Wednesday, April 28, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"புத்தகம்" by Vidhya Nivash

 


இசைக்கு அடுத்து என்னை அசையாமல் ஆசையாக இசைக்க வைத்த என் அருமை புத்தகமே,

இருந்த இடத்திலிருந்து என்னை முக்காலங்கள்,பல இடங்கள் இயக்கிய என் அருமை புத்தகமே...

அடங்காமல் அலைகிறது நீ கொடுத்த நினைவலைகள்,தவிக்காமல் தாகம் தொடர்கிறது😊


அகண்ட ஆகாயத்தில்

இளவேனிற்கால ஈரக்காற்றில் 

உல்லாசமாக ஊ லா லா பாட சில நேரம்... 

ஐக்கியமாய் அமர்ந்து

எல்லையற்ற ஏகபோகத்தில் 

ஒட்டாமல் ஓடும் ஒளகம் நாசியில் ஏறுமுகமாக ஏறியது போல் சில நேரம்..

தேனில் நனைத்த பலாப்பழ சுளைபோல சில நேரம்..

பூவின் ஒவ்வொரு இதழாக பிய்பது போல சில நேரம்..

முள்ளில் நடப்பது போல சில நேரம்..

புதருக்குள் இருக்கும் பூதம் கிளம்பிய கதையாக சில நேரம்..

பூக்கள் வெடிக்க வருகின்றன தேன் துளி போல் சில நேரம்..

பல உணர்வை தந்த புத்தகமே...


உனக்கு நான் அடிமையா?

எனக்கு நீ அடிமையா தெரியவில்லை?

உன்னை தீண்டியவரும் 

தொடர்ந்து தீண்டாவதவருமில்லை?

தீண்ட தீண்ட மீண்டும் தொடரும் பீனிக்ஸ் பறவை நீ, 

பருக பருக நிறுத்த முடியாத அமுதம் நீ

விடியா வானில் விடியும் வெள்ளியே!!!


தேட தேட முடியா தேடலே

போக போக நீளும் வானமே

சிறகுகள் இல்லாமல் சிறகடிக்கும் புத்தகமே..

ஒரே ஒரு புத்தகம் போதும் பல விடியலை மாற்றுமே..

பல வழிகளை காட்டுமே!


என்னையும் வெளி தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள்..

கையளவு இருந்தாலும் கடலளவு ஆழமானவன் நான்...📚


உதடுகள் மலராமல்  

உன்னை ஏந்தும்

உள்ளங்கள் மலர

சிரிக்க சிந்திக்க 

அழுக பயப்பட

பாட ஆட

பறக்க மிதக்க 

உன்னை ரசிக்கும் 

மகனை என்னை 

ரசிக்க செய்தாய்📚



உயிரற்ற நீ

உன்னை உணரும் நொடில்

உயிர்ப்பிக்கிறாய் உன்னை படைத்தவனையும்...

தீரா "வேட்கை "

புத்தகமே!!!


Tuesday, April 27, 2021

சிந்தனைக்குரிய பகுதி -" புத்தகம்" by Veena Shankar

 


