"ஜோசியம்" சிறுகதை by Veena Sankar
ஜோசியம்
ஆன்மீகமும் ஜோசியமும் ஒன்றுக்கொன்று இணை என்பதால் நன்கு படித்த பாலாஜியும் தன் அம்மாவை போலவே இரண்டிலும் நாட்டமும் நம்பிக்கையும் வைத்திருந்தான். சமீபத்தில் அவன் அம்மாவின் இறப்பிற்குப் பின் பாலாஜிக்கு இன்னும் ஜோசியத்தில் நம்பிக்கை கூடி இருந்தது என்றே சொல்லலாம். சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த அவனுக்கு, எதிர்காலத்தின் மீது பயம் மனதில் ஆட்கொண்டதால் பிற்காலத்தில் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். தனி மரமாக அவன் இருந்தாலும் அவனுடைய நண்பர்கள் பக்கபலமாக இருந்தனர். பல தொழில்களுக்கும் சொத்துக்களுக்கும் அதிபதியான அவன், தனக்கு துணையாக போகும் தன் வருங்கால மனைவியை பற்றி மனதில் கோட்டை கட்டி கொண்டு இருந்தான்.
பல பெண்களின் ஜாதகங்கள் தூரத்து சொந்தங்களில் மூலம் வர, அதை அலசி ஆராய்ந்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். தனக்குப் பிடித்த பெண்களின் ஜாதகங்களை மட்டுமல்லாது அனைத்தையும் ஜோசியரிடம் கொண்டு சென்று பொருத்தம் பார்க்க நினைத்தான். அழகை ஆராதிக்க தெரியாதவனாய், தன்னை விட அழகில் குறைந்த பெண்ணும் தனக்கு நல்ல துணைவியாக வர வாய்ப்புள்ளதாக எண்ணினான். தன் அம்மா செல்லும் ஜோசியரிடம் சென்று அவன் ஜாதகத்தையும் சேர்த்து பொருத்தம் பார்க்க சொல்ல, அவர் சொல்வதை எல்லாம் ஒரு தாளில் குறித்துக் கொண்டு வந்தான் பாலாஜி. ஆனால் எந்த பெண்ணின் ஜாதகமும் பாலாஜியின் ஜாதகத்தோடு ஒத்துப் போகவில்லை என ஜோசியர் சொன்னார்.
எல்லாம் சொல்லி முடித்த பின், அவன் அம்மா எங்கே என்று அந்த ஜோசியர் கேட்க, அம்மா இறந்து விட்டதாக கூறினான். சிறிது வருத்தம் அடைந்த ஜோசியர், முன்னொரு நாள் பாலாஜியின் அம்மாவிடம் தான் ஏற்கனவே அவளுடைய ஆயுள் காலத்தை பற்றி நிறைய சொன்னதாகக் கூறினார். ஆனால் அதற்கான பரிகாரங்களை அவள் அம்மா செய்தாரா? என ஜோசியர் பாலாஜியிடம் கேட்க, தனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னான்.
மேலும் ஜோசியர் தன் அம்மாவிடம் என்ன சொன்னார் என்பதை ஆவலுடன் பாலாஜி கேட்க, முடிந்தது முடிந்து போய்விட்டது என்று அவர் சொல்ல மறுத்ததால் அவருக்கு நன்றியையும் தட்சணையும் தந்து அவரிடமிருந்து விடை பெற்றான். ஜோசியர் தன் தாயை பற்றி கேட்டது, அவன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தான் கொண்டு சென்ற பெண்களின் ஜாதகத்தில் ஒன்று கூட தனக்கு பொருத்தமாக அமையவில்லையே என வருந்தினான். காலை விடிந்ததும் பார்த்துகொள்ளலாம் என நினைத்து இரவு படுத்தான். இந்த ஜோசியர் சொன்னது தவறாக இருக்கக்கூடும், வேறு ஒரு ஜோசியரிடம் போகலாம் என்ற சிந்தனையோடு மறுபடியும் வேறு ஒருவரை சந்திக்க சென்றான்.
ஆனால் முன்பு சொன்ன ஜோசியர் போலவே அடுத்தவரும் சொல்ல, சிறிது அதிர்ந்து போனான் பாலாஜி. ஏதேனும் பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்றான். தன் எதிர்கால வாழ்க்கை, வசதி, வாய்ப்புகளை பற்றி விசாரித்தான். அதற்கு அவர் புன் சிரிப்பை பதிலாகத் தந்தார். அதை சற்றும் எதிர்பாராத பாலாஜி, மீண்டும் மீண்டும் அவரை கேள்வி கேட்க ஆவல் கொண்டான். உண்மையை சொன்னால் ஜோசியருக்கு தான் நிறைய பணம் தருவதாக பாலாஜி சொல்ல, அவர் மனதில் கோபம் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் புன்முறுவல் பூத்து, தனக்கு பணம் பெரிதல்ல என்று கூறி, உண்மையை சொல்ல மறுத்து விட்டார்.
முடிவு தெரியாமல் பாலாஜி விழிக்க, “ வாழ்க்கை என்பது வாழ்வதற்கு. ஜோசியம் என்பது அவரவர் கஷ்டத்திற்காக கேட்டு தெரிந்து கொண்டு, தங்களால் முடிந்த பரிகாரத்தை செய்வதும், கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதுமே ஆகும். பல பேர் ஜோசியம் பார்த்து தங்கள் முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள். அதிர்ஷ்டம் இல்லை என்று நொந்து கொள்வதாலும் ஜோசியம், என்றும் எவருக்கும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. கிரகங்களின் மாறுபாட்டால் ஒரு சில நேரங்களில் நமக்கு துன்பங்கள் வரலாம். மேலும் நாம் நம் எதிர்காலத்தை முழுவதும் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்? கஷ்டம் வரும்போது பழைய இனிமையான நினைவுகளோடு நம் வாழ்க்கையை நடத்த ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும். அடுத்தவருக்கு ஜோசியம் பார்க்கும் எனக்கு, என் எதிர்காலத்தை பற்றி தெரியாது. நான் ஜோசியன் ஆவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாம் ஆண்டவன் செயல்.” என்று சொன்னார்.
வேறு ஒன்றும் பேச முடியாமல் அவரிடமிருந்து விடை பெற்ற பாலாஜியை, இன்னும் சிறிது நாட்களில் இவன் ஆயுள் காலம் முடியப் போகிறது. திருமணம் செய்து கொண்டதும் அவன் வாழ்வு முடியும் என்பதே விதி. அதனால் பாலாஜி திருமணம் செய்து கொள்ளாது இருப்பதே சிறந்தது என்றும், இருப்பினும் பிறந்த நேரம் சரியாக கணிக்கப்பட்டிருக்கும் இருக்கும் பட்சத்தில் எதுவும் நடக்கலாம் என்பதை ஜோசியர் தெரிந்து வைத்திருந்தாலும் அதை தன் மனதில் வைத்துக் கொண்டார்.
எதிர்காலம் எதிர்பார்ப்பு கொண்டது. நிகழ்காலம் அனுபவிக்க கூடியது. ஜோசியமும் மனமகிழ்ச்சிக்காகவே அன்றி வாழ்க்கை முழுவதுக்குமானதல்ல.

No comments:
Post a Comment