Tuesday, July 30, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


துறவிகளுக்கு வாழ்வை வெறுக்கவே ஆசை

 மனிதன் சிற்பமாவதும் சிற்பம் மனிதம் பேசுவதும் சிறப்பே

 எந்த கலையையும் கற்றுணர குரு வேண்டும், அவரும் நம்மை உருபெற வைக்க வேண்டும்

 மௌனத்தின் மொழி கூட அன்பின் அடையாளமே!

Sunday, July 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஆட்டம் போட்டு சோர்ந்த உயிர்கள் இங்கே இரண்டு

நிஜப்பூனை

வீட்டில் பூனையாய்

காட்டில் புலியாய்

நிஜ மங்கை

வீட்டிலும் காட்டிலும் புலியாய்

கடமைக்காக,

உடைமைக்காக

உறக்கத்திற்காக

உழைப்பிற்காக

சிறப்பிற்காக

என்பது அறியாமல் பேசும் தெய்வத்தை 

பேசிக் கொல்லும் உயிர்களும் உண்டு இப்புவியில்


 ஓவியமும் பேசியதே பல கதைகள்

நின்று கேட்கவா?

அமர்ந்து ரசிக்கவா? 

கனவில் இசைக்கவா?

விடை தெரியாத போதும்

எத்தனிக்கிறது மனம்

எதுவென்று அறிய

வருவதும் செல்வதும் 

நிரந்தரம் இல்லாத போது

நடப்பதும் சரியோ?

எட்ட நின்று கேட்கும்

கதைகளும் கூட

பக்கம் வந்து மனதை

வருடுதே

கேட்கும் திறன் இருந்தாலும்

காலமும் கடமையும்

மறுக்குதே

அடுத்த விழி கூட அந்நியமாய் மாறும்

தருணத்தில் அடுத்தவருக்கும் செவி மடுக்குமோ மனதும்

என் மனது அறியவே 

வெகு நாட்கள் ஆகும்

போது அடுத்தவர் மனம் என்னுள்ளே கொள்ள காலங்கள் 

பல வேண்டும்

வேண்டுவது கிடைக்கவே

வேண்டியவன் துணை வேண்டும்

வேண்டுதல் கொண்டாலும் வேண்டாதவை புக வைப்பதும் முறையோ?

சரியோ?

காலமும் அறிந்தவன் அவனும் சொல்ல வேண்டியது நம்மிடம் யாது?

Thursday, July 25, 2024

ஐந்தறிவும் ஆறறிவும் by Veena Shankar

 


ஐந்தறிவும் ஆறறிவும் 


ஒருவன் ஓர் அமைதியான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். பெரிய பங்களாக்கள் இருந்த இடம் என்றாலும் அங்கே எங்கிருந்தோ வந்த இரு தெரு நாய்கள் இவனைப் பார்த்து மோசமாக குரைத்துக் கொண்டே துரத்தின. அதை சற்றும் எதிர்பாராத அவன், தன்னை காத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் ஓட, அவனை விடாது நாய்கள் துரத்தின. ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் ஓட முடியாமற் நிற்க, நாய்களும் அவன் என்ன செய்ய காத்திருக்கிறான் என்பது போல அவனை பார்த்தன. அவன் நாய்களிடம், "நான் திருடன் அல்ல, திசை மாறி இங்கே வந்து விட்டேன். அதுவும் நீங்கள் என்னை கடித்து குதற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. ஆனால் ஏதோ ஓர் அச்சத்தில் உங்களை பார்த்ததும் என் மனம் ஓட சொன்னது . அதுவும் குரைக்கிற நாய் கடிக்காது என்று கேள்விப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்று தன் வழக்கமான ஆவர்த்தனத்தை காட்டினான் . மேலும் நாம் மூவரும் ஸ்நேகமாக இருப்போம் " என்றான். 


