Tuesday, September 30, 2025

படமும் கருத்தும் by Veena, Kiruthika and Vidhya

 


எவனுக்கு எவன் செய்யும் உதவி

எலும்புக்கூடாய் மாறிய மனிதனுக்கு

பணம் தேவையில்லை

பணம் பத்திரமாய் பாதுகாக்க இவன் மனிதனுமில்லை


உன் கடைசி சடங்கிற்காகவாவது பணத்தை சேமிக்க சொல்கிறது

இந்த எரியூட்ட பணமில்லாததால் மாறிய எலும்புக் கூடு

மனங்கள் பார்த்து பூத்த காதல்

இங்கே

ஒன்று பணமாய் மற்றொன்று எலும்புக்கூடாய்

பணத்திற்கு மனம் விலை போனதால்

இந்த அவலம்

- Veena 


இது மட்டுமே நிரந்தரம் என்பதை

 நிரந்தரமற்றதே

 கற்றுக்கொடுக்கும் ..

ஒன்றின் பின்னால் ஓடும் போது

 பல மாற்றங்கள் வரும் ஆனால்

 அதில் மெய்யை உணர தனது

 மெய்யை மறந்துவிடும் மாக்கள்!

- Vidhya 

இங்கு 

எதுவுமே நிரந்தரம் இல்லை...!..

அது -

மனமோ..

பணமோ...!..

இருந்தும்...

இரண்டின் ஒன்றின் பின்னே தான்..செல்கிறது பலரது வாழ்க்கையும் இங்கே...!....

பற்றாக்குறையும் சரி..

அளவுக்கு மீறினாலும் சரி ...

ஆபத்து தான்...!..

ஒன்று

வறுமை..

இன்னொன்று..

வெறுமை...!..

பணம் இல்லாது மனம் - வாழ ..வறுமை பழக செய்யும்..!..

 ஆனால் ...

மனம் இல்லாது 

பணம் - பிணமாக தான் ஆக்கும் ..!..

உயிர் இருக்கும் போதே...!....

- Kiruthika 


Thursday, September 25, 2025

அன்புள்ள காதலியே by Veena Shankar

 


அன்புள்ள காதலியே!


என் பிரதிபலிப்பாய் நீ இருக்க 

நான் வேண்ட

உன் வசம் என் சுவாசம் வீச

நான் வேண்ட

உன் மெய்யழகு என்

அறிவை மெய்யாலும் இழக்க 

என் மெய்யும் வாய்மை

இழந்து முன் கொண்ட காதலை மறக்க

அது உன்னிடம் மறைக்க 

நான் நானாகவில்லை இப்போது

கடிதம் வரைந்து என் காதலை உன்னிடம் 

மெய்ப்பிக்க காகிதம்

கூட இல்லை

சிலாகித்து பேச உனக்கு

நேரமுமில்லை 

ஒரு வரி கூட ஒரு கோடி 

எண்ணங்கள் சொல்லும்

மனதில் வரிகள் வரைந்தாலும்

அதுவும் வலிகளாய் 

மாற காண்கிறேன்

மாற்றம் இயல்புதான்

அது ஏமாற்றம் தாராத வரை

வலிகளும் இனிமைதான்

அது சுமை என்று எண்ணாத வரை

பல வார்த்தைகள் பகிர நான் வேண்ட

உன் முன்னே

பல நிஜங்கள் 

கடமை என்று சொல்லி நிழலாட 

வழி தெரியாது நானும் உன்

வருகைக்காக ஏங்க 

என் வருகையை கூட

நீ மறுக்க

ஏதும் வருவது எது வரை

என்றறியாத போது

வாழ்வில் காதல் மட்டும்

நீடிப்பதும் ஏனோ?

முடி சூடா மன்னன் போலே

வாழ்வில் அடைந்த

இன்னல்களும் என் 

கண் முன்னே

அடி தொடும் வரை

இறைவனும் எனை 

சோதிக்க

அவன் அடி தொடவும்

என் மனம் விலகி நிற்க

உன் காலடி தேடி வர

 நான் நினைக்க

அவன் படுத்தும் பாடு

எதுவும் அப்பாற்பட்டதே!

