நல்ல உறவுகள் கிடைப்பது அரிது. அது உடையாமல் காப்பது மனிதனின் பொறுப்பு.
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...




