அதை கேட்ட நாய்கள் சிரித்தன. ஏன் என்பது போல் அவன் அவைகளைப் பார்க்க, 


ஐந்தறிவு ஆறறிவை பார்த்து சொன்னது, 


" உன்னை நாங்கள் எப்படி நம்புவது? நீ தான் மனிதானாயிற்றே? நீ எப்போதும் பிறரை பரிகாசம் செய்பவனாயிற்றே? பின் உன்னை நாங்கள் எப்படி நம்புவோம்? உன்னை நாங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் உன் இனத்தவர் யாரும் தவறு செய்யும் போது நீ தைரியமாக அவர்கள் தவறை உணர்த்து! எங்களைப் போல் அவர்களிடம் வெளிப்படையாக உன் உணர்ச்சியைக் காட்டு. அவரை பற்றி புறம் சொல்லாதே!" என்று சொல்ல,


 ஐந்தறிவின் ஆலோசனையை ஆறறிவு ஏற்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பால் அபிஷேகம் by Veena Shankar

 


பால் அபிஷேகம்


சமந்தாவிற்கு கடவுள் பக்தி மிக அதிகம். ஒவ்வொரு கிழமையிலும் குறிப்பிட்ட கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக் கிழமையில் மட்டுமே பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் கோயிலை தவிர்த்தாள். ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு செல்லும்போதும் அர்ச்சனை செய்யும் போதும் ஏதாவது பூ, பழம் என்று கொடுத்து அர்ச்சனை செய்வாள். அதுவே சிறப்பு என்பது அவளுக்கு தெரியும். அன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கமாக செல்லும் மாரியம்மன் கோயில் அபிஷேகத்திற்கு பால் கொடுக்க எண்ணி முதல் நாளே மறுநாள் பால் அதிகம் வேண்டும் என்று பால்காரரிடம் சொல்லி இருந்தாள். மறுநாள், பதிவாக வாங்கும் பாலுக்கு ஒரு பாத்திரமும் கோயிலுக்கு என ஒரு தூக்கு சட்டியும் வைத்து உள் வேலையாக அவள் சென்ற நேரம் பார்த்து பால்காரர் வர, பாத்திரத்தில் மட்டும் பாலை விட்டு தூக்கு சட்டியை எடுத்துக் கொண்டு வெளியே போவதை பார்த்து பால்காரர் என்ன செய்கிறார் என்பதை பார்த்தாள். கோயிலுக்கு என தனியாக பாலை இன்னொரு கேனில் வைத்திருந்தது கண்டு ஆச்சரியப்பட்டாள். 


 மாரியம்மன் கோயிலுக்கு சென்று பால் செலுத்தி சிறப்பாக நடைபெற்ற அபிஷேகத்தை பார்த்து வீட்டிற்கு வரும் வழியில் தன் எதிர்வீட்டு அக்காவிடம் பால்காரர் பற்றி பெருமையாக பேசினாள். "என்னதான் இருந்தாலும் நம்ம பால்காரர் சாமிக்கு தனி பால் கொண்டு வந்து ஊற்றுகிறார். பரவாயில்லை" என்று சொல்ல, " போடி ! போ! அது கவர் பால். பசும் பால் கிடையாது. அதுவும் இல்லாமல் கவர் பாலுக்கு ஒண்ணுக்கு ரெண்டா தண்ணிய விட்டா பசும்பால் போல இலக்கமாக இருக்கும். எப்பவும் அவர் அப்படித்தான் செய்வார் . அதனால் தான் நான் சுவாமி அபிஷேகத்திற்கு பால் வேண்டும் என்று சொல்லாமல் நித்தியபடிக்கு வாங்கும் பாத்திரத்திலே வாங்கி சொம்பில் விட்டு சாமிக்கு கொடுப்பேன்" என்று சொன்னதும் சமந்தாவிற்கு தூக்கி வாரி போட்டது. பால் காரர் மேல் அவளுக்கு கோபம் வந்தது. வீட்டிற்கு வந்து தன் கணவனிடம் விஷயத்தை சொல்ல, தான் அந்த தண்ணி பாலுக்கு எப்போதும் கொடுக்கும் அதே காசு கொடுக்கப் போவதில்லை கொஞ்சம் குறைத்துத்தான் கொடுப்பேன் என்று சொல்லவும் அவள் கணவன் அவளை ஏற இறங்க பார்த்து , " நீ குரைத்தாலும் காசை குறைச்சி கொடுத்தாலும் நீ செய்வது தப்பு. சாமிக்கு கொடுக்கும் பால் என தெரிந்தும் பால்காரர் இப்படி செய்கிறார் என்றால் அது பாவம் . அவர் செய்யும் பாவத்தில் நீயும் பங்கு கொள்ளப் போகிறாயா? எனக்கு தெரிந்து அவர் கேட்கும் பாலுக்கான காசை கொடுத்து விடு !" என்று தீர்க்கமாய் சொல்லி நகர்ந்தான். " அட! ஆமா! இது எனக்கு தெரியாம போச்சே" என்று நினைத்துக் கொண்டு சமையல் அறைக்குள் வந்தவள் இனி பக்கத்து வீட்டு அக்கா சொல்வது போல செய்ய வேண்டும் இல்லையேல் தன் கணவன் முன்பே சொல்லியிருந்தது போல ஏதாவது ஒரு ஏழை குழந்தையின் வயிற்று பசியாற்ற வேண்டும் என முடிவும் எடுத்தாள்.


