Thursday, July 31, 2025

மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை


நாட்காட்டியை பார்த்து மனிதன் ஒருவன் கேட்டானாம் 

" ஓடாதே! கொஞ்சம் நில்! ஏன் இப்படி ஓடுகிறாய்?. மெதுவாய் தான் போயேன் " என்று, அதற்கு அந்த நாட்காட்டி " உன் ஓட்டம் நிற்கும் வரை நானும் ஓடுவேன். . நித்தமும் நீ என்னை கிழித்தெறிந்தாலும் உன் ஓட்டத்திற்கு காரணமும் நானே, உன் ஆட்டத்தை கலைப்பவனும் நானே! உன் தேவை முடியும் வரை நான் உனக்கு தேவை " என்று பதில் சொன்னதாம் . 


மனிதனின் ஓட்டம் காலத்தின் பிடியிலே!

Wednesday, July 30, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எதை நிர்ணயம் செய்ய 

இந்த கோலம்?

இல்லத்தில் ஒருவள்

இப்படி தாங்கி நின்றால்

குற்றம் மட்டுமே

தெரியும் ஆங்கே

அவள் முன்

கண்ணில் மூடிய துணி போல் 

அடுத்தவர் குற்றங்களை

மன்னித்து , மறந்து வாழ அறியா போது

எதுவும் குற்றமே!

மறைப்பதால், 

மறைத்துக் கொள்வதால் குற்றம்

உண்மை ஆகாது.

குற்றம் மறப்பின் 

சுற்றம் பக்கமே!

அரிதாரம் போடாத இவள்

சொல்லும் செயலும்

சரியே!

ஆனால் ஒவ்வொரு நிலையிலும் குற்றத்திற்கான ஆதாரம் தேடுவதால்

அதுவும் கிடைக்காது

குற்றங்கள் விடுதலை பெற்று 

இருப்பது நீதியின் மரபே!

- Veena 

எதையும் சொல்ல ஒன்றுமில்லை,

ஒவ்வொருவரின் மனசாட்சி

 இருக்க ,வாதிட வழக்கறிஞர்

 தேவையில்லை, இதில் நீதி

 தேவதை வெறும் அலங்காரமே!

- Vidhya 

Tuesday, July 29, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 


இணைந்த கரங்கள் உடலுக்கு முன்னாலும் பின்னாலும்


 இருளில் ஒளிரும் தீபத்தின் அளவு பெரிதல்ல

அதன் சுடர் கொடுக்கும் ஒளியே

அற்புதம்

பகலில் இணைந்த உறவு

இரவில் அரங்கேற

இருளும் பகலானது

புகைப்படக்காரராலே 

ஒவ்வோர் தினமும் 

இரவும் பகலும் இனிதாய் அமைய

வரமும் வேண்டுமே!

வேண்டுவோரிடத்தில் அமையாமல் இருப்பதும் 

பெரும் சுமையே வாழ்வில்

இணைந்த கரங்கள் புது உறவு தேட

பிறக்கும் உறவும்

இணையும் சொற்ப நாட்களிலே

புது உறவுகள் கொண்ட பின்னே

சலிப்பும் இயற்கையே அங்கே

வாழ்வும் அதுவே

ஒன்றை விடுத்து மற்றொன்றுக்கு ஆவல் கொள்ளும் என்றும் மனமே!

மனம் அமைதியாக இருக்க 

இளைஞனாக மாறுவதும் சிறப்பே!

மனமும் மணம் வீச

அனுசரணையாக இருப்பதும் அவசியம்

- Veena 


என் இதய வங்கியில் சேமித்த 

நம் காதலை 

ஒவ்வொரு நொடியும் 

உறைய வைத்து 

காலங்கள் ஓடிய பிறகு 

அந்த நினைவினை உருக்கி 

உறைந்த நொடியை உயிர்பித்து 

இரு இதயங்களின் பாதியை ஒன்றாக்கி

நம் காதலை நிலவுக்கு காட்டியதை எண்ணி

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்   

நீ வருவாய் என !!!!!



-பிரியா

காதல் கொள்ள துடிக்கும் இதயம்

 பிரிவிலும், பிரியமாக, பிரியாமல்

 இருக்க துடிக்க வேண்டுதே..

ஒப்பனை போட்டு ஒத்திகை

 பார்க்கும் மேடைகள்,

ஒற்றுமைக்கும் ஒத்திகை பார்க்க

 மறப்பது ஏன்?

