Sunday, May 29, 2022

உரையாடல்

"உரையாடல்" by Veena Sankar

உரையாடல் எண்பது வயது மதிக்கத் தக்க செவி குறைபாடுடைய பெரியவர் ஒருவர் அலைபேசியில் பேசிய உரையாடல் பின்வருமாறு:



எதிர் முனையாளர்: ஹலோ! 
 பெரியவர்: ஹலோ! யார் வேணுங்க? 
 எதிர் முனையாளர்: சார்! அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன். 
 பெரியவர்: என்னப்பா! அப்பளமா? 
 எதிர் முனையாளர்: அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன். 
 பெரியவர்: என்ன வேணும்? 
 எதிர் முனையாளர்: நீங்கள் அப்போலோவில் ஆர்டர் செய்திருக்கிறீர்களா? பெரியவர்: ஆர்டரா? என்னது? 
 எதிர் முனையாளர்: நான் அப்போலோ மெடிக்கலேர்ந்து பேசுறேன். நீங்கள் மருந்து ஆர்டர் செய்தீர்களா? 
 பெரியவர்: நான் அப்பளம் ஏதும் ஆர்டர் செய்யவில்லை. 
 எதிர் முனையாளர்: சார்! அப்பளம் இல்லை. அப்போலோ மெடிக்கலருந்து பேசுறேன் நீங்கள் மருந்து ஆர்டர் செய்தீர்களா? 
 பெரியவர்: (சற்று கோபமாக) எத்தனை தடவை சொல்வது? நான் அப்பளம் ஏதும் ஆர்டர் செய்யவில்லை. 
 எதிர் முனையாளர்: சார் அப்பளம் இல்லை. நான் அப்போலோ மெடிக்க -லேர்ந்து பேசுறேன் நீங்கள் மருந்து செய்தீர்களா?
 (தற்போது தான் எதிர்முனையாளர் பேசியதை புரிந்து கொண்ட பெரியவர்) பெரியவர்: ஓ! சாரிப்பா! நீங்கள் அப்போலோ என்று சொன்னது எனக்கு அப்பளம் என்று தவறாக கேட்டு விட்டது. என்ன விஷயம்? 
 எதிர் முனையாளர்: நீங்கள் மருந்து ஆர்டர் சொன்னதில் ஒரு மருந்து கிடைக்கவில்லை. நாளை தான் கிடைக்கும். அதனால் நாளை அந்த மருந்தையும் சேர்த்து கொண்டு வரவா? இல்லை இன்றிருக்கும் மருந்தை மட்டும் கொண்டு வரவா? 
 பெரியவர்: எல்லா மருந்துகளையும் சேர்த்து நாளை கொண்டு வாருங்கள். எவ்வளவு பணம் தேவைப்படும்? 
 எதிர் முனையாளர்: சரி சார். ரூபாய் இரு நூறு ஆகும். நாளைக்கு டெலிவரி பண்ணும்போது பணத்தை வாங்கிக் கொள்கிறேன். 
 இப்படியாக சுவாரஸ்யமான உரையாடல் முடிவுக்கு வந்தது.

Friday, May 27, 2022

செக்கச் சிவந்த வானம் என்ன சொல்ல தூண்டுகிறது????

 





 Akhila : காலை வணக்கம் விண்மீன்களே!


செக்கச் சிவந்த வானம் என்ன சொல்ல தூண்டுகிறது???? 


சிந்துங்கள் உங்கள் சிந்தனையை இங்கே!! 

Pic credits: Kumaran


Veena Shankar: வானம் தங்கமாக மாறியது உன் தாக்கத்தால்


Jayanthi: ஒற்றை மரம் கண்டு வெட்க படுகிற வானம்.

இன்னும் இன்னும் மரங்களைக் கண்டால் ஆனந்தமாக வர்ணஜாலம் பொழியும் அல்வா.


 Rishi: உன் வருகை அறிந்து,

என்னை உனக்குள் தொலைத்தேன்...

இப்படிக்கு,

நிலா!!!


 Vidhya Nivash: செக்கச்சிவந்த வானத்தில் தவழ்ந்து வரும் பகலவனை கண்டு வெட்கத்தில் கண்மூடிக்கொள்ளும் மின் விளக்குகள்


 Veena Shankar: பந்து போல் இருந்தாலும் உன்னை கொண்டு விளையாட முடியாது

தங்கம் போல் மின்னினாலும் உன்னை சூட முடியாது

எட்டி பிடிக்காத உயரத்தில் நீ இருப்பதால் உன்னை ஆடையாய் உடுத்திக் கொள்ளவும் முடியாதே

 Veena Shankar: சிறு குழந்தை சாப்பிடும் லாலி பாப் போல சூரியனும் மின் விளக்கு கம்பமும்

 Veena Shankar: நீ எங்களை சுட்டெரித்தாலும் உன் வருகைக்காகவும் காத்திருக்கிறோம் நாங்கள், குடை கொண்டு காகைகளை விரட்டி எங்களின் வடகம் காய

Veena Shankar: கதிரவனின் புன்னகை களத்தை மாற்றுகிறது


Akhila



விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையில் ஓரு சிறு கீற்று தான் பிரிக்கிறது!!


இதற்கிடையில் மானுடம் மூலம் எத்தனை அமர்க்களம் பறக்கிறது!!


வந்தோம்… வாழ்ந்தோம்…சென்றோம் என்றிருந்தால் இயற்கை உன்னை ஆசீர்வதிக்கும்🙏🏻

இந்த வாரத்தலைப்பு "உப்புமா"


 


  

                                                     - Akhiladevi Kumaran 


 Vidhya Nivash: பெண்களின் உள்ளம் கவர்ந்த உப்புமா

ஆண்களின் வெறுப்பை சுமந்தவன்

Veena Shankar: வெண்மையில் பச்சையும் சிவப்பும் லயிக்க மூவர்ண தோற்றம்

Veena Shankar: அரிசி உப்மா, குருணை உப்மா, கேப்பை உப்மா, புளி உப்மா, உப்மா, ரவை உப்மா, வரகரிசி உப்மா, திணை யரிசி உப்மா என போதுமா என் வகைகள்

Veena Shankar: அவல் உப்புமா எப்போதும் அவள் (இன்) அவசர உப்புமா என்றானதே

Vedavalli Ramani: Velioor pogumpodhum avasara tiffin uppuma.engu poi vandhalum udane pannara easy tiffin uppuma.uppumavil palavagai undu

Vidhya Nivash: செய்வதற்கு எளிமையான,நேரத்திற்கு கைக்கொடுக்கும் பலரின் கிண்டல் கேலிக்கு உட்பட்டாலும்..

இதமா,பதமா திறமையும் பொறுமையும் இருந்தால் மட்டுமே உன்னை அடைய முடியும்..

அழகான வாழ்க்கை பாடம் சொல்லி தருவாய் இடம்,பொருள்,ஏவல் உனக்கு நன்கு பொருந்தும்.

யார் உனக்கு பெயர் சூட்டினாரோ, அந்த உப்பில் தான் பல கதைகள் இருக்கு உனக்கு..

Thursday, May 19, 2022

 இன்றைய தலைப்பு "உப்புமா" by Akhila Devi Kumaran

உப்பு(மா) " மினி கதை by Veena Sankar


 உப்பு(மா) 

                                            காலை  எட்டு  ஆனதை உணர்ந்த புவனா, அவசரமாக தன் படுக்கையை விட்டு எழுந்தாள்.  பரபரப்புடன்    எழுந்த  அவளுக்கு அன்று விடுமுறை என்பது பிறகு தான் நினைவு வந்தது.  எப்போதும் முதல் நாளே தன் கணவனிடம் மறுநாள் என்ன செய்யட்டும் என்று கேட்டு  செய்து வைக்கும் புவனா, முதல் நாள் இரவு திரைப்படத்திற்கு சென்றதால் அதை தன் கணவனிடம் கேட்க மறந்து விட்டாள். 