முன்பு கிழித்த மடல்கள்

இப்போது வஞ்சம் தீர்த்தன 

கிழிந்த நெஞ்சத்தால் 

தற்காத்து கொள்ள கற்ற கலையும்

உன்னிடம் தோற்க

என்னிடம் உன்னைக் கொடு என்றேன்

Wednesday, September 24, 2025

(ரகசிய) உதவிக்கு நன்றி by Veena Shankar

 


(ரகசிய) உதவிக்கு நன்றி


நிவேதா பட்டப் படிப்பு படித்து இருந்தாலும் நல்ல வேலை கிடைக்காமல் தட்டு தடுமாறியே ஒரு சிறிய வேலையில் சேர்ந்தாள். ஆனால் அவளுடைய வருமானம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை. தந்தை இழந்த குடும்பத்தில் தன் தங்கையின் படிப்பு, வீட்டு செலவிற்காக கூடுதல் வருமானத்தை ஈட்ட நினைத்தாள். அப்போது தான் அவள் கல்லூரி தோழி அஞ்சலி சினிமாவில் நடிப்பது நினைவு வர, தன் தோழியிடம் தனக்கும் சினிமாவில் ஏதும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டாள். முதலில் மறுத்த அவள், நிவேதாவின் பொருளாதாரத்தை எண்ணி உதவ நினைத்தாள். இருந்தாலும் நிவேதாவிடம் சினிமா துறை என்பது பெரிய கடல், அதில் மூழ்கி முத்தெடுப்பது சிரமம் என்று சொல்ல அவள் தவறவில்லை. அவள் சொல்லியும் நிவேதா கேட்காததால் அஞ்சலி, அவள் பேச்சிற்கு செவி கொடுத்தாள். உஷாராக இல்லாவிட்டால் படு குழியில் விழுவாய் என்றும் எச்சரித்த பிறகே நிவேதாவை ஒரு பெரிய சினிமா பட கம்பெனிக்கு அழைத்து சென்றாள்.


அந்த கம்பெனியின் பி. ஆர். ஓ. விடம் ஏற்கனவே தன் வருகையை அஞ்சலி சொல்லியிருந்தாலும் மீண்டும் அவரை அலைபேசியில் அழைத்து நிவேதாவை பற்றி அவரிடம் நினைவுபடுத்தினாள். ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் நிவேதாவை அறிமுகப்படுத்தி தான் தன் படப்பிடிப்பிற்கு மிக அவசரமாக கிளம்பி சென்றாள். அவள் சென்றதும் அப்பெண்ணும் நிவேதாவை ஏற இறங்க பார்த்து போனில் யாரையோ தொடர்பு கொண்டு, அழைப்பு வரும் வரை காத்திருக்குமாறு நிவேதாவிடம் சொன்னாள். தலையை மட்டும் ஆட்டி இருக்கையில் அமர்ந்தாள் நிவேதா. சில மணித்துளிகளில் அழைப்பு வர, ரிசப்சனிஸ்ட் சொன்ன பாதையை நோக்கி நடந்தாள் நிவேதா.


 முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை என்பதால் சென்னை வெயிலுக்கு இதமாய் இருந்தது. அதுவரை பதற்றப்படாத நிவேதா அஞ்சலியின் முன் சொன்ன வார்த்தையை ஒப்பிட்டு பார்த்தாள். உள்ளூர ஓர் பயம் தொற்றிக் கொண்டது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்து நிற்க, " ஹலோ!" என்ற குரல் அவளை மேலும் பதற்றத்துள்ளாக்கியது. ஒருவாறு சமாளித்து "ஹலோ! " என்று சொல்ல அவள் குரல் திக்குமுக்காடியது நன்றாக எதிரிலிருப்பவருக்கு தெரிந்தது. 


" வாம்மா! உட்கார்" என்றார் ஓர் அறுபது வயது மதிக்கதக்கவர். "அஞ்சலி சொன்னா! அவள் வார்த்தையை என்னால் மறுக்க முடியுமா?" என்று சொல்லியவாறே அவர் நிவேதா பக்கம் வந்து, "என்னமா! இன்னும் தாவணிய சுடிதார்ல மூடியிருக்க. இப்ப இருக்குற ட்ரெண்டுக்கு மாத்திக்கோம்மா " என்று சொல்லி அலமாரியில் இருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டையும் டி ஷர்ட்டையும் போட்டுக் கொள்ள பணித்தார். "இல்ல சார் இதுவே எனக்கு கண்வீனியன்ட்டா இருக்கு " என்று தன் வேர்த்த நெற்றியை துடைத்தாள். எங்கும் எந்நேரத்திலும் பிசகி விடக்கூடாது என்பதில் முடிவாய் இருந்தாள் 


" சரிம்மா நாளைக்கு வரும் போது நல்லா மாடர்னா வரணும் " என சொல்லி அவளை பற்றி விசாரித்தார். அவளைப் பற்றி அவரிடம் சொல்லி முடிப்பதற்குள் அவள் குரல் பல இடங்களில் உடைந்தது. " அந்த டெஸ்டிங் ரூமிற்குள் போ! நானும் வருகிறேன்" என்றார் அவர். 


