மௌன ராகம்
பேருந்து நிலையத்தில் அவள் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மலர்செல்வி. அவள் அல்லாது நாலைந்து பயணிகளே பேருந்தில் இருந்தனர். இன்னும் பேருந்து கிளம்ப சிறிது நேரம் ஆகும் என்று நினைத்தபடியே தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தாள் மலர்செல்வி. ஐந்து மணிக்கு பேருந்தை கிளப்பினாலும் எட்டு மணிக்கு வீட்டை அடைந்து விடலாம் என மனக்கணக்கும் போட்டுக் கொண்டாள். அம்மா வீட்டில் இருந்து மதியம் சாப்பிட்டு முடித்து அவசரமாக கிளம்பியதால் அவள் தேநீர் குடிக்கும் நேரம் சற்றே மாறுபட்டது.
அவள் வீட்டிற்கு செல்ல வேண்டிய இரண்டு பேருந்து பயணத்தில் ஒன்றை வெற்றிகரமாக முடித்து விட்டாள். பேருந்து கிளம்ப நேரம் இருப்பதால் தன் பையை, தான் அமரும் இடத்தில் வைத்து கீழே இறங்கி, பேருந்து பக்கத்தில் இருந்த தேநீர் கடையில் தேநீர் குடித்து, வாய் வழி துணைக்கு இரண்டு - மூன்று தின்பண்டங்களையும் ரொட்டி பொட்டலங்களையும் வாங்கிக் கொண்டு அவள் பேருந்தில் ஏற, கணிசமான பயணிகளை கொண்டிருந்தது பேருந்து. தன் இருக்கையில் யாரும் அமரவில்லை என ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.
அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தது ஒரு ஜோடி. சிறு பெண் குழந்தை தன் தாய் மடியில் அழகாய் உறங்கிக் கொண்டிருந்தது. அதை ரசித்தவாறே தன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். பயணிகள் நிறைந்ததும் பேருந்து ஓட்டுனரும் வண்டியில் ஏறி தன் கடமையைச் செய்ய ஆரம்பிக்க, பாதி வழியில் பயணச்சீட்டோடு நடத்துனரும் ஏறிக்கொண்டார். பேருந்து இயக்கிய சப்தத்தில் எழுந்த அந்த பெண் குழந்தை, வீறிட்டு அழ, சமாதானம் செய்ய முயன்ற தாய்க்கு வெற்றி கிட்டவில்லை. பால் புகட்டி குழந்தையை சமாதானம் செய்யும் படி சைகையில் சொன்னாள் மலர்செல்வி. அதை புரிந்து கொண்ட தாயும் குழந்தைக்கு பால் கொடுத்ததும் அக்குழந்தை விளையாட தொடங்கியது.
தன் பெற்றோர் மடியில் மழலை சிரிப்போடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு, அம்மா! அப்பா! என்று தாய் பாடம் நடத்த, குழந்தையும் ம்மா - ப்பா என முயற்சி செய்து, லேசாக முனக தொடங்கியது. இப்படியே சில நிமிட பயணம் தொடர, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மலர்செல்வி. அக்குழந்தையின் கொஞ்சல்களையும் சிணுங்கல்களையும் ரசித்தவாறு அமர்ந்திருக்க, அத்தை சொல்லு என்று மலர்செல்வியை காட்டி அத்தாய் தன் மழலைக்கு சொல்ல தை! தை! என புன்னகையோடு அழைத்தது. அதோடு மட்டுமல்லாமல் தன் கால்களால் ஆடவும் தொடங்கியது. மகிழ்ச்சியில் மலர்செல்வியின் முகம் மலர்ந்தது. குழந்தையை வாங்கி கட்டி அணைத்தாள். வேற்று முகத்தை, பக்கத்தில் பார்த்ததும் குழந்தை அழ, மறுபடியும் தன் தாயிடம் செல்ல எத்தனித்து தாவியது. குழந்தை தாயிடம் சென்றதும் மட மடவென மலர்செல்வியின் கண்களில் கண்ணீர் கொட்டியது. விவரம் அறியாமல் விழித்த அந்த ஜோடி, என்ன என்று மலர்செல்வியிடம் கேட்க ஒன்றும் இல்லை என்று மட்டும் தலையை ஆட்டினாள் மலர்செல்வி.
அவருக்கு குழந்தை இல்லை போல அதனால் தான் நம் குழந்தை விளையாடுவதை பார்த்து ஏக்கத்தில் இப்படி அழுகிறார் என்று அந்த ஜோடி தங்களுக்குள் பேசிக் கொண்டது. செல்விக்கு அந்த பேச்சு வருத்தத்தை கொடுக்கவில்லை. ஏனெனில் அவள் கண் முன் கண்ட குழந்தை போலவே அவளுக்கும் ஓர் பெண் குழந்தை இருக்கிறாள். அவள் தற்போது ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அதை அவர்களிடம் மலர்செல்வி சொல்லவில்லை. அப்போது நடத்துனர் பயணச்சீட்டு வாங்க சொல்லி அவர்கள் பக்கம் வர, ரூபாய் நோட்டை நீட்டினாள் மலர்செல்வி. எங்கே போக வேண்டும் என்று நடத்துனர் கேட்க, கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் கையிலிருந்த தாளை எடுத்து நீட்டுவதற்குள், எங்கே போகணும்ன்னு கேட்கிறேனே? வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்? என நடத்துனர் ஒருமையில் வசைபாட, தாளை நடத்துனரிடம் கொடுத்தாள். அதில் எழுதப்பட்டிருந்த ஊருக்கான பயணச்சீட்டை கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் நடத்துனர்.
அப்போது தான் அந்த ஜோடிக்கு உண்மை புரிந்தது. மலர்செல்வி மலடி அல்லள். ஊமை என்று. மலர் செல்வியை பற்றி தவறாக புரிந்து கொண்டதற்கும் மன்னிப்பு கேட்டபடியே பரிதாபமாக அவளை பார்த்தனர். தன் மகள் மழலையாக இருக்கும் போது தன்னால் இப்படி வாய் திறந்து பேசி, அக்குழந்தைக்கு பேசக் கற்றுக் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் என்றுமே நெஞ்சில் நீங்க மறுக்கா இருப்பதும் மறக்க வழி தெரியாததுமாய் இருந்தாள் மலர்செல்வி.
தாய்மைக்கும் பாசத்திற்கும் மௌனமொழி தடையல்ல.
ஊமையானாலும் மௌனத்தில் ராகம் பாட முடியும்.

No comments:
Post a Comment