Friday, April 29, 2022

சமூக அக்கறை சிறுகதை by Veena Sankar

  

சமூக அக்கறை 



                                                       பேருந்து   நிலையத்திற்கு     அருகே   ஒரு   இ - சேவை மையத்தில் ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.  அங்கே நின்று கொண்டிருந்த வெளியூர் நண்பர்கள் இருவர், அங்கே என்ன  இருக்கிறது? எதற்கு இத்தனை கூட்டம்? என்று தெரியாமல் திகைத்து நின்றனர். “என்னப்பா ஏதாவது வேலைக்கு   ஆள்  எடுக்கிறார்களா? தெரியவில்லையே?” என்று சொல்லும் பொழுதே இரு  நண்பர்களில் ஒருவரின் அலைபேசி  சிணுங்க,   தன்  அலைபேசியை எடுத்தவர் என்ன என்று விசாரித்து பதில் சொன்னவர்,   தன் பேச்சினூடே  தான் வந்திருந்த ஊரைப்பற்றி எதிர்  முனையில்   இருப்பவரிடம்,   “நம்ம  ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு  வரை படித்த பிள்ளைகள் எல்லாம்   கூலி வேலைக்கு    போறாங்க.       ஆனால் டவுனுக்கு வந்து பார்த்தா தானே தெரியுது,  எவ்வளவு வேலை கொட்டிக்கிடக்குது  என்று.  எத்தனை பேர் புது வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்” என அந்தக்  கூட்டத்திற்கான காரணம்   தெரிந்தது   போல்  சொன்னார்.


                                                   பேசி   முடித்ததும் அலைபேசியை துண்டித்து பக்கத்தில் உள்ள இளநீர் கடைக்கு  சென்றனர் நண்பர்கள்.  அலைபேசியில் பேசிய நண்பரே மீண்டும் கூட்டத்தை பற்றி தன் பக்கத்தில் இருந்த நண்பரிடம் சிலாகித்தார்.   மேலும் அந்த இளநீர் கடைக்காரரிடம் கூட்டத்தை பற்றி விசாரிக்க, இளநீர் கடைக்காரர் “அரசுத் தேர்வுக்கு அறிவிப்பு வந்திருக்கிறது. அங்கே போட்டோ, ஜெராக்ஸ், இ - சேவை மையம்,   ஜூஸ்   கடை,   கம்ப்யூட்டர் கடை என மொத்தமாக ஒரே இடத்தில் இருப்பதால் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.    நாற்பது ஆண்டு காலமாக அந்த கடை வெற்றிகரமாக நடந்து வருகிறது. காலத்திற்கு ஏற்ப அவர்களும் கடையை விஸ்தரித்து, சமூக நலன் கருதி மற்ற கடைகளை விட  குறைவான கட்டணம் வசூலித்து சேவை செய்து வருகிறார்கள். அதனால்தான் அங்கே எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அந்த கடையை தெரியாதவர்கள் இந்த ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் என்ன வெளி ஊரா?  என்றான் அவர்களுக்கு  இளநீர் வெட்டியவாரே. 


                                               “ஆமாம்” என்று தலையை ஆட்டியவாறும், “ஓ! அப்படியா! என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அங்கே இளநீர் குடித்துக்கொண்டிருந்த மற்றொருவர் அந்த தம்பி சொன்னது உண்மைதான் என்று தலையசைத்து ஆமோதித்தார். “அதற்கு மேலே அங்கே வேலை செய்பவர்கள், வரும் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வார்கள்.  அங்கே, அரசு தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?  எந்த புத்தகம்  படித்தால்   பயனுள்ளதாக   இருக்கும்?   என்பதை விளக்க ஒரு அறையில் ஒருவர் அமர்ந்து இருப்பார்.  மேலும் வந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் மறக்காமல் தன் வாழ்த்துக்களை   சொல்வதோடு மட்டுமல்லாமல் வந்ததற்கு நன்றி தெரிவிப்பார்.” என சொன்னார். அதைக்கேட்டதும் “ஓஹோ!  கேட்கும்போதே ரொம்ப மனதுக்கு இனிமையாக இருக்கிறது.  இந்த காலத்திலும் இப்படி ஒரு சேவை மையமா? ”  என்று சொல்லி இளநீர் சாப்பிட்டு புறப்பட்டனர். 


                                                    அரசு   தேர்வு   பற்றிய    விவரங்கள் தெரியாத  நம்ம ஊர் பிள்ளைகளுக்கு இதை போய் சொல்லணும் என தங்களுக்குள் பேசிக்கொண்டனர். நேராக அந்த  இ - சேவை மையத்திற்கு சென்று வாழ்த்து சொல்ல சென்றனர். அங்கு இருந்த  மையத்தின் முதலாளியிடம் வாழ்த்துக்களை தெரிவித்து,   “உங்கள்   பையன் என்ன   செய்கிறார்?” என்று கேட்க, ”  அதோ அந்த அறையில் இளைஞர்களுக்கு அரசு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி   விளக்கி கொண்டிருக்கிறான்.”  என்று பதில் சொன்னார்.


                                                      சற்று  முகம்  மலர்ந்து,  “நான்    ஒரு   விஷயம்   கேட்கிறேன்.   நீங்கள் தப்பாக நினைக்க கூடாது” என்று   கேள்வி கேட்டவரிடம், என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு,  “கேளுங்கள்” என்றார் மையத்தின் முதலாளி.   “இவ்வளவு விஷயம் தெரிந்து   இருக்கும்   உங்கள்  மகனே, அரசு    தேர்வு எழுதி   நல்ல நிலைக்கு  வந்திருக்கலாமே?” என கேட்டதும் “நம்மை மேலே ஏற்றி விடும் ஏணியும் , ஆசிரியர்களும் அதே இடத்தில் தானே  இருக்கிறார்கள்.  போதும் என்று நினைக்கும் மனதும் மற்றவர்களுக்கு உதவ  வேண்டும் என்ற எண்ணமும்   நம்மை   உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். இப்போது பாருங்கள்! எங்களுடைய பணியை வாழ்த்த   முழு   மனதோடு   நீங்கள்  இருவரும் வந்திருக்கிறீர்கள்.   இது எங்களின்  சமூகப்  பணியை சிறப்பாக தொடர  உந்துதலாக இருக்கும்”  என்று சொல்லி சிரித்தார்.  அவரின் கையை  குலுக்கியவாறு  மையத்தின்   சமூகப் பணி   தொடர வாழ்த்தி  விடை பெற்றனர் வெளியூர் நண்பர்கள்.


         சிறப்பினால்   பக்குவம் கொள்ளும்    மனமும்    பிறர் 

         சிரிப்பினால்  பிறக்கும் சந்தோஷமும் அனுபவிக்க இனிமை.



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...