                                          புரண்டு புரண்டு படுத்த தன் கணவனிடம் மெதுவாக காலை என்ன டிபன் செய்யட்டும் என கேட்க, நீயே ஏதாவது செய் என்பது பதிலாக வர அப்படின்னா உப்புமா செய்யட்டுமா  என்று கேட்ட   புவனாவுக்கு, வேண்டாம் என சைகை செய்தான் அவள் கணவன். சரி! அப்படின்னா பூரி செய்கிறேன்  என்றாள். ஓகே என்று தன் கட்டை விரலை உயர்த்தி ஆமோதித்தான்.  குளித்து முடித்து ஒரு காபியை சாப்பிட்டு பூரிக்கு மாவு பிசைந்து,  அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசால் தயார் செய்தாள். புவனாவின் கணவன் குளித்துமுடித்து அறையை விட்டு வெளியே வர சமையலறையில் புவனா “உப்புமா! உப்புமா!” என்று சொல்வது கேட்டு, இவள் பூரி தானே  செய்கிறேன் என்று சொன்னாள்  இப்போது “உப்புமா! உப்புமா!” என்று சொல்கிறாளே என சமையல்கட்டு பக்கம் எட்டிப் பார்த்தான். 


                                       புவனாவும் பூரி தான் சுட்டுக் கொண்டிருந்தாள்.    எண்ணெய் சட்டியில் அவள் இட்ட பூரி  உப்பி வராமல் இருப்பதை கண்டு “உப்புமா! உப்புமா!” என்று  சொல்லிக்  கொண்டிருந்ததை பார்த்து  தனக்குள்ளே  பிழைத்தோம்டா சாமி என்று  சிரித்துக் கொண்டே டைனிங் டேபிளில்  அமர்ந்து சாப்பிட தயாரானான். 


 "சரீரத்தின் சங்கதி"  சிறுகதை by Veena Sankar




சரீரத்தின் சங்கதி 

                                            “அப்பா! இந்த அம்மாவை பாருங்கப்பா! எப்போது பார்த்தாலும் என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்” என்று தன் அப்பாவிடம் தன் அம்மாவை பற்றி புகார்  சொன்னாள் குழலி. “ஆமா! நீ செய்யறது மட்டும் சரியா இருக்கா? படித்து முடித்ததும் டேபில இருக்கிற புக்கை அப்படியே வைக்கிற; எழுந்திருக்கும்போது போர்வையும் மடிக்கிறது இல்ல; காபி சாப்பிட்ட டம்பளரை கழுவுவதில்ல” என குழலியின் குற்றச்சாட்டை  அடுக்கினாள் அம்மா  பூங்கோதை.   அப்பா குமார் குழலியின் முடியை தடவி அவளை சமாதானப்படுத்த, பூங்கோதை தன்  கணவனையும் திட்ட ஆரம்பித்தாள். பூங்கோதை, ஒரு வழியாக  கத்தி முடித்து தோட்டத்தின் பக்கம் சென்றாள். அவள் சென்றாலும் அவள் உதிர்த்த வார்த்தைகள் வண்டுகளின் ரீங்காரம்   போல ஒலித்தது குழலிக்கு.  


                                      “அப்பா! ஏன்ப்பா? என் அம்மா மட்டும் இப்படி  இருக்கிறாங்க? என்னோட   பிரண்ட்ஸ்களோட அம்மாவும் சரி, அப்பாவும் சரி. ரொம்ப ப்ரேன்ட்லியா  அவங்ககிட்ட பழகுறாங்க. ஆனா எனக்கு மட்டும் இது ஏன்ப்பா இப்படி நடக்குது?” என தன் துக்கத்தை அடக்க முடியாமல்  அழுகுரலில்  குழலி கேட்டாள். “நீ செய்வதும் அப்படித்தானே இருக்கும்மா.  அம்மா சொல்ற வேலையை ஒழுங்கா செய்திருந்தால், அம்மா உன்னை எதற்கு திட்ட போகிறாள்? நீ செய்வது தவறு தான்.” என்று தன் மகளை சமாதனம் செய்ய முயற்சிக்க, “ஆமா! நீ எப்பவுமே அம்மாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவே. இது தெரிஞ்சும் உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு!  என்னை…” என்று பட்டாசு  போல்  வெடித்தாள் குழலி. 


                                         “உங்கம்மா சொல்றதுல தப்பே இல்லை” என்று மறுபடியும் அப்பா குமார் சொல்ல, முகத்தை திருப்பி கொண்டு  நடந்தாள். தன் மகளின் நடையை ரசித்தவாறே நின்றான் குமார். பெண் பிள்ளைகளுக்கு அப்பா மீது பாசம் அதிகம் என்பதை  குமாரும் உணர்ந்திருந்தான். 


                                           நாட்கள் நகர்ந்தன.  குழலி படிக்கும் கல்லூரியில் துறை சார்ந்த கூட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இருபாலரும் படிக்கும் கல்லூரி என்றாலும் அந்த கூட்டம் முற்றிலும் பெண்களுக்கானது என்பதால்  மாணவியர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.  ஊரின் சிறப்பு பெண் மருத்துவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற, சிறப்பு விருந்தினர் பேச்சு அடுத்தது என அறிவிக்கப்பட்டது. அந்த பெண் மருத்துவரும் தன்னை யார் என்று  மாணவியரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு,  பெண்களின் தற்போதைய நிலை, சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், எப்படி அவர்கள் வாழ்க்கையை கடக்க வேண்டும்  என்பன பல விவரங்களை விளக்கினார். 


                                           அதில் ஒரு பகுதியாக மாணவியரின் அம்மாக்களின் வயது மற்றும் அவர்கள்   தங்கள் மகளை எப்படி நடத்துகிறார்கள் என கேட்டார். பல மாணவியரும் எழுந்து நின்று  தங்கள் அம்மாக்களின் நிலையை    சொல்ல, குழலியும் இது தான் சமயம், தன் அம்மாவை பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று   தன் அம்மாவை பற்றி சொல்ல நினைத்தாலும் ஏதோ ஒன்று  அவளை  தடுத்தது. மாணவியர், சில நேரங்களில்   தங்கள் அம்மா கோபமாகவும் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருப்பதாக சொன்னார்கள்.  மாணவியர் பேசி முடித்ததும் அதற்கான விடையை மருத்துவர் தெரிவித்தார். 


                                                  “பெண் பிள்ளைகள், குழந்தை பருவம் முதல்  முதியவள் ஆகும் வரை பல நிலைகளை கடந்து வரவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் ஏமாற்றத்தை எதிர் கொண்டு வாழ வேண்டியுள்ளது.  அம்மாக்களுக்கு சிறுவயதில்  தங்களுக்கு கிடைக்காத பாசம், அரவணைப்பு, ஏமாற்றம், தான் விரும்பிய பொருள்  கிடைக்கப் பெறாமை என பல   செயல்கள் இருந்திருக்கக் கூடும். பல பேர் தங்கள் மனதில் உள்ளதை பிறரிடம் பகிராமல் மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள்.  உங்களின் அம்மாக்களின் நிலையும் அப்படித்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு காரணம் அவர்களை   பாதித்திருக்கலாம்.  நீங்கள் அவர்களிடம் சற்று பொறுமையாக பேசிப்பாருங்கள். அவர்களுடைய அனுபவம் உங்களுக்கு பாடமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.”


                                              “ தன்னுடைய இயலாமையின் காரணமாக கூட நீங்கள் சொன்ன குணங்கள் உங்கள்  அம்மாவிடம் தென்படலாம். அவர்களுடைய நடவடிக்கைகளில் மாற்றம் உண்டு என்றால் அது கண்டிப்பாக உங்கள் அம்மா “மெனோபாஸ்” வயதில் உள்ளார் என்றே கொள்ளலாம்.” என்றார்.  உடனே ஒரு மாணவி தன் கையை உயர்த்தி தனக்கு ஒரு கேள்வி இருப்பதாக சொல்ல, அவளை வெகுவாக பாராட்டினார் சிறப்பு மருத்துவர். “இது தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம். நமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது நிவர்த்தி செய்து கொண்டு நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.


