Wednesday, September 24, 2025

(ரகசிய) உதவிக்கு நன்றி by Veena Shankar

 


(ரகசிய) உதவிக்கு நன்றி


நிவேதா பட்டப் படிப்பு படித்து இருந்தாலும் நல்ல வேலை கிடைக்காமல் தட்டு தடுமாறியே ஒரு சிறிய வேலையில் சேர்ந்தாள். ஆனால் அவளுடைய வருமானம் வீட்டிற்கு போதுமானதாக இல்லை. தந்தை இழந்த குடும்பத்தில் தன் தங்கையின் படிப்பு, வீட்டு செலவிற்காக கூடுதல் வருமானத்தை ஈட்ட நினைத்தாள். அப்போது தான் அவள் கல்லூரி தோழி அஞ்சலி சினிமாவில் நடிப்பது நினைவு வர, தன் தோழியிடம் தனக்கும் சினிமாவில் ஏதும் வாய்ப்பு கிடைக்குமா என கேட்டாள். முதலில் மறுத்த அவள், நிவேதாவின் பொருளாதாரத்தை எண்ணி உதவ நினைத்தாள். இருந்தாலும் நிவேதாவிடம் சினிமா துறை என்பது பெரிய கடல், அதில் மூழ்கி முத்தெடுப்பது சிரமம் என்று சொல்ல அவள் தவறவில்லை. அவள் சொல்லியும் நிவேதா கேட்காததால் அஞ்சலி, அவள் பேச்சிற்கு செவி கொடுத்தாள். உஷாராக இல்லாவிட்டால் படு குழியில் விழுவாய் என்றும் எச்சரித்த பிறகே நிவேதாவை ஒரு பெரிய சினிமா பட கம்பெனிக்கு அழைத்து சென்றாள்.


அந்த கம்பெனியின் பி. ஆர். ஓ. விடம் ஏற்கனவே தன் வருகையை அஞ்சலி சொல்லியிருந்தாலும் மீண்டும் அவரை அலைபேசியில் அழைத்து நிவேதாவை பற்றி அவரிடம் நினைவுபடுத்தினாள். ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் நிவேதாவை அறிமுகப்படுத்தி தான் தன் படப்பிடிப்பிற்கு மிக அவசரமாக கிளம்பி சென்றாள். அவள் சென்றதும் அப்பெண்ணும் நிவேதாவை ஏற இறங்க பார்த்து போனில் யாரையோ தொடர்பு கொண்டு, அழைப்பு வரும் வரை காத்திருக்குமாறு நிவேதாவிடம் சொன்னாள். தலையை மட்டும் ஆட்டி இருக்கையில் அமர்ந்தாள் நிவேதா. சில மணித்துளிகளில் அழைப்பு வர, ரிசப்சனிஸ்ட் சொன்ன பாதையை நோக்கி நடந்தாள் நிவேதா.


 முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறை என்பதால் சென்னை வெயிலுக்கு இதமாய் இருந்தது. அதுவரை பதற்றப்படாத நிவேதா அஞ்சலியின் முன் சொன்ன வார்த்தையை ஒப்பிட்டு பார்த்தாள். உள்ளூர ஓர் பயம் தொற்றிக் கொண்டது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்து நிற்க, " ஹலோ!" என்ற குரல் அவளை மேலும் பதற்றத்துள்ளாக்கியது. ஒருவாறு சமாளித்து "ஹலோ! " என்று சொல்ல அவள் குரல் திக்குமுக்காடியது நன்றாக எதிரிலிருப்பவருக்கு தெரிந்தது. 


" வாம்மா! உட்கார்" என்றார் ஓர் அறுபது வயது மதிக்கதக்கவர். "அஞ்சலி சொன்னா! அவள் வார்த்தையை என்னால் மறுக்க முடியுமா?" என்று சொல்லியவாறே அவர் நிவேதா பக்கம் வந்து, "என்னமா! இன்னும் தாவணிய சுடிதார்ல மூடியிருக்க. இப்ப இருக்குற ட்ரெண்டுக்கு மாத்திக்கோம்மா " என்று சொல்லி அலமாரியில் இருக்கும் ஜீன்ஸ் பேண்ட்டையும் டி ஷர்ட்டையும் போட்டுக் கொள்ள பணித்தார். "இல்ல சார் இதுவே எனக்கு கண்வீனியன்ட்டா இருக்கு " என்று தன் வேர்த்த நெற்றியை துடைத்தாள். எங்கும் எந்நேரத்திலும் பிசகி விடக்கூடாது என்பதில் முடிவாய் இருந்தாள் 


" சரிம்மா நாளைக்கு வரும் போது நல்லா மாடர்னா வரணும் " என சொல்லி அவளை பற்றி விசாரித்தார். அவளைப் பற்றி அவரிடம் சொல்லி முடிப்பதற்குள் அவள் குரல் பல இடங்களில் உடைந்தது. " அந்த டெஸ்டிங் ரூமிற்குள் போ! நானும் வருகிறேன்" என்றார் அவர். 


