Thursday, October 30, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


புல்லாங்குழலூதும் கண்ணனோ?

அவன் என்றும் மாயவனோ?

ஆயர் பெண்களின் காதலனோ?

எவரையும் மயக்கும் மாதவனோ?

பசுக்களை மேய்த்தவனோ?

உள்ளம் கவர் கள்வனோ?

தாய்க்கு விளையாட்டுப் பிள்ளையோ?

வெண்ணெயை திருடி உண்டவனோ?

பாடம் புகட்டும் ஆசிரியனோ?

தோழிக்கும் சிறப்பான தோழனோ?

உற்றவனோ?

யார் அவன்?

என்னில் எண்ணம் உதிக்க அவனை 

காண வேண்டி

திக்கு தெரியாத காட்டில் 

தொலைத்தேனோ?

அதுவும் அவனாலே 

மீள்வேன் என்பதும் உறுதியே!

பேருந்தில் அடைந்த பெருமிதம் - கதை by Veena Shankar



 பேருந்தில் அடைந்த பெருமிதம்


ஒரு சில மாதங்களுக்கு முன்பு நானும் என் மகளும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறு வயதுடையவர் நடத்துநராகவும் ஓய்வு பெறும் வயதுடையவர் ஓட்டுநராகவும் பணியாற்றினர். பேருந்தில் பயணிகள் குறைவாகவே இருக்க முக்கிய பேருந்து நிலையத்தில் சொற்ப நேரம் நின்று பயணிகளை ஏற்றுவதில் மும்முரமாய் இருந்தார் ஓட்டுநர். 


நடத்துநர் சிறு வயதுக்காரர் என்பதால் அவரிடம் போதிய அனுபவம் இல்லை. மேலும் போகும் ஊர் பெயரை சொல்லி பயணியரை ஏற்றுமாறு ஓட்டுநர் நடத்துநரை பணிக்க, ஒப்புக்கு நடத்துநரும் கூவ, " நீ எல்லாம் எதுக்கு வேலைக்கு வர? பயணியரை ஏற்றும் திறமை கூட இல்லை. பேருந்தை விட்டு கீழே இறங்கி அழை" என்று கொஞ்சம் சத்தமாக சொன்னார் ஓட்டுநர்.  


மீண்டும் அவர் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடத்துநரும் அவ்வாறே செய்ய பயணிகள் யாரும் ஏறுவதாக இல்லை என்று பதிலளித்தார். அவனுடைய பேச்சில் கடுப்பாகி போன ஓட்டுநர், பேருந்து நிலையத்திற்குள் வரும் அனைத்து பேருந்துகளையும் இடை மறைத்து பயணியரை ஏற்ற முற்பட்டார். சில பயணிகள் ஏற, ஒருவழியாக பேருந்தை அவ்விடத்திலிருந்து நகர்த்தினார் ஓட்டுநர். மேலும் நடத்துநரை வசை பாடியே வர, ஒரு கட்டத்தில் அவரும் ஓட்டுனரின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்தார். கடுப்பாகிய நான், ஓட்டுநரிடம் நடத்துநருக்காக பரிந்து பேச நினைப்பதற்குள் பயணச்சீட்டு கேட்டு நடத்துநர் எங்கள் பக்கம் வர நான் அடங்கிப் போனேன்.  


பயணக் கட்டணம் தெரியாத நிலையில் ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் நான் நீட்ட, மீதம் எண்பத்தி நான்கு ரூபாய் சில்லறையை செழிக்க கொடுத்தார் நடத்துநர். அப்போது தான் ஓட்டுனரின் நிலையை நான் உணர்ந்தேன். ஆம், எனக்கு அந்த சில்லறையை கொடுக்காமல் என்னிடம் பதினாறு ரூபாய் சில்லறையை வசூலித்திருந்தால் மேலும் தொலை தூரம் செல்லும் பயணியருக்கு மீதி சில்லறையை கொடுப்பதில் சிரமம் இருக்காது என்பதை கூட அறியாமல் அவர் செய்த செயல் என்னை யோசிக்க வைத்தது.