                                 மேலும் கையை உயர்த்திய  மாணவியிடம் கேள்வி கேட்குமாறு சைகை செய்ய, ” மேடம்! எங்க  அம்மாவை போல நானும் என்னுடைய மெனோபாஸ் சமயத்தில் அப்படித்தான் நடந்து  கொள்வேனோ?” என்று கேட்டாள்.  அதற்கு “அது உன் கையில் தான் உள்ளது. இப்போது உன் அம்மாவின் நடவடிக்கை உனக்கு தவறாக தோன்றலாம். மேலும் நீ அவர்களை போலவே எதிர்வாதம் செய்கிறாய் அல்லது அவருக்கு பிடிக்காத செயலை  செய்கிறாய் என்றால்,  உன் அம்மாவின் செயல் இன்னும் தீவிரமாகி விடும்.  நீ சற்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.  நீயும் உன் அம்மா போல் தொடர்வாய்    என்றால் பிற்காலத்தில்  உனக்கும் உன்   அம்மாவின்  நிலை ஏற்படலாம். ஆனால் அதற்கு   தான் தற்போது யோகா மையங்கள் பல உள்ளன. அங்கு சேர்ந்து முறையாக யோகாவை கற்றுக் கொள். உன் வாழ்க்கை நந்தவனம் ஆகும்.”  என்று   சொல்லி  அவள் கேள்விக்கு  விடையாக, அனைத்து மாணவியருக்கும் நீண்ட ஆலோசனைகளை வழங்கினார்.


                            இன்னொரு மனைவி கையை உயர்த்தி,  ” மேடம்! நான் காலையில் ஆறு மணிக்கு   வீட்டிலிருந்து கிளம்பி கம்ப்யூட்டர் கிளாஸ் போய்   ஒன்பது மணிக்குள் கல்லூரிக்கு வந்து, மீண்டும் கல்லூரி விட்டவுடன்  நான் பகுதி நேரமாக வேலை செய்கிறேன்  என்பதால்  நான் வீட்டிற்கு செல்ல இரவு மணி ஒன்பது ஆகிவிடும். ஆனால் என் அம்மா என்னை பார்த்து எங்கே ஊரை சுற்றிக் கொண்டு வருகிறாய்? என கேட்கும் பொழுது எனக்கு செத்துவிடலாம் போல் தோன்றும். அதற்கு நான் என்ன செய்வது? யோகாசனம்  செய்ய எனக்கு நேரம் கிடையாது. நான் என்ன செய்வது?” என தவித்தாள்.  இதைக் கேட்டதும் தன் சிரிப்பை உதிர்த்து, “தற்கொலை என்றும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு ஆகாது.  அது மேலும் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். தற்கொலை எண்ணத்தை விட்டு விடு. உன் அம்மாவின் மீது தப்பு இல்லை. இந்த நாகரீக உலகில்  பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராகவே இருக்கிறார்கள். சில நேரம் அவர்கள் பாதை மாறி விடுகிறார்கள்.  தகவல் தொடர்பு சாதனங்களால்  பெண்கள்  சீரழிக்கப்படுவதை நாம்  நடைமுறையாகவே  காண்கிறோம். தினமும் அரை மணி நேரம்  யோகாவிற்காக ஒதுக்கி விடு.  ஒவ்வொரு நாளும் கல்லூரியில் என்ன நடந்தது என்பதை உன் அம்மாவிடம் ஒளிவு மறைவு இல்லாமல் கூறிவிடு. அப்போது உன் அம்மாவிற்கு உன் மீது நம்பிக்கை வரும்.  அதுவும் இல்லாமல் நீ அந்த தாயின் நிலைக்கு வந்தால் தான் உன் தாயின் அருமையும் அவருடைய  தவிப்பும் உனக்கு புரியும்.” என்று சொல்லி அம்மாணவியை  சமாதானம்  செய்தார். 


                                                  இப்படி வரிசைகட்டி நின்ற கேள்விகள் அனைத்திற்கும்  தெளிவாகவும் அழகாகவும் மருத்துவர் பதில் சொன்னதை   கேட்டதும் குழலியின் கண்கள் குளமாயின.  இத்தனை நாள் அம்மாவை பற்றி தப்பாக நினைத்து விட்டோமே என்றும், இன்றைக்கு வீட்டுக்கு போனவுடன் கல்லூரியில் நடந்த எல்லா விஷயத்தையும் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஒப்பித்து விட வேண்டும் என்ற முடிவோடு  இருந்தாள் குழலி. அவ்வாறே எல்லா விஷயங்களையும்  அவள் தன் பெற்றோரிடம் சொல்ல,  குழலி பேசி முடித்ததும் குழலியை தனியே அழைத்து சென்ற குழலியின் அப்பா குமார்,  “அந்த மருத்துவர் சொன்னது உண்மைதான்.  அன்று  உன் பாட்டியும் நம்மோடு தான் இருந்தார். உன் பாட்டியும் இந்த வயதில் இப்படித்தான் நடந்து கொண்டார். உன் அம்மாவிற்கு, கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. தகப்பனாரும் இல்லை.  அந்த ஏக்கமே தற்போது கோபமாக மாறிவிட்டது.  உன் அம்மா தற்போது மெனோபாஸ் நிலையில்  இருக்கிறாள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் நானும் உன் அம்மா எது சொன்னாலும் அவளுக்கு எதிராக வாதம் செய்வது கிடையாது. உனக்கு அது புரிய சில காலம் ஆகும்.”  என  சொன்னான் குமார். இதைக் கேட்டதும்  தன் அப்பா பெண்களின் நிலையை புரிந்து கொண்டு, தன் அம்மாவிற்கு ஜால்ரா அடிப்பது சரிதானே என நினைக்க தோன்றியது குழலிக்கு. 


                                              இப்படியாக தினமும் தன் கல்லூரி முடிந்து வந்தவுடன் எல்லாவற்றையும் பெற்றோரிடம்   நடந்தவற்றை சொல்வாள் குழலி.  ஒருநாள்  குழலி இப்படி ஒப்பித்து செல்ல, குமார்  தன் மனைவியிடம், “நாளைக்கு  நம்ம குழலி காலேஜ் விட்டு வரும்போது இந்த பஞ்சை  உன்  காதில்  வைத்து அடைத்துக் கொள்.  அவள் பேசி முடித்தவுடன் எடுத்து விடு.” என்று  ஆலோசனை சொல்ல, அதை தற்செயலாக  குழலி  கேட்க,  தன் அப்பாவை அவள் முறைக்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். “சும்மா சொன்னேன்” என்று அப்பா குமார்  அசடு வழிந்து குழலியை தேற்ற ஒரு வழியாக  சமாதானம்  ஆனாள் குழலி.


வெளிப்படையான பேச்சு,  செல்வோரின் மனத்தை வெற்றிடம் ஆக்கும்.   மேலும் வெண்மையாக்கும்.  கேட்பவரின் மனதையும்  தூய்மை   ஆக்கும்.


  "ஜோசியம்" சிறுகதை by Veena Sankar



ஜோசியம்

                                                ஆன்மீகமும் ஜோசியமும் ஒன்றுக்கொன்று இணை என்பதால் நன்கு படித்த    பாலாஜியும்  தன் அம்மாவை போலவே இரண்டிலும் நாட்டமும் நம்பிக்கையும்  வைத்திருந்தான். சமீபத்தில் அவன் அம்மாவின் இறப்பிற்குப் பின்   பாலாஜிக்கு இன்னும் ஜோசியத்தில் நம்பிக்கை கூடி இருந்தது என்றே சொல்லலாம்.  சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த அவனுக்கு, எதிர்காலத்தின் மீது பயம் மனதில் ஆட்கொண்டதால் பிற்காலத்தில் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். தனி மரமாக அவன் இருந்தாலும் அவனுடைய நண்பர்கள் பக்கபலமாக இருந்தனர்.  பல தொழில்களுக்கும் சொத்துக்களுக்கும் அதிபதியான   அவன்,  தனக்கு துணையாக போகும் தன் வருங்கால மனைவியை பற்றி மனதில் கோட்டை கட்டி கொண்டு இருந்தான். 