- Vidhya 

படமும் கருத்தும் by Veena and Vidhya



 பசுமை நோக்கிய விழியின் பயணத்தில் 

கரத்தில் திணித்தது இயற்கை

பசுமையை 

கொள்வதும் கொல்வதும் 

கரத்தின் உடையவரை பொறுத்தே


 மனதின் துயரத்தை களைய

அதை ஆற்றும் கலை அறிந்த

துணை வேண்டும் நிச்சயம் வாழ்வில்

ஆபத்தில் உயிர் நிலைக்க

இறுகப் பற்ற மரம்

அவசியமில்லை

கிளை கூட போதும் 

என சொல்லும் ஆழ் மனதிற்கு

கிளையின் இலை கூட துணை நிற்கும்

கை கொடுக்க

உயிர் பெற

சில மனிதர்கள் கடமைக்காக 

உயிர் தாங்கி நிற்க

தன் துணையின் விலை அறியாது

தூற்றுவதும் 

அரங்கேறும்

இந்த வாழ்க்கை எனும் 

நாடக மேடையில்

- Veena 

இயற்கையின் மொழி புரிந்தால்

 யாரும் அனாதையில்லை..

பற்றற்ற உலகில் பற்றிக்கொள்ள

 ஒரு கரம்!

- Vidhya 

Sunday, July 27, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


சிறப்பு பயணம், கொண்டவனோடு 

அது சச்சரவு இன்றி 

சிறப்பாய் அமைவது

எவராலே


 எவ்வளவு சுமை ஏற்றப்பட்டாலும் தாங்கும் இந்த இருவர் பயணம்

சுமை பெரிதல்ல இவ்வாழ்வில் கொள்ளும் சுகமே

நிலைக்க வேண்டும்

கரம் பிடித்தவளை இறுதி மூச்சு வரை 

காக்கும் செயலும் சுகமே

பொறுப்பு அறிந்து மனம் தாக்கும் உறவுகளுக்கிடையே துணையாள் செய்யும்

தியாகமும் இங்கே

அளவுகோல் அல்ல

முடியும் பயணம் அறியாது

என்றும் முதல் பயணமாய் இருக்கவே விருப்பம் எவருக்கும்

துணையின் துணை கொண்டு

இல்லாள் இருக்கும் வரை

பயணம் யாவும் சுகமே!

- Veena 

மேடுபள்ளம் தாண்டி செல்லும்

 பயணம் தரும் நெருக்கத்திற்கு

 கூட, வார்த்தைகள் துணை

 தேவையில்லை..பயணிக்க

 நேரமும் ,கூச்சல் நிறைந்த

 வெளியும், துணையாக இருக்க

 ..காதல் கொண்ட உள்ளம்

 மௌனமாக பொறுப்பை சுமந்து

 செல்லும் பயணம்!

- Vidhya 

Tuesday, July 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 அறுசுவை சமையல் என்பதில் ஒரு சுவையும் இல்லை

சமைத்து பழகாத வீட்டில்

இந்த சுவிகியும் ஜோமெட்டோவும் புகுந்ததால்

சமைக்க வாய்ப்பில்லை

உண்ணுவதற்கு ருசியாய் இல்லை


இப்படிக்கு நிதமும் வெறும் சோறை உண்டு

விருந்து சாப்பாட்டை எதிர்ப்பார்த்து

உண்ண வந்த காகம்

- Veena 

காக்கைக்கு கிடைக்கும் வகைகள்

 கூட மனிதருக்கு

 கிடைப்பதில்லை!

ஹோட்டலின் முன் வாசம்

 செய்யும் மனிதர் கூட்டம்

 அமாவாசையை மட்டும்

 மறப்பதில்லை !

- Vidhya 

Friday, July 18, 2025

படமும் கருத்தும் by Veena



 பாதைகள் பல உண்டு இவ்வுலகில்

நிலம், நீர் ஆகாயம் என்று

இலக்கு உண்டெனில் ஓர் பாதையும் உண்டு

பாதை வகுக்க எண்ணம் வந்ததாலே

பாதையும் பிறந்தது

அது வழியே பலர் வழி கடக்க

வழி துணைக்கே மரங்களை செடிகளும் நம்மை

பாதையை ரசிக்க வைத்தன

- Veena 

ஆறாக ஓடும் மழை நீர் அதில்

 கூத்தாடும் மரங்கள்.

