Sunday, June 29, 2025

படமும் கருத்தம் by Veena,Priya and Vidhya

 


வானத்தில் தவழும் மேகமும்

மீனவனின் வலையில் துள்ளும் மீன்களும்

அலையின் ஊடலில் ஒளிரும் நீரும்

பறவையின் கண்ணில் தெரியும் இரையும்  

கலைஞன் அவன் காட்சியில் புலப்படும் கரையின் அழகும்

ஓவியனின் பார்வையும்

சொல்லும் இந்த அழகு

-Veena 

இவன் அவன் வருகைக்கு

 காத்திருக்க ,அவனோ அவன்

 தொலைத்ததை தேடி அலைய,

 அழையாமல் அடிக்கும்

 அலைகளும் மோதிக்கொள்ள,

 காற்றில் மிதக்கும் மேகங்களும்,

 அதன் எதிர்திசையில் ஊஞ்சல்

 ஆடும் காகமும்.. அடங்கும் நேரம்

 எதுவோ!

- Vidhya 

மேகத்துக்கு தங்க முலாம் பூசி 

சூரியனை சற்று நிறுத்தி வைத்தது போல 

என் உள்ளுணர்வு 

காக்கையும் என்னிடம் வந்து 

திருஷ்டிக்கு மை எடுத்துக்கொள் 

என்று கூறியது போல நினைத்துக் கொண்டிருக்கையில்

அக்கறை சீமையிலிருந்து 

அழைப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தது 

எடுத்து கதைத்த போது 

 “தேவதை பிறந்திருக்கிறாள்” 

என்ற செய்தி 


--பிரியா


Sunday, June 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இருளில் கூட நிஜத்தை படம் பிடிக்க

துடிக்கும் கலைஞன் இங்கே நிழலாய்

படம் மட்டும் பேசும் உண்மையாய்

அவன் முகம் மட்டும் அறியா உலகிற்கு


 தாகத்தில் பிறக்கும் எதுவும் மிளிரும் வெளிச்சத்தில்

உழைப்பு இருளில் என்றாலும்

- Veena 

நிழலில் மிளிரும் நிஜம்

இருளை குடிக்கும் வெளிச்சம்

கருணை, கருமை

அதை ஆளும் வண்ணம் .

 வண்ணங்கள், எண்ணங்கள்

கலக்கும் இடம் தனிமை!

- Vidhya 


Friday, June 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இதயம் என்று சொன்னாலே அது உடைந்து தான் போக வேண்டுமோ?

எந்த வடிவில் இதயம் இருந்தாலும்

அது என்றும் மென்மையானது

சீக்கிரம் உடைபடுவதும் அதுவே

- Veena 

எதுவும் பல இன்னலுக்கு பிறகே

 பக்குவம் அடையும் அதன் பின்

 அதை யாரும் தீண்ட முடியா பலம்

 பெறும்,அது கொப்பரைக்கும் 

 அக்கறைக்கும் பொருந்தும்

 இரண்டும் தீண்டப்படா ஆனால்

 வேண்டப்படும் மருந்து!

- Vidhya 

Monday, June 16, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எது நமக்கு கிடைக்கும் என்பதை 

நம்மால் கணிக்க முடியாது 

அது வணங்கும் இறையானாலும் 

விழுங்கும் இரையானாலும்


 ஓர் உயிர் அடுத்த உயிரின் உணவு

அந்த உயிரும் அடுத்தவன் பிடியில்

தூண்டிலில் சிக்குவதும் 

தப்பிப்பதும் 

அதன் ஓட்டத்திலே!


 எட்டாக்கனியல்ல ஏதும் முயற்சி கொண்டால்

புழுவானது மீனிடம் சிக்குவதும் 

அதனின்று விலகி ஓடுவதும்

நீரின் ஓட்டத்தில் இருவரும்

எதிர்நீச்சல் போட்டாலும்

பசியாற்றுவதும்

பசியாறுவதும்

எவன் கையிலே?