முன்பின் அறிமுகமில்லாத இடத்தில் அதுவும் தனியாக இருக்கிறோமே என்று படபடத்தாள் நிவேதா. இவள் உள்ளே செல்ல, அவரும் பின் தொடர்ந்தார். அவரின் மூச்சுக் காற்று இவள் மேல் படுவதாய் உணர்ந்தாள். சரி வந்து விட்டோம் என்ன நடந்தாலும் நாம் நம் தைரியத்தை விடக் கூடாது என்ற மன நிலைமைக்கு வந்தாள்.


அப்போதே அவள் முன் ஒரு பேப்பரை கொடுத்து படிக்க சொன்னார் அவர். முதலில் குழறிய அவள் நாவு , பின் சரியானது. ஒரு பக்கத்தை ஏற்ற இறக்கத்தோடு அவள் படித்து முடிக்க, " வெரி குட்!" என்றார். 


"நீ படிக்க ஆரம்பிச்ச போது ரொம்ப தப்பு தப்பா படிச்ச, ஆனா முடிக்கும் போது சரியா இருந்தது. உச்சரிப்பும் அருமை " என பாராட்ட, " இல்லை சார், கொஞ்சம் பயமா இருந்துச்சி அதான்" என்று இழுக்க, " முதலில் அப்படித்தான் இருக்கும் போக போக எல்லாம் அட்ஜெஸ்ட் ஆகிடும்" என்று அவர் சொல்ல, வேறு மாதிரியான பயம் அவளை தொற்றிக் கொண்டது. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்ற வாசகம் அவள் கண் முன் பிரேம் போட்டு காட்டியது. 


"சரிம்மா! இன்னிக்கே நீ ஆடிசன் போயிடு. மேலே இருக்குற ரூம் தான். நான் போன் பண்ணி சொல்றேன். இப்ப படிச்ச மாதிரி நிறைய டேக் போகாம டயலாக் பேசிடு" என்று கூறினார். "அப்புறம் உனக்கு உண்டான சம்பளத்தை அன்னனைக்கே போட சொல்லி விடுகிறேன். சரியா? உன் வீட்டு நிலைமை, உன்னோட குரல் வளத்தை பற்றியும் அஞ்சலி எல்லாம் சொல்லியிருக்கா. உன்னோட ஆபிஸ் வேலை முடிஞ்ச பிறகு இங்க வந்து டப்பிங் வேலையை பாரு! " என்று சொல்லியவாறே வெளியேறினார். மனதில் இருந்த பயம் விலக , அவளும் டப்பிங் ரூமிற்கு நடையை கட்டினாள்.  


இவள் வருகைக்காக தயாராக டயலாக் பேப்பரோடு இருந்த ஒருவர், அவளை டப்பிங் ரூமிற்கு அனுமதித்தார். 


" என்னடா! இந்த பொண்ணு இன்னிக்கி தான் சாரை மீட் பண்ணியிருக்கு. அதுக்குள்ள நம்ம சாரும் ஏதும் கேள்வி கேட்டு படுத்தாம இந்த பொண்ணை செலக்ட் பண்ணிட்டாரு" என்று அங்கிருந்த ஒருவர் கேட்க, " அது அஞ்சலி ரெக்கமண்டேஷன் ல வந்து பொண்ணுடா! கத்தி பேசாத" என்று இன்னொருவர் சொல்ல," ஓ ! அப்படியா, சரி! சரி!" என தலையாட்டிய படி நகர, தோழிக்கும் இந்த பட நிறுவனருக்கும் அப்படி என்ன உறவு இருக்கும்? என்று சினிமா பின்னணி தெரியாத நிவேதா யோசித்தாள். தன் தோழியின் திரை மறைவு வாழ்க்கை இதுவோ? என நினைத்தாள் நிவேதா. பின் தனக்கு தானே, கஷ்டத்தில் உதவிய தோழியை தராசு போட்டு எடை போடக் கூடாது என்றெண்ணி சில உண்மைகள் வெளி வராத வரை எவருக்கும் நன்மையே என்ற கூற்றுக்கு வந்தாள்.