  பயணச்சீட்டை கொடுத்தவுடன் தன் இருக்கையில் அமராமல் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார் நடத்துநர். ஓட்டுநர் மறுபடியும் அவரை அழைத்து பாந்தமாக பேசினார். "என்னப்பா! நான் திட்டினதுக்கு கோவிச்சிக்கிட்டியா? அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்போது தான் புதுசா வந்திருக்கிற. தொழில் பத்தி நீ தெரிஞ்சிக்கணும் இல்லையா? அதான் நான் உன்னிடம் கோபத்தை காட்டி விட்டேன். உனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னைக் கேள். நான் சொல்லித் தருகிறேன். நான் சொன்னதை மனதில் வைத்துக் கொள்ளாதே. உனக்கு நிறைய வருடங்கள் சர்வீஸ் இருக்கு. வா! உன் இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள். நான் சொல்ல சொல்ல என் அனுபவத்தை தெரிந்து கொள்" என்றார். மேலும் நடத்துநரும் "இல்லைங்க நான் உங்களை தவறாக நினைக்கவில்லை" என்றார். 


இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த என் மகளும் "அம்மா! அந்த டிரைவர் ரொம்ப நல்லவருமா. அவர் நடத்துனர திட்டிக்கொண்டே வந்ததால் நாமும் அவரை தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவர் பாருங்கள், கண்டக்டரை திட்டினாலும் கொஞ்ச நேரம் கழித்து அவரை சமாதானம் செய்கிறார்" என்று சொன்னதும் நான் என் வளர்ப்பில் வெற்றி வாகை சூடியதாய் நினைத்துக் கொண்டேன். 


ஆம். இப்போதைய பிள்ளைகள் எல்லாம் சிறிது கடிந்து கொண்டால் கூட சகஜ நிலைக்கு வருவது கிடையாது. ஆனால் தனக்கு பாடத்தை தான் கற்று தருகிறார் என்று நடத்துநர் நினைத்ததால் அங்கே விவாதங்கள் தடுக்கப்பட்டது. 


 இதில் யார் சிறந்தவர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஓட்டுநரை தவறாக நினைக்காத நடத்துநரா?இல்லை நடத்துநர் சொன்னதை தவறாக எடுக்கவில்லை என்று நினைத்த ஓட்டுநரா?

Tuesday, October 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இரைக்கான வழியை

இறை காட்டும் போது

பசியும் மறந்து

வயிறு நிரம்பும்

எதிலும் ஏற்றம் காண பிறரை புறந்தள்ளி ஏறி நிற்க தான் வேண்டும்

மிதிபடுவது ஏணியாய் இருக்க 

வேண்டியது இல்லை

எதுவும். ஆகுமே!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதமே!


 ஊருக்கு பெரியவன் யார்?

தன் வலியை மறந்து

அடுத்தவரின் பசிக்கு

உறுதுணையாய் இருப்பவனே

- Veena 

ஒன்றை ஒன்று சார்ந்த

 வாழ்க்கை பயணம்

இதில் குனிந்தவர் எல்லாம்

 கோழையும் இல்லை,

மேலே நிற்பவரும் பலசாலி

 இல்லை,

ஒன்றன் துணை மற்றொன்று

 வளர உதவினால் போதும்,

 தொந்தரவாக மாறினால்,

 மனஅமைதியை கெடுத்தால்

 விலகி நில்.

- Vidhya 

Wednesday, October 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அழகு எது?

அறிவு எது?

இரண்டும் ஒரு சேர

பார்வையும் அழகே!

புத்தகத்தின் மதிப்பு

அதில் அடங்கியுள்ள

பொக்கிஷத்திலே!

அதற்கு சிறப்பு கூட்ட 

படித்தவர் நடப்பதிலே!


