"அலை(ழை) பேசி " சிறுகதை by Veena Sankar
ஒரு பிரதான சாலையில் அலைபேசி கடையை நடத்தி வரும் ஆனந்திற்கு, அலைபேசியை பயன்படுத்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, சார்ஜ் ஏற்றும் போது அலைபேசியில் பேசக்கூடாது; அதிக நேரம் சார்ஜ் போட்டு இருக்க கூடாது; படுக்கும் பொழுது பக்கத்தில் அலைபேசியை வைக்கக்கூடாது; இரவில் நீண்ட நேரம் அலைபேசியை பார்க்கக்கூடாது என்ற பல தகவல்களை அவர்களுக்கு மொழிவழியாக தெரியப்படுத்துவான். யாராவது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது அலைபேசியை பயன்படுத்தினால் ஆனந்திற்கு கோபம் வரும். அவர்களை கண்டிப்பான். தான் சொல்லி, தன் பேச்சை கேட்பவர்கள், சிலர் பின்பற்றினாலும் நல்லது தானே என்பது தான் அவன் நினைப்பு. சிறிது காலத்திற்குப் பிறகு விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை கூட்டவும் நினைத்திருந்தான்.
ஒரு நாள் இப்படித்தான் ஆனந்த் தன் நண்பனுடன் ஒரு திருமண விழாவிற்கு தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவர்கள் சென்ற வாகனத்தை முந்திக்கொண்டு வேகமாக சென்றது இன்னொரு இருசக்கர வாகனம். அதுவும் அதில் பயணம் செய்தவன் ஏதோ வலிப்பு நோய் வந்தவன் போல தன் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து கொண்டு, தன் காதில் அலைபேசியை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தான். இதை பார்த்ததும் ஆனந்திற்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அந்த இளைஞனுக்கு அறிவுரை வழங்க நினைத்து அந்த வண்டியை பின் தொடர்ந்து சென்றான். ஆனால் அந்த இளைஞன் மிக வேகமாக போனதால் ஆனந்திற்கு அவனை பின் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது. அந்நேரம் பார்த்து அந்த இளைஞன், ஒரு சிக்னலில் மாட்டிக் கொண்டான். மறுபடியும் சிக்னல் மாறுவதற்குள் அவனை பிடிக்க எண்ணி சிறிது வேகமாக தன் வண்டியை இயக்கி, தன்னை முந்தி சென்ற இளைஞனின் வண்டிக்கு பக்கத்தில் தன் வண்டியை நிறுத்தினான்.
இளைஞனை பார்த்து, “தலைக்கவசம் போடாமல் நீங்கள் பயணிப்பது தவறு. அதை விட அலைபேசியில் பேசிக் கொண்டே போவது என்பது மிகப்பெரிய தவறு. இப்படித்தான் என் நண்பன் ஒருவன் திருமணமான புதிதில் அலைபேசியில் தன் புது மனைவியுடன் பேசிக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தை தான் வேகமாக இயக்குகிறோம் என்று கூட தெரியாமல் வேகமாக சென்று, ஒரு கண்டெய்னர் லாரியில் மோதி, விபத்துக்குள்ளாகி இறந்தே விட்டான். அதனால் தற்போது அவன் மனைவி கணவனை இழந்து தவிக்கிறாள். அதனால் தயவு செய்து நீங்கள் அலைபேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம்” என சொன்னான். அதைக் கேட்டதும் முந்தி சென்ற இளைஞனுக்கு முகம் மாறியது. தனக்கும் போன மாதம் தான் திருமணம் ஆனதாகவும் தன் மனைவியிடம் தான், தான் பேசிக் கொண்டு சென்றதாகவும் இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று சொல்லி, ஆனந்திற்கு நன்றி சொல்லியது மட்டுமல்லாமல் தனது வண்டியை ஓரமாக நிறுத்தி அலைபேசியில் பேச்சை தொடர்ந்தான்.