மனதார அவளுக்கு உதவிய தன் தோழி அஞ்சலிக்கு நன்றி சொன்னாள்.


சில நேரம் ரகசியங்கள் உடையலாம், ஆனால் அது காக்கப்படுவது என்றும் சிறப்பே!

Monday, September 22, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


சேலையின் வரிகள் 

சொல்வதென்ன அவள்

மன வரிகளையா?

இல்லை 

அவள் தொலைத்த முகவரியையா?

இல்லை 

அவள் மனவலிகளையா?

சேலை கட்டிய பெண்ணிற்கு

வாசமுண்டு

என்பது பொய்யோ?

வாசமலர் கூட சூடாமல்

அவள் வாசம் இழந்தாலே!

ஏன் என்ற வினாவின்

முன் விடை கொடுக்க

முடியாமற் போவதும் உண்டு பல சமயங்களில்

 ஜன்னலோர வெளிச்சம் கூட இங்கே

இருளானதே!

மனதின் ஆசை கூட ஓசையின்றி இசைத்ததே! 

எதுவும் வடிவம் பெற உண்மையும் எதிர் நிற்குமே!

கலங்காதே மனமே!

நீ உன்னை புரிந்து கொள்ளும் வரை தான் அறியாமை

- Veena 

அன்னையின் மடி போன்ற

 ஆறுதலை தரும் ஓர்

 இடம்,காற்றும் கம்பியின்

 அனுமதி பெற்ற பின்னே

  தலைக்கோத, அதன் தாலாட்டில்

 உறங்க எந்த தலையணையின் 

துணையும் வேண்டாம்..

- Vidhya 

Sunday, September 21, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


வழி தெரியாமல் நிற்கும் போது

தன் விழியால் நம்மை தாங்கியவரை 

அவர் விழி தெரியாத போது

தாங்க மறுப்பதும் ஏன்


படித்த உண்மைகளை கூட

வீட்டில் நிஜமாக்க 

தெரியாதவர் தந்தை

குடும்பத்தின் சுவர் அவரே

என்ற இறுமாப்பு இருந்ததில்லை 

பெண் பிள்ளைகளிடம்

குழந்தைக்கு தாலாட்டு பாடி கேட்டதில்லை

ஆனாலும் பாசத்தில் ஈடில்லை 

சிறு வயதில் பிள்ளைகளை தூக்கி நடந்ததில்லை

தன் கால்களில் மேலேறி

பிள்ளைகள் விளையாடி களிப்பதால்

வலி தாங்கும் இதயம்

எத்தனை முறை அடித்தாலும்

கண்ணீர் விட தெரியாது

கம்பீர குரலுக்கு சொந்தம் என்பதால்

- Veena 

வீட்டின் தூண்,சிறு விரிசல்

 கொண்டாலும் பராமரிப்பு

 இல்லாமலே தன்னை தானே

 புதுப்பித்து மீண்டும் பிறக்கும் ஓர்

 உயிர்,முதுமையிலும் குடும்பம்

 தன் பொறுப்பு என்று நிற்காமல்

 ஓடும் கடிகாரம்,தேவையறிந்து

 துணை நிற்கும் ஓர்

 உயிர்,பாசாங்கு செய்ய தெரியாத

 குழந்தை ,அவருக்கு எதுவும்

 நிகர் இல்லை இந்த உலகில்...

Vidhya 

Saturday, September 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


உழைக்கும் கரங்கள் இங்கே

முக மலர்ச்சியோடு

உழைப்பை கரத்தில் 

தாங்கும் இதயங்கள்

ஒன்று கூடின

எதிர்கால வாழ்வுக்காக


 எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் 

ஓர் பயணம் 

எறும்பு போல்

ஓர் அணியாய் 

இசையின் 

ஓர் சுவரமாய்

ஒற்றுமையில் 

ஓர் மனதாய்

கைப்பற்ற நினைக்கும் 

ஓர் இலக்கிற்காக

இல்லத்தில் இருக்கும் 

ஓர் உயிரை காக்க 

ஓய்வில்லாமல் 

ஓர் பிழைப்பு

ஓசையில்லாமல் 

ஓர் குரல்

ஆசையில்லாமல் 

ஓர் அறிவின் செயல்

இது தானே குடும்பத்தின் 

ஓர் சுவை

- Veena 

நேற்று என்று ஒன்று இல்லை

நாளைய பற்றிய கவலை இல்லை

இன்று மட்டுமே நிஜம் என்று

துள்ளிச்செல்லும் கால்களுக்கு

 வலிக்காது, கல்லும் குத்தாது,

 முள்ளும் குத்தினாலும்

 தூரப்போட்டு, அம்மா தரும்

 பிடிச்சோற்றிற்கு உல்லாசமாக

 செல்லும் நடையோட்டம்..