                                  பல பெண்களின் ஜாதகங்கள் தூரத்து சொந்தங்களில் மூலம் வர, அதை அலசி  ஆராய்ந்து  தான் திருமணம் செய்து   கொள்ள வேண்டும் என்ற  முடிவோடு இருந்தான். தனக்குப் பிடித்த பெண்களின் ஜாதகங்களை மட்டுமல்லாது  அனைத்தையும்   ஜோசியரிடம் கொண்டு சென்று பொருத்தம் பார்க்க நினைத்தான். அழகை ஆராதிக்க தெரியாதவனாய்,    தன்னை விட அழகில் குறைந்த பெண்ணும் தனக்கு நல்ல துணைவியாக வர வாய்ப்புள்ளதாக  எண்ணினான். தன் அம்மா  செல்லும் ஜோசியரிடம் சென்று அவன் ஜாதகத்தையும் சேர்த்து பொருத்தம் பார்க்க சொல்ல,    அவர் சொல்வதை எல்லாம் ஒரு தாளில் குறித்துக் கொண்டு வந்தான் பாலாஜி.  ஆனால்  எந்த பெண்ணின் ஜாதகமும் பாலாஜியின் ஜாதகத்தோடு ஒத்துப் போகவில்லை என ஜோசியர் சொன்னார். 


                                  எல்லாம் சொல்லி முடித்த பின்,  அவன் அம்மா எங்கே என்று அந்த ஜோசியர் கேட்க, அம்மா இறந்து விட்டதாக கூறினான்.   சிறிது வருத்தம் அடைந்த ஜோசியர், முன்னொரு நாள் பாலாஜியின் அம்மாவிடம்  தான் ஏற்கனவே  அவளுடைய ஆயுள் காலத்தை பற்றி நிறைய சொன்னதாகக் கூறினார்.  ஆனால் அதற்கான பரிகாரங்களை அவள் அம்மா செய்தாரா? என ஜோசியர் பாலாஜியிடம் கேட்க,  தனக்கு அதைப் பற்றி  ஒன்றும் தெரியாது என்று சொன்னான்.  


                                      மேலும் ஜோசியர் தன் அம்மாவிடம் என்ன சொன்னார் என்பதை ஆவலுடன் பாலாஜி கேட்க,  முடிந்தது முடிந்து போய்விட்டது என்று அவர் சொல்ல மறுத்ததால் அவருக்கு நன்றியையும் தட்சணையும் தந்து அவரிடமிருந்து விடை பெற்றான். ஜோசியர்  தன் தாயை பற்றி கேட்டது,   அவன் மனதில்   குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தான் கொண்டு சென்ற பெண்களின் ஜாதகத்தில்  ஒன்று கூட   தனக்கு பொருத்தமாக அமையவில்லையே என வருந்தினான். காலை விடிந்ததும் பார்த்துகொள்ளலாம் என நினைத்து இரவு படுத்தான். இந்த ஜோசியர் சொன்னது  தவறாக இருக்கக்கூடும், வேறு ஒரு ஜோசியரிடம் போகலாம் என்ற சிந்தனையோடு மறுபடியும் வேறு ஒருவரை சந்திக்க சென்றான். 


                                           ஆனால் முன்பு சொன்ன ஜோசியர் போலவே அடுத்தவரும் சொல்ல,  சிறிது அதிர்ந்து போனான் பாலாஜி.  ஏதேனும் பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்றான். தன் எதிர்கால வாழ்க்கை, வசதி,  வாய்ப்புகளை பற்றி விசாரித்தான். அதற்கு அவர் புன் சிரிப்பை பதிலாகத் தந்தார்.  அதை  சற்றும் எதிர்பாராத பாலாஜி, மீண்டும் மீண்டும்  அவரை கேள்வி கேட்க ஆவல் கொண்டான்.  உண்மையை சொன்னால் ஜோசியருக்கு தான் நிறைய பணம் தருவதாக  பாலாஜி   சொல்ல,   அவர்  மனதில் கோபம்    கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் புன்முறுவல் பூத்து,  தனக்கு பணம் பெரிதல்ல என்று கூறி, உண்மையை சொல்ல மறுத்து விட்டார்.  


                                        முடிவு தெரியாமல்  பாலாஜி விழிக்க,  “ வாழ்க்கை   என்பது வாழ்வதற்கு. ஜோசியம் என்பது அவரவர் கஷ்டத்திற்காக கேட்டு  தெரிந்து கொண்டு, தங்களால் முடிந்த பரிகாரத்தை செய்வதும்,  கோயிலுக்கு  சென்று வழிபாடு   செய்வதுமே ஆகும். பல பேர் ஜோசியம்  பார்த்து தங்கள் முயற்சியை கைவிட்டு  விடுகிறார்கள்.  அதிர்ஷ்டம் இல்லை என்று நொந்து கொள்வதாலும்  ஜோசியம்,  என்றும் எவருக்கும் ஒரு நிரந்தர  தீர்வாக அமையாது.  கிரகங்களின் மாறுபாட்டால் ஒரு சில நேரங்களில் நமக்கு துன்பங்கள் வரலாம். மேலும் நாம் நம் எதிர்காலத்தை முழுவதும் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்? கஷ்டம் வரும்போது  பழைய   இனிமையான  நினைவுகளோடு   நம் வாழ்க்கையை நடத்த ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும்  தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும்.  அடுத்தவருக்கு ஜோசியம் பார்க்கும் எனக்கு, என் எதிர்காலத்தை பற்றி தெரியாது. நான்  ஜோசியன் ஆவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.  எல்லாம் ஆண்டவன் செயல்.”  என்று சொன்னார்.  


                                               வேறு ஒன்றும் பேச முடியாமல் அவரிடமிருந்து விடை பெற்ற  பாலாஜியை, இன்னும்   சிறிது நாட்களில் இவன் ஆயுள் காலம் முடியப் போகிறது.  திருமணம்  செய்து கொண்டதும்  அவன் வாழ்வு முடியும் என்பதே விதி.   அதனால் பாலாஜி திருமணம் செய்து கொள்ளாது இருப்பதே சிறந்தது  என்றும்,  இருப்பினும் பிறந்த நேரம் சரியாக  கணிக்கப்பட்டிருக்கும் இருக்கும் பட்சத்தில் எதுவும் நடக்கலாம்   என்பதை  ஜோசியர் தெரிந்து வைத்திருந்தாலும் அதை தன் மனதில் வைத்துக் கொண்டார்.


                              எதிர்காலம் எதிர்பார்ப்பு கொண்டது. நிகழ்காலம் அனுபவிக்க கூடியது. ஜோசியமும் மனமகிழ்ச்சிக்காகவே அன்றி வாழ்க்கை  முழுவதுக்குமானதல்ல.


 "அலை(ழை) பேசி " சிறுகதை by Veena Sankar




அலை(ழை) பேசி

                                                  ஒரு     பிரதான சாலையில் அலைபேசி கடையை நடத்தி வரும் ஆனந்திற்கு,  அலைபேசியை பயன்படுத்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம்  இருந்தது. அதனால் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு,  சார்ஜ் ஏற்றும் போது அலைபேசியில் பேசக்கூடாது; அதிக நேரம் சார்ஜ் போட்டு இருக்க கூடாது; படுக்கும் பொழுது பக்கத்தில் அலைபேசியை வைக்கக்கூடாது; இரவில் நீண்ட நேரம் அலைபேசியை பார்க்கக்கூடாது என்ற பல தகவல்களை அவர்களுக்கு  மொழிவழியாக தெரியப்படுத்துவான். யாராவது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது அலைபேசியை பயன்படுத்தினால் ஆனந்திற்கு கோபம் வரும். அவர்களை கண்டிப்பான்.  தான் சொல்லி, தன் பேச்சை  கேட்பவர்கள்,  சிலர் பின்பற்றினாலும் நல்லது  தானே   என்பது தான் அவன் நினைப்பு. சிறிது காலத்திற்குப் பிறகு விழிப்புணர்வு கூட்டம்   ஒன்றை  கூட்டவும்  நினைத்திருந்தான்.