 இருந்தாலும் அம்மனுக்கு செய்த பால் அபிஷேகம் அவள் கண்முன்னே நின்றது. இதற்கு பின் சமந்தா முடிவில் மாற்றம் இருக்கும்?


 மாற்றங்கள் நமக்கு சாதகமாக அமைந்தால் சிறப்பு. பாதகம் என்றால் நம் அணுகுமுறையை மாற்றுவதே சிறப்பு.

Tuesday, July 23, 2024

நாற்காலி by Veena Shankar

 


நாற்காலி


மழலையில் அமரும் நாற்காலி அழகுக்காக மட்டுமல்ல பிள்ளையின் செயலை கட்டுப்படுத்தவும் தான்


வாலிபத்தில் தேடி பிடிப்பது மட்டுமல்ல நாற்காலி, மூப்பில் தானாகவும் அமையும் தன்மை கொள்வதால் தான்


சமையற்கட்டில் தாயின் அசதிக்காக மட்டுமல்ல நாற்காலி, அவள் தெய்வமாகவும் மதிக்கப்படுவதால் தான்


கூடத்தில் வசதிக்காக மட்டுமல்ல தந்தையின் நாற்காலி, வாழ்வின் முக்கிய முடிவெடுக்கும் தருணத்திற்கும் தான்


சாய்ந்து ஓய்வெடுக்க மட்டுமல்ல நாற்காலி நம் வாழ்வின் மிஞ்சிய நாட்களை கடத்தவும் தான்


சொந்த கால்கள் இழந்த போதும் பின் தொடரும் இந்த நாற்காலியின் பந்தம்

அவன் வருவான்? by Veena Shankar

 


அவன் வருவான்?


வருவான் என்று நினைத்தேன் வாராமல் இம்சை தந்தான்


இனிமையான சுகத்தை தருவான் என்று நினைத்தேன் அவன் வரவில்லை


வரவேண்டாம் என்று நினைத்தே என் பணியை தொடர நினைத்தேன் 


என் கண் முன்னே வேண்டுமென்றே தன்னை வெளிக்காட்டி நிழலாடினான்


தருவான் என்று நினைத்தேன் ஆனால் என் எவ்வித முயற்சியும் ஆதாரமில்லாமல் அழிந்தது


தரமாட்டான் என்று நினைத்தேன் எனக்கான அவன் நினைவுகளையும் சேர்த்தே தந்து விட்டு போனான்


காரணம் அறியாமல் அவனை தேடியதில் எனக்கு தலைவலிதான் மிஞ்சியது


அவனை அனுபவித்தது காணாமல் என் சோம்பல் நீளாமல் இருக்க


குடிக்கும் பானமும் தயாரித்து குடித்தேன்


என் தேவையும் அவன் செல்வாக்கும் உயர இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தனித்தனியே பிரிந்தோம்


நம்பிய என்னை ஏமாற்றிவனும் நீயே!