இன்னொரு நாள் ஆனந்த் தன் அதே நண்பனுடன் பயணிக்க, இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருத்தி, தன் சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகி கொள்ளாமல் காற்றில் பறக்க விட, அது அருகே வந்து கொண்டிருந்த இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் முகத்தில் பட, அவர் சற்று நிலைகுலைந்து போனார். தான் போகும் அவசரத்தில் அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்ல முடியாமல் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணும் எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல், மேலும் அந்தப் பெண் தன் பயணத்தை தொடர, அதை கவனித்த ஆனந்திற்கு மறுபடியும் கோபம் தலைக்கு ஏறியது.
தான் வர வேண்டிய இடம் வந்ததும், அப்பெண் சாலையை விட்டு ஒதுங்க, ஆனந்தும் அவள் பக்கத்தில் வண்டியை நிறுத்தி, பயணிக்கும் பொழுது அவளுடைய புடவையை நன்றாக சொருகிக் கொள்ளும் படி சொல்ல, யார் இவன்? எனக்கு புத்தி சொல்ல! என்று அவள் கேட்பது போல் உள்ளதாக நினைத்து, “ என்னை தவறாக நினைக்காதீர்கள். என் தங்கையும் இப்படித்தான் தன் சுடிதாரின் மேலாடையை பறக்க விட்ட படியே பயணிக்க, மேலாடை ஒரு லாரியின் சக்கரத்தில் சிக்கி, அந்த லாரி என் தங்கையை சிறிது தூரம் வரை இழுத்துச் சென்று விட்டது. அதனால் அவள் தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டாள்.” என்று வருத்தத்துடன் ஆனந்த் சொன்னதும், தன் தங்கையை போலிருக்கும் அப்பெண்ணும், தன் தங்கை செய்த அதே தவறை செய்யக் கூடாது என எண்ணி சொன்னதாக ஆனந்த் சொல்லி கைகூப்பி வணங்க, அந்தப் பெண்ணும் தன்னை யாரோ முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தாள். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டாள். ஆனந்தின் தவிப்பை உணர்ந்தவளாய் அவனுக்கு நன்றி சொல்லி விடை பெற்றாள்.
இப்படி நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தின் நண்பன், திகைத்தான். “ஏண்டா! ஆனந்த் அன்னிக்கி என்னமோ உன் நண்பன் விபத்தில் இறந்து போய் விட்டான் என்று சொன்னாய். இன்னைக்கு இந்தப் பெண்ணிடம், விபத்தில் என் தங்கச்சிக்கு உயிர் போயிருச்சு என்று கலர் கலரா ரீல் விடற?” என்று கேட்க, “ நல்லது நடக்கும் என்று தெரிந்தால் பொய் சொல்வதில் தவறு இல்லை. யாரோ எழுதியதை பார்த்து, படித்து திருந்தாத நம் மக்கள், இப்படி தனிப்பட்ட முறையில் நமக்கு பாதிப்பு வந்ததாக சொன்னால் அது அவர்களின் மனதில் ஒரு வித மாற்றத்தை உருவாக்கும். மனோதத்துவம் படித்த எனக்கு அது தெரியும் என்பதால் அவர்களை அந்த வழியில் சென்று மடக்கினேன். இனி இந்த பெண்ணும் அந்த ஆணும் மறுபடியும் அந்த தவறான செயலை செய்ய மாட்டார்கள்.” என்று பதிலளிக்க, “அப்பா! நீ பெரிய டாக்டராக போயிருந்தால் இந்த ஊரையே மாற்றி இருப்பாய்.” என்று சொல்லி தன் நண்பனின் அணுகு முறைக்கு மறக்காமல் வாழ்த்து சொன்னான்.
ஆலோசனை சொல்வதும் சிறந்த அணுகு முறையே. அது கேட்பவரின் உள்ளத்தை மெருகேற்றி, அவர்களின் செயலை மாற்றத் தக்கது .

No comments:
Post a Comment