                                                   ஒரு நாள் இப்படித்தான் ஆனந்த்  தன் நண்பனுடன் ஒரு திருமண விழாவிற்கு  தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவர்கள் சென்ற  வாகனத்தை முந்திக்கொண்டு வேகமாக சென்றது இன்னொரு இருசக்கர வாகனம். அதுவும் அதில் பயணம் செய்தவன் ஏதோ வலிப்பு நோய் வந்தவன் போல தன் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து கொண்டு, தன் காதில் அலைபேசியை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே போய்க்  கொண்டிருந்தான். இதை பார்த்ததும்  ஆனந்திற்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.  அந்த இளைஞனுக்கு அறிவுரை வழங்க நினைத்து அந்த  வண்டியை  பின் தொடர்ந்து சென்றான். ஆனால்  அந்த  இளைஞன் மிக வேகமாக  போனதால்  ஆனந்திற்கு அவனை பின்  தொடர்வதில்   சிரமம்  ஏற்பட்டது.   அந்நேரம் பார்த்து அந்த இளைஞன், ஒரு சிக்னலில் மாட்டிக் கொண்டான். மறுபடியும் சிக்னல் மாறுவதற்குள் அவனை  பிடிக்க எண்ணி சிறிது வேகமாக தன் வண்டியை இயக்கி,  தன்னை முந்தி சென்ற  இளைஞனின் வண்டிக்கு பக்கத்தில்  தன்  வண்டியை  நிறுத்தினான். 


                                        இளைஞனை பார்த்து, “தலைக்கவசம் போடாமல் நீங்கள் பயணிப்பது தவறு. அதை விட அலைபேசியில் பேசிக் கொண்டே போவது என்பது மிகப்பெரிய தவறு. இப்படித்தான் என் நண்பன் ஒருவன் திருமணமான புதிதில் அலைபேசியில் தன்  புது மனைவியுடன் பேசிக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தை தான் வேகமாக  இயக்குகிறோம் என்று கூட தெரியாமல்  வேகமாக சென்று, ஒரு கண்டெய்னர் லாரியில் மோதி, விபத்துக்குள்ளாகி இறந்தே விட்டான். அதனால்  தற்போது அவன் மனைவி கணவனை இழந்து தவிக்கிறாள். அதனால் தயவு செய்து நீங்கள் அலைபேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம்” என சொன்னான்.   அதைக் கேட்டதும் முந்தி சென்ற இளைஞனுக்கு முகம் மாறியது. தனக்கும் போன மாதம் தான் திருமணம் ஆனதாகவும்   தன் மனைவியிடம் தான்,   தான் பேசிக் கொண்டு சென்றதாகவும் இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று சொல்லி,  ஆனந்திற்கு நன்றி சொல்லியது மட்டுமல்லாமல்  தனது வண்டியை  ஓரமாக நிறுத்தி  அலைபேசியில்  பேச்சை தொடர்ந்தான். 


                                                  இன்னொரு நாள் ஆனந்த் தன் அதே நண்பனுடன் பயணிக்க, இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருத்தி, தன் சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகி கொள்ளாமல் காற்றில் பறக்க விட,  அது  அருகே வந்து கொண்டிருந்த  இன்னொரு  இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் முகத்தில் பட, அவர் சற்று நிலைகுலைந்து போனார். தான் போகும் அவசரத்தில் அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்ல முடியாமல் சென்றுவிட்டார்.  அந்தப் பெண்ணும்  எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல், மேலும் அந்தப் பெண் தன் பயணத்தை தொடர, அதை கவனித்த ஆனந்திற்கு மறுபடியும் கோபம் தலைக்கு ஏறியது. 


                                     தான் வர வேண்டிய இடம் வந்ததும், அப்பெண் சாலையை விட்டு ஒதுங்க, ஆனந்தும் அவள் பக்கத்தில் வண்டியை நிறுத்தி, பயணிக்கும் பொழுது அவளுடைய புடவையை நன்றாக சொருகிக் கொள்ளும் படி சொல்ல, யார் இவன்? எனக்கு புத்தி சொல்ல! என்று அவள் கேட்பது போல் உள்ளதாக நினைத்து,  “ என்னை தவறாக நினைக்காதீர்கள். என் தங்கையும் இப்படித்தான்  தன் சுடிதாரின்   மேலாடையை  பறக்க விட்ட படியே பயணிக்க,   மேலாடை  ஒரு  லாரியின் சக்கரத்தில்  சிக்கி, அந்த   லாரி என்   தங்கையை  சிறிது தூரம் வரை இழுத்துச் சென்று விட்டது. அதனால் அவள் தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டாள்.” என்று வருத்தத்துடன்  ஆனந்த் சொன்னதும், தன் தங்கையை போலிருக்கும்  அப்பெண்ணும்,  தன் தங்கை செய்த அதே தவறை  செய்யக் கூடாது  என  எண்ணி சொன்னதாக  ஆனந்த் சொல்லி கைகூப்பி வணங்க,  அந்தப்  பெண்ணும் தன்னை யாரோ  முகத்தில் அறைந்தது போல்  உணர்ந்தாள்.  தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டாள்.  ஆனந்தின் தவிப்பை உணர்ந்தவளாய் அவனுக்கு  நன்றி  சொல்லி  விடை  பெற்றாள்.


                                              இப்படி   நடப்பதை எல்லாம் பார்த்துக்  கொண்டிருந்த ஆனந்தின் நண்பன், திகைத்தான்.  “ஏண்டா!  ஆனந்த் அன்னிக்கி என்னமோ உன்  நண்பன் விபத்தில் இறந்து போய்  விட்டான் என்று சொன்னாய். இன்னைக்கு இந்தப்  பெண்ணிடம்,  விபத்தில் என் தங்கச்சிக்கு உயிர் போயிருச்சு என்று  கலர்  கலரா  ரீல்  விடற?”  என்று  கேட்க, “ நல்லது நடக்கும் என்று தெரிந்தால் பொய் சொல்வதில் தவறு இல்லை. யாரோ எழுதியதை பார்த்து, படித்து திருந்தாத நம் மக்கள், இப்படி தனிப்பட்ட முறையில் நமக்கு பாதிப்பு வந்ததாக சொன்னால் அது அவர்களின் மனதில் ஒரு வித மாற்றத்தை உருவாக்கும். மனோதத்துவம் படித்த எனக்கு அது தெரியும் என்பதால் அவர்களை அந்த வழியில் சென்று மடக்கினேன். இனி இந்த  பெண்ணும்  அந்த ஆணும் மறுபடியும் அந்த  தவறான செயலை செய்ய மாட்டார்கள்.” என்று பதிலளிக்க, “அப்பா! நீ பெரிய  டாக்டராக  போயிருந்தால் இந்த  ஊரையே மாற்றி  இருப்பாய்.” என்று சொல்லி தன் நண்பனின் அணுகு முறைக்கு மறக்காமல் வாழ்த்து  சொன்னான்.


ஆலோசனை  சொல்வதும் சிறந்த  அணுகு முறையே.  அது கேட்பவரின் உள்ளத்தை  மெருகேற்றி,  அவர்களின்  செயலை  மாற்றத்  தக்கது .


Monday, May 16, 2022

அம்மான்னா சும்மாவா by Geetha Krishnan

   அம்மான்னா சும்மாவா


"வருத்தப்படாதீங்க வேதவல்லி அம்மா, உங்களுக்கு கண்டிப்பா வாரிசு வேலை கிடைக்கும்", என் அம்மாவிடம் என் அப்பாவுடைய அலுவலக நண்பர் கூறினார்.

அப்பா இதய நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அம்மா மனதில் பல போராட்டங்ககள் . "ஏன் இரக்கமே இல்லாம இப்படி பேசறாங்க. நாம எப்படி மூன்று குழந்தைகளையும் கரை சேர்ப்போம்." முதல் பையன் அப்போது தான் Engineering சேர்ந்திருந்தான். இரண்டாவது பையன் பதினொன்னாவது வகுப்பு , மூன்றாவது பெண் எட்டாவது.

அம்மா பத்து வயதில் தந்தையை இழந்து, வறுமையில் வாழ்ந்து, பத்தாவதுக்கு மேல் படிக்காமல், தினக்கூலி வேலைக்குப் போய் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தம். தம்பி தங்கையை படிக்க வைத்து அவர்களுக்கு கணவரின் துணையுடன் கல்யாணமும் செய்து வைத்தார்.