முன்பின் அறிமுகமில்லாத இடத்தில் அதுவும் தனியாக இருக்கிறோமே என்று படபடத்தாள் நிவேதா. இவள் உள்ளே செல்ல, அவரும் பின் தொடர்ந்தார். அவரின் மூச்சுக் காற்று இவள் மேல் படுவதாய் உணர்ந்தாள். சரி வந்து விட்டோம் என்ன நடந்தாலும் நாம் நம் தைரியத்தை விடக் கூடாது என்ற மன நிலைமைக்கு வந்தாள்.


அப்போதே அவள் முன் ஒரு பேப்பரை கொடுத்து படிக்க சொன்னார் அவர். முதலில் குழறிய அவள் நாவு , பின் சரியானது. ஒரு பக்கத்தை ஏற்ற இறக்கத்தோடு அவள் படித்து முடிக்க, " வெரி குட்!" என்றார். 


"நீ படிக்க ஆரம்பிச்ச போது ரொம்ப தப்பு தப்பா படிச்ச, ஆனா முடிக்கும் போது சரியா இருந்தது. உச்சரிப்பும் அருமை " என பாராட்ட, " இல்லை சார், கொஞ்சம் பயமா இருந்துச்சி அதான்" என்று இழுக்க, " முதலில் அப்படித்தான் இருக்கும் போக போக எல்லாம் அட்ஜெஸ்ட் ஆகிடும்" என்று அவர் சொல்ல, வேறு மாதிரியான பயம் அவளை தொற்றிக் கொண்டது. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்ற வாசகம் அவள் கண் முன் பிரேம் போட்டு காட்டியது. 


"சரிம்மா! இன்னிக்கே நீ ஆடிசன் போயிடு. மேலே இருக்குற ரூம் தான். நான் போன் பண்ணி சொல்றேன். இப்ப படிச்ச மாதிரி நிறைய டேக் போகாம டயலாக் பேசிடு" என்று கூறினார். "அப்புறம் உனக்கு உண்டான சம்பளத்தை அன்னனைக்கே போட சொல்லி விடுகிறேன். சரியா? உன் வீட்டு நிலைமை, உன்னோட குரல் வளத்தை பற்றியும் அஞ்சலி எல்லாம் சொல்லியிருக்கா. உன்னோட ஆபிஸ் வேலை முடிஞ்ச பிறகு இங்க வந்து டப்பிங் வேலையை பாரு! " என்று சொல்லியவாறே வெளியேறினார். மனதில் இருந்த பயம் விலக , அவளும் டப்பிங் ரூமிற்கு நடையை கட்டினாள்.  


இவள் வருகைக்காக தயாராக டயலாக் பேப்பரோடு இருந்த ஒருவர், அவளை டப்பிங் ரூமிற்கு அனுமதித்தார். 


" என்னடா! இந்த பொண்ணு இன்னிக்கி தான் சாரை மீட் பண்ணியிருக்கு. அதுக்குள்ள நம்ம சாரும் ஏதும் கேள்வி கேட்டு படுத்தாம இந்த பொண்ணை செலக்ட் பண்ணிட்டாரு" என்று அங்கிருந்த ஒருவர் கேட்க, " அது அஞ்சலி ரெக்கமண்டேஷன் ல வந்து பொண்ணுடா! கத்தி பேசாத" என்று இன்னொருவர் சொல்ல," ஓ ! அப்படியா, சரி! சரி!" என தலையாட்டிய படி நகர, தோழிக்கும் இந்த பட நிறுவனருக்கும் அப்படி என்ன உறவு இருக்கும்? என்று சினிமா பின்னணி தெரியாத நிவேதா யோசித்தாள். தன் தோழியின் திரை மறைவு வாழ்க்கை இதுவோ? என நினைத்தாள் நிவேதா. பின் தனக்கு தானே, கஷ்டத்தில் உதவிய தோழியை தராசு போட்டு எடை போடக் கூடாது என்றெண்ணி சில உண்மைகள் வெளி வராத வரை எவருக்கும் நன்மையே என்ற கூற்றுக்கு வந்தாள்.


மனதார அவளுக்கு உதவிய தன் தோழி அஞ்சலிக்கு நன்றி சொன்னாள்.


சில நேரம் ரகசியங்கள் உடையலாம், ஆனால் அது காக்கப்படுவது என்றும் சிறப்பே!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...