துள்ளிச்செல்லும்

 இளங்கன்றுகளை எண்ணி

 கனவை தாங்கி,சுமையை

 தேகம்  தூக்க,துவளாமல்

 செல்லும் நிழல் இல்லை தாய்..

- Vidhya 


Friday, September 19, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காதலிக்கு வரைந்த மடல்கள் யாவும் 

சருகாய் போயின

என் காதலை ஏற்காத

என் காதலியின் மனமும் சருகே 

என்று பின்பே உணர்ந்தேன் 

அவள் மனமும் சருகாய் மாற காரணம்

அவளுக்கு பிறரிடமிருந்து வந்த

காதல் மடல்களே!

ஏற்பதும் நிராகரிப்பதும் 

காதலில் சகஜமே!


 காகிதத்தின் மீது எழுதுகோல்

 கொண்ட காதலால் 

பிறந்த எழுத்துகள்

மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது

பூமியில் பிறக்கும்

அனைத்திற்கும் ஓர் 

அடைக்கலமுண்டு

காதலித்து தோற்றவன் மட்டுமே

இங்கே பல பேருண்டு


 இறந்தகாலத்தின் பதிவு இங்கே

நிகழ்காலத்தில் அரங்கேறும் உண்மை 

எதிர்காலத்தின் பார்வையாளருக்காக


 எண்ணத்தின் வண்ணத்தில் பிறப்பவை எழுத்துக்கள்

புள்ளிகளும் கோலமாய் மாறுபவை எழுத்துக்கள்

காகிதமும் எழுதுகலனும் காதல்

கொள்ள பிறந்தவை எழுத்துக்கள் 

முன்னேறி சென்று வடிக்குமே அன்றி 

பின் செல்லாது

அடித்தலும் கிறுக்கல்களும் 

வடிவம் பெறுபவை இங்கே

புரிந்தவருக்கு மட்டுமே

இவை பொக்கிஷமாகும்

- Veena 


காதலன் காதலி உறவோ

ஒன்றில்லாமல் மற்றொன்று

 வாடுதே, எண்ணத்திற்கு வடிவம்

 தந்து ,தேடிய போதெல்லாம்

 நினைவிற்கு உயிர் கொடுத்து,

எத்தனை முறை நெஞ்சில் சுமந்து

 சென்ற கைகள் இன்று

 உங்களின் முகவரியில்லாமல்

 விரல்கள் நோக எதையோ டைப்

 செய்து,மௌனத்திற்கு

 உயிர்க்கொடுத்த மொழி இன்று

 எழுத்துகளை மறக்க செய்தது

 என்ன?

மீண்டும் வாசம் வீச ஏங்கும்

 வார்த்தை மொட்டுக்கள்,

மைக்கொண்டு மலர

 காத்திருக்கும் எண்ணங்கள்,

வண்டு வந்து வடிக்கும் நேரம்

 என்றோ..

- Vidhya 

Thursday, September 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மௌனத்திற்கான அடையாளம் எளிமையாய்

இதழ் விரிய சொல்லும் வார்த்தைக்கு

விரல்கள் விரிய காட்டும் அடையாளம்

 முற்றிய வார்த்தைக்கு முற்றுப்புள்ளி இதுவே

 தேவைக்கு வார்த்தை என்றால் 

சொல்லால் துன்பமில்லை இங்கே

- Veena 

பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்த

 கட்டுப்பாடு ,வாய்க்கு போட்ட

 பூட்டு..பல நேரம் உறங்கி போன

 வார்த்தைகளுக்கு சாவி

 கிடைக்கவே இல்லை!

அநாகரீகமாக பல நேரம்

 கூட்டத்தில்.. 

தானாக வரும் அமைதி யாரும்

 அதிகாரத்துடன் போடக்கூடாது

 தடை சொல்லிற்கு...

 முதுமையில் கிடைத்த பூட்டு

 வாய்க்கு மட்டுமா!