 தோற்பது எளிது வெற்றிக்கு முன்னால்

புசிப்பது எளிது

பசிக்கு முன்னால் 

ருசிப்பதும் எளிது பசிக்கு பின்னால்

- Veena 

தூண்டல் நிஜ உலகில் இருந்து

 துண்டிக்க போடப்படும் முதல்

 துண்டு சீட்டு..

முதலில் ஈர்க்கப்பட்டு,

 கடைசியில் உயிரை காக்க

 உயிரை விடுவாய்!

- Vidhya 


Saturday, June 14, 2025

காலனின் ஆசை by Veena Shankar

 


காலனின் ஆசையில் அரங்கேறிய நாடகம்


முடித்து வைக்கப்பட்டது கண்ணீர் அஞ்சலியில் 


ஆசைக்காக ஒரு முறை பயணம்


ஆடம்பரத்தை காட்டவும் இந்த பயணம்


இயல்பான தேவைக்கு இந்த பயணம்


ஈட்டியதை சொகுசாய் கரைக்கவும் இந்த பயணம்


உற்றாரை காண வேண்டி இந்த பயணம்


ஊழ்வினை துரத்தியதால் இந்தக் பயணம்


எல்லைக் கோட்டை தொட வேண்டி இந்த பயணம்


ஏற்றம் பெறவும் தூண்டியது இந்த பயணம்


ஒட்டு மொத்த குடும்பத்தின் இந்த பயணம்


ஓலமிட வைத்ததும் இந்த பயணம்


நிற்கதியாய் நிற்கும் உறவினருக்கு 

ஆறுதல் சொல்ல தெரியவில்லை


எதற்கும் துணிந்தே இந்த பயணம் என்றாலும் 


கண் வழியே கண்ணீர்


வார்த்தை இழந்த நாவு


கோர காட்சி மட்டும் முன்னே


நடந்ததை நம்ப மறுக்கும் செவிகள்


எல்லாம் அரங்கேறின

நாடக மேடையில்

 நாடகம் போல் அல்லாமல் நிஜமாய்


நடிக்கும் நடிகர்கள் மட்டும் 

நிழலாய்

பிணமாய்


எரிக்கவும் புதைக்கும் அடுத்தவருக்கு சிரமமே 

என்பதால் என்னவோ 

அனைவரும் சாம்பலாயினர் 

சில மணித்துளிகளில்


தேற்றிக் கொள்ள மனம் மறுக்க

அனைத்து உறவுகளும் நண்பர்களும் நடைப் பிணமாய் இங்கே


ஆகாயம் பக்கம் என்பதால் அங்கே

ஐக்கியமாக நினைத்ததோ இந்த உயிர்கள்


மாறின காட்சிகள் இங்கே மனதில் படமாய் 


உண்மையில் இது கனவு என்றால் கூட ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கிறது அனைத்து நெஞ்சங்களும்


பிரிந்தவை நம்மிடமிருந்து பிரியாமல்

 இருக்க ஏற்றுவோம் நெஞ்சில் கண்ணீர் தீபத்தை

Monday, June 9, 2025

இன்றைய நகைச்சுவை by Veena Shankar

 