 காணும் போது ஆனந்தம் மனதில்

அலைபேசியின் இடத்தை

புத்தகம் ஆக்கிரமித்தது


 படிப்பதாய் நடிப்பது கூட உண்டு

மாணவ பருவத்திலே

இருப்பினும்

நடிப்பு கைகொடுக்காது இங்கே

பாடம் விளங்கி அவன் உயர

படிப்பு என்பதும் வாசிப்பு மட்டுமல்ல

வாசிப்பதை மனதில்

அடைக்கலம் தருவதே படிப்பு

- Veena 

புத்தகமும் நானும்

புரியாத புதிராக எப்போது எப்படி

 இருப்போம் என்று எங்களுக்கே

 தெரியாது..படிப்பவருக்கு ஒரு

 உரு படைத்தவருக்கு ஒரு உரு

 மொத்தத்தில் மாற்றான்,ஆனால்

 வேற்றான் .

- Vidhya 

Tuesday, October 14, 2025

படமும் கருத்தும் by Veena Shankar




அதிகாரத்தின் உச்ச வரம்பு சொல்லாத இடத்தில் விரல்களின் நர்த்தன நடனம் எவரும் தன் காலுக்கடியில் என்ற இறுமாப்பு நாவினின்று ஒருமையில் விளிக்கும் வார்த்தையின் சங்கேதம் கரத்தில் என்று சிறக்கும் மனிதனின் உள்ளத்து மகிமை நாம் என்றும் சமமே என்ற ஒற்றுமை

Friday, October 10, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


இதயம் பற்றிக் கொண்டது 

மனங்களின் இணைப்பால்

திருமணத்தில் முடிவதும்

இணைந்து வாழ்வதும்

காதலர் கரங்களிலே


 இதயங்கள் இணைவது காதலாலே!

அந்த காதலும் கேளிக்கையாவது

கரங்களில் உள்ள பொருளாலே!

அந்த பொருளும் எதிர்மறையாவது

காதலரின் இதயத்தினிலே!

Thursday, October 9, 2025

சாயிஷா by Veena Shankar



 சாதனையில் அமைப்பு சாயிஷா


அன்பின் வெளிப்பாட்டால்

இணையும் தம்பதியின் காதலில் உருவாகும் கருவிற்கு

பிறந்ததும் கிடைப்பதே தாய்ப்பால் என்பதாம் 


அதனை

அருந்தி வளரும் சிசுவும்

காண்பது சுவர்க்கமே!


எதிர்ப்புசக்தி உருவான இடத்திலே

சில பெண்கள் மட்டும் 

தங்கள் சக்தியை இழந்து

தவிப்பதும் எதனாலே?


அன்றோ கண்டது மரணம் அதற்குரிய 

மருந்து தெரியாமலே!


காலத்தின் போக்கில் அறிவியலார் முயற்சியில்

தள்ளிபோடப்பட்டது மரணமும் இங்கே!! 


புனிதம் புதிரான போது

புதிதாய் புரட்சி நடக்க

உறுப்பு இழப்பு மட்டும் போதும்

நம் பெண்டிரின்

உயிர் நிலைக்கும் என்ற நம்பிக்கையே 

ஓர் வித்தானது இங்கே

சாயிஷா என்ற அமைப்பு

உருவாக்கம் கொள்ள


எண்ணற்ற நாடுகளில்

எண்ணற்ற மகளிரின்

இரு கரங்கள்

உறவாடி அழகாய்

வடிவமும் பெற்றதே! 


ஒருவருக்கொருவர் ஊக்கம் கொடுத்து ஒன்றிணைந்து உருப்பெற்றது வண்ணம் வண்ணமாய் 

அவரவர் உடலமைப்பு

கொண்ட வகையிலே! 


ஒற்றை பாகம் இழந்தவருக்கும் 

மறு பாகத்தை சமன் செய்து

அவர்களுக்குள்  

தாழ்வு மனப்பான்மை

இல்லாது போக 

அவர்களும் நிமிர்ந்து நிற்க

செய்யும் அமைப்பிற்கு

நன்றி நவிழ 

வார்த்தைகள் உண்டோ? இல.


விடையறியா வினாக்கள் நம் முன்னே!

இருந்தும் விடை நம் தன்னாலவர்களின் கரங்களிலே!

