மிதிவண்டி ஓட்டி பழகும் போது முட்டியில் அடிபட்டாலும் மிதிவண்டி ஒட்டவேண்டுமென்ற துணிச்சலும்
தந்தையில்லாமல் குழந்தைகளை காப்பாற்றும் தாய்க்கு பிறக்கும் துணிச்சலும்
பிள்ளைகள் தன்னை ஒதுக்கும் போது அவர்களை எதிர்க்கும் துணிச்சலும்
ஆற்றல் இல்லா மனிதர்களிடையே எதிர்பாராமல் தோன்றும் துணிச்சலும்
ஆகாயத்தை ஆராய நினைத்து விண்ணில் ஏவும் செயற்கைக்கோளை உருவாக்கும் அறிவியலாரின் துணிச்சலும் சிறப்பே
துணிச்சல்
நெடு நேர பயணம் என்பதால் எப்போதும் அவள் கூடவே வரும் சினேகாவின் கணவன் தன்னுடைய அலுவலக வேலை நிமித்தமாக இரு நாட்கள் முன்னதாகவே புது தில்லி புறப்பட்டு போய் விட்டான். தான் தனியாக பயணிப்பது என்பது சற்று சிரமம் என்பதை கணவனுக்கு உணர்த்த நினைத்த சினேகா, “நான் மட்டும் இரு நாட்கள் தனியாக பயணிக்க வேண்டும். நானும் உங்களோடு புது தில்லி வருகிறேன்” என கணவன் ஸ்ரீதரிடம் மன்றாடினாள். சரி என்று தலையை ஆட்டி வைத்தான். ஆனால் அவளுடைய துரதிருஷ்டம் ரயிலில் இடம் கிடைக்காததால் ஸ்ரீதரே வான்வழி பயணம் செல்ல நேர்ந்தது. வேறுவழியில்லாமல் சினேகாவும் ரயிலில் தனியே பயணிக்க ஆயத்தமானாள்.
புது தில்லி செல்லும் ரயில் நடைமேடையில் அவள் நடக்கும் போது இளைஞன் ஒருவன் அவளை இடித்து விட்டு செல்ல, கம்புக்கு சேலை கட்டி விட்டால் கூட அதை சீண்டும் குணம் கொண்ட நம் ஆண்களுக்கு அழகான பெண் என்றால் சும்மா விடுவார்களா? என அவனை முறைத்துப் பார்க்க, சிறிது தூரம் சென்ற பின்னும் அந்த இளைஞன் மறுபடியும் இவளை பார்த்து கண்ணடிக்க அவள் கண்களால் அவனை முறைக்க அதற்குள் அவள் பயணிக்கப் போகும் பெட்டியை வந்தடைய, தன் இருக்கையை சரிபார்த்து அமர்ந்தாள்.
தென் மாவட்டத்தின் சிறிய கிராமத்தை சேர்ந்த பெண் சினேகா என்பதால், அவளுக்கு நகரம் அவ்வளவு பரிச்சயமில்லை. இருந்தாலும் கிராமத்தை விட்டு தன் கணவனின் வேலைக்காக சிறிய நகரத்தில் குடியேறியதால் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே செல்ல தெரிந்தவள்.
கிராமத்தில் பெண்களுக்கும் பாம்பு பிடிப்பது கயிறு பிடிப்பது போல. அச்சம் இருக்காது. வெள்ளந்தியான மக்களின் அன்புக்கும் அணை போட முடியாது. ஆனால் நகரத்தில் நிலைமை அப்படி அல்லவே? ஸ்ரீதரின் தாய் மாமாவின் வீட்டு கல்யாணம் என்பதால் கட்டாயம் போக வேண்டியதால் தான் இந்த நிலைமை.
