Monday, July 22, 2024

வார்த்தை மறுத்தது ஏனோ?

 


வார்த்தை மறுத்தது ஏனோ?


உள் அறையிலிருந்து நீலா தன் சக வயது தக்க மனிதரோடு வெளி வர, அவள் வருவதை பார்த்து ஒரு கனம் தன் மனம் குளிர்ந்தான் ரவி. நீலா தானே அது என்று அவன் உள் மனது அவனை கேட்டது. ஆனால் வெளியே வந்த நீலாவின் பார்வை ஏனோ ரவி மேல் விழவில்லை.


"நீலா! " அவள் பெயரை மனதில் உச்சரிக்கும் போதே அவ்வளவு ஆனந்தம் ரவிக்கு. நீலாவோடு அவன் தன் கல்லூரி தினங்களை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன? அவளும் அவனும் அவரவர் பாலினக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் ஒரே பேருந்து இரு கல்லூரிகளையும் இணைப்பதால் அங்கே சில காதல் வெற்றியிலும் சில காதல் தோல்வியிலும் இன்னும் பல முடிவு தெரியாமலும் மறைந்து போயிருந்தன. 


ஆனால் இன்று இங்கே அவன் அவளை காண்பான் என்று கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை ரவி. 


ஆம். கல்லூரி நாட்களில் தன்னை ரவி காதலிக்கிறான் என்பதை அவள் சிநேகிதி மூலம் நீலா தெரிந்து கொண்டாள். வழக்கமாக எல்லா பெண்களும் குடும்ப சூழல் காரணமாக காதலுக்கு பச்சை கொடி காட்ட முடிவதில்லை. காதலுக்கு எதிரான தன் முடிவை தீர்க்கமாக ரவியிடம் சொல்லி விடுமாறு சினேகிதியிடம் நீலா சொல்ல, அவளும் ரவியிடம் சொல்ல, ஒரு நாள் நேரே வந்து நீலாவிடமே கேட்டு விடலாம் என முடிவு செய்து நீலாவை சந்திக்க ரவி வர, அவனைக் கண்டதும் அழ ஆரம்பித்தாள் நீலா. அங்கே இருவருக்கும் வார்த்தை வர மறுத்தது. வற்புறுத்தி காதல் கொள்ள ரவியின் மனமும் இடம் கொடுக்கவில்லை. அன்றிலிருந்து நீலாவை மனமில்லாமல் விட்டு விலகினான் ரவி . 


காதல் எப்போதும் இரு கை ஓசை போல அமைவதே சிறப்பு. 


ரவி தன்னை விட்டு விலகி சென்றாலும் அவன் பார்வையும் செயலும் காணாது பேருந்து பயணத்தில் வெறுமையை உணர்ந்தாள் நீலா. அவள் கண்கள் அவனை தேடியது என்னவோ உண்மை தான். ஆனால் காதல் சொல்ல சரியான பருவம் அது கிடையாது என்பதை அவள் உள் மனது சொல்ல, எல்லாவற்றையும் தன் மனதினுள் அடக்கி, அவன் மீதான ஈர்ப்பை புறம் தள்ளி படிப்பில் கவனம் செலுத்தினாள் நீலா. இருந்தாலும் ரவி தனக்காக என்றும் காத்திருப்பான் என்ற நம்பிக்கையில் அவளும் இருந்தாள். 


நாட்கள் நகர விலகிய மனங்கள் விலகியே போய் விட்டன. இரு வீட்டாருக்கும் இது தெரியாது. 


ரவி தன் படிப்பு முடிந்தவுடன் வேலைக்காக பம்பாய் சென்று விட்டான். நீலாவோ, தன் மேற்படிப்பிற்காக காத்திருக்க, அமெரிக்க மாப்பிள்ளை ஒன்று அமைய, மாப்பிள்ளை வீட்டார் நீலாவை படிக்க வைப்பதாக உறுதியளித்து அதையும் நிறைவேற்றினர். 


எப்போதும் போலவே பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் கடமைகள் துரத்த, நீலாவும் மூன்று மகன்களை பெற்றெடுத்து மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். 


தற்போது அவளுடைய மூன்றாவது மகன் மும்பையில் வசிப்பதால் அவனோடு சில நாட்கள் தங்க நினைத்து தன் கணவனோடு வந்திருந்தாள் நீலா. 


"அடுத்து ரவி உள்ளே வாங்க! " என்று நர்ஸ் அழைத்ததும் ரவி உள்ளே செல்ல, "ரவி" என்ற பெயரை கேட்டதும் நீலா திரும்பி அழைப்பு வந்த திசை நோக்கி பார்த்தாள் . அறுபது வயதைக் கடந்த ஒருவர் இவளை பார்த்து கொண்டே உள்ளே போவதை பார்த்து அது கல்லூரி பருவத்தில் கண்ட ரவி தான் என்பதை உறுதி செய்து கொண்டாள். உள்ளே போகும் முன் ரவியும் நிலாவை பார்த்து புன்முறுவல் செய்தவாறே செல்ல, அதற்குள் நீலாவின் கணவன் தான் மருந்து மாத்திரைகளை வாங்கி வருவதாகவும் அவளை அங்கே அமரும் படியும் சொல்லி நகர்ந்தான். 


இம்முறை நீலா தன் கல்லூரி நாட்களுக்கு பின்னோக்கி நடந்தாள். பெரியதாக காதல் என்பது இல்லாத அந்த மன ஈர்ப்பு தற்போது ஒருவித உணர்வை கொடுக்கத்தான் செய்தது. ரவிக்கும் நீலாவுக்கும் தோற்றத்தில் ஒரு சில மாற்றங்கள் தவிர வேறு ஏதும் புதிதாக தெரியவில்லை. 


நீலா சிந்தனையோடு காத்திருக்க, ரவியும் அறையை விட்டு வெளியே வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்க மீண்டும் வார்த்தை வர மறுத்தது. ஆம். அவர்கள் இருவரும் தத்தம் பற்களை பல் மருத்துவரிடம் தியாகம் செய்து வந்திருந்தனர் வாயில் பஞ்சை அடைத்துக் கொண்டு. 

பார்த்த பின் ஒருவரை ஒருவர் சிரிக்க கூட முடியாமல் வார்த்தையும் மறுத்தது அங்கே.


"அடுத்து கதிர் வாங்க!" என்ற நர்ஸின் அழைப்போடு அவர்களுடைய நினைவுகளும் அங்கே மௌனமாய் கலைந்தது. 


தேவையுள்ள இடத்தில் பரிமாறப்படாமல் போன வார்த்தைகளும் வாழ்வை திசை மாற்றும்.

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...