உனை நம்பாமல் ஏமாறியவளும் நானே!


மீண்டும் என் உணர்ச்சியில் தொய்வு ஏற்பட அவனை நான் தேடினேன் 


அவன் வருவானா? என்ற எதிர்பார்ப்பிலும்

அவன் வரமாட்டான் என்ற கவலையிலும் நான் என் இரவு நேரத்தை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது


இதில் உங்கள் அனுபவம் எப்படி?

என்னவன் யாரென்று அறிந்தீர்களா?

Monday, July 22, 2024

வார்த்தை மறுத்தது ஏனோ?

 


வார்த்தை மறுத்தது ஏனோ?


உள் அறையிலிருந்து நீலா தன் சக வயது தக்க மனிதரோடு வெளி வர, அவள் வருவதை பார்த்து ஒரு கனம் தன் மனம் குளிர்ந்தான் ரவி. நீலா தானே அது என்று அவன் உள் மனது அவனை கேட்டது. ஆனால் வெளியே வந்த நீலாவின் பார்வை ஏனோ ரவி மேல் விழவில்லை.


"நீலா! " அவள் பெயரை மனதில் உச்சரிக்கும் போதே அவ்வளவு ஆனந்தம் ரவிக்கு. நீலாவோடு அவன் தன் கல்லூரி தினங்களை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன? அவளும் அவனும் அவரவர் பாலினக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் ஒரே பேருந்து இரு கல்லூரிகளையும் இணைப்பதால் அங்கே சில காதல் வெற்றியிலும் சில காதல் தோல்வியிலும் இன்னும் பல முடிவு தெரியாமலும் மறைந்து போயிருந்தன. 


ஆனால் இன்று இங்கே அவன் அவளை காண்பான் என்று கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை ரவி. 


ஆம். கல்லூரி நாட்களில் தன்னை ரவி காதலிக்கிறான் என்பதை அவள் சிநேகிதி மூலம் நீலா தெரிந்து கொண்டாள். வழக்கமாக எல்லா பெண்களும் குடும்ப சூழல் காரணமாக காதலுக்கு பச்சை கொடி காட்ட முடிவதில்லை. காதலுக்கு எதிரான தன் முடிவை தீர்க்கமாக ரவியிடம் சொல்லி விடுமாறு சினேகிதியிடம் நீலா சொல்ல, அவளும் ரவியிடம் சொல்ல, ஒரு நாள் நேரே வந்து நீலாவிடமே கேட்டு விடலாம் என முடிவு செய்து நீலாவை சந்திக்க ரவி வர, அவனைக் கண்டதும் அழ ஆரம்பித்தாள் நீலா. அங்கே இருவருக்கும் வார்த்தை வர மறுத்தது. வற்புறுத்தி காதல் கொள்ள ரவியின் மனமும் இடம் கொடுக்கவில்லை. அன்றிலிருந்து நீலாவை மனமில்லாமல் விட்டு விலகினான் ரவி . 


காதல் எப்போதும் இரு கை ஓசை போல அமைவதே சிறப்பு. 


ரவி தன்னை விட்டு விலகி சென்றாலும் அவன் பார்வையும் செயலும் காணாது பேருந்து பயணத்தில் வெறுமையை உணர்ந்தாள் நீலா. அவள் கண்கள் அவனை தேடியது என்னவோ உண்மை தான். ஆனால் காதல் சொல்ல சரியான பருவம் அது கிடையாது என்பதை அவள் உள் மனது சொல்ல, எல்லாவற்றையும் தன் மனதினுள் அடக்கி, அவன் மீதான ஈர்ப்பை புறம் தள்ளி படிப்பில் கவனம் செலுத்தினாள் நீலா. இருந்தாலும் ரவி தனக்காக என்றும் காத்திருப்பான் என்ற நம்பிக்கையில் அவளும் இருந்தாள். 


