Thursday, July 28, 2022

" என் அம்மா " சிறுகதை by Veena Sankar

              என் அம்மா        



                                            சில சமயம் அவரவர் பெயருக்கு ஏற்றார் போல் மனிதனின்  நடவடிக்கை இருக்கும் என்பது எந்த அளவிற்கு உண்மை என்பதை என் அப்பாவின் மூலம் தெரிந்து கொண்டேன்.   என் அப்பா நரசிம்மன் என்ற பெயர் கொண்டாலும்  வெளியில் மட்டுமே சாந்த    சொரூபராக இருப்பார். வீட்டுக்கு  உள்ளே வரும் போது தன் முகத்தை நரசிம்ம  அவதாரமாக  மாற்றி கொள்வது வழக்கம். 


                                                அப்பாவின்   வண்டி   சத்தம்     கேட்டதும்   முடுக்கை நோக்கிச் செல்வதும் தோட்டத்தில்  ஒளிந்து கொள்வதும் பிள்ளைகளாகிய எங்களின்  கடமை.  அப்பாவிடம் நேரே சென்று பேசிய நாட்கள் மிகச் சில என்று சொல்ல வேண்டும். ஆனால் அம்மா மட்டுமே, வெளியில் சென்று  திரும்பும் அப்பாவிற்கு,  கால் கழுவ தண்ணீர் எடுத்துக்  கொடுப்பதும்  வெயிலிலிருந்து வந்தவர் மனமும், உடலும் குளிர மோர் கொடுப்பதும் அம்மா லக்ஷ்மியின்   தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.  


                                              என்ன  ஒரு பொறுமை என் அம்மாவிற்கு! அப்பாவிடம் மட்டுமே! அதுவே எங்களை கண்டிக்கும் போது  பத்ரகாளியாக  உருவம் எடுப்பாள்.  இருந்தாலும் அன்பில் எங்களை நனைய வைக்கும் போதும் அப்பாவின்  முறைப்புக்கு நாங்கள் சாம்பலாகும் போதும் எங்களை காப்பாற்ற முயற்சி செய்வதும்  அம்மாவிற்கு கை வந்த கலை. அன்றாட வாழ்க்கையில் அம்மா போடும் வேடங்கள் இவை என்றே சொல்ல வேண்டும். தெரியாமல் செய்யும் தவறுக்கு மட்டுமே  இது பொருந்தும். இல்லையென்றால் விஷயம் அப்பாவின் காது வரை கொண்டு சென்று, எங்களை அதிர வைக்கும் அர்த்தநாரீஸ்வரியும்  எங்கள் அம்மா தான்.  இல்லையென்றால் ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக வளர்க்க முடியாதல்லவா?


                              இப்படியாக ஒரு நாள் பக்கத்தில் மடித்து, நிற்க வைக்கப்பட்டிருந்த நாற்காலியின்  மேல்  என்  கால்கள் தெரியாமல் பட, அந்த  நாற்காலி  கீழே  விழுந்து,  தூக்கத்தில்  இருந்த என் அம்மாவின் முதுகை பதம் பார்த்தது. அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த என் அப்பா  சத்தம் கேட்டு குரல்  கொடுக்க, தூக்கத்தில் இருந்தாலும் நடந்தது என்ன  என்று  விஷயத்தை புரிந்து கொண்ட அம்மாவும் தன் கால் பட்டு நாற்காலி விழுந்ததாக சமாளித்து, அப்பாவிற்கு பதிலளித்தாள். இதனால் அம்மாவிற்கு  அப்பாவிடம் இருந்து ஆரம்பித்தது யாகம். யாகத்தில் வளர்ந்த புகையால் அம்மாவின் கண்களில் கண்ணீர். அப்பாவின் அர்ச்சனைக்கு,  தூசி பட்டு கண்கள் கலங்குவது போல சில நிமிடங்களில் அந்த கண்ணீருக்கு விடை கொடுப்பாள் என் அம்மா.  