_ Vidhya 



Friday, July 11, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பறக்க சிறகு இருந்தும் கால்கள்

முடக்கப்பட்டது கயிறு 

என்னும் ஆயுதத்தால்

பெண்களும் ஒடுக்கப்பட்டனர் ஆளுமையால்

தான் கொண்ட துன்பத்தால் உணர்ந்தாள் பறவையின் வருத்தத்தை

முடிச்சை அவிழ்த்து

பறக்க தூண்டினாள் 

இளம் பறவையை

எப்போதும் தூண்டில் 

போட்டால் மீன்கள் சிக்குவதில்லை

அவை இனம் சேரவும்

குஞ்சு பொரிக்கவும் காலமும் தேவையே!

அது போலவே பறவையும் அதன் சுதந்திரத்தை அனுபவிக்க கயிறு அறுபடவேண்டுமே!

- Veena 

தூது செல்வாயா, 

சேதி சொல்வாயா,

 மன்னவனின் நலம்

 அறிவாயா,வருகை நாடி

 காத்திருக்கும் நிலை சொல்லி,

 அள்ளி வா அவரின்

 அன்பை,மூச்சை அதுவரை

 உறங்காமல் காத்திருக்கும்

 விழிகள் இரண்டு இங்கே!

- Vidhya 

லண்டனில் வள்ளுவர் by Akhiladevi Kumaran



 எண்ணும், எழுத்தும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றுணர்த்தி, 

கசடறக் கற்கவும், கற்ற பின் அதற்குத் தக நிற்க கட்டளையிட்டதும்,

கேடில் விழுச் செல்வங் கல்வியென நாளும் கற்க உந்தியதும், 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என வினவி, அன்பின் வழியது உயிர்நிலை என்று சொல்லி, 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வீணென உரைத்ததும், 


இன்னா செய்தார்க்கு, அவர் நாண நன்னயம் செய்து விட அறிவுறுத்தியதும், கனியருப்பக் காய் கவர்ந்தற்று என எளிமையாக புரிய வைத்ததும், 


ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காணக் கூறியதும்,

மெய்ப்பொருள் காண்ப தறிவென மொழிந்ததும்,


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவியும்,

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்துமுந்தச் சொன்னதும்,


ஆறாதே நாவினால் சுட்ட வடு எனக் கடிந்து, 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல் என எடுத்துரைத்ததும்,


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடச் செய்ததும்,

வெள்ளத்தனைய மலர்நீட்டமும், உள்ளத்தனையது உயர்வெனவும் உணர்த்தியதும்…

இப்படி பற்பல சிந்தனைகள் , 

நினைவில் கடல் தாண்டி,

நீந்தி வர, 

சிலிர்ப்புடன், 

ஐயன் - அகிலம் புகழ் வள்ளுவனும், அடியேனும்!

Monday, July 7, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 மங்கையரின் உள்ளத்தில் மங்காத கொலுசு

 உன்னை பூட்டிவைக்க ஆசை, அலமாரியில் அல்ல, என் கால்களில்

 எதில் உள்ளது மகிழ்ச்சி?


பஞ்சனையில் புரண்டு புரண்டு தூக்கம் வாராமல் தவிப்பதிலா?

இல்லை

வெறுந்தரையில் படுத்தவுடன் உறங்குவதிலா?

உடல் முழுதும் தங்க அணிகலன் போட்டுக் கொள்வதிலா?

இல்லை

கால் கொலுசு சப்தத்தில் நிம்மதி கொள்வதிலா?

- Veena 

செல்லத்தின் அழைப்பு மணி

 கேட்டவுடனே எங்கிருந்தாலும்

 ஓடி வரும் அம்மாவின் கால்கள்

அனிச்சை செயல் அன்றோ!

ஒய்யாரமாக கால்கள் தாளமிட

ஆடும் கொலுசு...

மழலையின் சிரிப்பை பந்தாடும்

 மணிகள்..

- Vidhya 


Sunday, July 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 கையில் இல்லாத ஒன்று அருங்காட்சியில் அலங்காரமாய் , அதை தொட கூட முடியாது அப்போதும்

 செல்லாத ரூபாய் நோட்டுகளின் 

அணிவகுப்பு தலைமுறை தாண்டியும் சொல்லும்

வரலாறு

எதுவும் வீண் இல்லை

இங்கே சிறந்த படைப்பாளி இருக்கும் வரை


 உருவம் உருமாறினாலும் மதிப்பில் என்றும் மாறுவதில்லை

பணம் என்னும் தலைவன்


சிறிய நோட்டில் ஏழையின் வீட்டில் மகிழ்ச்சி

பெரிய நோட்டு இருந்தாலும் பணக்காரன் வீட்டில் அடிதடி

இவை இடம் மாறினால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் துக்கம்

பெரிய நோட்டை ஏழைக்கு செலவழிக்க தெரியாது

சிறிய நோட்டை பணக்காரனுக்கு போதுமானதா

- Veena 

காலம் மாறலாம் கோலம்

 மாறலாம் கலரும் மாறலாம்

 மதிப்பும் மாறலாம் ஆனால்

 மாறாது ஆசை.. உயிரை குடிக்கும்

 பணபேய்!

