Wednesday, June 1, 2022

நகரத்து வாழ்க்கை

  "நகரத்து வாழ்க்கை" சிறுகதை by Veena Sankar


நகரத்து வாழ்க்கை


                                               கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெரியசாமிக்கு சொந்த பந்தங்கள் என்று புடை சூழ வாழ்ந்து கொண்டிருந்த  சமயத்தில் தான்   அவர்  பையனுக்கு நகரத்தில் ஒரு பெரிய வேலை கிடைக்க,  நகரத்தில் குடிபெயரும்  நிலை வந்தது. தன் சொந்தங்களையும் தான் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை அப்படியே விட்டு செல்லவும் மனமில்லாமல் தன்  வீட்டில் ஒருவரை குடியமர்த்தினார்.  


                                               நகரத்திற்கு சென்றவுடன்  சிலர் அந்த  வாழ்க்கைக்கு மாறிப் போவார்கள். ஆனால் பெரியசாமிக்கு அது முடியாமல் போனது.  காலையில் வீட்டை விட்டு செல்லும் மகன் இரவு தான் திரும்பி வருகிறான்.  எத்தனை நேரம்    தான் தொலைக்காட்சியில் வரும்  தொடர்களையும் சினிமாக்களையும் பார்ப்பது?  ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் என கழித்து வந்தார். தான் காலார நடந்து வந்த வாய்க்கால், வரப்புகளையும் காலையில்  எழுந்தவுடன்  டீக்கடைக்கு சென்று அங்கே இருக்கும்  பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்த நாட்களும், முண்டியடித்துக்  கொண்டு சினிமா கொட்டகையில் முதல் வரிசையில் தலைவர் படம்  பார்த்ததும், மாரியம்மன் பொங்கல் திருவிழாவிற்கு காப்பு கட்டி நேர்த்திக்கடனை  செலுத்துபவர்களையும், தன்னிடம் தம்பி போல் பழகிய  உறவுகளையும் நண்பர்களையும் மறக்க முடியாமல் தவித்தார். எல்லாவற்றையும் விட  கிராமத்தின் மண் வாசனையையும், பசுமையான  பூமியையும் காணாமல்     ஏங்கினார்.              முடிந்தவரை தனிமையை தவிர்க்கும் கிராம மக்களும்,   இரவில் தொலைக்காட்சியில் அன்றைய செய்திகளை கண்டும்,  பழைய பாடல்களை  ரசித்தும், நிலாச் சோறு சாப்பிட்ட நினைவும்  அவர் மனதில் நீங்காமல் இருந்தது.


                                        கிராம மக்களிடையே அலைபேசி கலாச்சாரம்  தலை தூக்க ஆரம்பித்ததும் மேற்படியானவை கொஞ்சம் குறைந்து போய் இருந்தாலும் நகரத்தை போல முற்றிலுமாக   வாழ்க்கையை மாற்றி விடவில்லை.  மனிதர்களிடையே நேரடி பேச்சு குறைந்து விட்டது என  பெரியசாமி வருத்தப்பட்டுக் கொண்டார்.  குதூகலத்துடன் இருந்தபோது    தன் அலைபேசியில்  நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை பார்த்து தன் மனதைத் தேற்றிக் கொண்டார்.  


                                    தன்னைப் போலவே       தன் வீட்டு பக்கத்தில்   தனியே குடி இருந்த  பெண்மணியிடம் ஸ்நேகம் கொள்ளலாம் என நினைத்து பெரியசாமி அங்கே செல்ல அந்தப் பெண்,  அவளின் உறவினர் ஒருவரால்   வீல்  சேரில் அமர வைக்கப்பட்டு ஆட்டோவில்   ஏற்றப்பட்டு   கொண்டு இருந்தார். அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது என்று தவித்த பெரியசாமி, அந்தப் பெண்ணை ஏற்றிவிட வந்தவரை விசாரிக்க, இத்தனை நாள் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்ததாலும் அக்கம்பக்கத்தினரிடம் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாது என அவர் மகன் கட்டளை    இட்டதால் யாரிடமும் பேசாமல்  இருந்தாலும் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டதாக சொன்னார்.


                                            மேலும்  தான் தற்செயலாக   உறவின  பெண்மணியை பார்க்க வீட்டிற்கு  வந்ததாகவும்,  அவரின் நிலையை கண்டதும்  அவர் மகனுக்கு விவரத்தை தெரிவித்ததாகவும் சொன்னார்.  தன் தாயை  பார்க்க வந்த  உறவினரிடமே   தாயை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல சொன்னதாகவும் தெரிவித்தார். 


                                         இது என்ன கொடுமை!  நகரத்தில் சம்பளத்திற்கு பஞ்சம் இல்லை என்றாலும் மனிதர்களுக்கு நோயும் இலவசமாக கிடைக்கும் போலவே! என்று  ஆச்சரியப்பட்டு, தானும் இப்படியே வாழ்ந்தால்  நகரத்து சூழ்நிலை தன்னை மாற்றிவிடும் என்று நினைத்து ஒரு  முடிவை எடுத்து,  தன் வீட்டை நோக்கி நடந்தார்.  


                                      அலைபேசியில் தான் வைத்திருந்த அனைவரின் தொலைபேசி எண்ணையும் ஒரு பேப்பரில் எழுதினார். அதில் முக்கிய உறவினர்கள், நண்பர்களின்  எண்களை மட்டும்  தன் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டார். தன் வீட்டு உறவினர் அல்லாது மனைவி வீட்டு  உறவினர்களின்  பெயரையும் மறக்காமல் குறித்துக் கொண்டார். 


                                      தனக்கு எல்லா  நாட்களும்  ஞாயிற்றுக் கிழமை என்பதால் தினமும் ஐந்து நபர்களிடம் ஒரு  துளி  நிமிடமாவது அலைபேசியில்  பேசி  தங்கள் உறவை மேம்படுத்தி கொண்டார்.  மேலும் உறவினர்கள், நண்பர்களின் அன்புக்கு பாத்திரமானார் பெரியசாமி.


                                       உடல்  குன்றினால் கூட உயிர் வாழ்ந்து விடலாம்.  ஆனால் மனம்  குன்றிய வாழ்க்கையை மருத்துவமனையில் தான்  கழிக்க முடியும்  என்பது அவரின் கருத்தாக இருந்தது.


                                        மணம் வீசும் பேச்சில் மனம் குளிரும்.


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...