                                              சில வருடங்களுக்கு பிறகு தனக்கு முதுகு வலிப்பதாக அம்மா சொல்ல, அதற்கு நாங்கள் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. மருத்துவமனைக்கு அழைத்தாலும் அம்மா வர மறுத்து,  களிம்பும் எண்ணெயும் தேய்த்துக் கொண்டால் சரியாகி விடும் என்று சொல்லி எங்களை அமைதியாக்கினாள்  அம்மா.

                                                 பிள்ளைகளாகிய எங்களுக்கு திருமணமாகி,  பேரன் பேத்திகளை எடுத்த லக்ஷ்மி - நரசிம்மன் தம்பதியருக்கு தனிமை ஒட்டிக் கொண்டது. என் தம்பியும் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு செல்ல, நாங்கள் திசைக்கு ஒருவராக குடும்பத்தோடு செல்ல, அன்றைய தோப்பு, இன்று தனிமரம் ஆனது.  வாழ்க்கையின் ஓட்டத்தில் மறுபடியும் அம்மாவிற்கு முதுகு வலி எடுக்க அப்பா,  அம்மாவின் முதுகு வலிக்கு ஆறுதலாய் மருந்து போட்டு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அன்று வரை அப்பாவும் மருத்துவமனைக்கு சென்றதில்லை.  அம்மாவிற்கு துணையாய் நின்றதுமில்லை.


                                    அம்மாவின் முதுகு வலிக்கு காரணம் தேட பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. நோயின் மூலத்தை கண்டுபிடிக்க திணறியது அன்றைய அறிவியல். இறுதியாக நடந்த பரிசோதனையில் முதுகில் ஏதோ பலமாக அடிபட்டிருப்பதாகவும் நெடுநாளைய புண் என்பதால்,  அது    புற்றுநோய் கட்டியாக  உருமாறி இருப்பதாக மருத்துவர்கள்  சொல்ல,   முதன்முறையாக  ஆடிப்போனார்  என் அப்பா. இந்த விஷயத்தை தன் தர்ம பத்தினியும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து, எங்களுக்கு மட்டுமே தெரிவித்தார். வாழப்  போவது கொஞ்ச நாட்கள் என்று தெரிந்த பின் அம்மாவிடம் அக்கறையும் அதிகமாகியது அப்பாவிற்கு. அது அவர் நடவடிக்கையில்   தெரிந்து   கொள்ள முடிந்தது. இந்த செயல் அம்மாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தி   இருக்கக் கூடும். ஆனால் எனக்கு மட்டுமே அந்த நோயின் ஆதி தெரிந்திருந்தது.  என்னால்  கீழே தள்ளப்பட்ட  நாற்காலியால் தான் என் அம்மா கஷ்டப்படுவதை நினைத்து, என் மனம் வேதனை கொண்டது. 


                                        எத்தனை முறை அப்பா இல்லாத சமயத்தில் அம்மாவிடம் சண்டை போட்டிருப்போம். மதிப்பெண் அட்டையில் கையெழுத்திற்காக அம்மாவிடம் பவ்யமாக நின்றதும்      நினைவுக்கு வந்தது. அந்த லட்சுமி அம்மாவின்   சுறுசுறுப்பில்  பாதி  சதவீதம் கூட இல்லாத நான், தற்போது  என் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது கண்டிப்பதில்  இன்னொரு லக்ஷ்மி அம்மாவாக  உருவெடுப்பதை  நினைத்து  அன்றைய கால நாட்களையும் அசை போட்டது என் மனது.  இப்படி கடந்தகால நாட்களை நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி அழைத்தது.  என் அம்மாவை  காலன் அழைத்து சென்று விட்டதாக சொன்னது  என்  அப்பாவின்  அழுகுரல்.


தவறு செய்தது நினைத்து வருந்தினாலும் தாயின் மனம் என்றும் மன்னிக்கும்.


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...