வெறும் காகிதம் உயிரற்றது

 அதற்கு இருக்கும் மதிப்பு

 உயிருக்கு இல்லையே!

- Vidhya 


Thursday, July 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இளங்கன்று பயமறியாது, நிழல் எது நிஜம் எது என்று தெரியாது

 நிஜத்தில் நிழலில் நடக்க இயலாது

நிழலில் நிஜமாய் நடக்கலாம்

ஓவியனின் கைவண்ணத்தில்

ஓவியம் மட்டுமல்ல நிழலும் நிஜமே!

 பிறர் நிழலில் நடக்க இயலாது, நடை வேகமாக போனால் நிழலும் வேகம் எடுக்கும். அப்போது அந்த நுழை தொடர்வார் ஆற்றல் நம்மிடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்

பிறர் நிழலில் நடக்க வேண்டுமென்றால் நிஜத்தில் உள்ளவர் நிழலில் மிதிபடுவார்

 அடுத்தவர் காலடி நிழலில் தந்தை தொடர

தந்தையின் நிழலில் மகன் செல்ல

முதலடி வைத்தவனின் இலக்கு சிறப்பாய் இருக்கும் வரை

எவருக்கும் இழப்பில்லை

- Veena 

தந்தை வழி மகன் என்பர்

தன் நிழலில் பிள்ளைகளை

 அடைக்காக்க தந்தையும்

 தாயாகிறான்..போகும் வழி

 நெடுந்தூரமில்லை பாதை

 மாறாமல் வந்தால் அடைவோம்

 இலக்கை. 

- Vidhya 


Wednesday, July 2, 2025

படமும் கருத்தும் by Veena, Priya and Vidhya

 


வான் திரையை விலக்கிவிட்டு 

தனது காதலிக்கு தெரியாமல் 

அவள் கவிதையை ரசித்துக்கொண்டிருக்கையில் 

அவளுடைய பெஸ்டி 

அவனுக்கு தெரியாமல் 

பிடித்த படத்தை 

சாட்சியாக வாட்ஸ் அப்பில் அனுப்பியது !!


--பிரியா


வீட்டு ஜன்னல் திரையை விலக்க 

தரையில் அங்கே சிதறிக் கிடந்தது ஓர் வெள்ளிப் பேழை

யாருக்கும் தெரியாமல் விரைவாய் பற்றிட

நான் அருகில் செல்ல

கண்டது கண்கள் நிறைய வெள்ளிக் காசுகளே அடுக்கடுக்காய்

களத்தில் நான் இறங்க 

என் கரங்கள் தோற்றுப் போயின 

கிடந்தது வெள்ளிப் பொருளல்ல

வான் நிலவின் பிரதிபலிப்பு அலையலையாய்

பேராசையால் நான் சிக்கிரம் படியில்

 இறங்கி வர அங்கே கிடைத்த புதையலையும் சேர்த்து கொண்டு 

வெள்ளி ஏந்த வீழ்ந்து வர

வெள்ளியே இருக்கும் என யூகிக்கவில்லை 

வானைப் பற்ற வீழ்ச்சியில்லை

எனினும் வானை தன் வயமாக்க எண்ணுபவருக்கு வெற்றியில்லை எந்நாளும்

- Veena 

மேகங்கள் புடைசூழ பிறந்தவன்

 இவனோ..

இவன் வருகைக்கு காத்திருக்கும்

 விண்ணுலகும் மண்ணுலகும்!

- Vidhya 

Tuesday, July 1, 2025

இன்றைய சிந்தனை by Veena Shankar



 இன்றைய சிந்தனை

1) வலிக்கு ஏற்றது மருந்து என்றாலும் அதை எந்நாளும் அருந்த முடியாது

2) நித்தம் கொள்ளும் மன காயத்திற்கு தேவை மறதி என்ற மருந்து

3) நம் பயணத்தில் பாதை என்றோ அமையப் பெற்றுறிருக்கும். அதை கண்டுபிடித்து செல்வதே நம் பணியாகும்.

