Thursday, July 28, 2022

" மௌன ராகம் " சிறுகதை by Veena Sankar





   மௌன ராகம் 



                                      பேருந்து நிலையத்தில் அவள் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மலர்செல்வி. அவள் அல்லாது நாலைந்து  பயணிகளே   பேருந்தில்  இருந்தனர்.  இன்னும் பேருந்து கிளம்ப சிறிது நேரம் ஆகும் என்று நினைத்தபடியே தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தாள் மலர்செல்வி.  ஐந்து மணிக்கு பேருந்தை கிளப்பினாலும் எட்டு மணிக்கு வீட்டை அடைந்து விடலாம் என மனக்கணக்கும் போட்டுக் கொண்டாள்.  அம்மா வீட்டில் இருந்து மதியம் சாப்பிட்டு முடித்து அவசரமாக கிளம்பியதால் அவள் தேநீர் குடிக்கும் நேரம் சற்றே மாறுபட்டது. 


                              அவள் வீட்டிற்கு செல்ல வேண்டிய இரண்டு பேருந்து பயணத்தில் ஒன்றை வெற்றிகரமாக முடித்து விட்டாள். பேருந்து கிளம்ப நேரம்  இருப்பதால் தன் பையை, தான் அமரும் இடத்தில் வைத்து கீழே இறங்கி, பேருந்து பக்கத்தில் இருந்த தேநீர் கடையில் தேநீர் குடித்து,  வாய் வழி துணைக்கு இரண்டு - மூன்று தின்பண்டங்களையும்   ரொட்டி பொட்டலங்களையும் வாங்கிக் கொண்டு அவள் பேருந்தில் ஏற, கணிசமான பயணிகளை  கொண்டிருந்தது பேருந்து. தன் இருக்கையில் யாரும் அமரவில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.


                                    அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தது  ஒரு  ஜோடி. சிறு பெண் குழந்தை தன் தாய் மடியில் அழகாய் உறங்கிக் கொண்டிருந்தது.  அதை ரசித்தவாறே தன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். பயணிகள் நிறைந்ததும் பேருந்து ஓட்டுனரும் வண்டியில் ஏறி தன் கடமையைச் செய்ய ஆரம்பிக்க, பாதி வழியில்  பயணச்சீட்டோடு நடத்துனரும் ஏறிக்கொண்டார். பேருந்து இயக்கிய சப்தத்தில் எழுந்த அந்த பெண் குழந்தை, வீறிட்டு அழ,  சமாதானம் செய்ய முயன்ற தாய்க்கு வெற்றி கிட்டவில்லை.  பால் புகட்டி குழந்தையை சமாதானம் செய்யும் படி சைகையில் சொன்னாள் மலர்செல்வி.  அதை புரிந்து கொண்ட தாயும் குழந்தைக்கு பால் கொடுத்ததும் அக்குழந்தை விளையாட தொடங்கியது.


                                      தன் பெற்றோர் மடியில்  மழலை சிரிப்போடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு, அம்மா! அப்பா! என்று தாய் பாடம் நடத்த, குழந்தையும் ம்மா - ப்பா என  முயற்சி செய்து, லேசாக முனக தொடங்கியது. இப்படியே சில நிமிட பயணம் தொடர, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மலர்செல்வி. அக்குழந்தையின்  கொஞ்சல்களையும் சிணுங்கல்களையும் ரசித்தவாறு  அமர்ந்திருக்க,  அத்தை சொல்லு என்று மலர்செல்வியை  காட்டி அத்தாய்  தன்   மழலைக்கு சொல்ல  தை! தை!  என   புன்னகையோடு அழைத்தது. அதோடு மட்டுமல்லாமல் தன் கால்களால் ஆடவும் தொடங்கியது.  மகிழ்ச்சியில் மலர்செல்வியின் முகம் மலர்ந்தது. குழந்தையை வாங்கி கட்டி அணைத்தாள்.  வேற்று முகத்தை, பக்கத்தில் பார்த்ததும் குழந்தை அழ, மறுபடியும் தன்   தாயிடம் செல்ல எத்தனித்து   தாவியது. குழந்தை  தாயிடம் சென்றதும் மட மடவென  மலர்செல்வியின் கண்களில் கண்ணீர் கொட்டியது. விவரம் அறியாமல்  விழித்த அந்த ஜோடி,  என்ன என்று  மலர்செல்வியிடம் கேட்க ஒன்றும் இல்லை என்று மட்டும் தலையை ஆட்டினாள் மலர்செல்வி.