- Vidhya 



Wednesday, September 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 




முகவரி இழந்த முதுமை

காலன் அழைக்கும் வரை

இது கொடுமை


ஊட்டி வளர்த்த பிள்ளைகளின்

கைமாறு தான்

இதுவும்

உயிர் துறக்கும் முன்னே

பிள்ளைகளுக்கு பாரமானது

பூமிக்கு அர்ப்பணமானது


 பெற்றவளும் பேறு பெற்றாள் 

பெற்றெடுத்த பிள்ளைகளின்

 உதவியை நிராகரித்து

முதுமை என்றும் கொடுமையே


 தனிமை ஆட்கொள்ள

முதுமை கொடுமை

வெறுமை கூட தோற்கும் முதுமையில்


 தாலாட்டு பாடிய தாய்க்கு

இங்கே ஒப்பாரி பாடவும் ஆள்

இல்லாமல் அனாதையாய் 

- Veena 

காலம் ஒரு வட்டம், விட்ட இடத்தை

 ஒவ்வொருவரும் அடைவதே

 நியதி  !

எதை சேர்க்கா விட்டாலும்

முதுமையில் ஆரோக்கியமான

 மனதையும்,நட்பையும் காக்க

 தவறவிட கூடாது..

பிறப்பை போல் இழப்பையும்,

 இறப்பையும் வரவேற்க கூட்டமும்,

ஆட்டமும் தேவை!

- Vidhya 

Monday, September 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 எவருக்கும் வேண்டும் இரை 

பசியை போக்க

உடைந்த மரத்தில் தொங்குபவன்

நீரில் வீழ்ந்தால்

முதலைகளால் மரணம்

மாறாக உடைந்த மரத்தை கொண்டு

கரையேறினால் 

நிலத்தில் சிங்கத்தால் மரணம்

மரத்தில் தொங்கி கொண்டே 

இருந்தால் பாம்பினால் மரணம்

எப்படி தப்பிப்பான் அவன்?

 விதியை மதியால் மாற்றலாம் என்பர்

சிங்கத்திற்கும் முதலைகளுக்கும் 

இரை யே தேவை

தவிர இவன் அல்ல

இரண்டிற்கும் இரண்டும் எதிரியே

அவைகளை ஒருவருக்கொருவர் இரையாக்கி

ஒடியும் கிளையோடு நீரில் விழ

பாம்பும் நீரில் விழும்

தன்னை காப்பாற்றவே நினைக்கும் பாம்பு

மனிதனை விட்டு விலகும்

நம்மில் உள்ள துன்பமும் இதைப்போலவே!

விதி கைகூட மதி சிறக்கும்

- Veena 

பல ஆபத்தின் நடுவே வாழ்வின்

 மீதான நம்பிக்கையிலேயே

 நகருது பலரின் வாழ்க்கை..

ஒரு  வித்தியாசம்

 பலருக்கு வெளிப்படையாக

 தெரியும் ,சிலருக்கு அது ஆபத்து

 என்று தெரியாமலே மாய நதி

 போல சுற்றி வரும்.

- Vidhya 


Friday, September 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தாய்க்கு தாயாய்

தந்தைக்கு தந்தையாய்

சகோதரனாய் 

தோழனாய்

நம்மை மீட்பவன் 

அவனே!

நிஜ உருவம் தேவையில்லை

அவனுக்கு நம்மை

ஆட்கொள்ள

எவ்வுயிரினமும் அவனாவான் 

நம் தேவை பூர்த்தியாக

அவனை மனதிற் 

ஏற்போம்

இனங்கள் வகுத்தது

கொள்கையாலே

கடவுள் ஏற்பது மனதாலே 

வடிவங்கள் பல எடுத்தாலும் 

உலகில் நம்மை

உய்விக்க வைப்பவன்

அவன் ஒருவனே!

அவனை மனதால் ஏற்பதும்

துறப்பதும் மனிதன்

கையினிலே

- Veena 

அவன் இருக்கிறான் என்ற

 நம்பிக்கையை விட உன்னையே

 அவனாக நினைத்துப் பார்

 அனைத்தையும் உணர்வாய்,

 நேசிப்பாய்,அறியாமையை

 விலக்க வழி பிறக்கும்!