உடன்பிறந்தவர்கள் என்றாலே பிரச்னை தான் வரும் என திருடனைப் பார்த்து ஒளிவதுபோல் ஒதுங்கி இல்லாமல் அவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்த அம்மா அப்பாவிடமிருந்து பல நல்ல குணங்கள் கற்றிருக்கிறேன்.

கணவருக்கு பொருளாதார உதவி செய்ய parttime வேலை பார்த்தார். அந்த காலத்தில் machine போல் machine இல்லாமல் எல்லா வேலையும் கையில் செய்தார். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க நடந்து போய் 15 நிமிஷம் வரிசையில் நின்றால் தான் கிடைக்கும், நின்று தண்ணீர் பிடித்து தொட்டி நிரப்பி, வேலை எல்லாம் முடித்து 25 நிமிடம் நடந்து bustop சென்று பஸ் பிடித்து பகுதி நேர வேலை செய்து வீடு வந்து திரும்ப வேலை செய்வார். வரும்போதே யானை போல ஞாபகம் வைத்து வீட்டுக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வருவார்.

சரி கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை நிம்மதியா இருந்தா போதும் என்று இருந்த சமயத்தில் சுனாமி போல் வந்தது அப்பா இனி பிழைக்க மாட்டார் என்ற செய்தி.

கடவுள் போல் குடும்ப டாக்டர் வந்து வேறு ஒரு ஹாஸ்பிடல் போக சொன்னதால் அப்பா உயிர் பிழைத்தார், அதற்கு நண்பர்கள், மாமா, சித்தி, அத்தை குடும்பம் ஆறுதலாக இருந்தார்கள்.

அப்பா இதய நோயால் கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது, செய்தால் மூச்சு மூச்சுத்திணறும். ஒரு குழந்தை போல் இருக்கணும் என்றதால், வீட்டு வேலை சேர்த்து வெளி வேலைகள் எல்லாம் அம்மாவே பார்த்துக்கொண்டார்.

மிக பொறுமையானவர். சிக்கனமானவரும் கூட. மாந்தோப்பு கிளியேயில் வரும் சுருளி ராஜன் போல் கஞ்சம் இல்லை. அவர் சிக்கனமாக இருந்ததால் தான் எங்கள் எல்லாருக்கும் நல்ல படிப்பு தந்து நல்ல கௌரவமாக கல்யாணம் செய்து கொடுக்கவும் முடிந்தது. சம்பந்திகளுடன் ஒரு சகோதரி போல் பழகுவார். பையனுடைய அம்மா என்ற ஒரு பந்தாவும் இருந்தது இல்லை.

நாங்கள் மூவரும் நல்லா இருப்பதை பார்த்து அப்பா, அம்மாவின் கண் முன் கண் மூடினார்.

22 வருடங்களாக அம்மா கணவர் இல்லாமல் எங்கள் ஒவ்வொரு வீட்டில் வந்து அட்ஜஸ்ட் செய்து இருப்பார். அணில் மாதிரி ஏதாவது குட்டி குட்டி வேலை செய்வார். இது வரை அவரோட புடவையை என்னை மடிக்க விட்டதில்லை, ஓடி வந்து "எனக்கு முடியாமல் போற காலத்தில் நீங்கள் என் வேலையை பண்ணுங்கள் அதுவரை நான் என் வேலையை பண்ணுவேன் இல்லைனா உடம்பு துரு பிடிச்சுடும்" என்று சொல்லுவார். தோசையோ, சப்பாத்தியோ பண்ணும்போது ஒன்னு குடுத்து இன்னொன்னு தருவதற்குள் பின்னாடி வந்து நிற்பார், நாங்கள் நடக்க வேண்டாம் என்பார். 78 வயதிலும் நாங்கள் ஏதாவது தூக்கிக் கொண்டு வந்தால் கையில் இருந்து பிடுங்கிக்கொள்வார். சின்னவங்க தானே தூக்கட்டுமே என இருந்ததே இல்லை. எந்த இடத்திலும் புது இடம் என்று உட்கார மாட்டார், கண் பார்த்து கை செய்யும் பழக்கம் உடையவர்.

பொறுமை போய் ஏதாவது யாரிடமாவது சொல்லி விட்டாலும், என்னிடம் வந்து நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்கணும் தப்பு பண்ணிட்டேன் என்பார்.

"ஏன் அம்மா, அப்பா உங்களுக்கு ஒரு குட்டி வீடும் பென்ஷனும் விட்டு போயிருக்கார், நீங்க தனியா இருக்கலாமேன்னு" என்று அப்பா போன சில நாட்களில் கேட்டேன். அதுக்கு உடனே "உடம்பு முடியாதப்போ போய் குழந்தைகள் தான் பார்த்துக்கணும்னு இருப்பதைவிட, முடியும்போதே அவர்களுக்கு சின்ன உதவி செய்து இருக்கலாமே, அதில் என்ன தப்பு. மேலும், எந்த இடத்திலேயும் எந்த வேலையும் இல்லை” என்று சொல்லுவார்.

அதே போல் நான் இப்போ சென்னையில் இருக்க வேண்டி வந்தபோது தானும் வருவேன் என்று வந்து, சென்னை வெய்யில் ஒத்துக்காது அப்படியும் எனக்கு உதவி செய்து இருந்தார்.

எங்களுடன் வெளிநாட்டில் இருக்கும்போது மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்ற வகையில், தன்னை மாற்றிக்கொண்டும் அட்ஜஸ்ட் செய்தும் இருந்து வருகிறார்கள். pizza , burger , pasta , cereal எது தந்தாலும் "நல்லா இருக்கு எனக்கு பிடிக்கும்"னு சாப்பிடுவாங்க. நான் கிண்டலுக்கு சொல்லுவேன், "ஒரு நாள் chicken கூட பிடிக்கும்னு சாப்பிடப்போறீங்கன்னு. (நாங்க அசைவம் சாப்பிட மாட்டோம்).

வேலைக்கு போகும் பேரன் பேத்திகளுக்கு கூட அவர்கள்தான் பேசணும் என்று இல்லாமல் இவர்களே எல்லாருக்கும் மெசேஜ் பண்ணி "எப்படி இருக்கீங்கன்னு' கேட்பாங்க.

Robot அம்மா என்று நான் கூப்பிடுவேன். ஒரு routine தினமும் அவங்களுக்கு இருக்கு, யோகா பண்ணுவது, சுலோகம் சொல்லுவது, சாயங்காலம் வாக், பாகவதம் பகவத் கீதை எழுதுவது, மூன்று இல்ல நான்கு serial பார்ப்பது, சாயங்காலம் திரும்ப 20 நிமிடம் exercise, sudoku போடுவது எங்கு இருந்தாலும் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவங்க தினமும் சளித்துக்கொள்ளாமல் செய்து அவங்களை occupiedடாக வச்சுப்பாங்க,Bore னா கிலோ என்ன விலைனு கேட்பாங்க.

A very simple person. தன் மூன்று குழந்தைகளுடனும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, ஒரே மாதிரியான, போலித்தனம் இல்லாத அன்பு மட்டுமே காட்டும் இந்த அம்மாவிற்கு நான் தலை வணங்குகிறேன்.



Thursday, May 12, 2022

  தாய்க்கு மகளின் செயல் by Veena Sankar                                                  




இன்று என் ஃபோட்டோ ஸ்டுடியோவிற்கு ஒரு அம்மாவும் பொண்ணும் வந்தார்கள். அவள் அம்மாவிற்கு ஃபோட்டோ எடுக்கணும் என்று சொல்லி தன் அம்மாவிற்கு சேலையில் மடிப்பு வைத்து பின் பண்ணி, தன் கைக்குட்டையால் அம்மாவின் முகத்தை துடைத்து விட்டு, நிஜத்தில் தான் என் அம்மா  எண்ணைய்  தோய்ந்த முகமாக இருக்கிறார். போட்டோவிலாவது அழகாய் தெரியட்டும் என்று சொல்ல,  இதைக் கேட்டதும்  ஒரு கணம் ஸ்தம்பித்து  நின்றேன். நான் ரொம்ப சந்தோஷப் பட்டு   அந்த  பெண்ணிற்கு கை குலுக்கினேன். உழைப்பிற்கு மதிப்பு கொடுக்க தெரிந்த அப்பெண்ணை மனதார பாராட்டினேன். மேலும்  அவள்  அம்மா பூ வைக்காத காரணத்தினால் போட்டோவில் பூ வைத்து அப்பெண்ணை என்னால்  முடிந்த அளவிற்கு சந்தோஷப்படுத்தினேன். பாசத்தை காலத்தால் அழிக்க முடியாது.  உழைப்புக்கும் முயற்சிக்கும் மதிப்பு உண்டு எந்நாளும். பிள்ளைகளின் செயல்  தான் ஒரு தாய்க்கு விலைமதிக்க முடியாத மரியாதை



Wednesday, May 11, 2022

தண்ணீர் கனவு / நினைவு  by Veena Sankar



 தண்ணீர் கனவு / நினைவு 


                                            அன்று  சென்னைக்கு  தண்ணீர் கிடைப்பது  என்பது    ஒரு  பெரிய கனவு. அதை நினைவு கூர்வது  என்பதே  தற்போதைய நிகழ்வு. 