இன்றைய நகைச்சுவை


விடுமுறை முடிந்து பள்ளிக் கூடம் திறக்கின்ற நேரம் என்பதால் என் கணவர் நடத்தும் போட்டா ஸ்டுடியோவிற்கு பள்ளிக் குழந்தைகள் பாஸ்போர்ட் சைஸ் போட்டா எடுக்க வருவார்கள். இன்றும் அப்படித்தான் குழந்தைகளின் வருகைக்காக காலை முதல் இரவு வரை காத்திருந்தேன். முகூர்த்த நேரம் என்பதால் என்னவோ குழந்தைகள் வரவில்லை. இனி யாரும் வரப்போவதில்லை என்று யூகித்து இரவு எட்டு மணிக்கு கடையை பூட்ட எண்ணி விளக்குகளை அணைத்து விட்டு வெளியே வரும் வேளையில் ஓர் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண், " இங்கு போட்டோ இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே சென்றார் . கடையை பூட்ட எண்ணிய நானும் நமக்கு கிராக்கி வருகிறது என்று நினைத்து கொண்டிருக்கையில் என் கடையின் பக்கத்திலேயே அவர்கள் வண்டியை ஓரங்கட்டி நிறுத்த , அவர்களின் வருகை ஊர்ஜிதமான நிலையில் இரண்டு குட்டி பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வண்டியிலிருந்து இறங்க , நானும் அவர்களை வரவேற்க எதிரே நிற்க, அவர்களும் பக்கம் வர "வருகிறார்! வருகிறார்!" என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் மனதில் சொல்லிக் கொண்டேன். என் பக்கம் வரும் வரை எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் ஒரே ஒரு மாற்றம் என் கடையை தாண்டி அடுத்த கடைக்கு அந்த கூட்டம் செல்ல , "அம்மா! இங்கே புரோட்டா இருக்குமா?" என்று சின்ன பெண் ஒருவள் கேட்க, "அதான் சொன்னேனே இங்கே புரோட்டா கிடைக்கும் என்று" என்று அவள் தாய் பதில் சொல்ல, என் முகம் வாடியது என்றாலும் "புரோட்டா - போட்டோ" ஆன கதையை எண்ணி என்னுள் நானே சிரித்துக் கொண்டே கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடையை கட்டினேன்.

Saturday, June 7, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 


யாருக்காக யார் நிகர் இங்கே?


இயற்கையின் படைப்பில் மலரை நுகர வந்த பூச்சியா?


பூச்சியை நுகர விடாமல் 

தடுத்து மொட்டுக்களை மலர விடாமல் செய்யும் இயற்கையா?


காலத்தின் மாற்றத்தால் செடியிலேயே வெம்பி விடும் மலரா?


மலரின் செயலால் ஏமாற்றம் அடைந்த வண்ணதத்துப் பூச்சியா?


பிறருக்கு புத்துணர்ச்சியை ஊட்ட துடிக்கும் மொட்டுக்களின் அழகா?


எது குளிர்ச்சி இங்கே?

எது நிரந்தரம் இங்கே?


அழகின் சிரிப்பில் எதுவும் சிறப்பே!

- Veena 

எதை ரசிக்க ?

பல வண்ணத்தை பூசிய

 வண்ணத்துப்பூச்சியையா?

பல வண்ணத்தை சுமக்கும் 

செடியையா?

சொக்கும் அழகில் பூத்து நிற்கும்

அவளை நுகர சென்ற அழகன்,

சொக்கி போய் போன வேலை

 மறந்து செடிக்கு தண்ணீர்

 ஊற்றினான்!

பூவின் காதலன், காவலன்

 ஆனான்...வேலி போடாத வரை

 சரி!

- வித்யா


பட்டாம்பூச்சி 

----------------

சிறை உடைத்தால்  

சிறகடிப்பாய் என்ற தத்துவத்தை 

உணர்த்தியது நீ 


எங்கே பட்டை தீட்டினாய் 

உன் இறகுகளை 


யார் குத்திய பச்சை உன் மேனியெங்கும் 

மழையிலும் கரையாத வண்ணம் 


உன் நான்கில் இரண்டை எனக்கு தருவாயா  

நானும் வானவில் உரசிட 


உன் போல் எனக்கும் இரண்டுவேண்டும்

ஒன்றாவது என் தாய்க்கு  

இரண்டாவது என் தாட்டிக்கு 


உன் அதிர்வெண்களுக்கு   

ஆரோகணம் அவரோகணம் 

நான் எழுதவேண்டும் 


என்னையும் சுமந்து செல் 

பறந்ததில்லை வானவூர்தியில்

நானும் சோதிக்க நயம் தேனை


என் மடல் அருகில் ரீங்காரம் ஒலிப்பாயா ?