புத்தகம்


எழுத்துக்களின் கோர்வை சொல்

சொற்களின் கோர்வை வாக்கியம்

வாக்கியங்களின் கோர்வை பக்கம்

பக்கங்களின் கோர்வை புத்தகம்

புத்தகங்களின் கோர்வை புத்தக நிலையம்


எழுத்துக்களால் பக்கத்தை  நிரம்பவிட்டாய்  நீ

என் இருளையும் போக்கிவிட்டாய்


பல புலவர்களால் உருமாறினாய் நீ

பல நல்ல செய்யுளை ஏந்தி வந்தாய்


பல கவிஞர்களால் பாடப்பட்டாய் நீ

பல இசையால் எங்களை ஈர்த்தாய்


இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டாய்  நீ

பழைய புத்தகக் கடையில் உன்னை நான் வாங்கும் போது 


உன்னையன்றி உலகமில்லை

கணினி உனக்கு நிகரில்லை


இடத்திற்கு தகுந்தாற் போல் உன் உருவத்தை 

மாற்றிகொண்டாய் நூல் நிலையமாய்


உன்னால் அறிவை வளர்த்தேன்

உன்னை நான் ஸ்பரிசித்ததால்

வகுப்பறையில் மாணவர்களை பிரிப்பதுபோல் உன்னை பாடவாரியாக  பிரித்தோம்

பிரித்தாலும் சேவையாற்றுகிறாய்

அடுக்குத்தொடர் போல


மொழி பேதம் கிடையாது உனக்கு

பல எழுத்தாளர்களை நீ உருவாக்கியதால்


அறிவை பெருக்குகிறாய் படிப்பதால்

ஆற்றலை கொடுக்கிறாய் பின்பற்றுவதால்

இரவலாய் மாறுகிறாய் ஆசையிருப்பதால்

(புத்தகமானாய்) ஈன்ற தாயான ஓலைச் 

             சுவடிகளின்  மாற்றத்தைப் பெற்றதால் 

உற்றாருக்கு பரிசாகிறாய் நீ தூண்டுவதால்

ஊருக்கு ஒன்றாய் பிறக்கிறாய் குடும்பமாய்

எதிர்ப்பார்ப்பாய் இருக்கிறாய் எங்களுக்கு  

                                           மலராய் மலர்வதால்

ஏந்த காத்திருக்கிறோம் உன்னை 

ஐயத்தையும் போக்குவதால்

ஒளிவு இல்லை உன்னிடம் ஒளியைத் தவிர

ஓரமாய் நீ இருந்தாலும் உன்னை

                                            தீண்டுவோர் உண்டு

ஔடதமே நீ எங்களுக்கு எங்களின்

                                             மனதை ஆற்றுவதால்

அஃதே எனக்கு தெரிந்த மொழியாம்

Monday, April 26, 2021

ஓலைச்சுவடி by Veena Shankar

 

ஓலைச்சுவடி


              கூலிக்கு வேலை பார்ப்பவன் செல்வம். மழைக்குக் கூட பள்ளி பக்கம் ஒதிங்கியதில்லைபடிப்பறிவு அறவே கிடையாது. அவனுக்கு தெரிந்தது எல்லாம் மண்வெட்டியும் அதில் கிடைக்கும் கூலியும் தான். ரூபாய் நோட்டில் காந்தி படம் தெரியும். நம்மில் பலருக்கே கள்ள நோட்டு எது என்று கண்டுபிடிக்க தெரிவதில்லை..


              ஒருநாள் அவன் ஊருக்கு அகழ்வாராய்ச்சி குழு ஒன்று வந்திருந்தது. ஒரு சில இடங்களை தெரிவு செய்து செல்வத்திடமும் மற்றும் சில கூலியாட்களிடமும் அந்த இடங்களை தோண்டச் சொன்னார் குழுத் தலைவர். அதன் படியே பணி ஆரம்பமானது.


                எப்போதும் நேர்மையாக இருக்கும் செல்வம் அன்று என்னவோ புத்தி மாறி தோண்டும் போது தனக்கு கிடைத்த ஓலைச் சுவடிகளை தன் இடுப்பு துண்டில் மறைத்து வைத்தான். மற்றவர்கள் தோண்டிய குழியிலிருந்து முன்னோர்களின் பானை, காசு இன்னது பிற கிடைக்க, இவன் தோண்டியயிடத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை என நினைத்தனர் குழுவினர் இவன் மறைத்து வைத்தது தெரியாமல்.


