Saturday, June 4, 2022

நாட்டில் என் பங்கு by Veena Sankar

 நாட்டில் என் பங்கு 


                                          வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு கொண்டு சென்றது நம் மண்ணின் மைந்தர்கள் தான். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நம் முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வையாலும் தற்போதைய ஆளுமை பண்புடையவர்களாலும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். இருப்பினும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு என்  பங்கும்  வேண்டும் என்று  நினைத்ததால் இதை எழுத தூண்டியது. மேலும் நான் என்னை பன்முகத் தன்மை  கொண்டவளாக நினைப்பதால் ஒவ்வொரு நிலையில் இருந்தும் என் கடமை, பங்கு ஆகியவற்றை சிந்தனை செய்த பின் என் கருத்தை எடுத்து வைக்க ஆசை பட்டேன்.


மாணவர் பங்கு : 

                                             களிமண் பொம்மைகளுக்கு வர்ணம் பூசி உயிர் கொடுப்பது போன்று தான் நம் மாணவர்களின் நிலை. சிறு வயது முதலே மாணவர்களுக்கு வெற்றி என்பது எளிது அல்ல என்பதையும் சில நேரங்களில் போராட்டத்தாலும் கிடைப்பது  வெற்றி என்று தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் தான் எதற்காக போராடுகிறோம் என்று அறிய வேண்டும். மேம்போக்காக போராடுவதும் பலனை தராது. நம் நாட்டிற்கு சாதகமான சூழ்நிலையில் வீறு  கொண்டு போராட வேண்டும். ஏற்றி விட்ட ஏணியை மறவாமல்  மாணவர் ஆற்றும் பணிக்கு ஈடு இல்லை. சுயமாக போராடும் பொழுது அது அவர் தம்  வாழ்க்கையை பாதிக்க கூடாது.  போராட்டம் என்பது தங்களின் கடமையை நிராகரித்து செயல்படுத்தக் கூடாது. 


                                    என்னை பொருத்தவரை  மாணவர்கள் நாட்டின் தூண்கள் என்பதால் போராட்டம் என்ற  சொல்லை மறந்துவிட வேண்டும். தன்னுடைய வளர்ச்சிக்குப் பின்னால் ஒருவர் இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு, தான் அவர்கள் பின்னால் இருந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்  என்பதை  மறந்து விடக்கூடாது.


குடும்பத்தின் பங்கு :

                          குடும்பமானது தங்களுடைய ஒற்றுமை குறையாத வண்ணம் இருந்தாலே அது நமக்கு வளர்ச்சியை தரும். நாம் நம் மனத்தால் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.  “நிலாச் சோறு” உண்பது முதல் நிலவில் கால் வைப்பது வரை நடக்கும் கலாச்சார நிகழ்வுகளில் நம் குடும்ப உறுப்பினர்களோடு பங்கு கொள்ள வேண்டும். தற்போது கூட்டுக்  குடும்பங்கள் குறைந்து   வேலை நிமித்தமாக தனிக் குடும்பங்கள் பெருகி விட்டன.  இருந்தாலும்  குடும்பத்தில் நிகழும் விழாக்கள் மூலமே நாம் நம் உறவுகளை தெரிந்து கொண்டு உறவுகளை மேம்படுத்த முடியும். நம் நாட்டின் கலாச்சாரம் நமக்கு தெரிந்திருந்த போதிலும் அதனை மறக்காமல் காப்பாற்றிட வேண்டும். மேலை நாட்டவரின் நல்ல விஷயங்களை கிரகித்துக் கொண்டு  நம் குடும்பத்தினரிடம்  நல்ல நோக்கத்துக்காக மட்டுமே  பயன்படுத்திட வேண்டும்.

     

குடிமகன்களின் பங்கு :

                                      “குடி உயர நாடு உயரும்” என்பதே வாக்கு. அதன்படி  தனி மனித ஒழுக்கம் முற்றிலும் பேணப்பட வேண்டியது அவசியம்.  லஞ்சத்தை    உருவாக்குவதும்     ஒழிப்பதும் தனி மனிதனின் பண்பையே சாரும். மேலும் தனக்கு விதிக்கப்பட்ட அரசாங்க வரியை செலுத்தி தேசத்தின் நிதி நிலையை உயர்த்திட வேண்டும்.  அதே சமயம் ஓட்டுக்காக காசு வாங்குவதை மனதாலும் நினைக்கக் கூடாது. அது அவர் தன் கடமையை அடமானம் வைப்பதற்கு  சமமாகும். ஒரு போதும் தனி மனிதனின் மகிழ்ச்சிக்காகவும் பேராசைக்கும் அவன் தன்னை இழக்க கூடாது.


மாநிலங்களின் பங்கு :

                                     நதி நீர் பங்கீடு செய்வது முதல் வணிக தொடர்புகள் வரை மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வு  இருப்பது அவசியம் என்பதை மறுக்க முடியாது. “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என்பதை புரிந்து  மாநிலங்கள் செயலாற்றினால் நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுக்க இயலாது. 


சமுதாய பங்கு :

                “ஒற்றுமையே பலம்”. ஒவ்வொரு தனி மனிதனின் கூட்டமைப்பே சமுதாயம் ஆகும். விவசாயமும் தொழில் நுட்பத்தால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும். “விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதையும் ஜாதி, மதம், கலை, பண்பாடு, கலாச்சாரம் என்று மக்கள் வேறுபட்டாலும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும். கலாச்சார சீரழிவு விழாக்களை ஒதுக்க வேண்டும்.


                        ஒவ்வொரு தொழிலதிபரும் ஒரு ஏழை குடும்பத்தை தத்தெடுக்க  முன் வர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தேவைப்படும் எனில்   வெளிநாட்டு முதலீடுகளையும்  தொழில்களையும் வரவேற்று,  நம் நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.  “மின்னணு இந்தியாவை”  பாமரனுக்கும் எளிதில் புரியும் வகையில் அமைத்திட வேண்டும். 

                     பண்டைய காலத்தில் “வீட்டுக்கு ஒரு வீரன்” என்ற அடிப்படையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.    எல்லையில் துப்பாக்கி ஏந்தி நாட்டை  காப்பவர்களுக்கும் எல்லை பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பு தந்திட வேண்டும் . இதற்கு நாம்  ஒன்றாக இணைய வேண்டும். தீய சக்திகளுக்கு விடை கொடுத்தும் அறிவியலார் தந்த கருத்துகளை ஏற்றும் நம் பங்கினை  நாம்  ஆற்ற வேண்டும்.

                            “பெண்ணிற்கு   பொன்   அழகு சேர்க்கும்”   என்பது போல நம் பங்கினை அளிக்க வேண்டும்.  நாட்டின் வளர்ச்சிக்கும் நம் பங்கு என்பது “மலைத்தேன் அல்ல. நாமும்  முடவர் அல்ல”. என் பங்கு  என்ன என்பதை  தெரிந்து கொண்டு  நம் பங்கினை செய்ய  வேண்டும் என்பதே என் ஆவல். 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...