பெட்டி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெடுந்தொலைவு பயணம் என்பதாலும் பல மாநிலங்களை கடப்பதாலும் பல மொழிகள் பேசும் மக்களின் பேச்சும் காதில் சினேகாவிற்கு கேட்டது. குறிப்பாக வடக்கத்திய மொழிகள் தான் அதிகம் அவள் காதில் கேட்டது. அவர்கள் பேசுவதை விட அதிக சத்தத்துடன் எழுப்பும் சிரிப்பு அவளை நாட்டிலிருந்து அந்நியப்படுத்தி இருப்பதாக உணர்ந்தாள். தனியே செல்வதால் மொழி புரிந்தாலாவது அவர்களின் பேச்சை ரசித்திருக்க முடியும். நம்மூர் அரசியல்வாதிகளின் பெருந்தன்மையை எண்ணி பெருமூச்சு மட்டும் விட்டாள். பயணத்தின் இடையில் பரிசோதகர் தன் பணியைத் தொடங்கினார்.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நகரம் முடிந்து இயற்கை காட்சி தென்பட்டது. அதை ரசித்துக்கொண்டே வந்தாள் சினேகா. பயணத்தின் போது டாட்டா காட்டும் சிறு பிள்ளைகளுக்கு டாட்டா காட்டி அவர்களின் அன்பிற்கு விடை கொடுத்தாள். மதிய நேரம் ஆரம்பித்ததால் ஆடிய கூட்டங்கள் அடங்க, இவள் மெதுவாக தன் அலைபேசியை எடுத்து பார்க்கத் துவங்கினாள். பலமுறை ஸ்ரீதர் அழைத்திருந்தது சினேகாவிற்கு தெரிய வந்தது. உடனே அவனை தொடர்பு கொண்டாள். அரை மணி நேர உரையாடலுக்குப் பிறகு அலைபேசியில் இருக்கும் விளையாட்டினை விளையாட தொடங்கினாள். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் அன்னியப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. அதையும் தவிர்த்து விட்டாள். அன்று மதியத்திற்கு தான் கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை சாப்பிட்டு இரவுக்கு புளியோதரையை ஒதுக்கி, தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நித்திரைக்கு தயாரானாள்.
வீட்டில் அரை மணி நேரம் தூக்கம் போடும் சினேகா இன்று களைப்பில் அசந்து போய் விட்டாள். அவள் கண்விழித்து பார்க்கும் போது தன் எதிரே இருந்த கூட்டங்கள் காணாமல் போய் இருக்கைக்கு ஒன்றிரண்டாய் இருப்பதை பார்த்து சற்று அச்சம் கொண்டு, தன் கை கடிகாரத்தை பார்க்க மணி ஐந்து என்பதை உணர்ந்தாள். இப்படி தூங்கி விட்டோமே? என நினைத்தவாறே சட்டென்று கீழே இறங்கி வந்து அமர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்து மெதுவாக இயற்கை உபாதைகளை முடித்து, முகம் கழுவி வருவதற்குள் ஒரு பெரிய ரயில் நிலையம் வர, தேனீர் விற்கும் வியாபாரிகளின் சத்தம் ஒலிக்க, தனக்கு ஒரு தேநீரை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். அந்த ரயில் நிலையத்தில் மேலும் பலர் இறங்க, பெட்டியில் ஆங்காங்கே ஒரு சிலரே அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவளுக்கு லேசாக பயம் தொற்றிக் கொண்டது. இப்படி இருந்தால் இரவு பயணம் எப்படி இருக்கும்? என்பதை நினைத்து கொண்டிருக்கும் போதே ஓர் இளம் ஜோடி தங்கள் பெட்டியுடன் அவள் முன்னர் வந்து அமர்ந்தனர். சந்தோஷப் பெருமூச்சு விட்டவளாய் மீண்டும் தன் அலைபேசியை எடுத்து பார்க்க துவங்கினாள். தன் முன் இருப்பவர்களும் தன் மொழியை அறியாதவர்கள் என்பதால் தன் பயணத்தில் வெறுமையை உணர்ந்தாள்.
