புதிய சிந்தனை சிறுகதை by Veena Sankar
சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்த விவேக்கிற்கு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் இருந்து வேலைக்கான நேர்காணல் அழைப்பு வந்தது. மிகவும் விரும்பிப் படித்ததால் விவேக் அத்துறையில் பல புதுமைகளை புகுத்திட எண்ணினான். வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முனைப்பு காட்டுவதோடு மட்டுமல்லாமல் நம் நாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதை அவன் நேர்காணலின் போது வலியுறுத்திப் பேசியதால் அந்த வேலை அவனுக்கு கிட்டியது. அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் தன்னுடைய சிந்தனை, முயற்சி, உழைப்பு ஆகிய எல்லாவற்றையும் ஒருசேர தன் செயலில் அளித்தான். அதனால் குறுகிய காலத்திலேயே அந்த கம்பெனியின் உயர்ந்த நிலைக்கு வந்தான். பல பாராட்டுகளுக்கும் விருதுகளுக்கும் சொந்தமானான்.
நாளடைவில் நிறுவனத்தில் அசைக்க முடியாத ஆளாக விவேக் வலம்வர, தன் மனைவியின் அறிவுரையால் தனியாக நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தான். பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை பேசி தன்வசம் இழுக்க, விவேக்கின் மனைவி சீதாவிற்கு அவன் நடவடிக்கை கொஞ்சம் நெருடலாக தெரிந்தது. மெதுவாக தன் கணவனிடம் “என்ன தான் இருந்தாலும் உங்கள் பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை உங்கள் வசம் திருப்புவது எனக்கு பிடிக்கவில்லை.” என சீதா வெளிப்படையாக கூறினாள்.
அதற்கு விவேக் “என் சிந்தனையின் மூலம் தான் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.” என்று வாதாட, “இல்லைங்க! நீங்க உங்க காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்க சொன்னேன். ஆனால் பழைய கம்பெனியின் வாடிக்கையாளர்களை நீங்கள் கவர்வது அவ்வளவு நல்லா இல்லை” என்று சொன்னதும் “சரி! அதற்கு என்ன செய்யணும்னு சொல்லு. நீயே ஒரு ஐடியா கொடு.” என்றான் விவேக். உடனே சீதாவும் உங்கள் புதிய தொழில்நுட்பத்தை காட்டி டிவியிலும் பேப்பரிலும் புதிய நிறுவனத்தை பற்றி விளம்பரம் கொடுங்கள்.” என்று சொல்ல, சீதா சொன்னது விவேக்கிற்கு நல்லதாகப் பட அப்படியே செய்தான்.
ஒவ்வொரு பிராஜக்ட்டிற்கும் தன் திறமையை காட்டி புதுமையைப் புகுத்தினான் விவேக். ஊரிலும் பெரிய அளவில் பேசப்பட்டான். பல இடங்களிலிருந்தும் விவேக்கிற்கு புதிய கன்ஸ்டிரக்ஷன் பிராஜக்ட் வந்த வண்ணம் இருந்தன. இரவு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி, தன் சிந்தனையில் உதிப்பதை மறுநாள் செயல்படுத்த ஆசைப்பட்டு, அவன் வாடிக்கையாளரை அலைபேசியில் தொடர்பு கொள்வான்.
அன்றும் அப்படி தான். விவேக், தன் திட்டத்தை தன் வாடிக்கையாளரிடம் சொல்ல, “ சார் நீங்கள் எது செய்தாலும் சரியாக இருக்கும். உங்களுக்கு இடம் ஒதுக்கி இத்தனை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மட்டும்தான் நான் சொல்லுவேன். அவ்வப்போது நீங்கள் செய்யும் வேலையை பார்த்து விட்டு செல்வேன். அது என் தான் வேலை” என்றும் தனக்கு வீடு இப்படித்தான் வர வேண்டும் என்று தன்னுடைய தேவையை மட்டும் சொன்னார். அவர் அப்படி சொன்னதும் தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு விவேக் நன்றி சொன்னான்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நன்னாளில் வாஸ்து பூஜை போட்டு கன்ஸ்ட்ரக்ஷன் வேலையைத் துவக்கினான் விவேக். தன் திட்டப்படி எல்லாமே செய்து முடித்தான். ஒரு வருட காலத்திற்கு பிறகு எல்லா வீடுகளுமே நிறைவடைந்தன. வீட்டை வாங்க பலர், போட்டி போட்டு கொண்டு வீட்டை பார்க்க வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர், சமயலறையில் கூடுதலாக ஒரு பைப்லைன் போகிறதே எதற்காக என்று கேட்க, “ அது நம் இன்ஜினியர் சாரோட மூளையில் உதித்தது.
“பாருங்க! இப்ப யாருமே கிணற்றுத் தண்ணீரையும் டேங்கர் தண்ணீரையும் பயன்படுத்துவதில்லை. எல்லாமே போர்வெல் தண்ணீர் தான். சில இடங்களில் தண்ணீர் உவர்ப்பு தன்மையுடையதாக இருக்கும். அதனால் நாம் சுத்திகரிக்கப்பட்ட நீரை தான் குடிக்கிறோம். தண்ணீர் சுத்திகரிக்கப்படும் போது அதிலிருந்து பிரியும் தண்ணீரை இந்த பைப்லைன் விட்டால் அது நேராக நம் ஃப்ளாட்டின் கீழே இருக்கும் தொட்டியில் சேமிக்கப்படும். அப்படி சேமித்த தண்ணீரை மறுசுழற்சி செய்து உங்கள் வீட்டு கழிவறைக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம்.” என்று சொன்னார் உரிமையாளர்.
“சார்! ஐடியா சூப்பரா இருக்கிறது. கண்டிப்பாக அந்த இன்ஜினியரை நான் பார்க்க வேண்டும்.” என்று வந்தவர் சொல்ல, பக்கத்தில் இருந்த விவேக்கிற்கு பெருமை தாங்கவில்லை.
“விதையானாலும் மண்ணை எதிர்த்துக் கொண்டு மேலே வந்தால் தான் மரமாக வளர முடியும். அது போல நம் புதிய சிந்தனைகளை நம்மோடு வளர்த்துக் கொண்டு, முடிந்த வரை அதை செயல்படுத்த முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.” என விவேக் வீட்டை வாங்க வந்தவரிடம் சொல்ல, வந்தவர் விவேக்கிற்கு கைகுலுக்க எண்ணி கையை நீட்ட விவேக், “சார்! இது கொரோனா நமக்குக் கற்றுத் தந்த பாடம்.” என சொல்லி தன் இரு கைகளையும் கூப்பி சிரிப்பை உதிர்த்தான்.
நாம் வளம்பெற உதிரம் சிந்தினாலும் அதை
வளர்க்க புதிய சிந்தனை எனும் உரம் வேண்டும்.

No comments:
Post a Comment