Monday, October 5, 2020

நாச்சியாரின் பயணம் தொடர்ச்சி by Nachammai

                            நாச்சியாரின் பயணம் தொடர்ச்சி

                                                                      _நாச்சம்மை

  என்னோடு பயணத்தில் தொடரும் எல்லோருக்கும் என் நன்றி. என் மலரும் நினைவுகள் உங்களை மகிழ்வித்தால் எனக்கும் மகிழ்ச்சியே. எஸ்.பி.பி சரண் அவர்கள் பேட்டியில் அவர் தந்தை உடலை வீட்டில் வைத்தபோது மக்கள் கூட்டம் ஏற்பட்டு அடுத்த வீட்டு காம்பவுண்ட் இடிய காரணமானதால் விரைவாக அவர்கள் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்ல போலீஸ் அறிவுறுத்தியதாக கூறினார்.அப்பொழுது எனக்கு சட்டென்று  வந்த நினைவு எனக்கு நாலு வயது இருக்கும் பொழுது என் .எஸ் .கிருஷ்ணன் என்ற சிரிப்பு நடிகர் இறந்துவிட்டார் .எங்கள் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி அவர் வீடு இதேபோல மக்கள் வெள்ளம் வந்து அவர் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்தது ஆக அம்மா மூலம் கேள்விப்பட்டேன். எல்லா காலத்திலும் மக்களின் உணர்வுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.


      எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு கிரவுண்டுக்கு மேல் காலியிடம் இருந்தது .நடுவில் நாலு பாக்கு மரங்களும் ஒரு பெரிய வேப்ப மரமும் இருக்கும்.அண்ணன்கள் அவர்களது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட , நானும் என் அக்காவும் எங்கள் தோழிகளுடன் மரத்துக்கு மரம் ஓடிப் பிடித்து விளையாடுவோம் .பல்லாங்குழி ,தாயம், சீட்டு, ஊஞ்சலாடுவது ,பாண்டி ,நொண்டி விளையாட்டு என வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விளையாடுவோம். பள்ளியிலும் விளையாட்டுக்கு என பீரியட் இருக்கும் .என் தம்பியின் நண்பர்கள்( ஏரியா பிரண்ட்ஸ்) மரம் ஏறுவதில் கில்லாடிகள் .அந்த பக்கத்து வீட்டில் மாமரங்கள் வெவ்வேறு வகையானவை இருக்கும். எங்கள் வீட்டில் சப்போட்டா, கொய்யா , அத்தி மரங்கள் உண்டு. சப்போட்டா பறிப்பது போல மரத்தில் ஏறி மாங்காய் பறிப்பார்கள் . அந்த வீட்டில் இருந்த யாரடா அது என்ற குரல் கேட்டவுடன் இறங்கி ஓடிவிடுவார்கள்.ஒரே சிரிப்பாக இருக்கும்.

           மாடி வீட்டில் குடி இருந்தவர்களுக்கு எங்கள் வயதை ஒட்டிய பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் தாயார் சீதை ஆச்சி அவரது தகப்பனார் மானகிரி லெனா என்ற லெட்சுமணன் செட்டியார் . பாண்டி பஜாருக்கு அந்தப்பக்கம் ஒரு பவர் ஹவுஸ் உண்டு .அதை ஒட்டி அவரது வீடும் சினிமா கம்பெனியும் இருந்தது . ஒரு கிருஷ்ணன் கோயில் உள்ளேயே இருந்தது. மதுரை வீரன் என்ற படம் அவர் தயாரித்து தான் .கிருஷ்ண ஜெயந்தியை மிக விமரிசையாக கொண்டாடுவார் .ஜெமினி , சாவித்திரி, சிவாஜி கணேசன் ,ஜெயலலிதாவின் அம்மா சந்தியா ,சந்திரபாபு போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் வருவார்கள். நாங்க கார் வந்து நிற்கும் இடத்திற்கு அருகிலேயே நின்று எல்லோரையும் வேடிக்கை பார்ப்போம்.


    சுற்றிலும் இருந்த தெருக்களில் திரைப்பட நடிகை நடிகைகள் நிறைய பேர் இருந்தனர். கேமராமேன் வின்சென்ட் பாலையா ,தங்கவேலு ,எம் .வி ராஜம்மா , ஜெயலலிதா,கே. ஆர் விஜயா,நாகேஷ் சிவாஜி கணேசன் ,சிவக்குமார், ஏ.கே கருணாநிதி போன்றவர்கள் ஆவர் .ராஜகுமாரி தியேட்டர் பாண்டி பஜாரில் இருந்தது.இப்போ பிக் பஜார் இருக்கிறது .அப்போதெல்லாம் படம் பார்க்கவேண்டும் என்று போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த கதையெல்லாம் உண்டு.


      கூஊஊ சிக்கு சிக்கு என விளையாடாத பிள்ளைகள் உண்டா என்ன? ரயில் பயணம் என்பது எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் .என்னைப் பொருத்தவரை மிகவும் மகிழ்ச்சியானது ரயில் பயணம் .அப்போதெல்லாம் கரி இன்ஜின் தான் .ஸ்டேஷனுக்கு உள்ளே ரயில் வரும் போது இன்ஜின் பக்கத்தில் அனலடிக்கும். கரி அள்ளிப்போட வென ஒரு ஆள் இருப்பான். கடைசி பெட்டி வரை அந்த கரி பறக்கும் உடைகளிலும் பெட்டி படுக்கை எல்லாவற்றிலும் அந்த கரித்துகள் இருக்கும் ரயில் பயணத்திற்கு என பொருட்களை தயார் செய்ய வேண்டும்.