நாட்கள் நகர விலகிய மனங்கள் விலகியே போய் விட்டன. இரு வீட்டாருக்கும் இது தெரியாது. 


ரவி தன் படிப்பு முடிந்தவுடன் வேலைக்காக பம்பாய் சென்று விட்டான். நீலாவோ, தன் மேற்படிப்பிற்காக காத்திருக்க, அமெரிக்க மாப்பிள்ளை ஒன்று அமைய, மாப்பிள்ளை வீட்டார் நீலாவை படிக்க வைப்பதாக உறுதியளித்து அதையும் நிறைவேற்றினர். 


எப்போதும் போலவே பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் கடமைகள் துரத்த, நீலாவும் மூன்று மகன்களை பெற்றெடுத்து மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். 


தற்போது அவளுடைய மூன்றாவது மகன் மும்பையில் வசிப்பதால் அவனோடு சில நாட்கள் தங்க நினைத்து தன் கணவனோடு வந்திருந்தாள் நீலா. 


"அடுத்து ரவி உள்ளே வாங்க! " என்று நர்ஸ் அழைத்ததும் ரவி உள்ளே செல்ல, "ரவி" என்ற பெயரை கேட்டதும் நீலா திரும்பி அழைப்பு வந்த திசை நோக்கி பார்த்தாள் . அறுபது வயதைக் கடந்த ஒருவர் இவளை பார்த்து கொண்டே உள்ளே போவதை பார்த்து அது கல்லூரி பருவத்தில் கண்ட ரவி தான் என்பதை உறுதி செய்து கொண்டாள். உள்ளே போகும் முன் ரவியும் நிலாவை பார்த்து புன்முறுவல் செய்தவாறே செல்ல, அதற்குள் நீலாவின் கணவன் தான் மருந்து மாத்திரைகளை வாங்கி வருவதாகவும் அவளை அங்கே அமரும் படியும் சொல்லி நகர்ந்தான். 


இம்முறை நீலா தன் கல்லூரி நாட்களுக்கு பின்னோக்கி நடந்தாள். பெரியதாக காதல் என்பது இல்லாத அந்த மன ஈர்ப்பு தற்போது ஒருவித உணர்வை கொடுக்கத்தான் செய்தது. ரவிக்கும் நீலாவுக்கும் தோற்றத்தில் ஒரு சில மாற்றங்கள் தவிர வேறு ஏதும் புதிதாக தெரியவில்லை. 


நீலா சிந்தனையோடு காத்திருக்க, ரவியும் அறையை விட்டு வெளியே வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்க மீண்டும் வார்த்தை வர மறுத்தது. ஆம். அவர்கள் இருவரும் தத்தம் பற்களை பல் மருத்துவரிடம் தியாகம் செய்து வந்திருந்தனர் வாயில் பஞ்சை அடைத்துக் கொண்டு. 

பார்த்த பின் ஒருவரை ஒருவர் சிரிக்க கூட முடியாமல் வார்த்தையும் மறுத்தது அங்கே.


"அடுத்து கதிர் வாங்க!" என்ற நர்ஸின் அழைப்போடு அவர்களுடைய நினைவுகளும் அங்கே மௌனமாய் கலைந்தது. 


தேவையுள்ள இடத்தில் பரிமாறப்படாமல் போன வார்த்தைகளும் வாழ்வை திசை மாற்றும்.