                                          இன்று சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் சற்று குறைவு என்று நினைக்கிறேன். நாங்கள் சென்னையில் குடி இருந்த சமயம், சென்னை மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கும் மெட்ரோ வாட்டர் லாரி வந்ததும் சோம்பேறி கூட சுறுசுறுப்பு ஆகிவிடுவான் என்று சொல்லவேண்டும். தெருவிற்குள் தண்ணீர் கொண்டு வரும் லாரிகள் தெருமுனையில் சப்தம் கொடுத்தாலே கடைசியில் குடியிருக்கும் நானும் என் தோழி  சிந்துவும்  முதல் இரண்டு இடத்தை பிடித்து விடுவோம். போகும் அவசரத்தில் தண்ணீர் அட்டையையும் காசும் நழுவாமல் இருக்க குடத்தினுள்   போட்டு சென்ற நாட்களும் உண்டு. லாரியில் கொண்டு வரும் தண்ணீர்,  தொட்டியில் நிரம்பிய பிறகே தண்ணீர் விடப்படும் என்றாலும் நான், தண்ணீருக்காக  அவசரத்தில் பாட புத்தகங்களை கூட மூடாமல் விட்டு சென்றதும் உண்டு. ஒரு குடத்திற்கு பத்து பைசா முதல்  ஐம்பது பைசா வரை வாங்கி,  அட்டையில்   குறித்து தருவார்கள். 


                                           ஒரு  சமயம்   தண்ணீருக்கு   கடும்  தட்டுப்பாடு ஏற்பட்டது.  நாங்கள்  இருக்கும்  இடத்திலிருந்து  சுமார் ஐந்தாறு தெருக்கள் தள்ளி  ஒரு சைக்கிளில்   ஏழு  குடங்கள் வரை தண்ணீர் கொண்டு  வந்ததும் உண்டு.  வீட்டில் இருக்கும்   சிறு  டம்ளர்களில் கூட  தண்ணீர் பிடித்து வைத்து இருக்கிறோம்.  அது  வீட்டில்  கொலு  வைத்திருப்பது  போல  ஒரு   தோற்றத்தைக் கொடுக்கும்.


                                       இதற்கும்  ஒருபடி மேலே போய்,  பக்கத்தில் உள்ள தெருவில், ஒரு வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாய், நாமாக அடித்து குடத்தில் பிடிக்க வேண்டும் என்றால் ஐந்து காசுகளும், கீழே குழாயில் கொடுக்கும் அழுத்தம் காரணமாக மேல் வீட்டில் தண்ணீர் தானாக குடத்தில் விழும் இடத்தில் பத்து பைசாவும் வசூலித்து  வந்தார்கள். தண்ணீரை  விற்று மேல் வீட்டை கட்டினர் என்று  அந்த வீட்டை சொல்வதுண்டு.  


                                        எங்கள் வீட்டிற்கு முன் இருக்கும்  அடி    குழாயில்    தண்ணீர் மஞ்சள் கரைத்தது போல் இருக்கும்.  அந்த உப்பு  தண்ணீருக்கும் ஒரு வரிசை  உண்டு. இரவு இரண்டு மணிக்கும் வரிசை வந்து தண்ணீர் பிடித்து,  படிகாரம் போட்டு தண்ணீரை குழப்பினால்,  மறுநாள் காலை மஞ்சள் கசடு கீழே  தங்கி  மேலே  தண்ணீர் தெளிந்து  இருக்கும். 


                                            ஒன்பது   வீடுகள்  கொண்ட  இடத்தில்,  ஒரே   ஒரு  கிணறு தான் இருந்தது. அதில் நாம் எட்டிப் பார்த்தால் அந்த  கிணறும்  நம்மை எட்டிப் பார்க்கும்.  அவ்வளவு ஆழத்தில் சிறிது தண்ணீர் இருக்கும். தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்கள் என்று கூற  கேட்டிருக்கிறோம் அல்லவா? அதே போல்தான் தண்ணீர் ஊற்று வந்த  பின் தான், கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும். அதிலும் வரிசைப்படி பிடிக்கவேண்டும்.   இதனோடு தண்ணீருக்காக சண்டை  சச்சரவுகளும்  உண்டு. அவரவர் தத்தம்  குடத்துடன் கூடிய கயிறு  கொண்டு  நீர் இறைக்க  வேண்டும்.


                                           இது   கூட   பரவாயில்லை.    நான்   சென்னையில்  இருந்து பூவைக்கு மாறுதலான சமயம், என்  கல்லூரிக்கு  சென்று வந்து கொண்டிருந்த சமயத்தில்,  என்னுடன் பேருந்தில்  பயணிக்கும் ஒரு பெண்மணி எனக்கு பரிச்சயம் ஆனார். அவர்  எங்கள் பகுதியில் இருந்து   சென்னை சேப்பாக்கம் வரை தினமும் வேலை பார்த்து விட்டு வருவார். இவ்வளவு தூரம் நீங்கள் தினமும் பயணிக்க வேண்டி  இருக்கிறது? ஏன் அங்கேயே ஒரு வீடு பிடித்து  குடியிருக்கலாம் அல்லவா? என்று நான் கேட்டதற்கு, என்னை கையெடுத்து கும்பிட்டார். பத்து வருட காலம்  தன் அலுவலகத்திற்கு பக்கத்தில், தான் குடி இருந்ததாகவும் போன வருடம் வந்த தண்ணீர் கஷ்டத்தில் வீட்டு ஓனரம்மா, இருக்கும் இந்த தண்ணீர் பஞ்சத்தில் நீங்கள் தினமும் குளிக்க வேண்டுமா? என்று கேட்டதால்  பதறிப்  போய் தொலை தூரம் என்றாலும் பரவாயில்லை என்று    எண்ணி,   தன் சொந்த   வீட்டிற்கு  குடும்பத்தோடு  குடி  வந்ததாக கூறினார்.  


                                          இதைக்   கேட்டதும்  எனக்கு,    அழுவதா?  சிரிப்பதா?    என்று தெரியாமல் விழித்தேன்.  ஒவ்வொருவருக்கும் தண்ணீரை  பின்புலமாக வைத்து பல கதைகள் இருக்கும் என நம்புகிறேன்.  


                                  உயிர் வாழ உணவு மட்டுமே வேண்டுமென்பதில்லை. தண்ணீர் இருந்தால் கூட சமாளித்து விடலாம்  ஒரு  சில நாட்களுக்கு.


                 இறைவன் அருளால் மழை கொண்டு, என்றும்  மலர்ந்து இருப்போம்.


Sunday, May 8, 2022

 "அன்று  பூத்த ரோஜாப்பூ" சிறுகதை by Veena Sankar


                            

அன்று  பூத்த ரோஜாப்பூ



                                                  தேவை இல்லாத ஒரு பொருளை தேவைப்படும் ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் பிறக்கும் சந்தோஷமும் தேவை பூர்த்தி அடைவதால் வாங்கியவருக்கு தோன்றும் உணர்வும் சொல்லி மாளாது.   