                                            அவருக்கு குழந்தை இல்லை போல அதனால் தான் நம் குழந்தை விளையாடுவதை பார்த்து  ஏக்கத்தில் இப்படி  அழுகிறார் என்று அந்த ஜோடி தங்களுக்குள் பேசிக் கொண்டது. செல்விக்கு அந்த பேச்சு வருத்தத்தை கொடுக்கவில்லை. ஏனெனில் அவள் கண் முன் கண்ட குழந்தை போலவே அவளுக்கும் ஓர் பெண் குழந்தை இருக்கிறாள். அவள் தற்போது ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அதை  அவர்களிடம் மலர்செல்வி சொல்லவில்லை.  அப்போது நடத்துனர் பயணச்சீட்டு வாங்க சொல்லி  அவர்கள்  பக்கம் வர, ரூபாய் நோட்டை நீட்டினாள் மலர்செல்வி.  எங்கே போக வேண்டும் என்று நடத்துனர் கேட்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் கையிலிருந்த தாளை எடுத்து நீட்டுவதற்குள், எங்கே போகணும்ன்னு கேட்கிறேனே? வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்? என நடத்துனர் ஒருமையில் வசைபாட,  தாளை   நடத்துனரிடம் கொடுத்தாள்.  அதில் எழுதப்பட்டிருந்த ஊருக்கான பயணச்சீட்டை கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்  நடத்துனர்.  


                             அப்போது தான் அந்த ஜோடிக்கு உண்மை புரிந்தது. மலர்செல்வி மலடி அல்லள். ஊமை என்று.  மலர் செல்வியை  பற்றி தவறாக புரிந்து கொண்டதற்கும்  மன்னிப்பு கேட்டபடியே பரிதாபமாக அவளை பார்த்தனர். தன் மகள் மழலையாக இருக்கும் போது தன்னால் இப்படி வாய் திறந்து பேசி, அக்குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் என்றுமே  நெஞ்சில் நீங்க  மறுக்கா இருப்பதும் மறக்க வழி தெரியாததுமாய் இருந்தாள் மலர்செல்வி. 


                  தாய்மைக்கும் பாசத்திற்கும் மௌனமொழி  தடையல்ல.   

                  ஊமையானாலும் மௌனத்தில்  ராகம் பாட முடியும்.


" என் அம்மா " சிறுகதை by Veena Sankar

              என் அம்மா        



                                            சில சமயம் அவரவர் பெயருக்கு ஏற்றார் போல் மனிதனின்  நடவடிக்கை இருக்கும் என்பது எந்த அளவிற்கு உண்மை என்பதை என் அப்பாவின் மூலம் தெரிந்து கொண்டேன்.   என் அப்பா நரசிம்மன் என்ற பெயர் கொண்டாலும்  வெளியில் மட்டுமே சாந்த    சொரூபராக இருப்பார். வீட்டுக்கு  உள்ளே வரும் போது தன் முகத்தை நரசிம்ம  அவதாரமாக  மாற்றி கொள்வது வழக்கம். 


                                                அப்பாவின்   வண்டி   சத்தம்     கேட்டதும்   முடுக்கை நோக்கிச் செல்வதும் தோட்டத்தில்  ஒளிந்து கொள்வதும் பிள்ளைகளாகிய எங்களின்  கடமை.  அப்பாவிடம் நேரே சென்று பேசிய நாட்கள் மிகச் சில என்று சொல்ல வேண்டும். ஆனால் அம்மா மட்டுமே, வெளியில் சென்று  திரும்பும் அப்பாவிற்கு,  கால் கழுவ தண்ணீர் எடுத்துக்  கொடுப்பதும்  வெயிலிலிருந்து வந்தவர் மனமும், உடலும் குளிர மோர் கொடுப்பதும் அம்மா லக்ஷ்மியின்   தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.  


                                              என்ன  ஒரு பொறுமை என் அம்மாவிற்கு! அப்பாவிடம் மட்டுமே! அதுவே எங்களை கண்டிக்கும் போது  பத்ரகாளியாக  உருவம் எடுப்பாள்.  இருந்தாலும் அன்பில் எங்களை நனைய வைக்கும் போதும் அப்பாவின்  முறைப்புக்கு நாங்கள் சாம்பலாகும் போதும் எங்களை காப்பாற்ற முயற்சி செய்வதும்  அம்மாவிற்கு கை வந்த கலை. அன்றாட வாழ்க்கையில் அம்மா போடும் வேடங்கள் இவை என்றே சொல்ல வேண்டும். தெரியாமல் செய்யும் தவறுக்கு மட்டுமே  இது பொருந்தும். இல்லையென்றால் விஷயம் அப்பாவின் காது வரை கொண்டு சென்று, எங்களை அதிர வைக்கும் அர்த்தநாரீஸ்வரியும்  எங்கள் அம்மா தான்.  இல்லையென்றால் ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக வளர்க்க முடியாதல்லவா?