              செல்வம்  வீட்டிற்கு வந்து அந்த ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ எழுதப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, தன் மனதை மாற்றிக்கொண்டு, மறுநாள் அதை அகழ்வாராய்ச்சித் தலைவரிடம் ஒப்படைத்தான். தன் செயலுக்கு வருந்தி மன்னிக்குமாறு வேண்டினான். குழுத்தலைவரும் அவனை மன்னித்து, எதற்காக இதை மறைத்து வைத்தாய் எனக் கேட்க, பதில் தெரியாமல் விழித்தான். மேலும் அவனே, 'ஐயா!, இது என்னது என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்கள மாதிரி பெரிய தலைவர் என்னை சென்னையில இருக்கிற வள்ளுவர் கோட்டம் என்ற இடத்திற்கு வேலை விசயமா கூட்டிட்டுப் போனார்அங்க ஒரு சாமி எழுதினத பார்த்தேன். அதுவும் இதுவும் ஒண்ணுபோல இருக்கிறதால உங்களுக்கு முக்கியமானதா இருக்கும்ன்னு நினைச்சி கொண்டாந்தேன் ' என்றான். அவன் சொன்ன சாமி திருவள்ளுவர் தான் என யூகித்த தலைவர் இது என்னடா புது குழப்பம். இத்தனை நாள் 1330 குறள் தான் இருக்குன்னு நினைத்தோம். இதுவும் திருக்குறள் தானோ என தன் தலையை சொரிந்தார்,


                    ஆராய்ச்சிகள் தொடரும் அறியாமை உள்ளவரை.


புத்தக பயணம்- நா.பா வின் சேர,பாண்டிய மற்றும் சோழ தலைநகரங்கள் by Vidhya Nivash

 


சேரர், பாண்டியரை பற்றி அறிந்துகொள்ள வலைத்தளத்தில் கிடைத்த நா.பார்த்தசாரதி அவர்களின் புத்தகங்களே உதவியது." பாண்டிமாதேவி" புத்தகம் பாண்டியர்களைப் பற்றிய வரலாற்றையும், கணவனை இழந்து மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் பாண்டிய நாட்டு அரசியின் நிலைமையை படிக்கும்பொழுது நம் மனமே கலங்கும் .அழகாக வர்ணித்து இருப்பார் படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும், கடைசியில் எல்லாத்தையும் இழந்து அரசி தவம் மேற்கொள்ள , தவமே அனைத்திற்கும் விடை போல முடித்திருப்பார் ஆசிரியர்.



"கபடபுரம்" நாவல் கடலில் மூழ்கிப்போன தமிழகத்தின் தென் பகுதியை பற்றி அறிவதற்கு மிகவும்  உதவியாக இருந்தது. முத்துக்குளிக்கும் விழாவைப் பற்றியும் ,பண்டைய தமிழர்களின் பழக்கவழக்கங்களை படிப்பதற்கும் உற்சாகமாக இருந்தது. "வஞ்சிமாநகரம்" எனும் நாவல் சேரர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி அறிந்து கொள்வதற்கும் ஒரு ஆரம்பமாக இருந்தது.



சேரர்களுக்கும்,பாண்டியர்களுக்கும் ஆயுதமாக இருந்த காந்தளூர் சாலையை பற்றி அறிந்து கொள்வதற்கு இவருடைய நாவல்கள் பெரும் உதவி புரிந்தது.இலங்கை,கொற்கை,தமிழ் சங்கம் பற்றி அழகாக வர்ணித்திருந்தார் .



இதைத்தொடர்ந்து "மணிபல்லவம்" என்னும் இவருடைய நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் எளிமையான நடையில், கலைநயம் நிறைந்த ஒரு நாவல். ஐந்து தொகுதிகளாக பிரித்து இருந்தார். இது முழுக்க காவிரிப்பூம்பட்டினத்தில் அன்றைய வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தது. இன்றைய சினிமா கதை போல இருந்தாலும் அதில் அன்றைய தமிழர்களுடைய பழக்கங்கள் உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருந்தது .எப்படி ஒரு சாதாரண இளைஞன் முரடனாக வளர்ந்து, வீரம் மட்டுமே வாழ்க்கைக்கு போதாது என்று கல்வி கற்று, ஞானம் பெற்று வாழ்க்கைக்கு கல்வியா? வீரமா? என்ற கேள்விக்கு ஆசிரியர் விடை கூறியிருக்கிறார் .

இதில் வரும் புத்தத் துறவியான ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை மறக்க முடியாத கதாபாத்திரம் .வாழ்க்கைக்கு தேவையான பல கருத்துக்கள் அடங்கிய புத்தகம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஒரு ஞானியும் ஒரு பெண்ணின் தவத்தில் தோல்வி அடைவது போல ஆசிரியர் முடித்திருப்பார்.