- Vidhya 

Thursday, September 11, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


தாயின் மடி சிறப்பு என்றும்


சொகுசாய் துயில் கொள்ள 

அவள் பிடியில் பாதுகாப்பாய் உணர

அவள் அணைப்பில் இளைப்பாற

அவள் அரவணைப்பு அரணாய் அமைய

பேச்சு கூட நிதானிக்க

செயலும் ஆற்றல் பெற

எதிரியும் மண்டியிட்டு ரசிக்க

உடன்பிறப்பிடம் சண்டையிட்டு அவள்

மடியில் அடைக்கலமாக

வாழ்க்கை பயணம் இனிதாய் அமைய

அவள் பிடியில் நான்

இருப்பதே என் மகிழ்ச்சி


 இருட்டில் பூத்த மலர்கள் இங்கே

ஒன்றையொன்று பற்றிக் கொள்ள

தாய்மை இருட்டறையில்

கருவை சுமக்க

இருட்டும் சொர்க்கம் என்றே சிசு வளர

மீளா பந்தம் இவர்களுக்குள்

இணையும் கோடுகள்

இணையும் ஓர் புள்ளியில்

அது ஆரம்பமே அன்றி முடிவல்ல

- Veena 

கருவறையிலிருந்த

 பற்றுதல் இவ்வுலகில் வாழ

 துண்டிக்கப்படவே இயற்கை நீதி

ஆனால் ஏனோ சுடுகாடு வரை

 பிறருடைய பற்றுதலை தேடுது!


தாயின் ஸ்பரிசம் குழந்தையின்

 ஸ்பரிசம் இரண்டுமே

 ஒப்பற்றது,ஈடற்றது...ஈன்றவள்

 குழந்தையாக தன்னை பாவிக்க

 தொடரும் உறவு சங்கிலி.

- Vidhya 




Tuesday, September 9, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அவன் விழியில் ஞாலம் காண

ஓர் ஒத்திகை இங்கே

மூன்று முடிச்சின் பந்தம்

தொடர்கிறது அவன் பார்வையால்

கண்ணாமூச்சி ஆட்டத்தில்

களிப்பின் அடையாளம் இப்போது 

எதுவும் சிறக்க

வானில் அவள் பறக்க

இருட்டில் உள்ளவருக்கு

வெளிச்சம் தரும் ஓர் அலாதி ஆனந்தம் 

கண் மூடி பால் குடிக்கும் பூனையும்

உலகம் மறக்க

தன் விழி மூடி

அவன் பால் உள்ள

காதல் 

அவளை மேலும் இட்டு செல்ல

யார் தியாகி இங்கே?

விழிகளை மறைத்தவளா?

அவள் விழிக்கு ஈடாய் 

தன் விழியால் அவளை அணைத்தவனா?

அவனுக்கு வசந்தம் கொடுக்க வந்தவளா?

அவனே உலகம் என்று மகிழ்ச்சி கொள்ள செய்தவனா?


விழிகள் நான்கும்

அடைக்கலம் ஆன பின்

உடல்களும் மொழி பேசுமே!

சத்தமின்றி ஓர் போர்

அவர்களுக்குள்

 யார் யாரை தோற்கடிப்பது

என்று

மலர மலர வாசம் வீசும்

அடுத்தவர் நுகர்வதற்காக அல்ல

தானும் தான் சார்ந்தோர் வாழ்வு சிறக்கவும்

- Veena 

அது ஒரு கனா காலம்

திரும்பி வரா இளமை காலம்

வண்ண வண்ண கனவை

 சுமக்கும் பொற்காலம்

கண்ணாம்பூச்சி ஆடும் காதல்

 விளையாட்டு , யாரும் அறியா

 மாயலோகம், இருவர் கொண்ட

 ஓர் உலகு!

- Vidhya 



Monday, September 8, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இறக்கை விரிந்தால் பறக்க இயலும்

மனதை விரித்தால்

பறப்பதையும் அடைய முடியும்


 சிறகை விரித்து வானில்

பறக்க ஆசை பறவை போலே 

இருப்பினும்

மண்ணில் கொள்ளும் ஆசை 

விண்ணில் இயலாது

யாருக்கும் ஏதும்

 சொந்தமில்லை அங்கே

அகத்தில் ஒன்று

 புறத்தில் ஒன்று

கூற இயலாத இடத்தில்

மனிதனுக்கும் வேலை உண்டோ?