4) காகிதத்தில் அர்த்தமற்ற வார்த்தைகளாய் இருப்பதை விட எழுத்தில் ஊமையாய் இருந்து விடலாம்

5) வலிகளும் நம்மை நகைத்திருக்க வைக்கும் நம் எதிர்காலத்தை சிறப்பாய் வழி நடத்துவதற்காக

6) பூட்டின் உறுதியை ஓர் திறவுகோல் உடைத்து விடுவது போல மழலைகளின் பேச்சும் உருக்கிவிடும் பெற்றோரின் சோகத்தை

7) பேசுகின்ற வார்த்தைகள் தான் மனிதனின் பலமும் பலவீனமும். பலம் முன்னேற்றத்திற்கு வழி காட்டும். பலவீனம் மனதை இன்னும் பின்னேற்றும்

8) நமக்கான பாதை ஒன்று உண்டு என்று சொன்னாலும் போதுமே, யாரும் கைகோர்க்க தேவையில்லை. ஒருவர் இட்டு செல்வதை விட நாம் பட்டு தெரிவதே வாழ்க்கை

9) என்றும் ஒருவரே வெற்றி பெறுவதும் கடினம் . இருந்தாலும் முயற்சியில்லாமல் போனால் வெற்றி என்பதே கடினம்

10) இழந்த பின் அடையும் சோகததை விட இருப்பதால் அனுபவிக்கும் சோகம் மேல்

11) நிம்மதியையும் பொருளையும் தேடி அலைவதிலேயே நம் அமைதியும் காலமும் கரைகிறது

12) யாதையும் நாடுவதில் உள்ள சுவாரஸ்யம் அதை காப்பதிலும் வேண்டும்

13) உன்னை உதறி விடுபவனே உனக்கான ஏணியாவான் உன் வாழ்வின் உச்சியை அடைய

14) அன்பு என்பதே தெரியாத ஒருவனுக்கு அதனால் இழப்பில்லை. ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாதவனுக்கு மட்டும் பகையே மிஞ்சும்.

15) காயங்களும் வலிகளும் நிரந்தரமில்லை, ஆனால் அதன் நினைவுகளே வடுக்கள் என்றென்றும்

16) மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையென்றால் எவருடைய, எந்த செயலிலும் குற்றமில்லை

17) பின்புறம் பேசியதை நம் முன்புறம் வந்து யாரும் சொல்லாமலிருந்தால், முன்புறம் அமைதி காக்கும் பின்புறத்தைக் காட்டிலும்

18) நேசிக்கும் உறவுகள் இருக்கும் வரை யாரும் அன்புக்காக யாசிக்க வேண்டிய தேவையில்லை

19) ரகசியம் காப்பதால் மனதில் சுமை கூடும். அதை அவசியம் காத்தால் நம்மேல் நம்பிக்கை கூடும்

20) கடிகாரத்தின் முட்கள் சொல்கிறது, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் கடந்து செல்வதே தங்கள் முன்னேற்றத்தின் ரகசியம் என்று

21) கடிகாரத்தின் நிசப்தம் காலத்தை நிறுத்தி விட முடியாது, அது போல ஒருவரின் அர்த்தமற்ற பேச்சு முயற்சி உடையோரின் வெற்றிக்கு தடை போட முடியாது

22) பிறர் அடக்குவதால் மட்டும் பிறப்பது அல்ல அமைதி, அதன் பால் விளையும் அழுத்தத்தாலும் பிறப்பதே

23) விருப்பம் கூட மாறலாம் நாம் வீழ்கையில். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் நிரந்தரம் என்றும் எவருக்கும் மீண்டு எழுகையில்

24) தீபத்தின் ஒளி குறிப்பிட்ட இடத்தின் இருளைப் போக்குவது போல கண் முன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மெல்ல மெல்ல முயற்சி, உழைப்போடு எட்டுவதும் அறிவே!

25) வாழ்வு பொற்காலமாய் மாற வேண்டுமெனில் போர்க்களம் செல்லவும் தயங்குதல் கூடாது

26) வனப்பு கூடும் இடத்தில் பிறரின் ரசிப்பு தன்மை வெளிப்படும். ரசிப்பு உள்ள மனதில் வனப்பும் கூடும்.