Saturday, July 20, 2024

சொல்லாக்கம் by Veena Shankar

 


சொல்லாக்கம்


வகுப்பறையில் ஆசிரியருக்கு சொல்வது வணக்கம் 

புரியாத பாடமென்றால் வகுப்பில் தூக்கம் 

தேர்வில் தெரிந்த வினாவிற்கு மட்டுமே விளக்கம்

மதிப்பெண் கொடுப்பதில் ஆசிரியருக்கு ஏனோ சுணக்கம்

மன்றாடி கேட்டால் கன்னத்தில் வீக்கம்

இல்லையேல் வகுப்பறையிலிருந்து நீக்கம் 

விளைவு படிப்பில் தேக்கம்

வீட்டில் காண்பித்தால் வெளிப்படும் துக்கம் 

மீண்டு வந்து படிப்பில் கொள்ளும் ஆக்கம் 

பெற்றோரும் கொடுப்பதில்லை நமக்கு ஊக்கம்

இதனால் பிள்ளைகளுக்கு பிறக்குது ஏக்கம்

எல்லாமே இந்த பரீட்சையினால் வரும் தாக்கம்

அடுத்த தேர்வில் வெற்றி பெறுவதே நோக்கம்

Friday, July 19, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 




எதற்கான பயணம் இங்கே?

எதன் மீது உரசி செல்கிறது உடல்?

யாருக்கான தேவை இது?

எந்த பருவநிலையில் உணவு திரட்டியது?

ஏன் போனது தனிமை கொண்டு?


தள்ளாடி சென்றாலும் தன் பிம்பம் துணைக்கு உள்ளது என்ற நம்பிக்கையில் தேடுதல் அதன் பலனும் முடிகிறது இந்த எறும்பிற்கு


சிக்கினால் மரணம் உறுதி இப்போது


படமும் கருத்தும் by Veena Shankar

 


 பல சுமைகள் தாங்கும் முதியவரை தாங்கிய காலணிகள் கூட பாடம் சொன்னது, சுமப்பவனுக்கு என்றும் இளகிய மனது என்று, தன்னிலையை காட்டி

சுமையின் மையப்புள்ளி முதியவரின் கால்கள்


தலைக்கவசமாய் மாறிய வாழைத்தார்

தோள் சாயும் வயதில் தோளோடு தோற்பை 

இளைய சந்ததியரை பற்றிக் கொண்டு செல்லும் கரத்தில் தூக்கு சட்டிகள்

இது தான் இவரின் சுதந்திரமா?

இல்லை 

மனைவியை காப்பாற்றும் பொறுப்பா?

இல்லை

தானாய் விரும்பி செய்யும் பிழைப்பா?

இல்லை

அதிகாரத்தின் விளைவால் கொண்ட பயணமா?

இல்லை 

இளைப்பாற வேண்டிய வயதில் கொள்ளும் தளர் நடையா?

பூமியின் புவியீர்ப்பு விசையில் , அவர் நடையின் மையப்புள்ளி அவர் கால்களுக்கிடையில் 

பலவற்றின் சங்கமமாய்

சிலவற்றின் பாரமாய்

Wednesday, July 10, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கல்லும் மண்ணும் சிகரத்தை தொட உதவும் போது, இந்த கண்ணாடி துண்டுகளும் பாதையாகும் மன உறுதி கொண்ட அணிலுக்கு

 கண்ணாடி துண்டுகள் குத்தும் என்று உணராத போது கால்கள் குருதியில் ரணமாயின, அதுவே தேவை என்பது நீளும் போது கண்ணாடி துண்டுகளும் வழி சொன்னது, இரண்டு துண்டுகளுக்கு இடையே வளைந்து நெளிந்து இலக்கை அடையச் சொல்லி

 காணும் பார்வையில் பாதை தெளிவில்லையென்றாலும் இலக்கு முன்னே தெரியும் போது மனம் தெளிந்து கொண்டே செல்லும்

Monday, July 8, 2024

படமும் கருத்தும் by Winmeengal

 


 நீ..

புகைக்க -

எங்களுக்கு 

சுடுகிறது !...

நீ 

புகைக்க

புகைக்க..

உன் -

ஆயுள் 

கொஞ்சம் .

கொஞ்சமாக 

புதைந்து கொண்டு 

இருக்கிறது -

உனக்கு 

புரியவில்லையா ?!..