சிந்தனைக்குரிய பகுதி -"புத்தகம்" by Jayanthi

 


       ஆயிரம் ஆயிரம் வருடங்கள்

முன் வாழ்ந்த எம் முன்னோர்களை

எம் மூத்த குடிகளை

உணர்ந்தேன் மகிழ்ந்தேன்

என் கையில்

ஏய் புத்தகமே...

அன்றும் இருந்தன படைகள்( போர் )

இன்றும் உள்ளன

ஆனால்

அன்றோ இயற்கையின் ஆதிக்கம் இன்றோ எல்லாம் செயற்கை

சுவாசிக்க காற்று செயற்கையாக கூட கிடைக்கவில்லை...

இதையும் வரலாறாக

உன்னுள் எழுதுவர்

ஏய் புத்தகமே

இனிமேலும் எம் சந்ததியினர்

ருசிக்க, ரசிக்க மட்டுமே உன்னை

ஏந்த வேண்டும் கையில்...

தேடு

அதுபோன்ற எழுத்தாளனையும் தித்திக்கும் உலகையும்

போதும்,

கபசுரக் குடிநீரும், நிலவேம்பும்

கசக்கிறது.

பொன்னியின் செல்வனையும்,வேல் பாரியையும் போர்கள் இல்லாமல் சுவைக்க கையில் ஏந்த காத்திருக்கிறது

இந்த உலகம்

ஏய் புத்தகமே, என் புத்தகமே...

            - ஜெயந்தி


Sunday, April 25, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"புத்தகம்" by Akhiladevi Kumaran

 




புத்தக பயணம் -வைரமுத்துவின் கருவாச்சி காவியம்



வைரமுத்து அவர்களின் "கருவாச்சி காவியம்" படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமத்து நாவல்களைப் படிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கிவிடும் . இந்த புத்தகம் ஒரு பெண் பிறந்தது முதல் சாகும் வரை பூ போல இருப்பவள் ,எப்படி புயலாகவும் மாறுவாள் ,பிறகு பாறையாகவும் மாறுவாள், எல்லோரும் கை கூப்பும் தெய்வமாகவும் என்று அழகாக அவருக்கு உரிய கிராமத்து மொழியில் பேசியிருப்பார் வைரமுத்து.


எத்தனை போராட்டங்கள் வந்தாலும் பெண்ணொரு மலைபோல வருவோருக்கும் ,போவோருக்கு மொரு இருப்பிடமாக, வந்து தங்கும் அனைவரும் பயனடைந்து செல்கின்றனர். இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் பொழுது நமக்கே பெண்மை மீது ஒரு அன்பும் ,எவ்வளவு மென்மையானது நம் உடல் ,என்று பெண்மை மீது நமக்கு ஏற்படும் காதல் ,குறிப்பாக கிராமத்து உணவின் மணமும்,கைவைத்தியமும்,தாய் -மகள் அரவணைப்பின் சுகம்,பிள்ளை போல் வளர்த்த உதவியாளர், ஆடு,வீடு என அழகாக பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.கடைசில் ஒரு ஞானியே வந்து ஒரு பெண்ணிடம் ஞானம் கேட்பதுபோல முடித்து இருப்பார் ஆசிரியர்.


கிராமத்தில் வாழும் ஒரு சாதாரண பெண் கூட ஞானம் படைத்தவளே அவள் கூறி செல்லும் சாதாரண வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் வைரமுத்து அவர்கள். இதற்கென உண்ணாநோன்பிருந்து தவம் புரிய வேண்டிய அவசியமில்லை அவளுடைய அன்றாட வாழ்க்கையே போதும், ஒரு தவம்.