27) வாலிபத்தில் காதலால் வரும் தோல்வியும் முதுமையில் தனிமையால் வாடும் சோகமும் ஒன்றே! யாருக்கும் இழப்பு உடையவர்களை தேற்றவும் தெரியாது. அவர்கள் தியாகத்தை போற்றவும் தெரியாது

28) குறையில்லா நெஞ்சமுமில்லை, குறை பேசா மனிதருமில்லை, நிறையுள்ள வாழ்க்கையும் இல்லை, நிறை காணும் எண்ணமுமில்லை

29) எதிர்ப்பார்ப்பு உள்ள இடத்தில் நல்ல குணம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்க்கும்.

30) தேடலுக்கான தேவை, கிட்டியவுடன் முற்றும். தேவைக்கான தேடல் என்றும் தொடரும்.

31) வெற்றி என்பது என்றும் வெற்றிடமல்ல ,தோல்வி என்பது எப்போதும் வெல்வதுமல்ல

32) அறிவின் ஆழம் தெளிவை பொறுத்தே, வலியின் ஆழம் காயத்தை பொறுத்தே

33) ஒற்றை வார்த்தை சொல்லிவிடும் எல்லா கேள்விகளுக்குமான விடையை, அதுவே பொறுமை என்ற மூன்றெழுத்து

34) எதுவும் நிரந்தரமில்லை உலகில், நாம் உள்ளிழுக்கும் காற்றும் சில மணித்துளிகளில் வெளியேறிவிடுவது போல

35) அழிவிற்கான ஆக்கம் என்றும் நிலைக்காது

36) தூண்டில் இல்லாமல் மீன் கிடைப்பதில்லை, தூண்டுதல் இல்லாமல் வெற்றிப் பாதை தெரிவதில்லை

37) வலிமையுள்ளவனுக்கே வலிகள் அதிகம். எனவே வலியை பொருட்படுத்தாது, வலிமையை கூட்ட முயற்சிக்க வேண்டும்

38) நாளைய தேவைக்காக இன்றைய நாளை தொலைக்கும் நாம் நித்தம் பெறுவது ஓர் புதிய அனுபவத்தை மட்டுமே

39) ஒன்று ஒன்றை விட சிறப்பாக தெரியக் காரணம் அதன் தன்மையால் மட்டுமல்ல, அது நம்மால் விரும்பப்படுவதுமே ஆகும்

40) ஒன்றை இழந்த பின்னே தான் மற்றொன்றின் அறிமுகம் கிடைக்கும், இழந்ததின் பயன் அறியும்.


41) எவருக்கும் இங்கே சுதந்திரம் இல்லை அன்பு, பாசம், கடமை எனும் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதால்.


42) உன் உணர்வுகளை புரிந்து கொள்ளா இடத்தில் நீ காட்டும் அன்பு வீண். உன்னை புரிந்து கொண்டு காட்டும் அன்பை நீ உணராது இருப்பதும் வீண்.


43) நியாயத்தின் படி ஏதும் நடக்காத போது அதில் உண்மையான பலனை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை


44) நட்புக்கு வசதி தேவையில்லை. ஆனாலும்

தேவைக்கு தான் நட்பு தேவை இங்கே இந்த உலகத்தில்


45) இமைக்கும் கண்கள் போலே துடிக்கும் மனமே மனிதம்


46) எதுவும் தேவையுள்ள போது கிடைக்காமலும்

தேவையில்லாத போது கிடைப்பதும் வீண் தானே?


47) பிறரை பேச்சால் காயப்படுத்தி அதை ரசிக்கும் குணமே இழிவானது. எனவே அதை பொருட்படுத்தாமல் மறந்து விடுவதே சிறந்தது


48) குழப்பம் உள்ள நேரத்தில் மௌனம் காத்தாலும் அந்த மௌனமும் பல நேரங்களில் தொடர்கதையாக மாற வாய்ப்புள்ளது. எனவே நீண்ட மௌனம் கூட குழப்பத்தை ஏற்படுத்தும்.


49) ஊசியின் ஒரு பக்க கூர்முனை ஆடையை தைக்க உதவுகிறது என்றாலும் அதன் மறுமுனை தன்னையே துளைத்துக் கொள்வதால் தான் நூல் உட்சென்று கிழிசலை அடைக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. அது போலத்தான் நம் மனதில் ஆயிரமாயிரம் காயங்கள் வடுக்களாக இருந்தாலும் பிறரை நோகடிக்காமல் வார்த்தையை பிரயோகிக்க பிரயத்தனப்பட வேண்டும்


50) தவறு என்பதற்கு புது இலக்கணம் என்றுமே இல்லை, பிறர் பேச்சுக்கு எதிராக நடக்காத வரை.


 இன்றைய சிந்தனை


எதையும் பற்ற நினை, மாறாக அவற்றை துடிக்க வைத்து கைப்பற்ற நினைக்காதே!