-Kiruthika 


 Veena Shankar:

 வெண்மையிலிருந்து கருமைக்கு மாறியது வெண்குழல் மட்டுமல்ல, புகைத்தவனின் உடலும் தான் 

கருகியது வெண்குழல் மட்டுமல்ல அவன் வாழ்வும் தான்


குழல் ஊதிய கண்ணனுக்கு குழலாலேயே சங்கு


தூண்டியவன் துயரமானான்

துணிந்தவன் துகிலுரித்தான்

துணையானவள் துச்சமானாள்


பஞ்சும் நெருப்பும் வெவ்வேறு திசையில்

அதை சுவாசித்தவன் மட்டும் மரண திசையில்


பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்டதால் விளைந்தது மரணம்


எரிந்து கொண்டிருக்கும் தனலை நோக்கி முன்னேறாமல் திரும்ப வந்ததால் அவன் குடும்பம் சிரித்தது, அக்னியில் பரீட்சை கூடாது எப்போதும்


 Akhila: அப்பா கருக…

அம்மா மருக…

மகள் உருக…

என்று முடியுமோ 

கடைசி புகை கம்பி .. இறுதியாக?

விரைவில் அந்த நாள் வருக! 

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக!!


 Vidhya Nivash: உயிர் ஓவியம்

உணர்வு பரிமாற்றம்

சிந்தனையை தூண்டும்

பிரச்சனைக்கு உடனடி நிவாரணம்

உள்ளிழுக்க சுகம்

நுகர்வோருக்கு பாதி

சுற்றி இருப்போர் பாதி

கடைசியில் காலி

படமும் கருத்தும் by Veena Shankar

 


 தான் கால் கொண்டு பூட்டிய பூட்டை

தன் வேல் கொண்டு திறப்பது எளிது


 திறவுகோல் இல்லா பூட்டும் 

அளவுகோல் இல்லா வடிவமும். வீண்

 ஓட்டைகள்பல இருந்தாலும் உள் கொள்ளும் திறவுகோல் ஒன்று தான்

 என் மனக் கதவின் சாவி தொலைந்து போனது என்று அதை உன்னிடம் நான் விசாரிக்க, நீயும் இல்லை என்று பதில் தந்தாய். என் மனக்கதவின் சாவி தொலைந்து போனது என்று நினைத்திருந்த எனக்கு உன் நிலையும் அதுவே என்று எண்ணத் தோன்றியது, அப்போது கூட நீயும் உன் மன எண்ணத்தை என்னிடம் பகிராததால்

 படைத்தவை ஏதும் அழிவில்லை

உடைந்தவை ஏதும் குறைவில்லை

இங்கே வழி கொள்ள உதவியதால்

Friday, July 5, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 காணும் கண்ணோட்டம் மாறினால் புலியும் பூனையாகும், பூனையும் புலியாகும்

நேரில் கண்டால் மட்டுமே அதன் சூழ்நிலை புரியும் நமக்கு

 இது புலியா? பூனையா? என்ற சந்தேகம் வலுத்திருந்த வேளையில் அறிந்தேன் இது புலியென்றே, என் மனம் எப்போதும் பன்மடங்கு அடி பாய்வதால்

மனமே காரணம் அது புலியென்று விலகவும் பூனையென்று ரசிக்கவும்

Tuesday, July 2, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 கண்ணாடியில் விழும் பிம்பம் எப்போதும் மாயை தான். அதை விருப்பம் போல் கொள்ள நினைப்பது அழகல்ல, அறிவல்ல

குறையை கண்டால் நிறை காண முடியாது

நிறையைக் கண்டால் குறைந்து போவது கிடையாது

 உண்மையைக் கொள்ளாமல் நிறம் மாறிய பிம்பம், கண்ணாடியின் தூசியினால் மட்டுமல்ல, மாசு என்பதினால்

