"அம்மா வீடு" சிறுகதை by Veena Sankar
தன்னை அபிஷேக் கூப்பிடுகிறானா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு, “அர்ச்சனா! அர்ச்சனா!” என்ற அபிஷேக்கின் குரல் கேட்டது. இருந்தாலும் கேட்காதது போல் உள்ளேயே இருந்தாள். வழக்கமாக அபிஷேக் அலுவலகத்திற்கு செல்லும் போது அர்ச்சனா அவன் முன் நின்று டாட்டா காட்டிய பிறகே அபிஷேக் செல்வான். அன்று அபிஷேக் அழைத்தும் அர்ச்சனா வராததால் தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
அபிஷேக் சென்றதும் அரை மணி நேரத்திற்குப் பிறகு தன்னுடைய சிற்றுண்டியை முடித்து ரூமிற்கு சென்று தாழிட்டுக் கொண்டாள் அர்ச்சனா. அவளின் மாமியாரோ பக்கத்தில் இருக்கும் தன் மகள் வீட்டிற்கு செல்வதாக சொல்லி கிளம்பினாள். தனியே இருந்த அர்ச்சனா அங்குமிங்குமாய் அமர்ந்து யோசனை செய்தபடியே இருந்தாள். எப்படி என்னை பார்த்து அத்தை இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாம்? அதற்கு அபிஷேக் ஒன்றும் சொல்லவில்லையே என்ற கோபம் தான் அவளுக்கு அபிஷேக்கின் மீது இருந்தது.
முன்னாளில் பெண்ணுரிமை பற்றி பேசிய அவள், தன் மாமியாரின் முன் வாயடைத்து தான் நின்றிருந்தாள். சுற்றி சுற்றி வந்து நேரத்தை கடத்தி, ஒருவழியாக தன் சூட்கேசை எடுத்தாள். நாலைந்து சுடிதார்களை திணித்து கதவை தாழிட்டு, தன் அத்தையிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் தன் அம்மா வீட்டிற்கு கிளம்பினாள். பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள். அரை மணி நேர பயணத்திற்கு அரை மணி நேரம் பேருந்துக்காக காத்து இருந்தாள். தான் வளர்க்கப்பட்ட விதம், தன் தாய் - தந்தையர் தன் மீது வைத்துள்ள பாசம் எல்லாவற்றையும் நினைக்கையில் அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. விழியோரம் கசிந்த கண்ணீரை அடுத்தவர் கவனிக்காமல் இருக்க அவ்வப்போது தன் சுடிதார் சாலில் துடைத்துக் கொண்டாள்.
பேருந்து வர அதில் ஏறி அமர்ந்தவளுக்கு, மீண்டும் மீண்டும் மாமியாரின் பேச்சு மனதை குழப்பிக் கொள்ள வைத்தது. பெண்ணை கட்டி கொடுத்து விட்டால் அவள், கணவனுக்கும் அவள் அம்மாவுக்கும் அடிமையா? கல்லூரியில் பெண்ணுரிமை பற்றி பேச்சுப் போட்டியில் பேசி தான் பரிசை தட்டிச் சென்றதும் அவள் முன் நிழலாடியது. தான் மட்டும் செல்வதால் மாப்பிள்ளையை காணாது தன்னுடைய அம்மா தவிப்பாள் என்று தெரிந்திருந்தும் தனியே பயணித்தாள்.
என்ன? ஏது? என்று பதறிப் போவாள் அர்ச்சனாவின் அம்மா. ஆனால் இந்த ஏச்சுப் பேச்சுகளை தவிர்த்து விட எனக்கு மனம் வரவில்லையே என நினைத்துக் கொண்டே இருக்கையில் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கியவள், பத்து நிமிட நடைபயணத்தில் தன் அம்மா வீட்டை அடைந்தாள்.
அர்ச்சனா உள்ளே செல்லும் பொழுதே அவள் அம்மா, அண்ணியை பார்த்து “என்ன வளர்த்திருக்கிறார்கள் உன் வீட்டில்? இதை கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே?” என்ற கேள்விகள் தன் மாமியாரை நினைவுபடுத்தியது அவளுக்கு. தன் அம்மா பலவாறு வசைபாடி கொண்டிருந்ததை முதன் முறையாக கேட்டாள். பெண்ணியம் பேசி என்னை வளர்த்த அம்மாவா இது? பெண்ணிற்கு ஆண் எதிரியல்ல. பெண்ணிற்கு பெண்ணே தான் எதிரி என்பது போல இருந்தது அவள் அம்மாவின் பேச்சு. தொப்பென்று தன் பெட்டியை சோபாவில் கிடத்தினாள். சத்தம் கேட்டு திரும்பிய அம்மா, “மாப்பிள்ளை வரவில்லையா? நீ மட்டும் தான் வந்தாயா?” என கேட்டதும் தன் அம்மாவை கண்களால் மட்டும் முறைத்தாள்.
“என்னமா! நீ இப்படி? உன்னை போல் பெண்களை அனுசரணையாக நடத்துபவர்கள் யாரும் இல்லை என்று நினைத்து இருந்தேன். ஆனால் நீ என் அண்ணியை இப்படி திட்டுகிறாயே?” என்று அண்ணி பக்கம் அர்ச்சனா பேச, தன் அண்ணியின் கண்களில் இருந்து நீர் பெருகுவதையும் கவனிக்க தவறவில்லை அவள்.