அதற்கு தேவைப்படும் பொருட்களுக்கு உதவும்

குணம் கொண்ட மனதிற்கும் வாழ்த்துக்கள் எந்நாளும் 


இருப்பதை மாற்றுவது எளிது

இல்லாததை உருவாக்குவதும்

எளிதானது தன்னலம் துறந்து

பிறர் நன்மை கருதி

கைகோர்த்த பெண் சிங்கங்களுக்கும் 

சாதனை படைக்கும் சாயிஷாவிற்கும் 


ஆள்வது எளிதல்ல ஆட்கள் சேர்ப்பதும் சிறப்பே என்றும் சேவை செய்விக்க கைமாறு இல்லையே

இந்த அமைப்பிற்கு

https://www.instagram.com/reel/DPgyRwgEkYH/?igsh=dnB3bmdraHBtc2E3

Saaisha India

இன்றைய மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை 


பெரிய நகரம் என்றாலும் சந்து பொந்துகளும் அங்கே உள்ளடக்கம். அப்படிப்பட்ட அந்த தெருவில் இருப்பதே பதினைந்து வீடுகள் தான். ஆனால் அங்கே தண்ணீர் பிடிக்கும் போது எங்கிருந்து தான் சண்டை ஆரம்பிக்குமோ என்று தெரியாது. யாராவது இருவருக்கு சண்டை முற்றிப் போய்விடும். பின் சுரத்து இறங்க, . எந்த சண்டையும் நடக்காதது போலே நிலைமை சகஜமாகி

 அமைதியாகிவிடும். இது தான் அந்த தெருவின் வழக்கம்.


 அன்றும் அப்படி தான் இருவர் சண்டை மூன்று நான்கு என அணி சேர கூச்சல் மட்டுமே விண்ணை பிளந்தது. இது காணாது என்று நாய்கள் கூட்டம் வேறு. ஏரியா பிரச்சனைக்காக கூச்சல் போட, ஆஹா! தெருவே இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல தெரிந்தது. " ச்சு! போங்க" . என ஒருவர் குரல் கொடுக்க, முதலில் நிசப்தமானது நாய்கள் கூட்டம் தான். தாமதமாக உணர்ந்தது மனிதக் கூட்டம். குரல் வந்த வழியே எல்லோரும் பார்க்க ஊரின் பிராதன ரௌடி ஒருவன் ஊர் நாட்டாண்மையாக மாறி இருந்தான். 


தேவைக்காக தேவையில்லாமல் சண்டை போடும் நிலை மாற வேண்டும்

Wednesday, October 8, 2025

இன்றைய மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை


" சில்லறை இருக்குள்ள, அதை கொடுக்காம முழு ஐநூறு ரூபாய் தாளை கொடுத்திருறீங்களே?" என்று சுமி கத்திக் கொண்டிருக்க , "யாருக்கும் இனாமாகவா கொடுத்தேன்? கோயிலுக்கு கேட்டாங்க அவரத்துலே எங்கிட்ட பணம் இல்ல . அது தான் உன் பர்சிலிருந்து எடுத்து கொடுத்தேன்" என ரவி சொல்லவும், "ஆமா ! பெருசா நன்கொடை கொடுத்திட்டாரு. அதை பாப்பா பர்சிலிருந்து சில்லறை எடுத்து கொடுத்தா என்னவாம். நான் கணக்கு போட்டு ஒவ்வொருத்தருக்கும் தனியா எடுத்து வைத்திருப்பேன், அதுவும் ஐநூறு ரூபாய் தாளாய்" என ஆவேசமாக கத்தினாள் சுமி.  


இது நடந்தது முன் தினம் இரவு. அடுத்த நாள் காலையில் ஐநூறு ரூபாய் தாள் செல்லாது என அரசு அறிவித்துள்ளதாக செய்தி வர, ரவியை ஓரக்கண்ணால் பார்த்து தலை கவிழ்ந்தாள் சுமி. "ஒரு ஐநூறு ரூபாய் தாளை மாற்றுவதை உனக்கு மிச்சம் பண்ணிவிட்டேன் என ரவி யதார்த்தமாய் சொன்னான். 