                              இப்படியாக ஒரு நாள் பக்கத்தில் மடித்து, நிற்க வைக்கப்பட்டிருந்த நாற்காலியின்  மேல்  என்  கால்கள் தெரியாமல் பட, அந்த  நாற்காலி  கீழே  விழுந்து,  தூக்கத்தில்  இருந்த என் அம்மாவின் முதுகை பதம் பார்த்தது. அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த என் அப்பா  சத்தம் கேட்டு குரல்  கொடுக்க, தூக்கத்தில் இருந்தாலும் நடந்தது என்ன  என்று  விஷயத்தை புரிந்து கொண்ட அம்மாவும் தன் கால் பட்டு நாற்காலி விழுந்ததாக சமாளித்து, அப்பாவிற்கு பதிலளித்தாள். இதனால் அம்மாவிற்கு  அப்பாவிடம் இருந்து ஆரம்பித்தது யாகம். யாகத்தில் வளர்ந்த புகையால் அம்மாவின் கண்களில் கண்ணீர். அப்பாவின் அர்ச்சனைக்கு,  தூசி பட்டு கண்கள் கலங்குவது போல சில நிமிடங்களில் அந்த கண்ணீருக்கு விடை கொடுப்பாள் என் அம்மா.  


                                              சில வருடங்களுக்கு பிறகு தனக்கு முதுகு வலிப்பதாக அம்மா சொல்ல, அதற்கு நாங்கள் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. மருத்துவமனைக்கு அழைத்தாலும் அம்மா வர மறுத்து,  களிம்பும் எண்ணெயும் தேய்த்துக் கொண்டால் சரியாகி விடும் என்று சொல்லி எங்களை அமைதியாக்கினாள்  அம்மா.

                                                 பிள்ளைகளாகிய எங்களுக்கு திருமணமாகி,  பேரன் பேத்திகளை எடுத்த லக்ஷ்மி - நரசிம்மன் தம்பதியருக்கு தனிமை ஒட்டிக் கொண்டது. என் தம்பியும் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு செல்ல, நாங்கள் திசைக்கு ஒருவராக குடும்பத்தோடு செல்ல, அன்றைய தோப்பு, இன்று தனிமரம் ஆனது.  வாழ்க்கையின் ஓட்டத்தில் மறுபடியும் அம்மாவிற்கு முதுகு வலி எடுக்க அப்பா,  அம்மாவின் முதுகு வலிக்கு ஆறுதலாய் மருந்து போட்டு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அன்று வரை அப்பாவும் மருத்துவமனைக்கு சென்றதில்லை.  அம்மாவிற்கு துணையாய் நின்றதுமில்லை.


                                    அம்மாவின் முதுகு வலிக்கு காரணம் தேட பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. நோயின் மூலத்தை கண்டுபிடிக்க திணறியது அன்றைய அறிவியல். இறுதியாக நடந்த பரிசோதனையில் முதுகில் ஏதோ பலமாக அடிபட்டிருப்பதாகவும் நெடுநாளைய புண் என்பதால்,  அது    புற்றுநோய் கட்டியாக  உருமாறி இருப்பதாக மருத்துவர்கள்  சொல்ல,   முதன்முறையாக  ஆடிப்போனார்  என் அப்பா. இந்த விஷயத்தை தன் தர்ம பத்தினியும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து, எங்களுக்கு மட்டுமே தெரிவித்தார். வாழப்  போவது கொஞ்ச நாட்கள் என்று தெரிந்த பின் அம்மாவிடம் அக்கறையும் அதிகமாகியது அப்பாவிற்கு. அது அவர் நடவடிக்கையில்   தெரிந்து   கொள்ள முடிந்தது. இந்த செயல் அம்மாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தி   இருக்கக் கூடும். ஆனால் எனக்கு மட்டுமே அந்த நோயின் ஆதி தெரிந்திருந்தது.  என்னால்  கீழே தள்ளப்பட்ட  நாற்காலியால் தான் என் அம்மா கஷ்டப்படுவதை நினைத்து, என் மனம் வேதனை கொண்டது. 