“இதெல்லாம் உனக்கு வேண்டாம். நீ இந்த வீட்டுப்பெண். அவள் இந்த வீட்டு மருமகள். எப்போதும் இந்த வித்தியாசம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும்.” என சொல்லி அர்ச்சனாவின் வாயை அடைத்தாள் அம்மா. மெல்ல அர்ச்சனாவின் பக்கம் வந்த அவள் அண்ணி, “ப்ளீஸ்! அர்ச்சனா நீ எனக்காக சப்போர்ட் பண்ணி பேசாதே. நீ போன பிறகு அதற்கும் சேர்த்து எனக்கு திட்டு விழும். தயவு செய்து நீ உன் வீட்டிற்குப் போய் விடு.” என்று மெல்லிய குரலில் சொல்ல, சரி இதுதான் பெண்களின் மாறுபட்ட வேடம் போல என தன் அம்மாவின் குணத்தை எண்ணி கொண்டே தன் புகுந்த வீட்டுக்கு நடையைக் கட்டினாள் அர்ச்சனா. அர்ச்சனா இப்படி பலமுறை தன் கணவன் வீட்டிலிருந்து கோபத்தில் இங்கே வருவது அவர்களுக்கு புதிதல்ல என்றாலும் தொடரக் கூடாது என்று நினைத்தே, அர்ச்சனாவின் அம்மாவும் அண்ணியும் செய்த சிறு சம்பவம் தான் இது. அர்ச்சனாவின் கோபம் இரண்டு நாளுக்கு மேல் தாங்காது என்பதும் அவள் அம்மாவிற்கு தெரிந்துதான்.
“ அப்பாடா! இனி இந்த அர்ச்சனா இங்க வந்து உன்னை அடிக்கடி தொந்தரவு செய்யமாட்டாள்.” உனக்கு விஷயம் தெரியாவிட்டாலும் உன் நடிப்பு பிரமாதம் தான்”. என்று தன் மருமகளிடம் சொன்னாள் அர்ச்சனாவின் அம்மா. “அவள் தன் மாமியாரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து வந்து இருக்கிறாள். தாழிட்ட வீட்டை பார்த்த அவள் மாமியார், என் கிட்ட போன் பண்ணி, அர்ச்சனா இங்கே வந்து இருக்கிறாளா? என்று விசாரித்து, அங்கே நடந்ததை சொன்னது போது தான் எனக்கு தெரிந்தது அவள் இங்கே வருகிறாள் என்று. என்ன பெருசா கேட்டுட்டாங்க அவங்க? பெண் பிள்ளைங்க தேவைப்படும் இடத்தில் அடக்கத்தோடு இருக்கத்தான் வேண்டும். அதை விட்டுட்டு இங்க அடிக்கடி வந்து புதுசா வாழ வந்த பெண்ணை டிஸ்டர்ப் செய்கிறதா?”
“ நம்ம அர்ச்சனா பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தாலும் அவளை மனம் கோணாமல் அனுசரணையாக பேசி மறுபடியும் வீட்டுக்கு அனுப்பி விடுங்க என்றும் கல்யாணம் ஆகி குழந்தை இல்லாததால் அவ ரொம்ப ஆதங்கப்பட்டிருக்கிறாள் என்று அவளுக்காக சப்போர்ட் பண்ணி அவள் மாமியார் பேசறாங்க.” என்று தன் சம்பந்தி அம்மாவின் நல்ல குணத்தை பாராட்டி கணவனிடம் சொன்னாள் அர்ச்சனாவின் அம்மா.
“ஆமா அத்தை! அர்ச்சனாவை அவங்க என்ன தான் சொன்னாங்க? எனக்கு தெரியவே இல்லையே!” என கேட்ட தன் மருமகளிடம் உனக்கு அது தேவையில்லாத விஷயம்.” என மிரட்ட, “அத்தை! அர்ச்சனா போய் பத்து நிமிஷம் ஆயிடுச்சு. அர்ச்சனா வீட்டிற்கும் நம் வீட்டிற்கும் அரை மணி நேர பயணம் தான். வேறு ஊரிலே அர்ச்சனா இருந்திருந்தால் அவள் வாழ்க்கை முழுவதையும் பயணத்திலேயே கடத்தி இருப்பா” என சொல்ல, என் பெண்ணையா ஏளனம் செய்யுற?” என தன் மருமகளின் கன்னத்தை அர்ச்சனாவின் அம்மா கிள்ள, “ இனிமே என் பொண்ணு குழந்தையோட தான் இங்கே வருவாள். அதற்குள் நீயும் குழந்தை பேறுக்காக உன் அம்மா வீட்டுக்கு சென்று விடு” என்று அன்போடு ஆணையிட்டாள் அர்ச்சனாவின் அம்மா.
நல்ல உறவுகள் கிடைப்பது அரிது. அது உடையாமல் காப்பது மனிதனின் பொறுப்பு.

No comments:
Post a Comment