தவிக்கும் மனதிலிருந்து

மீள வழி அறியாத போது

வளியில் கலந்து

வழி அறியாது

பறக்க இறகுகள் மட்டும் காணாது

மெய் எடை குறைப்பு மட்டும் போதாது

பொருள் பற்று 

இல்லாத எளிய

தேகமே மெய்யாகும்

- Veena 

கையைவிட்டு பிரிந்தால் மட்டுமே

அதற்கு பறக்க முடியும் என்று

 தெரியும்..எதையும் முயற்சிக்க

 மட்டுமே விரியும் உலகு,பல நேரம்

 ஒரே இடத்தில் ஒட்டிக்கொண்டு

 ஒட்டுண்ணியாக  வாழ்வதை விட

 இடபெயர்ச்சி செய்து

 பார்,உன்னையும் அறிய...உலகு

 பல அதிசயத்தை தர

 காத்திருக்கு!

- Vidhya 

Saturday, September 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


முதுமையில் கூட

தள்ளி வைப்பதில்லை

இவள் 

கட்டியவனையும்

தான்

தூக்கியவனையும்


 அணைப்பில் சிக்குவதும் 

எதையும் அனுசரித்து

அணைப்பதும் 

பெண்ணிற்கான குணமே!

தண்ணீரை சுமந்து

ஒத்திகை பார்க்கிறாள்

தன் கருவை

 வயிற்றில் தாங்க

தண்ணீர் குடம் ஏந்தும் அவள்

பிறப்பதும் தண்ணீரிலே!

சிரமம் கொள்ளாது

தாங்கும் அவளே

குடும்பத்தின் அழகு

தன் மொத்த அழகையும்

 அடகு வைத்த பின்னே 

தண்ணீரில் நீச்சல்

போட்டு

வாழ்விலும் எதிர்நீச்சல் போடுகிறாள்

இடை அழகு பெற

சுமந்த தண்ணீர்

இங்கே அவளை

இடை ஒடிய செய்தாலும்

அதுவே அவளுக்கு

சுகமான சுமை தான்

- Veena 

எந்த நாளும் ஓய்வு இல்லை

இவள் இப்படி இல்லா விட்டால்

 தான் நோய் என்று சொல்லும்

 உலகு!

அவளுக்கு மட்டுமே தெரியும் எது

 சுகம் ,சுமை என்று அவளை

 சுயமாக சிந்திக்க விட்டு விடுங்க!

- Vidhya 

Wednesday, September 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


விற்பனைக்காக வைக்கப்படவில்லை

 இந்த இதயங்கள்

காதலியின் முகம் காண துடிக்கும்

அல்ல அல்ல

தொங்கும் இதயங்கள்


 நீதிமன்றத்தில் நீதி தேவதையின் 

கையில் தராசு!

ஆனால்

அங்கே தொங்குகின்றன மணமுறிவு வழக்குகள்

- Veena 

காதல் தோட்டம் இங்கே பூக்களுக்கு பதில் இதயங்கள் பூத்தென்ன!


- Vidhya 

Monday, September 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இயந்திரத்தின் காதல்

அதன் உரிமையாளரின் கையில்

மனிதனின் காதல் மட்டும் எவர் கையில்?


யார் கைவிட்டதால் நொறுங்கியது 

இதயம்?

ஏந்தியவன் கை தவறியதால்

நொறுங்கியதா?

இதயத்தில் விரிசல்

வந்ததால்

அவனும் நொறுங்கினானா?

யார் காரணம் என்ற 

தர்க்கம் தேவைப்படாது

நொறுங்கியது கண்ணாடி அல்ல

அள்ளி குப்பையில் வீச

இதயம் விரிசல் கொண்டாலும்

தகர்த்தவர் மீட்கும் வரை

இணையாது

இணைந்தாலும் அங்கே

உண்மை அன்பு

இருக்குமோ?

தகர்ந்தது தகர்ந்ததே!

தகர்ந்ததும் நகர்ந்ததே!

நகர்ந்தும் வலி தந்ததே!

வலி தந்த பின்னே

வழியும் இல்லை

இரு மனங்கள் ஒருசேர

வலியது விதி என்றான பின் யாவும்

கடந்து செல்லவே!

- Veena 

இயந்திரம் என்று தெரிந்தும்

 யாருடா எனக்கு இதயத்தை

 பொறுத்தியது..அதனால் எனக்கு

 ஏற்பட்ட கதிதை பார்,நொறுங்கி

 போன என் தலை எதாவது ஒன்று

 போதும்! இது வேண்டாம்,

என்னை சிந்திக்க விடாமல்  சதா

 தொல்லை பண்ணுது !

- Vidhya 

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...