                                        எத்தனை முறை அப்பா இல்லாத சமயத்தில் அம்மாவிடம் சண்டை போட்டிருப்போம். மதிப்பெண் அட்டையில் கையெழுத்திற்காக அம்மாவிடம் பவ்யமாக நின்றதும்      நினைவுக்கு வந்தது. அந்த லட்சுமி அம்மாவின்   சுறுசுறுப்பில்  பாதி  சதவீதம் கூட இல்லாத நான், தற்போது  என் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது கண்டிப்பதில்  இன்னொரு லக்ஷ்மி அம்மாவாக  உருவெடுப்பதை  நினைத்து  அன்றைய கால நாட்களையும் அசை போட்டது என் மனது.  இப்படி கடந்தகால நாட்களை நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி அழைத்தது.  என் அம்மாவை  காலன் அழைத்து சென்று விட்டதாக சொன்னது  என்  அப்பாவின்  அழுகுரல்.


தவறு செய்தது நினைத்து வருந்தினாலும் தாயின் மனம் என்றும் மன்னிக்கும்.


Monday, July 4, 2022

இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by Vidhya Nivash

 


இது பட்டாம்பூச்சியா? ஓவியமா ?உற்றுப் பார்த்தால் ஓ பட்டாம் பூச்சியே தான்.. இன்னும் நன்றாகப் பார்த்தால் உன்னுடைய கண்களும் கொடுக்கும் எத்தனை அழகு.

அழகான வாழ்க்கை பாடத்தை சொல்கிறாயே தோழியே முட்கள் நிறைந்த மரத்தில் அழகாக பற்றிக் கொண்டு சில நிமிடமே நீ இருந்தாலும் மனதில் அமைதியே..

வண்ணத்தால் எல்லோரின் உள்ளத்தில் இடம் பிடித்தாலும் உன்னை உற்று நோக்கும் போது ஆச்சரியம்தான்...

உன்னை ரசிக்காதவரே இருக்க மாட்டார்!

காதலிப்போர் மனம் பட்டாம்பூச்சி போல் படபடக்கும் என்பர். ஆனால் எனக்கோ கருவுற்றபோது மருத்துவர் சொன்ன பட்டாம்பூச்சி அசைவு தான் ஞாபகத்திற்கு வருகிறது...

பூச்சி என்றால் பயம் கொள்பவரும் வண்ணத்துப்பூச்சியை கண்டால் ஒரு நிமிடம் வட்டம் இடுவார் ...





இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by Rishi

 


நான்கு சுவற்றுக்குள் 

அடைப்பட்ட சிலர் மனதிற்கும்,

உன்னைப்போல் சுதந்திரமாக பறக்க ஆசை தான்...


நீயும் நானும் ஒரே

உலகில் வாழ்கிறோம்... ஆனால்,

கட்டுப்பாடு என்ற கட்டமைப்புக்குள் நான்....


உனக்கு உலகெங்கும் 

ரசிகர்கள்...

உன்னை ரசிக்க கூட நான் அனுமதி பெற வேண்டும்...


நீ மட்டும் எப்படி தனியாக பறக்கிறாய்???உன்னை எப்படி இந்த 

சமூகம் தனியே பறக்க அனுமதி தந்தது???

ரகசியம் சொல்வாய் பட்டாம் பூச்சியே..

சிறகற்ற நான் சிறகுகளுடன் பறக்க!!!

இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by Veena Shankar

 


பெண்களின் சேலையின் வண்ணமும் வடிவமும் உன்னாலே பிறந்ததோ

பதுங்கி வாழ பயமில்லாமல் உன் வீட்டில் இருக்க இடம் தந்த மரமே உனக்கு நன்றி.

இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by Jaya

 


நிறம் நிறமாய்

பல வண்ணங்களில்

பல வண்ணங்களில்

இருந்தாலும் ஒரே 

பெயர் யார் சூட்டியது 

உமக்கு.....


உனை காணும் 

ஒரு கணம் போதும்

மனிதனை மழலையாய்

மாற்றிட....மாறிட 


எந்த ஓவியன் தீட்டிய 

உயிரோவியம்

பறந்து செல்லும் 

உயிர் காவியம் 


வண்(ர்)ணத்துப்பூச்சியே

ரசிகையாகிறேன்

உமக்கு

இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by Akhiladevi Kumaran

 





இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by S.Kumari


 சுற்றிலும் முட்கள் இருந்தாலும் சுற்றித்திரிந்து, சுகமான, சுயமான எண்ணங்கள். நல்லெண்ணங்கள், பலவித வண்ணங்கள் வாரி வழங்கும் வண்ணத்துப்பூச்சியே, விளக்கில் வீழும் விட்டில் பூச்சி என இருந்துவிடாமல் வான் உயரப் பறந்து செல் உன் எண்ணங்களை நல்ல முறையில் செயலாக்கு.




இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by K.Sathyanarayanan

Taken by S.Kumari 


"வானத்தில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சியே ,


கள்ளங் கபடமில்லா உன் பயணத்தில் பார்ப்பவர்கள் மனதை சிறகடிக்க செய்கின்றாய்.


மனிதர்களிடம் மட்டும் ஏன் நல்ல எண்ணங்கள் சிறகடிக்க ஆண்டவன் அருள் புரிய வில்லை.


இந்த வண்ணத்துப் பூச்சியைப் போல் நாமும் இந்த பூவுலகில் சிறகடித்துப் பறப்போம்."


"வாழ்வோம், வளர்வோம்"




இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by SuganthaDevi

 

Taken by S.Kumari Amma

பட்டாம்பூச்சியே!

நீ தோன்றி பூச்சியாய் மாறி விண்ணில் பறந்தாய் !

நீ பறக்க சிறகுகள் கிடைத்தது உனக்கு ஆனால் பெண்ணினம் புழுவாகி மட்டுமே இருக்கிறாள்!

அவள் கூண்டில் அடைபட்ட கிளி !உன்னைப்போல் பறக்க 

அவளுக்கும் ஆசை உண்டு!

ஆனால் சிறகுகள் இல்லை 

அவள் எண்ணம் மட்டும்தான் 

சிறகடிக்கும் வேறு வழியில்லை!

மனிதர்கள் தொட நினைத்தால் 

மின்மினி போல் மறையும் மாயமென்ன !உன் வண்ணங்கள் யார் கொடுத்த நினைவுச் சின்னங்கள் !

நீ தேனை மட்டும் கவரவில்லை கவிஞர்களின் மனதையும் கவர்ந்தாய் !பூக்களின் மேல் மட்டும் தான் அமர்வாயா? என் கைகளும் காத்திருக்கிறது

உன் வருகைக்காக....

நான் வரைய ஆரம்பித்த காலத்தில் 

நீயும் சிறு இடம் பிடித்தாய் ,

உனக்கு வண்ணம் தீட்ட கைகளும் உண்டோ?

நீண்ட காலத்திற்குப் பின் என் கைகள் பேனா பிடித்தது உன்னால் பட்டாம்பூச்சி








Saturday, July 2, 2022

Sunday topic "அது மட்டும் நடந்து இருந்தால்" by VedavalliRamani.



 Sunday topic

அது மட்டும் நடந்து இருந்தால்.

1984 ஆம் வருடம்.குளிக்க போன என் கணவர் என்னை கூப்பிட்டு நான் ஒன்னு காட்டுவேன் அது பார்த்து இயில்அழக்கூடாது,

கத்தி ஆர்பாட்டம் செய்யகூடாது என்று சொன்னார்.இல்லை என்று சொன்னதும் அதை காட்டினார்.அது ரத்தம்.உடனே நான் கத்த

ஆரம்பித்தேன்.உடனே இது நான் எச்சில் துப்பும்போது வந்தது .கத்தாமல் டாக்டர்கிட்ட போகலாம்.சீக்கிரம் கிளம்பு என்றதும்

வேலை எல்லாம் முடித்து போனோம்.

அங்கு எல்லா டெஸ்ட் பண்ணி ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தும், நாளை சனிக்கிழமை இருதயத்தில் ஓட்டை இருப்பது

பார்த்து ஆப்ரேஷன் செய்யணும் என்றார்கள் .அன்று சனிக்கிழமை நான் இன்று பண்ஐணுங்கள் என்று கேட்டதும் " இன்று

பரிசோதனை இடம் பழுது பார்ப்பதால் ஞாயிறு விடுமுறை, திங்கள் கிழமை செய்வோம் " என்றனர்.இன்னும் இரண்டு

நாள்கள் இருக்கணுமே என்று கவலைப்பட்டோம்.

ஆனால் அதுமட்டும் பண்ணி இருந்தால்(நடந்து இருந்தால்) என் கணவர் உயிர் பிரிந்து இருக்குமாம்.அது பண்ணாமல் கடவுள்

காப்பாற்றினார்.

அதன்பிறகு 16 ஆண்டுகள் உயிருடன் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம்,கடவுள் அருள்.



படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...