விதையில் ஈரம் இருந்தால் விருட்சம் தானாய் உயிர் பெறும்


தேவையுள்ள போது நா தேடும் ஊறுகாயாக இருப்பதை விட, இலையில் ஒதுக்கும் கறிவேப்பிலையாக இருப்பதே சிறந்தது.


காரணம் தெரியாமல் வரும் சண்டைகள் கூட தேவை இங்கே ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ள


பூவின் வாசத்தால் மட்டுமே நாருக்கு மணம். பூ வாடிய பின் அந்த நாரை யாரும் சூடிக் கொள்ள விரும்புவதில்லை. அது போல தான் நம் நல் இயல்பு மாறாத வரை இந்த புவியில் எதுவும் சிறப்பே!


முட்கள் கொண்ட செடியானாலும் ரோஜாவின் இதழ்கள் மிருதுவாய் இருப்பது போல பிறப்பு எங்காகிலும் குணம் என்பது அவரவர் தனிச்சிறப்பே!


எங்கே பொருள் தேடல் முடிந்து மன தேட ல் ஆரம்பம் ஆகிறதோ அங்கே முதுமை தலை காட்டுகிறது என்று பொருள்


நம்மை விரும்புபவர்களால் மட்டுமே நாம் ஏற்றம் காண்பதில்லை . நம்மை வெறுத்தவர்களின் பேச்சு கூட நம்மை நாம் உணர்ந்து வெற்றிக் கொள்ள செய்யும்


துடிக்கும் கரங்களும் துடைக்கும் மனமும் துவண்டு விடாது என்றும்.


வாழ்க்கை இலகுவானது தான், அதை அழகாய் சுமக்க தெரிந்தவனுக்கு


கிறுக்கல்கள் கூட பொன்மொழியாய் மாறும், அனுபவமும் கற்பனையும் இருந்தால்


பிளவு இல்லா உறவில் தெளிவு உண்டு. தெளிவு இல்லா மனதில் ஏக்கம் உண்டு.


எவருக்கும் எதுவும் சொந்தமாகிப் போனால், சலிப்பு என்பதே மிச்சம் எதிர்காலத்தில்


நம்பிக்கை மட்டுமே ஒரு செயலை முழுமையடைய செய்யாது. அச்செயலுக்கான முயற்சியும் நிச்சயம் வேண்டும்.


எல்லோருடைய பிரார்த்தனையையும் கடவுள் உடனுக்குடன் `நிறைவேற்றுவானேயானால் அவனுக்கும் என்றும் மதிப்பு இருப்பதில்லை


எவரும் நம்மை அவருக்கு அடிமை என்று எண்ணிய பின் அவரிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது நம் தவறு


நித்தமும் இறக்கும் மனதிற்கு மனிதனின் ஒப்பாரி பாடல் தேவைப்படாது


எதையும் மனிதமாக பார்த்தால் அங்கே வணிகம் இருக்காது. எதுவும் வணிகமாக இருந்தால் அங்கே மனிதம் இருக்காது.


நாம் முடிவு எடுத்த பின் அதை மாற்ற நேரிட்டால் அதில் பிறரின் சுயநலம் கண்டிப்பாக இருக்கும்


நீ சொல்லும் வரிகள் யாவும் சரியாய் இருந்தாலும் , அது அடுத்தவருக்கு வலியாய் மாறாத வரை சிறப்பே!


மாட மாளிகை என்பது வசதிக்காக, ஏழை குடிசை சுகத்திற்காக


கேட்டாலும் கிடைக்காத இடத்தில் வாய் மூடி நிற்பதில் அர்த்தமில்லை


மனித செவிகள் இரண்டும் பிறர் கூறுவதை கேட்க மட்டுமல்ல, தேவையில்லாத சொல் ஒன்றன் வழி உட்புகுந்து மறு வழி வெளியேறவுமே


ஒரு சாண் வயிற்றுக்கு தேவைப்படுகிறது அரை டஜன் பதார்த்தங்கள், அவை உண்ட பிறகு தேவைப்படுகிறது ஒரு டஜன் மருந்து வில்லைகள்


வாழ்வில் எதுவும் கடந்து போகத்தான். இன்பம் துன்பம் இரண்டும், அதை சரி சமமாக பார்த்தால் அங்கே குதூகுலமும் அழுகையும் ஒன்றே


ஒரு செயலுக்காக எத்தனை முறை முயற்சி எடுக்கிறோம் என்பது பொருட்டல்ல, இறுதியில் கிடைக்கும் வெற்றியே இலக்காக வேண்டும்


ஒரு கோட்டின் அளவு என்பது அதன் பக்கத்தில் வரையப்படும் அடுத்த கோட்டின் நீளத்தைப் பொறுத்தே அமையும். அது போலவே தான் நம்முடைய துன்பங்களுமே!


