"நேர்காணல்" சிறுகதை by Veena Sankar
ஒரு பெரிய நிறுவனத்தில் பல்வேறு வேலைகளுக்கான நேர்காணல் நடைபெற இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைக்குத்தான் நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் அலுவலக உதவியாளர் வேலைக்கான நேர்காணல் செய்யப்பட இருந்தது. அது ஒரு பெரிய கணினி மென்பொருள் நிறுவனம் என்பதால் அந்த வேலைக்கு பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் படித்தவர்கள் வரை போட்டி போட்டார்கள். நிறைய படித்தவர்களும் கீழ் மட்டத்தில் இருக்கும் வேலைக்கு விண்ணப்பம் செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் அங்கே வேலை பார்ப்பது பலரின் கனவாக இருந்தது.
வந்திருந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் உள்ளே நுழைந்து நேர்காணலை திறம்பட முடித்து வந்ததால் தங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தனர். இதுவரை உள்ளே சென்று திரும்பி வந்த அனைவரும் பார்ப்பதற்கு கணிப்பொறியையும் தொழில்நுட்பத்தையும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர். பாவம். கிராமத்தில் கஷ்டப்பட்டு படித்து பத்தாம் வகுப்பு முடித்திருந்த மூர்த்தியும் இந்த வேலைக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருந்தாலும் அவர்களை பார்த்தவுடன் லேசாக பயம் கொண்டான்.
அவனுடைய முறை வந்ததும் உள்ளே செல்ல, அவ்விடத்தை கண்டதும் மேலும் அவனுக்கு படபடப்பு அதிகமாகியது. இந்த மாதிரியான இடத்தை அவன் இதற்கு முன்னால் பார்த்தது இல்லை. இருந்தாலும் தன் பயத்தை மறைக்க எண்ணி, நேர்காணல் செய்பவர்களுக்கு வணக்கம் சொல்லி, தன் சான்றிதழ்கள் அடங்கிய தொகுப்பை அவர்களிடம் சமர்ப்பித்தான். ஒருவர் சான்றிதழ்களை சரி பார்க்க மற்ற இருவரும் இவனைப் பார்த்து சில கேள்விகள் கேட்டனர். பெரும்பாலும் கணினி சம்பந்தமாகவும் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளாகவும் கேட்க, மூர்த்திக்கு சில கேள்விகளுக்கு விடை தெரியாது என்றும் சில கேள்விகளுக்கு மௌனம் சாதித்தான். ஆனால் பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சட்டென்று பதில் அளித்து அவர்களின் பாராட்டை பெற்றான்.
மூர்த்தியின் வேலைக்கான முடிவு இன்று மாலை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவனுடைய அலைபேசி எண் குறிப்பிடாதது பற்றி கேட்க, தனக்கென்று தனியாக அலைபேசி இல்லை என்றும் வீட்டில் அவனுடைய அண்ணனுக்கு மட்டுமே அலைபேசி உண்டு என்று சொல்லவும் நடுவர்கள் தங்களுக்குள் ஒரு பார்வையை பார்த்துக் கொண்டனர்.
இருந்தாலும் முடிவு தெரிய, மூர்த்தியை மாலை வரை அங்கேயே காத்திருக்கும்படி சொன்னார்கள். சரி என்று சொல்லி தன் சான்றிதழை பெற்றுக் கொண்டு வெளியே காத்திருந்தான். அவனோடு சேர்ந்து ஆறு பேர் மாலை ஐந்து மணி வரை பொறுமையாக காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து காத்திருந்தவர்களை அந்த குழுவினர் உள்ளே அழைத்து, அவர்களுக்கான வேலை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்ல, மூர்த்தி உட்பட அனைவரின் முகமும் மலர்ந்தது. மகிழ்ச்சியில் கண்கள் ஈரமாயின. நேர்காணல் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தங்களுக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விடை பெற்றனர்.
அப்போது நேர்காணல் செய்தவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவர் எதற்கு அந்த ஆறு பேரை மட்டும் உங்கள் குழு குழு தேர்ந்தெடுத்தது என்று மெதுவாக கேட்க, இந்த பதவிக்கு ஆறு பேர் போதுமானது. இந்த வேலைக்கு அவ்வளவு தொழில்நுட்ப அறிவு தேவைப்படாது. அடிப்படை அறிவு போதுமானது. மேலும் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டாலும் அவர்களின் செயலும், எந்த வேலை கொடுத்தாலும் தங்களால் செய்ய முடியும் என்று பேசியதால் அவர்கள் சில காலம் மட்டுமே வேலை பார்ப்பர். முதன் முதலில் வேலைக்கு செல்பவர்களுக்கும், தங்கள் குடும்ப கஷ்டத்தை நினைத்து இந்த வேலைக்கு போட்டி போட்டவர்கள், இதுவே பெரிய வேலை என்று நினைத்து சில காலம் நிறுவனத்தில் வேலை பார்ப்பார்கள்.
குறைந்த படிப்பு தேவைப்படும் இடத்தில் அதிகம் படித்தவர்கள் இருந்தால் அந்த வேலையை அவர்கள் திறம்பட செய்ய மாட்டார்கள். அவர்கள் தங்கள் அறிவு, தொழில் சார்ந்த வேலை கிடைத்தவுடன் இந்த வேலையை பாதியிலேயே விட்டு சென்று விடுவர். மென்மேலும் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் நம் தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு வேறொரு இடத்தில் வேலை செய்வார்கள் என புது விளக்கம் தந்தார். அப்படி என்றால் முதலிலேயே படித்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் இருந்திருக்கலாமே என்ற அவரின் கேள்விக்கு, இதுவும் நம் நிறுவனத்திற்கு விளம்பரம் தானே என்று பதில் அளித்ததும் கேள்வி கேட்டவர் இப்படியும் ஒரு விஷயம் இருக்கிறதா? இது தான் நான் படிக்கத் தவறிய மேலாண்மை பாடம் போல என்று எண்ணி, சாரி சார் என்று சொல்லி அசடு வழிந்தார்.
அதீத அழகும் ஆபத்தானது.
தீராத ஆசையும் துன்பமானது. - சில இடங்களில்
மிகையான அறிவும் ஏமாற்றம் தரக்கூடியது.

No comments:
Post a Comment