வந்தவர் எவரோ?
வசுந்தராவின் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கால் மணி நேரம் பேருந்து பயணம் கால் மணி நேரம் நடைபயணம். எப்போதும் கிளம்பும் நேரத்தில் தான் மேனேஜர் அந்த பைல் கொண்டு வாங்க இந்த வேலையை முடிச்சிட்டு போங்க என்று சொல்லுவார். ஆனால் அவர் விடுப்பில் இருப்பதால் சரியாக ஐந்தரை மணிக்கு கிளம்பி பேருந்தின் கூட்ட நெரிசலில் சிக்கி, தளர்ந்த நடையுடன் வீடு வந்து சேர்ந்தாள் ஐம்பது வயதை கடந்த வசுந்தரா.
வீட்டிற்கு வந்ததும் கை கால் முகம் கழுவி, சாமிக்கு விளக்கேற்றி, பாலை காய்ச்சி, காபி கோப்பையுடன் சோபாவில் அமர்ந்தாள்.
" ச்சீ! இப்போதானே உட்கார்ந்தேன். அதுக்குள்ள வந்துட்டீங்களே! என்ன அவசரம் ? கொஞ்ச நேரம் கழித்து வந்தால் வேண்டாம் என்றா சொல்ல போகிறேன். ஏசில உட்கார்ந்து வேலை பார்த்துட்டு சில்லுன்னு காத்துல உட்கார்ந்து காபி கூட குடிக்க விடமாட்டீங்களே! அப்படி வந்து என்ன செய்யப் போறீங்க? என் கடைசி சொட்டு இரத்தம் இருக்குற வரைக்கும் உங்களுக்கு கொடுக்கணுமா? என் மனசையும் உடலையும் குத்தி குத்தி என்னை ரணப்படுத்தி என்னை மூலையில உட்கார வைக்கணும்னு நினைக்கிறீங்களா? வாங்க! வாங்க! வந்து என் உயிரை ஒரேடியாய் எடுத்துட்டு போங்க! என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ன்னு காட்டிட்டு போங்க! அன்புன்னா இப்படி தான் இருக்கணும் " என கத்த, இவள் சத்தத்தை கேட்டு
" யாருகிட்ட பேசுற வசு? எனக்கு காஃபி கூட போட்டுக் கொடுக்கல" என்று ரூமை விட்டு ஹாலை எட்டி பார்த்தாள் அவள் அம்மா.
" நீ வேற இரும்மா, இந்த கொசுக்களிட மிருந்து என்று தான் விடுதலையோ தெரியலை? இந்த வாய்க்கா வேற சரியா சுத்தம் செய்யமாட்டேங்குறான் இந்த பஞ்சாயத்து போர்டுகாரன். இரு! வந்து காபியை கலக்கி தரேன். அதுக்கு முன்னாடி ஜன்னல் கதவெல்லாம் சாத்துறேன். விளக்கு வச்சதும் லட்சுமி வராளோ இல்லையோ இதுங்க முதல்ல வந்துடுதுங்க" என்று கொசு கடித்த இடத்தை தடவி கொண்டே ஜன்னலை சாத்தினாள் வசுந்தரா.
"அட போம்மா! அன்பு கின்பு ன்னு சொன்னியே! நானும் உன் புருஷன் தான் குடிச்சுட்டு சீக்கிரம் வீட்டிற்கு வந்துட்டானோ ன்னு நினைச்சேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள் அவள் அம்மா.
யாரையும் தவிக்க விடுவது இயல்பு, ஆனால் பாதிக்கப்பட்டவர் எதனின்றும் மீள்வது சிறப்பு.

No comments:
Post a Comment