மனம் மட்டும் தெளிவு கொண்டால் ஆகாது, பிரதிபலிக்கும் பிம்பமும் தெளிவாய் இருக்க வேண்டும், நிஜம் நிழல் காணும் சமயத்தில்

நிஜத்தில் இருக்கும் தேநீர் எனக்கு, நிழலில் இருப்பது உனக்கு என்று சொல்வதால் மட்டுமே நிழலும் நிஜமாகும் இங்கே

 நிழல் என்னும் திரையை விலக்கினால் நிஜம் தெரியும்

நிஜம் என்கிற உண்மை விளங்க 

நிழலும் நிஜமும் வேறு என்ற ஞானம் பிறக்கும்

Monday, July 1, 2024

படமும் கருத்தும் by Winmeengal



 Kiruthika: *முடியாத ஒன்று தான் உண்டோ...?

முயற்சி துணையாய் 

நிற்கும் போது...!..


*முடிக்க வேண்டும் -

என முடிவு செய்த பின்..

தடைகள் யாவும்

படிகளாகும்...

தடங்கல்கள் கூட

தயங்கி போய் -

தூரம் போகும்!...



*மூச்சு இருக்கும் வரை...

முயற்சியையும் சேர்த்தே சுவாசிப்போம் !!!..

 Veena Shankar: வளர்ந்தது பாறையா? இல்லை மரமா?

எதற்கும் இடமுண்டு இப்புவியில் நம் மனதின் கண் ஈரமிருப்பதால்

பாறையும் பாடமானது அடுத்தவரின் வளர்ச்சியை தடுக்காததால்

மரமும் நிமிர்ந்தது 

முயற்சியை கைவிடாததால்

எதுவும் பசுமையானது நம் எண்ணத்தின் பிரதிபலிப்பில்

 Veena Shankar: கல்லுக்குள் ஈரம் உண்டு என்றோம்

கல்லும் கடத்திய ஈரத்தில் முளைத்த மரம், வெறுமையிலில்லை.

மண்ணும் மணியாய் தன் கடமையை செய்ய

மகத்துவம் தெரிந்தது நம் கண் முன்னே

Akhila: எனக்குத் தோன்றிய tanglish சிந்தனை🤩


தனி மரம் தோப்பாகாது- 

but

நான் HOPE ஆவேன்🙌

 Veena Shankar: எவருக்கும் ஓர் தனித்துவம் உண்டு என்பது உண்மையே, 

நீண்டு வளரும் மரமும்

அகண்டு விரிந்து கிடக்கும் பாறையும் இயற்கையின் தனித்துவமே!

அதை காண்பதில் உண்டு நமக்கு பெருமிதமே!

 Veena Shankar: இணைவோம் வளர்வோம்

 செல்லும் பாதையில் பிளவு உண்டென்றாலும் 

மார்க்கமும் உண்டு அங்கே பாதையை கடக்க 

இறுகிய மனம் இலகினால்

Vidhya Nivash: நூலிழை போதும் முயற்சி என்ற வேர் முளைத்து வான் தொட!


பாறையே வந்து அழுத்தினாலும் என் கால்கள் பாறையானதே தவிர! பதிலுக்கு வான் கொடுத்த கொடையை கனியாக படைப்பேன்!


நிலையான அழுத்தம் இல்லாமல் எப்படி வெற்றி கனியை ரசிக்க ருசிக்க முடியும்!

Vidhya Nivash: உயிரற்றது, உயிருள்ளது!

எதுவும் எதையும் வீழ்த்தும் !

Kiruthika துடித்தெழு...

துளிர்த்தெழு ...!...

 இடிப் போல் 

இறக்கிடு 

உன் -

முயற்சியை..!..


இடுக்கிலும்..

உயிர்த்தெழுவாய்..!..

உறுதியாய் .!!!....

Veena Shankar: இம்மியளவு கிடைத்த சுதந்திரத்தில் அடைந்த வெற்றிக் கொடி, மனிதருக்கு மட்டுமல்ல இங்கே சொந்தம், எனக்குமே என்கிறது இந்த மரம்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...