     உடை மற்றும் சாமான்கள் வைக்கும் பெட்டி படுக்கை (ஹோல்டால் என்ற படுக்கை விரிப்பும் உண்டு) தண்ணீர் கூஜா மற்றும் சாப்பாடு .பித்தளை கூஜா பெரிதாக இருக்கும் .மேலேயே திருகு மூடிப் பிடியுடன் இருக்கும். உள்ளே இரண்டு பித்தளை டம்ளர்கள்பிறகு தண்ணீர் இருக்கும். சில சமயம் குடும்பத்தில் எல்லோரும் செல்லும் பொழுது ஒரு பெட்டி முழுக்க நாங்களே இருப்போம். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தண்ணீர் பிடிக்க அப்பாவோ அண்ணனோ இறங்குவார்கள். அவர்கள் வருகிறார்களா எதிர்பார்த்து கவலைப் படுவோம் .ஏனென்றால் ஒரு கோச்சியிலிருந்து இன்னொரு கோச்சிக்கு உள்ளே போக முடியாது . வேறொரு கோச்சில் ஏறி அடுத்த ஸ்டேஷனில் மாறி எங்கள் கோச்சிக்கு வரவேண்டும் .ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து நகரும் மரம் ,வயல் ,கட்டிடங்களை பார்ப்பது மனதுக்கு ரம்யமாக இருக்கும். ஊர் வந்தால் அங்கு உள்ள குழந்தைகள் கைகாட்ட நாங்களும் கை காட்டுவோம். இரவு நேரத்தில் ரயில் நம்மை தாலாட்டுவது போலவே இருக்கும் வீட்டுக்கு போன பின்பும் அந்த உணர்வு நம்மிடமே இருக்கும். ஒரு பயணத்தின் போது சிறு குழந்தையாக நான் இருந்த போது ஏதோ ஒரு தின்பண்டத்தை சாப்பிட போகும்போது ஒரு குழந்தை வர என் கையில் உள்ளதை அந்த குழந்தையிடம் கொடு என என் தந்தை கூற நான் திருதிருவென விழித்தேன் மறுபடியும் குடு என்றவுடன் கொடுத்துவிட்டேன். என் தாயார் ஏன் அவளை கொடுக்கச் சொன்னீர்கள். வேறு ஒன்றை கொடுத்திருக்கலாம் எனக் கேட்க ,அவளுக்கு கொடுக்கும் பழக்கம் வரவேண்டும் அதனால்தான் அவளை கொடுக்க சொன்னேன் என்றார் .குழந்தை வளர்ப்பு என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்.


        எங்கள் ஊரில் உள்ள வீட்டில் கிராமஃபோன் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஒரு மேஜையின் மேல் வைத்திருப்பார்கள்.


     இசைத்தட்டு பெரிதாக இருக்கும் உயரமான ஒரு கம்பி போன்ற ஒன்றின் முனையில் ஊசி இருக்கும் .அதை ஊசிப்பாகம் இசைத்தட்டில் படும்படி வைக்க தட்டு சுழல ஆரம்பிக்கும். இசைத்தட்டில் உள்ள கோடுகளில் இருந்து பாடல் ஒலிக்கும் .கணீர் என்ற ஒலியுடன் பாடல் ஒலிக்கும். எப்படி இது பாடுகிறது என வியப்பாக இருக்கும் .பிறகு வந்தது வானொலிப் பெட்டி இதற்கென ஒரு மேஜை வேண்டும். ஏனெனில் அளவில் பெரிதாக இருக்கும் .அலைவரிசையை மாற்ற திருக வேண்டும் ,ஒலி கூட்ட குறைக்க இன்னொன்றை திருக வேண்டும் .அப்பொழுது சிலோன் ரேடியோ நிகழ்ச்சிகளை தான் எல்லோரும் கேட்பார்கள் . கர்நாடக சங்கீதம், சினிமா பாடல்கள் ,நாடகம், திரைச்சுருக்கம் போன்றவை விரும்பிக் கேட்கப்பட்டவை . படிப்படியாக தனியார் பண்பலைகள் வர தொடங்கின . விவித் பாரதி என்ற அலைவரிசையில் திரைப்பட பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது .இதன் பிறகு வந்தது ட்ரான்சிஸ்டர், டேப் ரெக்கார்டர் ,சி.டி ப்ளேயர் இப்போதோ மொபைல் போனிலேயே சகலமும் இருக்கிறது.



   ராஜகுமாரி தியேட்டருக்கு அடுத்து பாண்டிபஜார் மார்க்கெட் இருந்தது. பூ,மாலை ,காய்கறி ,பழம் எல்லாம் உண்டு. அங்கு உள்ள ஒரு கடையில் ஒரு முகமதியர் மந்திரிப்பார். எங்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ கட்டி ஏதாவது வந்தாலோ வேப்பிலையை கையில் கொண்டு சென்று அவருக்கு முன்னால் நிறுத்துவார்கள்.  அவர் வாய்க்குள்ளேயே ஜெபித்தபடி வேப்பிலையால் நம்மை தட்டுவார் . மூன்று நாட்கள் இப்படி மந்திரிப்போம் .மத நல்லிணக்கம் என்பது எப்படி பேணப்பட்டது என்பதற்கு இவையெல்லாம் சாட்சி.

2 comments:

  1. Wonderful aunty.realistic travelled along with your journey.shakthi.

    ReplyDelete
  2. அருமையான பதிவு அம்மா,உங்களுடைய நினைவுகள் எங்கள் மனத்தில் அசைபோடுகிறது🙏

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...