மீண்டும் அலைபேசியில் ஒரு சில மணித்துளிகள் மூழ்கி வந்தவள் தன் முன்னே இருந்த ஜோடியை நோட்டமிட்டாள். அவர்கள் உண்மையான கணவன் மனைவி இல்லை என்பதை மட்டும் உணர்ந்தாள். சிறிது நேரத்திலேயே அந்த ஜோடி தங்கள் அத்துமீறல்களை தொடங்கினர். அதைக் கண்டு முகம் சிவந்த சினேகா, தனக்கு தெரிந்த மொழிகள் அத்தனையிலும் அவர்களை வசைபாட பாடினாள். அடுத்தடுத்து இருந்த பயணிகள் இவள் சத்தத்தை கேட்டு எட்டிப் பார்த்தாலும் யாரும் எதையும் தட்டிக் கேட்கவில்லை. கூட்டம் இல்லாத இடத்தில் இப்படி பயணிப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு என்பதை உணராதவள் சினேகா. அவளை வெறித்துப் பார்த்த ஜோடி மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட, ஆத்திரமடைந்த சினேகா ஒரு கட்டத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கப் போவதாக செய்கையில் காட்டினாள். ஆனால் அதையும் கண்டு கொள்ளாமல் இருந்த அவர்களை, தக்க சமயத்தில் மாட்டி விட வேண்டும் என நினைத்து, தன் அலைபேசியில் ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்தாள். ஏதோ ஸ்ரீதர் சொல்லிக் கொடுத்ததை அரைகுறையாக உள்வாங்கிய சினேகாவிற்கு ஒரு யோசனை தோன்ற, சிறிது அமைதியானாள். நேரம் வர காத்திருந்தாள்.
அரை மணி நேரத்திற்கு பிறகு சட்டென்று எழுந்து அவள் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க, ஒரு சில நிமிடங்களில் ரயில் நிற்பதை உணர்ந்த அந்த ஜோடி செய்வதறியாது திகைக்க அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்வதற்குள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெட்டிக்குள் நுழைந்தனர் ரயில்வே துறையினர். அபாய சங்கிலியை இழுத்தது யார் என்று பயணியரை பார்த்து கேட்க தானே பிடித்து இழுத்ததாக சினேகா ஒப்புக்கொள்ள, அதற்கான காரணத்தையும் கூற, துறையினர் அவளிடமிருந்து அபராத தொகையை மட்டும் வசூலித்து, அந்த ஜோடியை காவல்துறையிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.
அச்சமயம் சினேகாவின் துணிச்சலையும் சமயோஜித செயலையும் பாராட்டினர். “பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் ஓடும் ரயில் ஆனாலும் இறங்க தயங்குவதில்லை. ஆனால் இன்று நினைத்தாலும் அவர்கள் இறங்கி இருக்க முடியாது. ஏனென்றால் நாம் இப்போது பாலத்தில் தான் பயணிக்கிறோம்” என்று துறையினரில் ஒருவர் சினேகாவிடம் சொல்ல, “அதனால் தான் சார் நான் காலம் வரும் வரையில் காத்திருந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தேன்” என்று பதில் சொன்னாள் சினேகா.
தன்னை இடித்தவனை முறைத்து மட்டும் பார்த்த அவள், எப்படி இப்படி துணிச்சல் தனக்கு வந்தது? என்று தன்னைத் தானே கேள்வி கேட்டு பெருமைப்பட்டுக் கொண்டாள்.
சொல்லி வருவதல்ல துணிச்சல்.
தக்க சமயத்தில் சொல்லாமல் நடப்பதே.
அறிவும் துணிச்சலும்
நகரின் முக்கிய ரயில் நிலையம் என்பதால் சற்று தயங்கியபடி உள்ளே நுழைந்தாள் சாருமதி. அவள் தனியாக ரயிலில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை என்பதால் தன் வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தாள். அவள் கணவன் சேகர் சொன்னபடியே தான் செல்ல வேண்டிய நடைமேடையை அறிய, அந்த டிஜிட்டல் பலகையின் பக்கத்தில் நின்று பார்த்தபடியே காத்திருக்க, அடுத்த சில நொடிகளில் அவள் ஏற வேண்டிய ரயிலின் நடைமேடை பற்றி அறிவிப்பு வர, தனக்குரிய மேடையை நோக்கி நடந்தாள்.
படிக்கட்டில் நிறைய கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்ததால், ரயில் புறப்பட நேரம் நிறைய இருப்பதால் மெதுவாக நடந்து சென்றாள். எட்டு மற்றும் ஒன்பது என குறிப்பிட்டு இருந்த இடத்தில் தன் கால்களை முன்னேற்றினாள். இறங்கி வரவும் அந்த நடை மேடையிலேயே தன்னுடைய ரயில் நிற்பதை பார்த்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள். சுற்று முற்றும் பார்க்க அவள் அமர்ந்திருந்த பெட்டியில் அவ்வளவாக கூட்டம் தென்படவில்லை. எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும் பெட்டியில் இன்று கூட்டமே இல்லையே? என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தாள். எப்போதும் தன் கணவன் ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை நடைமேடையில் நின்று கொண்டு நேரம் கடப்பதால் அதை விரும்பாத சாருமதி அவனை கண்டிப்பாள்.
