நாச்சியாரின் பயணம்
_நாச்சம்மை
என்னோடு சேர்ந்து பயணப்படும் எல்லோருக்கும் என் நன்றி. தி. நகர் பாண்டிபஜார் மார்க்கெட்டை ஒட்டிப்போனால் வரும் தெருவில் அகத்தியர் கோயில் இருக்கிறது. அங்கு எல்லா தெய்வங்களும் உள்ளனர். மார்கழி மாதத்தில் விடியற்காலை பூஜைக்கு பணம் கட்டுவார் என் தாய். காலைக் குளிரில் குளித்து கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவது தெய்வீகமான ஒரு அனுபவம் தான். நடிகர் சிவாஜி வீட்டு காம்பவுண்டில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. பொங்கல் தினத்தன்று அங்கு போய் பிள்ளையாருக்கு பொங்கல் வைப்போம். பிறகுதான் வீட்டில் பொங்கலிடுவார்கள்.
சிறு பெண்ணாக இருக்கும்போது ஐந்து வயதில் "மண்ணுக்கு மரம் பாரமா" என்ற பாட்டு அதிகம் கேட்கப்பட்ட பாட்டு. அந்தப் பாட்டை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே பாடுவேன். எங்கள் வீட்டு அவுட் ஹவுசில் குடியிருந்தவர்கள் அந்தப்பாட்டை பாடச்சொல்லி அடிக்கடி கேட்பார்கள். அப்போது கதாகாலட்சேபம் அடிக்கடி நடக்கும். அவர்கள் என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார்கள். அந்த நிகழ்ச்சியை மெய்மறந்து பார்ப்பேன். ஏனென்றால் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதே வயதில் ஒருநாள் இரவு என் அண்ணனும் நானும் ஓடிப்பிடித்து விளையாடும் பொழுது சமையல்கார அம்மா கொதிக்கும் பாலை காத்தாடிக்கு கீழ் கொண்டுவந்து வைத்தார். ஓடும் வேகத்தில் நான் அந்தப் பால் பாத்திரத்தின் மேலேயே விழ உடம்பெல்லாம் வெந்து விட்டது. டாக்டரின் கிளினிக்குக்கு கொண்டு சென்று முகத்தை தவிர உடல் முழுவதும் கட்டுப் போட்டார்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் என் தந்தையிடமிருந்து செம டோஸ் கிடைத்தது. வேற்று கிரகவாசி போல படுத்திருந்த என்னை பாவம் பார்த்து விட்டு விட்டார். அந்த டாக்டரின் வீடு எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீடு கிளினிக் தள்ளியிருக்கும். காய்ச்சல் வந்தால் அவரிடம் அழைத்துச் சென்று காட்டி, என் தாயார் என்ன கேள்வி கேட்டாலும் வாயையே திறக்க மாட்டார். அவர் எழுதி தரும் சீட்டினை கொண்டு வந்து அறை வெளியிலிருக்கும் கம்பவுண்டரிடம் கொடுப்போம். நமக்குப் புரியாத அந்த எழுத்து அவருக்கு புரியும். அவர் முன்னால் ஒரு மேஜையில் மேல் வரிசையாக கலர் கலராக மருந்து இருக்கும். கடகடவென்று இரண்டு மூன்று கலர் மருந்தை நாம் கொண்டு செல்லும் பாட்டிலில் ஊற்றி கலக்கி தருவார். அதற்குப் பெயர் மிக்சர், இனிப்பாக இருக்கும்.
உடுமலைப்பேட்டையில் இருந்தபோது என் வயதை ஒட்டிய ஒரு நாய் வளர்த்தார்கள். நாய்களுக்கான பந்தயத்தில் முதல் பரிசு வாங்கிய அந்த நாயின் பெயர் பேபி. கறியே சாப்பிடாத நாலாவது அண்ணன் பேபிக்காக தினமும் கறிக்கடைக்கு போய் அரை கிலோ கறி வாங்கி வர சமையல்கார அம்மா சமைப்பார். மூன்றாவது அண்ணன் அந்த நாயை குளிப்பாட்டுவது, உண்ணி எடுப்பது, ஊசி போடுவதற்கு கூட்டிப் போவது என மற்ற வேலைகள் செய்ய அதுவும் ஒய்யாரமாக வளர்ந்தது. என்னுடைய பத்தாவது வயதில் அந்த பேபி இறந்துபோக வீட்டில் இருந்த கொய்யா மரத்தின் அடியில் குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.
பெரிய குடும்பம் என்பதால் வேம்பாவில் தான் வெந்நீர் போடுவார்கள். செம்பு வேம்பா டீக்கடையில் பார்த்திருப்பீர்கள். உள்ளே தண்ணீர் நிரப்பி விடுவார்கள். அடிப்பாகத்தில் ஒரு இரும்பு தட்டு இருக்கும். கரித்துண்டுகளை தணலாக்கி அந்த தட்டில் வைப்பார்கள். அந்த சூட்டில் வேம்பாவில் உள்ள தண்ணீர் சூடாகி விடும். வேம்பாவில் உள்ள பைப் வழியாக வெந்நீர் பிடித்து பச்சை தண்ணீர் கலந்து குளிப்போம். விறகு அடுப்பு சமையல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி, அம்மியில் அரைத்த சட்னி என ருசியான சாப்பாடு. அதுவும் அரிசியும் எங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து அரைத்தது. ருசிக்கு கேக்கவா வேண்டும். காய்கறிகளும் உரம் போடாத இயற்கையானவை. கேரட், வெண்டைக்காய் இவை மிகவும் பிஞ்சாக கிடைக்கும். பச்சையாகவே சாப்பிடுவோம். வெண்டைப் பிஞ்சு சாப்பிட்டே எங்கள் எல்லோருக்கும் கணக்கு நன்றாக போட வரும். அதிலும் என் அண்ணன்கள் கணக்கில் புலிகள் தான்.
கவிஞர் கண்ணதாசனின் மாமியார் என் பெற்றோருக்கு சொந்தம். கண்ணதாசன் வீடு எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில் இருந்தது. தமிழ்வாணன் வீடு அதே தெருவில் இருந்தது. அவர் மனைவியும் என் அம்மாவுக்கு பழக்கம். எனவே இவர்கள் வீட்டுக்கு என் அம்மா செல்லும்பொழுது நானும் போய் இருக்கேன். எங்கள் தெருவின் பத்தாம் நம்பர் இல்லத்தில் பாரதிதாசன் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அதே வீட்டில் வெளிநாடுகளில் இந்திய தூதராக இருந்த ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் (பெயர் மறந்துவிட்டது ) இருந்தார். அவரைப் பார்க்கவும் செல்வோம். கே. ஆர். விஜயா எங்கள் தெருவில்தான் இருந்தார். உடுமலைப்பேட்டை மில் மேனேஜரின் மகள் இங்கு ஹாஸ்டலில் தங்கி படித்தாள். எனவே லீவு விட்டால் எங்கள் வீட்டுக்கு வருவாள். அவளது தோழியையும் அழைத்து வருவாள். பிற்காலத்தில் அந்தப் பெண் தோழி சென்னையில் மெட்ராஸ் ஹைகோர்ட் சீப் ஜட்ஜீக்கு மருமகள் ஆனாள். எங்கள் வீட்டில் உமி, கரி, உப்பு இவற்றை வறுத்து அரைத்த பல்பொடியில்தான் பல் விளக்குவோம். அவர்கள் இருவரும் பேஸ்ட், பிரஷ் கொண்டுவந்து பல் விளக்குவார்கள். எங்கள் மூவருக்கும் சமவயது. அப்பொழுது எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்த புதுசு. 1960 என நினைக்கிறேன். அதில் போக வேண்டும் என அவர்கள் இருவரும் அடம்பிடிக்க என் தந்தை எங்கள் மூவரையும் காரில் அழைத்துக்கொண்டு மாம்பலம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து எலக்ட்ரிக் ட்ரெயினில் ஏறி பீச் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து அதே ரயிலில் மாம்பலம் வந்து பிறகு காரில் வீடு வந்து சேர்ந்தோம். இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்கள் வீட்டுக்கு யார் விருந்தாளியாக வந்தாலும் அவர்களை மியூசியம் , மிருகக் கண்காட்சி, பீச், மகாபலிபுரம் என அழைத்துச் செல்வோம். அப்படி நிறைய தடவை இந்த இடங்களுக்கு நான் போயிருக்கிறேன். மகாபலிபுரம் போகும் பாதை (ஓ.எம்.ஆர் ரோடு) முழுக்க மரங்கள் இருக்கும். அதில் நாவல்ப்பழ மரம் நிறைய இருக்கும்.
காரை நிறுத்தி நவ்வாப் பழங்களை பொறுக்குவோம். போகும் வழியில் திருக்கழுக்குன்றம் செல்வோம். மலைமேல் உள்ள சிவன் கோயில். அங்கு மதியம் சரியாக 12 மணிக்கு இரண்டு கழுகுகள் வானில் வட்டமடிக்கும். மலையில் சமதளமாக உள்ள ஓரிடத்தில் ஒரு ஐயர் இரண்டு பிரசாத உருண்டைகளை வைத்து காத்திருப்பார். இரண்டு கழுகுகளும் வந்து பிரசாதத்தை சாப்பிட்டு பின் பறந்துவிடும். தினமும் தவறாமல் இது நடக்கும் மனிதனுக்கு புரியாத ஒரு ஆச்சரிய நிகழ்வு அது.