கண்ணீர் என்பது ஆயுதமல்ல , அது என்றும் இயலாமை மற்றும் உணர்ச்சியின் வெளிப்பாடே!


எந்த ஒரு கருத்தும் நமக்கு சாதகமாக இருப்பின் அதைப் பற்றிய விமர்சனம் எழாது


வலியில் பிறப்பதே வைராக்கியம், அதுவே பின் மனதை பக்குவப்படுத்தும்


ஒருவரின் நேர்மறை கருத்து அடுத்தவருக்கு எதிர்மறையாகலாம். அதை தெளிவு படுத்திக் கொண்டு எதிலும் எப்போதும் நடுநிலை காப்பதே சிறப்பு.


விருட்சத்தின் வேராய் இருப்பதை விட மண்ணில் நீராய் இருப்பதும் அவசியமே!

அதுபோல குடும்பத்தின் தலைமையாய் இருப்பதை விட அதில் பொறுப்பாய் இருப்பதும் அவசியமே!


தமக்கு பிடித்தவர்களின் தவறை ஏற்றுக் கொள்வதும் அல்லாதவரின் செயலில் குற்றம் கண்டுபிடிப்பதும் மனித இயல்பே!


என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் உன்னால் முடியும் என்ற அடுத்தவரின் நம்பிக்கையும் கொள்ளும் என்றும் வெற்றியே!


மனம் வலியில் உள்ள போது அதை மறக்க மனம் வலிமை பெறுமாயின் எதிர்கொள்ளும் செயல் யாவும் சிறப்பே!


தொலைவாய் இருப்பதை தொலைவுப்படுத்தியே பார்த்து பழகி விட்டால் அது அண்மையில் வந்தாலும் அதன் மேல் காதல் வாராது.


மாற்றம் வேண்டும், அந்த மாற்றத்தில் ஓர் தெளிவு வேண்டும், அந்த தெளிவும் வலியிலிருந்து பிறந்திருக்க வேண்டும். அந்த வலியே மாற்றத்தை நாடியிருக்க வேண்டும்


தொலைந்து போன கனவுகள் என்றும் வருவதில்லை, தொடரும் உண்மை நட்பு என்றும் தொலைவதில்லை


உழைப்பின் அளவுகோல் அன்பும் கடமையும் கொண்ட செயல் திறனே !


ஆக்கத்திற்கு பல நல்ல வழிகள் இருந்தாலும் அதை செயல்படுத்த ஊக்கம் கொடுக்கும் நல்ல உள்ளங்களும் வேண்டும்


தனக்கு தேவை உள்ள போது சுயநலமாக இருப்பதும் பிறர் தேவைக்கு என்றாகும் போது பொதுநலம் பேசுவதும் மனித இயல்பே!


உழைப்பை திருடுபவனிடமும் தியாகத்தின் மதிப்பை உணராதவனிடமும் காட்டும் மனித நேயம் வீணே!


மௌனம் சிறந்த மருந்து, அடிப்பட்ட உள்ளத்தின் காயத்தை ஆற்றுவதற்கு


ஒன்று ஒன்றை விட சிறப்பாக தெரியக் காரணம் அதன் தன்மையால் மட்டுமல்ல, அது நம்மால் விரும்பப்படுவதுமே ஆகும்


முதுமையில் முகத்தின் பொலிவு இழந்தாலும் மனதில் வனப்பு கூடும் கடமை முடித்து ஏதோ சாதித்தது போல


பிறரை கபடமில்லாமல் பாராட்ட கற்றுக் கொண்டாலே போதும் , அதுவே மனது தெளிவு பெற்றதற்கான அடையாளம்


போலியும் பொலிவு பெறுவது பொல்லாத நாவினாலே


கொடுக்கும் கரங்கள் இருந்தாலும் இடையில் பறிக்கும் கூட்டம் உள்ளதே!


புன்னகை மகிழ்ச்சியில் மட்டும் வருவதல்ல, சூழ்நிலைக்கேற்ப இயலாமையில் கூட வருவதுண்டு


வாழ்க்கையும் இதுவா என்று சலித்து கொள்வதை விட அதை கடக்க கற்று கொள்வோம்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...