இன்று என்னவோ வெறுமையை உணர்ந்த சாருமதி ரயில் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால், தான் இறங்கி நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர நினைத்து தன் கைபேசியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். தன் பெட்டிக்கு எதிராக இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள். மேலும் தான் ஏறிய ரயில் சரிதானே என்று மறுபடியும் தன் பயணச்சீட்டு கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தாள். எல்லாம் சரியாகத்தான் இருந்தது என்பதை உறுதி செய்து கொண்ட பின், அவள் பக்கத்தில் இருந்த நடைமேடை பலகையை பார்க்க, அது ஒன்பது என்று காண்பித்தது. சற்றே தன் புருவத்தை சுருக்கி பார்க்க, தான் ஏற வேண்டிய ரயில் இது தானே? என்று யோசித்தாள். இருந்தாலும் சரியானதுதான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள் சுமதி. ஆனால் ஒரு இனம்புரியா கலக்கம் அவள் மனதில் வர சரி ரயிலில் ஏறி அமரலாம் என நினைத்து ரயிலில் ஏற முயல, அந்த ரயில் புறப்படுவதற்கான அறிவிப்பும் வர, மேலும் இரு இளைஞர்கள் அவளை முந்திக் கொண்டு வர, தாமதிக்காமல் ஏறி அமர்ந்தாள்.
தன்னுடைய ரயில் புறப்பட ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால் தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள பக்கத்தில் இருந்த பெரியவரிடம், தான் போக வேண்டிய இடத்தைச் சொல்லி விசாரிக்க, அவள் போக வேண்டிய ரயில் இது அல்ல என்பதை அவர்கள் உணர்த்த, சட்டென்று தன் பையை கையிலெடுத்து கதவு பக்கம் ஓடி வருவதற்குள் ரயில் புறப்பட, சாருமதி இறங்கி ஓட நினைக்கையில் அவளை ஒருவர் இடைமறித்து நிற்க வைக்க, தான் தவறுதலாக இந்த ரயிலில் ஏறி விட்டதை அவனிடம் பதட்டத்தோடு சொல்லி மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படபடவென இறங்கினாள்.
பயணத்தின் போது தன் பையை தன் பக்கத்தில் வைத்து பயணிக்கும் தான் இன்று மட்டும் ஏன் அதை ரயிலில் வைத்து இறங்கினேன் என்ற குழப்பமும் மேலிட்டது சாருமதிக்கு. இறங்கியவள் தான் முன்னே உட்கார்ந்து இருந்த அதே இருக்கையில் அமர, தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். கணவனோடு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது ஒரு கையை தன் கணவன் மீதும் மறுகையில் வாகனத்தை பிடித்துக்கொண்டும் பயணிக்கும் தனக்கு எப்படி ஓடும் ரயிலிலிருந்து இறங்கும் துணிச்சல் வந்தது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அப்போது மீண்டும் அவள் நடைமேடையில் உள்ள எண்ணை பார்க்க, அது ஒன்பதாவது நடைமேடை அல்ல எட்டாவது என்பதை கூர்ந்து பார்த்த பின் தான் தெரிந்து கொண்டாள்.
இவ்வளவு காசு வாங்கும் ரயில்வே துறையினர் இந்த நடைமேடையின் எட்டாம் எண்ணில் உள்ள வடிவத்தை ஒன்பது போல இருப்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள் என்று இருவர் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வது இவள் காதில் விழாமல் இல்லை.
விதியை நொந்து கொண்டாலும் தனக்கு தக்க சமயத்தில் அறிவு வேலை செய்ததையும் தன் துணிச்சலையும் எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள்.
எல்லோரிடமும் துணிச்சல் இருக்கும் அது தக்க சமயத்தில் மட்டுமே வெளிப்படும்.
துணிச்சல் வேண்டும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடபே