Saturday, March 6, 2021

நாச்சியாரின் பயணம் by Nachammai

                                           கல்லூரிக் காலம்

   1969இல் ஏப்ரலில் எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்து கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன் .அப்போதெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு என்பது பி. யூசி யுனிவர்சிட்டி என அழைக்கப்பட்டது. கல்லூரியில் தான் படிக்க வேண்டும் .என் பெற்றோர் ஊரில் வேலையாக இருந்ததால் நானே கல்லூரிகளுக்கு அப்ளை செய்தேன். ஊரிலிருந்து தாமதமாக நான் வந்ததால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளில் மட்டும் விண்ணப்பம் அனுப்ப முடிந்தது. இராணி மேரி கல்லூரியிலிருந்து சேரச்சொல்லி கார்டு வந்தது .எனவே அங்கேயே சேர்ந்தேன். கடற்கரையின் எதிர்புறம் இருக்கும் அக்கல்லூரி ஒரு பெரிய சோலைவனம் .நிறைய மரங்கள் இருக்கும். ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து இன்னொரு டிபார்ட்மெண்ட் போகவே அவ்வளவு நேரம் ஆகும் .வேறுவேறு பிரிவில் படிப்பவர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வகுப்புகளுக்கு நடந்து சென்று படிப்பதே ஒரு அனுபவம் .பெரிய பெரிய வகுப்பறைகளாக இருக்கும். படிப்படியாக ஏறி உயரமான இருக்கையில் அமர வேண்டும். அட்டனன்ஸ் எடுத்து முடிக்கவே 10 நிமிடம் ஆகும் .நமக்கென எந்தத் தனித்துவம் இருக்காது. ஏனெனில் மொத்தம் 2000 மாணவிகள் கொண்ட கல்லூரி .




    பி.யூ.சி பாஸ் செய்தவுடன் தமிழ் பி.ஏ படிக்க விரும்பினேன். எல்லாரும் வேறு ஏதாவது படி என்றார்கள் .ஆனால் என் தந்தை அவள் விருப்பப்படி படிக்கட்டும் என விட்டு விட்டார். நான் விண்ணப்பித்திருந்த கல்லூரியிகளில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து முதலில் கார்டு சேரும்படி வந்தது. மற்ற கல்லூரிகளில் இருந்து பிறகு வந்தன .ஆனாலும் மகளிர் கிறிஸ்துவ கல்லூரிக்கு நல்லபெயர் இருந்ததால் என் தந்தை அங்கேயே சேரச் சொல்லி பணம் கட்டினார்.


   எந்தக் கல்லூரிக்கும் அவர் வந்ததில்லை .என் அண்ணன்கள் யாராவது கூட வருவார்கள். இந்தக் கல்லூரி நான் படித்த முந்தின கல்லூரிக்கு நேரெதிர். மொத்தமே 500 பேர் தான் படித்தனர். எனவே ஆசிரியர் பேராசிரியர் பிரின்ஸ்பால் எல்லோருமே நம்மைத் தெரியும். பெரிய லைப்ரரி இருக்கும் லைப்ரியேனும் (பெண்) நம்மிடம் நன்றாக பேசுவார். Chapel ஒன்று கல்லூரிக்குள்ளேயே இருக்கும். ஏனெனில் மகளிர் தங்கி படிப்பதற்காகவே நடத்திய கல்லூரி அது. நாங்களும் தேர்வு சமயங்களில் சென்று பிரார்த்தனை செய்வோம் .விடுதியில் தங்கிப் படித்த மாணவிகள்( தமிழ் பாடப் பிரிவில் மொத்தம் 11 பேர் தான் படித்தோம்) நான் கொண்டுவரும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் சாப்பாட்டை எங்களுக்கு தருவார்கள். நாங்கள் மதிய சாப்பாடு வீட்டிலிருந்து கொண்டுவருவதை அவர்களுடன் சேர்ந்து சாப்பாட்டு ஹாலில் தான் சாப்பிட வேண்டும். கேரள மாணவிகள் அதிகமாக இருந்ததால் காலையில் புட்டு ,வாழைப் பழம் தான் டிபன்.




   புட்டு சாப்பிட்டு நாக்கு செத்த என் தோழிகள் இரண்டாம் வகுப்பு ஆரம்பிக்கும் இடைவெளியிலேயே என் டிபன் பாக்சை எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். எங்கள் வீட்டில் காலையில் சாப்பாடு மதியம் இட்லியும் இருக்கும். என் தாய் மாற்றி சாப்பிட்டுக் கொள்வார் .நாங்களெல்லாம் காலை 8 மணிக்கு குழம்பு, தயிர் சாதம் தான் சாப்பிடுவோம். அதனால் என் தோழிகளுக்கும் சேர்த்து இட்லி கொண்டு போவேன். வீட்டு தேங்காயில் அரைத்த கெட்டிச் சட்னி தொட்டுக்கொள்ள.எங்கள் பேராசிரியர்கள் எல்லோரும் பொறுமைசாலிகள். எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளித்து எங்களுடன் இணக்கமாக பழகுவார்கள். H.O.D வீட்டுக்கும் மற்றொரு லெக்சரர் வீட்டுக்கும் சென்று இருக்கிறோம். அந்தளவுக்கு அன்பாக பழகுவார்கள்.Mrs.Lionel ,Mrs.Richard என்றுதான் எல்லோரும் அவர்களது கணவர்கள் பெயரிலேயே அழைப்பார்கள். அவர்கள் பெயர் என்னவென்பதை தெரியாது. தமிழ்ச் சங்கம் ஏற்படுத்தி அதில் நாடகம் ,பாட்டு ,நடனம் ,பேச்சு என மாதமொருமுறை நடத்துவோம் .பிரின்ஸ்பால் வந்து பார்ப்பார் .நான் ஒரு தடவை பாரதியாரின் காக்கை சிறகினிலே பாடலை பாடினேன் . மற்றொருமுறை சிலப்பதிகாரம் மதுரைக் கதையில் வரும் கண்ணகி நீதி காட்சியை நடித்துக் காட்டினோம் .பாண்டிய மன்னனாக 'யானோ அரசன், யானே கள்வன்' என விழுந்து உயிர் துறப்பது போல நடித்தேன்.


  டென்னிஸ் சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ் ,ஆனந்த் ,அசோக் மூவரின் தாய் எங்கள் கல்லூரிக்கு ஒரு விழாவுக்கு வந்து பேசினார். தன் பிள்ளைகளுக்காக தான் பட்ட கஷ்டங்களை கூறினார் .காலை 4 மணி முதல் இரவு வரை அட்டவணை போட்டு அதன்படி அவர்கள் நடப்பதற்காக அவரும் கூட இருந்து வளர்த்த கதையை கூறினார் .பிள்ளைகளை வளர்க்கும் முறையை என் மனதில் பதிந்தது .இதேபோல் நான் சாரதா வித்யாலயா பள்ளியில் படித்தபோது பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா பாரதி வந்து பேசினார் .பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் அவர் என் எதிரே வந்தார். ஆனால் அவரிடம் பேச வேண்டுமென அப்போது தோன்றவில்லை .இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அடடா பேசாமல் விட்டோமே என தோன்றுகிறது. அப்போது எனக்கு பாரதியாரைப் பற்றி பெரிதாக தெரியாது.( அப்பொழுது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் )ஆனால் இப்பொழுது பாரதியார் பற்றி நிறைய தெரிந்தாலும் யாரிடம் பேச முடியும் நல்ல வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும்.




  மூன்று Term முடியும் நாட்களில் 3 பார்ட்டிகள் கொண்டாடுவோம். அதுவும் இரவில்.காலையில் தான் வீட்டுக்கு வருவோம்.இரண்டாம் வருடம் படிக்கும்போது டெல்லி ,ஆக்ரா,ஜெய்ப்பூர் என மூன்று ஊர்களுக்கு டூர் சென்றோம் .ஒரு கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்தோம் .விடுமுறை என்பதால் அங்குள்ள மாணவிகள் ஊர்களுக்கு சென்று விட்டார்கள். அங்குதான் ஆண்-பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரியை பார்த்தேன் .ஆறாம் வகுப்பிலிருந்து கடைசிவரை பெண்கள் பள்ளி, கல்லூரியில் படித்ததால் மாணவர்களும் மாணவிகளும் ஒருவரை ஒருவர் தொட்டு பேசுவதை பார்த்து வியந்தேன். டெல்லியில் அசோகா ஹோட்டல் என்ற ஸ்டார் ஓட்டல் இருக்கும் .எங்களோடு டூர் வந்த தோழி (வேறு பிரிவு மாணவி) ஒருத்தி அப்பா அந்த ஓட்டலில் தங்கியிருந்தார். அவர்கள் பெரிய வசதி படைத்தவர்கள் .எங்கள் எல்லோரையும் காப்பி சாப்பிட அழைத்தார் .50 வருடம் முன்பு இந்தியாவிலேயே பெரிய ஓட்டல் அது .நாங்களும் சென்றோம் இப்பொழுது பெரிய ஓட்டல்களில் இருக்கும் லைட் ,இருக்கைகள் பரிமாறுபவர்கள் என்ற எல்லாமே அப்போதே அங்கு இருந்தது. நாம் உட்காருவதற்கு நாற்காலியை பின்னால் தள்ளி நாம் உட்கார்ந்ததும் முன்னால் தள்ளிவிட்டார் வெயிட்டர் . சர்க்கரைக்குப் பதிலாக கட்டியாக வைத்திருந்தார்கள். நாமே காப்பியை கலக்கிக் கொள்ளவேண்டும் .காப்பி குடித்து முடித்த பின் ஓட்டலை சுற்றிப் பார்த்தோம். மேல்மாடியில் பெரிய நீச்சல் குளம் .அதில் வெளிநாட்டு தம்பதி இருவர் நீந்திக் கொண்டிருந்தனர்.அவர்களது குழந்தையை ஆறு மாதம்தான் இருக்கும் நீந்துவதற்கு பழகிக் கொண்டு இருந்தனர் .எங்களுக்கு ஒரே வியப்பு . அடுத்த நாள் தாஜ்மஹால் அதற்கடுத்த நாள் ஜெய்ப்பூர் என சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் அவை.




   தி.க.வீரமணியின் மகள் என் வகுப்புத் தோழி.ஆகையால் திரும்பி வரும்போது இரயில் நிலையத்தில் எங்களை வரவேற்க பெரிய கூட்டம் நின்றிருந்தது. திருமணத்திற்குப் பிறகு அவள் கனடா சென்றதாக கேள்விப்பட்டேன். கல்லூரி முடித்த பிறகு தொடர்பு கொள்ள வழி இல்லை .கடிதம் ஒன்று தான் எழுத முடியும் .அதுவும் எல்லோருக்கும் அது வாய்க்காது .இதில் வேடிக்கை என்னவென்றால் நான் அசோக ஒட்டலுக்குப் போனதை என் அண்ணன்கள் நம்பவே இல்லை .கல்லூரியும் ஒரு சோலையாகத்தான் இருந்தது.தெருவில் இருந்து வெகு தொலைவு உள்ளே சென்றால்தான் கல்லூரியே தெரியும் .தினமும் கல்லூரிக்கு செல்ல பஸ் ஸ்டாப்புக்கு செல்லும் வழியில் நடிகர் சிவாஜி கணேசனின் கார் எதிரே வரும்.ஒவ்வொரு நாளும் வேறு வேறு கார். சில நாட்கள் மேக்கப்புடன் சில நாட்கள் மேக்கப் இல்லாமலும் இருப்பார். கரெக்டாக ஒரே நேரத்தில் தினமும் வருவார்.


   என் இரண்டாவது அண்ணன் மனைவி எம். ஏ எக்கனாமிக்ஸ் படித்தவர். ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ படித்தவர் .அண்ணன் மிலிட்டரியில் வேலை பார்த்ததால் படித்த பெண் வேணும் என்று கூறினார் .வட இந்தியாவில் பழகுவதற்கு படித்த ஆங்கிலம் பேசத் தெரிந்த பெண் வேண்டும் என கூறியதால் ஒரே வயதுடைய (26 நாட்கள் தான் அண்ணி இளமை) பெண்ணை திருமணம் செய்தார்கள்.நாங்களாவது பட்டணத்தில் வாழ்ந்தோம் .என் தந்தை 1935லேயே கல்லூரியில் படித்தவர் என்பதால் எங்களை படிக்க வைத்தார். பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .ஆனால் என் அண்ணியின் தந்தை எங்கள் ஊர்ப்பக்கம் வாழ்ந்தவர் வசதியானவர் .என்றாலும் அதிகம் படிக்காதவர் ஆக இருந்தாலும் மகளை படிக்க வைத்திருக்கிறார். அதுவும் வெளியூருக்கு அனுப்பி. திருமணத்தின்போது அண்ணி பள்ளத்தூர் கல்லூரியில் ஆசிரியையாக இருந்தார் வீணை வாசிக்க கற்றுக் கொண்டிருந்தார் .


    அவரது தந்தை சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றம் கட்டும்போது பணம் கொடுத்திருக்கிறார் .அதனால் வருடா வருடம் டிசம்பர் மாதம் சங்கீத சீசனில் ஒரு டிக்கெட் அவருக்கு உண்டு .அந்த டிக்கெட்டை எங்களுக்கு கொடுத்தார்கள். அண்ணனும் அண்ணியும் வட இந்தியாவில் இருந்தார்கள் .அரங்கத்தின் மேடையில் இருந்து 9 வது வரிசை டிக்கெட் அது. நிகழ்ச்சிகளை வெகு அருகில் பார்க்கலாம்.ஜெயலலிதாவின் நடனம் அங்கு நடந்தது .அதற்கு எம்.ஜி.ஆர் வந்திருந்தார் .அப்படி ஒரு நிறம்.வீணை சந்திரன் வீணை கச்சேரி, எம். எஸ் .சுப்புலட்சுமியின் கச்சேரி ,நாடகம், நடனம் என நிறைய நிகழ்ச்சிகளை கண்டு களித்திருக்கிறேன். என் மூன்றாவது அண்ணன் நிறைய நாடகங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் .எங்கள் ஊர் திருவிழாவில் கூத்து விடிய விடிய நடக்கும் .ஆரம்பிக்கும் முன்னே பாய் கொண்டுபோய் போட்டு உட்கார்ந்து வறுத்த புளியங்கொட்டையை தின்று கொண்டு கூத்து பார்த்திருக்கிறேன்.விடிந்த பின்பு பார்த்தால் வீட்டில் இருப்பேன். எப்படி வீட்டுக்கு வந்தோம் என குழம்புவேன்.நடந்து வந்து வீட்டில் படுத்தது நினைவிருக்காது .இப்போது கூத்து அருகிவிட்டது.


  எம் .ஏ தமிழ் படிக்க நான் விண்ணப்பித்திருந்த 3 கல்லூரியில் இருந்தும் சேரச் சொல்லி கார்டு வந்தது .ஆனால் என் தாய் இதற்கு மேல் படித்தால் மாப்பிள்ளை தேட முடியாது என்று தடுத்துவிட்டார்கள் .ஆசிரியர்கள் நாங்கள் வந்து உன்னை எம்.ஏவில் சேர்த்து விடுகிறோம். நீ அவசியம் படிக்கவேண்டும் என சொன்னார்கள் .ஆனால் நடக்கவில்லை .டைப்ரைட்டிங் க்ளாஸ் ஆறு மாதம் படித்தேன் .Short hand மூன்று மாதம் படித்தேன் .பிறகு தையல் கிளாஸ் 6 மாதம் சென்றேன் .எல்லா வகையான கற்றல்களும் திருமணத்தில் முடிந்தது. வேறு ஒரு விதமான வாழ்க்கை ஆரம்பித்தது .நான் விரும்பி கற்றது போக வாழ்க்கை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது.


3 comments:

  1. மிக அருமைான பயணம்

    ReplyDelete
  2. ஆச்சரியமாக உள்ளது அந்த காலத்திலேயே டில்லி வரை பயணம்,இரவு பார்ட்டிகள்.கடைசி வரி அருமை👌👏👏

    ReplyDelete
  3. Last line super.correct words.very interesting aunty.we wish to join in ur journey. Waiting....

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...