நெல் அவிப்பது என்றால் என்னவென்று தெரியுமா? திருவையாறு நிலத்திலிருந்து நெல் மூட்டைகள் வரும். அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தோம். அவர்கள் பரம்பரையாக குத்தகை எடுத்து அங்கேயே வாழ்ந்தார்கள். போன நூற்றாண்டில் தஞ்சாவூர் பக்கம் மூன்று போகம் நெல் விளைவிப்பார்கள். இரண்டு போகம் ஆனது. இடையில் வேறு பயிர் விளைவிப்பார்கள். வருடா வருடம் என் தந்தை சென்று வயலை பார்த்துவிட்டு நெல் மூட்டைகளை ஊருக்கு ஏற்றிவிட்டு, காய்ந்த வாழை இலை, தையல் இலை என கொண்டு வருவார். தையல் இலை என்பது ஒரு மரத்தின் இலைகளை ஈர்க்குச்சி கொண்டு தைத்திருக்கும். உணவு பொட்டலம் கட்டுவதற்கு அதைத்தான் உபயோகப்படுத்துவோம். காய்ந்து கெடுக்கும், இல்லை என்றால் பெய்து கெடுக்கும் மழை என சொல்வார்கள். குத்தகைக்காரரும் இதையேதான் என் தந்தையிடம் சொல்வார். ஆக படிப்படியாக நெல் மூட்டைகள் குறைய இறுதியில் என் தந்தை நிலத்தை அவர்களையே எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டார். நாம் அனுபவித்தது போதும் அவர்கள் பிழைக்கட்டும் என்று கூறிவிட்டார்.
தந்தை வேலை பார்த்த மில் பக்கத்திலிருந்து வேலையாட்களை வரச்சொல்லி நெல் அவிப்போம். முதல் நாள் இரவு இரண்டு பெரிய சிமெண்ட் தொட்டிகள் இருக்கும். அவற்றில் நீர் நிரப்பி அதனுள் நெல் மூட்டைகளைப் பிரித்து கொட்டி ஊற வைப்பார்கள். கிணறு பக்கமாக இருக்கும். மழைக்காலத்தில் கையாலேயே நீரை அள்ளலாம். அப்படி ஒரு கிணறு. அதிகாலை 3 மணிக்கு விறகு அடுப்பு மூட்டி பெரிய அண்டாவில் (பித்தளை) நெல் வேக வைப்பார்கள். அதற்கென பெரிய கரண்டி, மூடி இருக்கும். நெல் அவிக்கும் போது வரும் வாடை நன்றாக இருக்கும். இப்பொழுதும் கிராமங்களை ஒட்டி போகும் போது நெல் அவிக்கும் வாடை வந்தால் மூச்சை இழுத்து விடுவேன். வெந்த நெல்லை கரண்டியால் அள்ளி ஒரு பிரம்புக் கூடையில் போட்டு நீர் வடிய விட்டு வாசலில் கொட்டி, பரப்பி காய வைப்பார்கள்.
பிறகு நெல்லை வீட்டுக்குள்ளேயே கொட்டி பரப்பி விடுவார்கள். தினமும் அந்த நெல்லை காலாலேயே கீழ் மேலாக புரட்டி விடுவது எங்கள் வேலை. நன்கு காய்ந்த பிறகு மூட்டையாகக் கட்டுவார்கள். அரவை மில்லுக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் அங்கேயே உட்கார்ந்து கொள்வோம். நெல் அரைக்கும் போது உமி தனியாக, தவிடு தனியாக, அரிசி தனியாக வரும். மூட்டைகளில் கட்டி அவற்றை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வருவோம். அரிசி புடைக்க பெண்களை வரவழைத்து முழு அரிசி, அரை அரிசி, குருணை, பொடிக்குருணை எனப் புடைத்து எடுப்பார்கள். மிகவும் பொடிக்குருணையை கோழி, மாடு வளர்ப்பவர்களுக்கு கொடுப்பார்கள். பெருங்குருணையை கஞ்சிகாய்ச்சுவார்கள். அரை அரிசியை தோசைக்கு போடுவார்கள். முழு அரிசி சாப்பாட்டுக்கு. இரண்டு போக நெல்லில் ஒரு போகம் சம்பா. அது சாதத்திற்கு பயன்படும். அடுத்த போகம் குறுவை. அந்த அரிசி இட்லிக்கு பயன்படும். அவிக்காத நெல்லை பச்சையாக அரைப்பதே பச்சரிசி. பலகாரங்களுக்கு பச்சரிசியை பயன்படுத்துவோம். நகரத்தில் வாழ்ந்தாலும் கிராமத்து வாழ்க்கை முறையை பின்பற்றி தான் வாழ்ந்தோம்.
தொடரும்...





அருமை,நாமும் உணர்ந்தேன் நெல் அவிக்கும் வாசனையை,இதே மாதிரி குதிர் இருந்தது.என்றும் பசுமையான நினைவுகள்😊
ReplyDelete