Saturday, April 24, 2021

புத்தக பயணம் -கல்கியின் நாவல்களும், பார்த்திபன் கனவும் by Vidhya Nivash




பரிசாக கிடைத்த அக்னி சிறகுகள்,கள்ளிக்காட்டு இதிகாசம் பிறகு படிக்கக் கிடைத்த முதல் புத்தகம் "பொன்னியின் செல்வன் "முதல் பாகம். அதை அடுத்து கிடைத்த புத்தகமே "பார்த்திபன் கனவு" .உண்மையிலேயே கல்கியின் எழுத்து பல புராண புத்தகங்கள் படிக்க தூண்டிய கனவை காண செய்தது. தந்தையின் கனவை சுமந்து செல்லும் மகன், அவருக்கு துணையாக வரும் படகோட்டியும் அவரது மனைவியும், அவள் சுடும் கம்பு அடையும் மறக்க முடியாது.பல்லவர்களின் சிற்பக்கலை ஆர்வமும் ,மகாபலிபுரம் உருவான கதையும், சமண ,சைவ மதங்களைப் பற்றிய புரிதலும், அதுவரை கண்டிராத இனிமையான கனவின் அனுபவத்தை தந்தது பார்த்திபன் கனவு.


அதன் தொடர்ச்சியே கல்கியின் அனைத்து புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்தது .அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகத்தையே சாரும். அதன் தொடர்ச்சியாக " சிவகாமி சபதம் " நாவல் படித்தேன் .பல்லவர்கள் ,சாளுக்கியர் பற்றிய வரலாற்றையும் ,சமண ,சைவ மதத்தைப் பற்றியும் மிகத் தெளிவாக கூறியிருப்பார் ஆசிரியர் . எல்லோரா சிற்பக் கலையையும், சித்தன்னவாசலையும் உடனே பார்க்கத் தூண்டும் கல்கியின் எழுத்து. அத்தனை அருமையான கலை நயத்தை தூண்டும் நாவல்கள்.


கல்கியின் அனைத்து புராண நாவல்களும் கீழே வைக்க முடியாது அதை தொடர்ந்து பொன்னியின் செல்வனின் அனைத்து பாகங்களையும் வலைத்தளத்திலே படித்து முடித்தேன் . எப்படி படித்தேன் என்றே தெரியாது அத்தனை ஆர்வத்தை தூண்டியது கல்கி அவர்களின் எழுத்து.கல்கியின் "தியாக பூமி "என்னும் நாவல் இன்று பல சினிமாக்கள் கதைப் போல இருந்தாலும் அன்றே எப்படி இப்படி ஒரு பெண்ணின் வாழ்வை சித்தரித்திருப்பார் ஆசிரியர் என தோன்றும். கல்கி அவர்களின் சோழ புராணக் கதைகள் சேர ,பாண்டிய கதைகளையும் படிக்க தூண்டியது.

Thursday, April 22, 2021

துணிச்சல் by Veena Shankar

 


                                                   துணிச்சல்



                  அசுவதியாகிய நான் துணிச்சல் இல்லா பெண் தான். அந்த காலத்து கலாச்சாரத்தையும் இக்கால நாகரீகத்தையும் விரும்புபவள். நகரத்தில் படித்து வளர்ந்தவள்; பணிபுரிகிறேன். நகரத்தின் கூட்ட நெரிசல் அனைவரும் அறிந்ததே. அதுவும் நகரப் பேருந்துகளில் சென்று வருவதென்றால் மிகவும் சவாலான விசயம் தான். மேலும் இடி மன்னர்களின் சேஷ்டைகளும் கல்லூரி மாணவர்களின் கிண்டல்களும் நம்மை சூழ்ந்து நிற்கும். இதற்கிடையே மாணவியரும் பெண்களும் பயணிப்பது சொல்லி மாளாது. இப்படியே  பேருந்தில் நான்  நின்று கொண்டிருக்கும் சமயம் ஒரு கல்லூரி மாணவியை அப்பா வயதுடைய ஒருவன் சீண்டிகொண்டிருப்பதை பார்த்தேன். அம்மாணவி அந்த இடத்தை விட்டு கூட நகர முடியாத வண்ணம் கூட்டம். முன்னே சென்றால் வயதானவர் அமர்ந்திருக்கிறார். பின்னே செல்லலாம் என்று நினைத்தால் ஆடவர் . என்ன செய்வது என முழித்தாள்.  தர்ம சங்கடத்திலிருந்த அப்பெண்ணை காப்பாற்ற முற்பட்டேன். எங்கிருந்துதான் எனக்கு தைரியம் வந்தது என்றே தெரியவில்லை.  மெதுவாக அவன் நின்ற இடத்தை நோட்டமிட்டேன். சற்றே என் காலை கொண்டு அவன் காலை நான் மிதிக்க ஓ! வென்று அவன் அலற , குறு குறு கண்களால் என்னை பார்த்தான். உடனே நான் சாரி, தெரியாம மிதிச்சிட்டேன் என்று சொன்னேன். இதற்கு மேலும் நின்றால் ஆபத்து என்று நினைத்து அவன் வேறு இடம் நகர்ந்தான். அம்மாணவியும் தன் கண்களால் எனக்கு நன்றி சொன்னாள்.

