இன்றைய தலைப்பு "உப்புமா" by Akhila Devi Kumaran
" உப்பு(மா) " மினி கதை by Veena Sankar
காலை எட்டு ஆனதை உணர்ந்த புவனா, அவசரமாக தன் படுக்கையை விட்டு எழுந்தாள். பரபரப்புடன் எழுந்த அவளுக்கு அன்று விடுமுறை என்பது பிறகு தான் நினைவு வந்தது. எப்போதும் முதல் நாளே தன் கணவனிடம் மறுநாள் என்ன செய்யட்டும் என்று கேட்டு செய்து வைக்கும் புவனா, முதல் நாள் இரவு திரைப்படத்திற்கு சென்றதால் அதை தன் கணவனிடம் கேட்க மறந்து விட்டாள்.
புரண்டு புரண்டு படுத்த தன் கணவனிடம் மெதுவாக காலை என்ன டிபன் செய்யட்டும் என கேட்க, நீயே ஏதாவது செய் என்பது பதிலாக வர அப்படின்னா உப்புமா செய்யட்டுமா என்று கேட்ட புவனாவுக்கு, வேண்டாம் என சைகை செய்தான் அவள் கணவன். சரி! அப்படின்னா பூரி செய்கிறேன் என்றாள். ஓகே என்று தன் கட்டை விரலை உயர்த்தி ஆமோதித்தான். குளித்து முடித்து ஒரு காபியை சாப்பிட்டு பூரிக்கு மாவு பிசைந்து, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசால் தயார் செய்தாள். புவனாவின் கணவன் குளித்துமுடித்து அறையை விட்டு வெளியே வர சமையலறையில் புவனா “உப்புமா! உப்புமா!” என்று சொல்வது கேட்டு, இவள் பூரி தானே செய்கிறேன் என்று சொன்னாள் இப்போது “உப்புமா! உப்புமா!” என்று சொல்கிறாளே என சமையல்கட்டு பக்கம் எட்டிப் பார்த்தான்.
புவனாவும் பூரி தான் சுட்டுக் கொண்டிருந்தாள். எண்ணெய் சட்டியில் அவள் இட்ட பூரி உப்பி வராமல் இருப்பதை கண்டு “உப்புமா! உப்புமா!” என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து தனக்குள்ளே பிழைத்தோம்டா சாமி என்று சிரித்துக் கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட தயாரானான்.

No comments:
Post a Comment