வெகுளித்தனம் வரவேற்கப்படுமா?
எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது. மறைந்த என் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நான் என்னவளை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டேன். வடமாநிலத்தையும் தென்மாநிலத்தையும் இணைத்து நடந்த திருமணம் எங்களுடையது.
என்னவள் பிறந்த இடம் எந்த ஒரு வசதியும் இல்லாத குக்கிராமம். பட்டன் போன் மட்டுமே ஒரு சிலருக்கு தெரியும். அதுவும் அவளுக்கு படிப்பறிவும் அவ்வளவாக இல்லை. மொழி மட்டுமே எங்களை இணைத்தது. வேலை நிமித்தமாக நான் வட மாநிலத்திற்கு செல்ல என்னவள் அழகிலும் மொழியிலும் என்னால் கவரப்பட்டாள். இங்கிருந்து புலம் பெயர்ந்த குடும்பம் அவளுடையது என்பது மட்டுமே சிறப்பு. பொருளாதார வசதியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் நான் அவளை இங்கு எந்த குறையும் இல்லாமல் கவனித்து வருகிறேன் .
தற்போது சென்னையில் இருக்கிறோம். நான் வேலைக்கு செல்லும் சமயம் அவள் தனியாக இருப்பாள். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நான், அவளுக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் , வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் வீடியோவை நேரம் இருக்கும் போது காண்பிப்பேன்.
இப்படி தான் ஒரு நாள் நான் குளிக்க சென்ற போது என் போனை எடுத்து என்னவள் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள் போல. அப்போது திடீரென்று " ஆ!" என்று என் மனைவியின் சத்தம் கேட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தேன். அப்போது அவள் தலை குப்புற விழுந்து கிடந்தாள். அவளுக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் அவளை நிமிர்த்தி, முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஆசுவாசப்படுத்திய பின்னரே அவளிடம் என்ன ஆனது என காரணம் கேட்டேன்.
"ஏங்க! நான் எத்தனை முறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன் கல்யாணம் ஆகி இங்க வந்த பின் நான் ரொம்ப குண்டாயிட்டேன், வயிறு கூட பெருசா இருக்குன்னு சொன்னேன். நீங்க நம்பவேயில்லை. " என்று வெகுளியாய் சொல்ல, " சரி அதுக்கென்ன இப்ப? " என்று சூடாய் கேட்டேன்.
அதற்கு அவள்
" நீங்க போன்ல பார்த்துக்கிட்டு இருந்த யூடியூப் வீடியோவை நானும் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் வயிறு பெருசா இருந்தா இந்த உடற்பயிற்சி பண்ணுங்க ன்னு ஒருவர் சொல்லி கொடுத்தார். நானும் அதைத் தான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எப்படியோ என் கை தவறி தரையில விழுந்துட்டேன்" என்றுமில்லாமல் இதோ இப்படி" என்று தன் வயிற்றுப்பகுதியை தரையில் வைத்து தன் காலை பிடிக்க முயன்றாள் . " அம்மா! தாயே! நீ ஒன்றும் செய்ய வேண்டாம் " என்று சொல்லி அவளை நான் நிறுத்தி பிடிக்க, அவள் வலி தாங்க மாட்டாமல் மேலும் அழ , அவளை திட்டாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.
அப்போது சில பல கேள்விகளை என்னிடம் கேட்டு பரிசோதனைகளை செய்த அந்த பெண் மருத்துவர் , அவள் மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்.
நல்லவேளை இவள் செய்த சாகசத்தில் கருவிற்கு ஒன்றும் ஆகவில்லை என்று நினைத்து , அவளின் வெகுளித்தனத்தை ரசிக்காமல் கண்டித்தேன்.
சமூக பக்கத்தில் வரும் எல்லாம் சரியானவை என்று சொல்ல இயலாது தானே?

No comments:
Post a Comment