                  எனக்கு இன்று வந்த தைரியம்

போல்  எல்லா நேரத்திலும் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும் கடவுளே என பிரார்த்தித்தேன்.


பயமும் தேவையான நேரங்களில் பாயத்தான் செய்கிறது.


Tuesday, April 20, 2021

என் சைக்கிள் பயணம் by Veena Shankar

             


                     என் சைக்கிள் பயணம்


                  என் முதல் சைக்கிள் பயணம் என் வாழ்க்கையை போல் அமையவில்லை. சற்று கடினம் தான். சில பேருக்கு தான் அப்பா அல்லது அண்ணனுடைய பேராதரவுடன் அமையும். என் தோழி சிந்துவும் (மல்லிகா) நானும் வாடகை சைக்கிள் எடுக்கச் செல்வோம். முதலில் இருவருக்கும் ஓட்டத் தெரியாது என்பது தான் உண்மை. ஒரு சைக்கிள் எடுத்து நான் பிடிக்க அவள் ஓட்ட, பிறகு அவள் பிடிக்க நான் ஓட்ட எப்படியோ முன்னேறி இருவரும் தனி தனி சைக்கிள் எடுத்து அரை மணி நேரம் ஓட்ட ஆரம்பித்தோம்இப்படித்தான் பழகினோம். சைக்கிள் கற்றுக் கொள்ளும் முன் முட்டியை பேத்துக் கொள்ளாமல் யாரும் ஓட்ட முடியாது

                  நான் சாதாரணமாக நடக்கும் போதே ஓரிடத்தில் கண்டம் உண்டு. விழுந்து விடுவேன். சைக்கிள் ஓட்டும்போது கேட்கவா  வேண்டும்? மேலும் தனியாக சைக்கிள் ஓட்டும்போது நடந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது. சென்னையில் தி. நகருக்கும் கண்ணம்மாபேட்டைக்கும் நடுவே இருந்தது எங்கள் சைக்கிள் கடைநாங்கள் சைக்கிள் பழகியதும் அந்த இடத்தில் தான். மிக வேகமாக மிதிக்கிறேன் என்று நான் சைக்கிளை அழுத்த, எதிரே இரு சக்கர வாகனம் வரநான் பிரேக் பிடிக்க முயல, அது முடியாமல் ஹேண்டில் பாரை திருப்ப, நேரே அது ஒரு குடிசை வீட்டிற்கு முன் நிற்க, அங்கிருந்த பேட்டை பெண்மணி என்னை வறுக்க, செய்வதறியாமல் நான் விழிக்க, சிந்துவும் அங்கு வர, கடைசியில் சிலர் என் பக்கம் நியாயம் பேச, தப்பித்தோம் பிழைத்தோம் என நாங்கள் வாடகை சைக்கிளை ஒப்படைக்க ஓடினோம். இது என் உடன் பிறவா தோழி சிந்துவிற்கு நினைவிருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு நான் சைக்கிளை தொடாமல் இருந்திருந்தால் இன்று கார் ஓட்ட பழகியிருக்கமாட்டேன்


                      சைக்கிள் என்று சொன்னவுடன் எனக்கு இது தான் நினைவுக்கு வரும்.


மிதிவண்டியை நாம் மிதித்தாலும் நம்மை முன்னேற்றுகிறது.


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...