                                                             வர்ஷினிக்கு  ரோஜா செடி என்றால் மிகவும் பிடிக்கும். தன் வீட்டு மாடியில் வண்ண வண்ண ரோஜா செடிகளுக்கு இடம் ஒதுக்கி தோட்டம் அமைத்து  இருந்தாள். அதிலிருந்து துளிர்க்கும் இலை முதல் பூக்கும் பூ வரை அணு அணுவாக ரசிப்பாள். தினம்  பூக்கும் ஒரு பூவை எடுத்து கடவுளுக்கு   சூடி மகிழ்வாள். இன்னொரு  பூ பூத்தால் அதை அவள் பார்க்கும்  நபருக்கோ அல்லது பூவை விரும்புபவர்களுக்கோ கொடுத்து மகிழ்வாள். அதற்கு மேலும் பூக்கும் பூக்களை பறிக்காமல் செடியிலேயே  விட்டு பார்த்து பார்த்து ரசிப்பாள். தலைக்கு மேல் வேலை இருந்தாலும் காலை, மாலை என இரு வேளைகளிலும் தன் தோட்டத்தை பார்க்காமல் வர்ஷினிக்கு  அன்று  இரவு  தூக்கம்  வராது. 


                                                        வர்ஷினியின் நெருங்கிய தோழியின் மாமனார் முடக்குவாத நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அலைபேசியில் அழைத்து அவள் தோழி சொல்ல, தன் வேலைகளை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றாள். 


                                                       எப்போதும் கடுப்பான தோற்றத்துடனும் சிடு சிடு என பேசும் தோழியின் மாமனார், அன்று தான் அமைதியாக படுத்திருந்ததை வர்ஷினி பார்த்தாள். வாய் திறந்து பேச முடியாமல் அவர் திணறிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் அவளுக்கு ஏதோ போலாகி விட்டது. அவர் எதோ சொல்ல வருகிறார் என்பதையும் ஓரளவுக்கு வர்ஷினி தெரிந்து கொண்டாள்.  ஆனால் அவரின் மௌனமொழி அவளுக்கு புரியவில்லை.


                                                   ஒரு சமயம் தன் தோழி வீட்டிற்கு வர்ஷினி செல்லும் பொழுது, அவள் தோழியை பற்றி இவளிடம் அவள் மாமனார் குறை சொல்ல,  வர்ஷினி சென்ற பின்னால்  அவளை பற்றி அவள் தோழியிடம் குறை சொன்னது,  அவள் தோழி மூலம் வர்ஷினி தெரிந்து கொண்டாள். வயதானவர்கள் என்றால் ஏதாவது புலம்பிக் கொண்டிருப்பதும் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதும் புதிதல்ல. தன்னைப் பற்றி  அவள் மாமனார் சொன்னது உண்மையில்லை என்று  தெரிந்ததால் வர்ஷினி மௌனமாகவே இருந்தாள். அதனால் தான் தன்னை  பற்றி குறை சொன்ன போதும்  தோழியின் மாமனாரை, காண மருத்துவமனைக்கு  வந்திருந்தாள். 


                                                        அவரை காண செல்லும் போது தன் வீட்டு ரோஜா செடியில் அன்று பூத்த ரோஜா பூவினை கொண்டு சென்று அவரிடம் கொடுத்தாள்.  அவரிடம் அதன் இதழ்கள் ஒவ்வொன்றாக வாடி உதிர்வதற்கு  முன் அவர் சரியாகி விடுவதாக தோழியின் மாமனாருக்கு தைரியம் சொன்னாள். ஆனால் தோழியின் மாமனாரோ, வர்ஷினியை தான் கடிந்து, குறை சொல்லிப் பேசினாலும் அவள் தன் மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாமல், நடந்த கசப்பான சம்பவத்தை மறந்து தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள் என்பதை நினைத்தும் தன்னை நொந்து கொண்டார்.  வர்ஷினியின்  இனிமையான பேச்சும்  மனதும் தனக்கும் அமைய முதல் முறையாக  கடவுளிடம் வேண்டிக்கொண்டார். 


                                                     மறுநாளும்  மருத்துவமனைக்கு  சென்ற  வர்ஷினி, தோழியின் மாமனார் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரின் புத்தகத்தை அவர் காதருகே வாசித்து காட்டினாள். இவ்வாறாக தினமும் ரோஜாப்பூடன் வந்து,  புத்தகத்தையும் வாசித்துக் காட்டினாள்  வர்ஷினி.  மருத்துவரின் ஆலோசனையால் அவர் செயலில் முன்னேற்றம்  கண்டு  மறுநாள் வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர் சொன்னார். 


                                                 அவர் முகத்தில்  தவழ்ந்த சந்தோஷமும் அவருடைய பேச்சும் தெளிவாக இருப்பதை  வர்ஷினி  உணர்ந்தாள். மறுநாளும் ஒரு ரோஜா பூ  பறித்து,   அவரை காண   மருத்துவமனைக்கு   சென்றாள். வர்ஷினியைப் பார்த்ததும்  தான் அவளை மட்டும் அல்லாமல் பிறரை புண்படுத்தி  பேசியதற்கு  தன்னை மன்னிக்கும்படி அனைவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்தார்  வர்ஷினி தோழியின் மாமனார். 


                                                        தான் செய்த செயலுக்காக வர்ஷினி இடம் மன்னிப்பு கேட்க, அதை தான் மறந்து விட்டதாக வர்ஷினி சொல்ல   தான் அவருக்காக கொண்டு வந்திருந்த ரோஜா பூவினை அவரிடம் நீட்டினாள். 


                                                 மறுபடியும்   இந்த    பூவின்   இதழ்கள் உதிரும் வரை  தான் இங்கே இருக்க வேண்டுமா என தோழியின் மாமனார்  செல்லமாய் கோபத்தோடு வர்ஷினியைப் பார்த்து கேட்க,  அந்த   பூ அதற்காக கொடுக்கப்படவில்லை. இவ்வளவு நாள் அவரை நன்றாக பார்த்துக்  கொண்ட அந்த செவிலி பெண்ணுக்கு  கொடுக்குமாறு   வர்ஷினி சொல்ல, நிம்மதி  அடைந்த தோழியின் மாமனார், அந்த ரோஜாப்பூவினை செவிலி பெண்ணிற்கு  கொடுத்து அவளை வாழ்த்தினார். ரோஜா பூவினை வாங்கிக்கொண்ட செவிலி  பெண்ணோ தனக்கு இதுவரை யாரும் தன்னுடைய செயலுக்காக வாழ்த்தியது இல்லை என்றும்  ரோஜாப்பூ கொடுத்ததற்கு அவருக்கு நன்றி  சொல்லியும்  மகிழ்ந்தாள்.


                 உதிர்ந்த இதழ்களை பூக்களாக மாற்ற இயலாது. ஆனால் 

                 எதிர்க்கும் பகைவனையும் நம்  அணுகுமுறையால் மாற்றலாம்.


 " தாய் " அன்னையர் தின கவிதை by Veena Sankar





 தாய்


அன்று உதிரம் சிந்தி என்னை ஈன்ற-தா(ல்)(ய்) 

இன்று நான் உயிர்  பெற்று நிற்கிறேன்


என் கரம் பிடித்து  என்னை நீ தாங்கிய-தா(ல்)(ய்) 

உன் மனம் குளிர நான் இருக்கிறேன்

 

நீ  ஆசைப்படாமல் வாழ்க்கை நடத்திய-தா(ல்)(ய்) 

நான் மாட மாளிகையில் வாழ்கிறேன்

 

என் தவறுகளை சுட்டிக்காட்டி வளர்த்த-தா(ல்)(ய்) 

நான் சரியான பாதையில் பயணிக்கிறேன்


உன் பாசம் கொண்டு என்னை  வடித்த-தா(ல்)(ய்) 

நான் பரந்த மனதோடு இருக்க விழைகிறேன் 


நீ கனவு  கொள்ள  சொன்னதா(ல்)(ய்)

நான் விரிந்த உலகில் மிதக்கிறேன்


நீ  பொறாமை இல்லாமல் வாழ்ந்த-தா(ல்)(ய்)

நான் உன்னைக் கண்டு பெருமை அடைகிறேன்

 

உன் செயலால் நீ கோபுரத்தில் நின்ற-தா(ல்)(ய்) 

நானும் உன் நிழலாய் இருக்க விரும்புகிறேன்




இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...