சற்று ஓய்வெடுக்க !!!


---- பிரியா




Wednesday, June 4, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 தந்தை ஓர் அடி வைக்க

மகளும் தன் கால்களால் 

அடி வைக்க 

முன்னதின் முயற்சி

பின்னதின் வளர்ச்சி

சொல்லி மாளா பாசம்

அங்கே மௌனமாய்

உறவாடும்

தந்தை மகள் பாசம்


 சிசுவாய் உருவான நாள் முதல்

தந்தையின் பாசமும்

ஒன்றி விளையாடும் சகோதரனின் அன்பும்

கரம் பிடிக்கும் கணவனின் காதலும்


சொல்லும் ஒவ்வோர் காலடியும் 

வாழ்வின் வெற்றியை

சுகமாய் சுமப்பது எப்படி என்று

- Veena 

ஒரு கால் தரையில் ஊன

ஓடோடிய மறு கால் ,

ஒரு கால் ஓடும் முன் ஓடி நின்ற

 மறு கால்,

ஒரு கால் நோகக்கூடாதென்று 

ஓடி தேய்ந்த மறு கால்,

ஒருக்காலும் மறக்காமல் தாங்க

 போகிற ஒரு காலை எண்ணி

கனவு காணும் மறு கால்!

இரு கால்களும் பேசும் தருணம்,

பேச ஒன்றும் இல்லை ஆனால்

 பாச போராட்டம்

 வார்த்தையில்லாமல் 

மோதும் தருணம்,

போய் வா மகளே எங்கு

 சென்றாலும் தொடரும் என்

  நிழல் துணையாக ,ஆதரவாக 

 அதை சொல்ல அவசியமில்லை.

- Vidhya 


Monday, June 2, 2025

படமும் கருத்தும் by Winmeengal

 


Veena Shankar: 

குடும்பத்தோடு உல்லாச பயணம் வானில்

மனித நிழலோடு பேச இயலாத நிலையில் 

வானில் மேக அலையில் ஓர் 

ஆலோசனையா?

குதூகலமா?

பட்டிமன்றமா?

விளங்கவில்லை எவருக்கும்

ஆளுக்கொரு கற்பனையை மனதில் ஏற்றி

வடிவங்கள் சிறப்பாய் கொடுத்து

எழுத்தால் வரிகள் போல் கவிதை புனைந்து

கண்ட காட்சிக்கு

உயிர் தரும் 

செயலும் சிறப்பே!


Shanmugapriya:

 எல்லோருக்கும் இரவும் நிலவும் 

பாலும் தேனுமாய் இருக்காது 


பசியால் படுத்தவனுக்கு 

பாதி இரவில் விழிப்பு !!!


பாதசாலையை படுக்கையறை ஆக்கியவனுக்கு 

எப்பொழுது விலை உயர்ந்த

வாகனம் வரும் என்ற தவிப்பு !!!


கேஸ் கிடைக்காத காவலாளிக்கு 

இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு

வருபவர்களிடம் வம்பு இழுத்து 

கேஸ் எழுதுகையில்

சிக்கிக் கொண்டவனின் பரிதவிப்பு !!!


பாதசாலையில் வசிக்கும் 

புதுமண தம்பதிக்கு பக்கத்தில் 

இருக்கும் பூங்கா எதிரின் தேனீர் கடை 

இரவு பன்னிரண்டு வரை 

திறந்திருக்கும் என்ற தவிப்பு !!!


எல்லோருக்கும் இரவும் நிலவும் 

பாலும் தேனுமாய் இருக்காது


--பிரியா

அவளுக்கு என்று ஒன்று

 உண்டென்றால் அது இரவில்

 நிலவொடு தனிமையில்

 புலம்புவது,அதையும்

 சூறையாடிய அடுக்குமாடி

 கட்டடங்களும், கைப்பேசியும்

 ஒன்று நிலவை மறைக்க

 மற்றொன்று அனைத்தையும்

 துண்டித்தது !

- Vidhya 

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...