தான் செய்வது தவறல்ல, அடுத்தவர் தவறை உன்னிப்பாக கவனிக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

Friday, October 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நாவிலிருந்து பிறக்கும் வார்த்தைக்கு

தண்டனை பெறுவது

என்னவோ வாய்தான்

அது தன்னிலை மறந்து 

திறப்பதாலே

தண்டிக்கப்படுகிறது பிறரால்


 தனக்கு தானே பூட்டிக்கொள்ள 

தெரியாதா மனிதன்

அடுத்தவரின் வலியை உணர முடியாது


ஆதரவு இல்லாதவனுக்கு ஓர் 

அடைக்கலம்

ஆராய்ந்து பேசாத ஒருவனிடத்து

பூட்டு யாவும் சாவியின் இணையே

மனிதன் என்பதால்

நாவின் மொழியும் 

இலவச இணைப்பே என்றும்

- Veena 

ஏன் இந்த கொடுமை

அதன் இயல்பு பேசுவதே

இயல்பை முடக்கி எதை பெற

 முடியும்,வலியை தவிர .

- Vidhya 

Thursday, October 2, 2025

படித்தத்தில் பிடித்தது by Vidhya Nivash

 


'தம்மபதம்' என்பதற்கு பல பொருள் உண்டு. நீதி,விதிமுறை,நன்மை,உண்மை,கட்டுப்பாடு ,அறத்தின் வழியான பாதை .

எண்ணங்களின் பிறப்பிடம் மனம்,தூய்மையற்றது. 

மனமற்ற நிலையே தூய்மை, உண்மை.

மனத்தின் தேடுதலே பொய்கள், அவற்றை தேடி திரிகிறோம்,பழையவை மறைய புதிதாக அவை பல கண்டுபிடிக்கப்படுகிறது.உண்மையை அறிய, ஏற்க மறுக்க. 

உண்மையை கண்டுபிடிக்க முடியாது ,அது நிரந்தரமானது, அதை நாம் புறக்கணிக்க பொய்யை தேடுகிறோம். 

அதை ஏற்கும் நாளில் மனமற்ற,விழிப்புணர்பு பிறக்கும்.

மனம் பற்றி , 

முதல் உலகம் புறவுலகு விஞ்ஞானிகள் தேடுவது,இரண்டாவது மனவுலகம் ,மூன்றாவது அகவுலம்,உள்ளிருப்பு சுயம்.

வெறுப்பை வெறுப்பால் அழிக்க முடியாது, வெறுப்பு இறந்த ,எதிர்காலத்தின் பிள்ளை அதன் அடித்தளம் அன்பு,அது உண்மையானது அல்ல.அந்த அன்பிற்கு பிண்ணனி உண்டு அது வெறுப்பாக மாறும் ஒருநாள்.

உண்மையான அன்பு வெட்ட வெளியில் காரணமின்றி வரும் மகிழ்ச்சி,தூரத்தில் ஒலிக்கும் குயிலின் குரல் காதில் இனிப்பது போல்,அது தொடர்பற்றது.

மனத்தின் இருள் துன்பம் அதை மாற்ற முடியாது,அதன் அருகில் ஒளியை கொண்டு சென்று இன்பத்தை பெற முடியும்.

மனம் மறைய,ஆணவம் போக, விழிப்புணர்வு பிறக்க மௌனமும், சிந்தனையும் வழி நிற்க, ஒளியை அருகில் நிறுத்த தியானம் துணை புரியும்.

வாழ்வில் பிறப்பும், இறப்பும் நிரந்தரமானது.

தியானத்தின் மூலம் மனமற்ற நிலையை அடைய, இறப்பை அறிவதை உணர்த்தியது புத்தரின் தம்மபதம். 

இறப்பை நோக்கி போவது எதிர்காலத்தை பற்றிய பயம்.

தியானத்தின் வழி வாழ் என்றது ஓசோவின் தம்மபதம். 

வாழ்வு நோக்கி போவது நிகழ்காலம்,எந்த நேரத்திலும் உணரக்கூடியது.

வாழ்வு நோக்கிய உணர்வு விழிப்புணர்வை உண்டாக்கிவிடும்.

தொடரும்..


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...