பாடம்
"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது எவ்வளவு பெரிய உண்மை. ஒருவரின் உணர்ச்சிகளை அறிந்து கொள்வதும் அதன் கண் வரும் விளைவுகளும் அதுவுமே பாடமாகிறது என்பதை கடந்த சில வருடங்களாக பல நிகழ்வுகளால் உணர்கிறேன்.
நேற்று பிறந்த குழந்தை கூட புன்னகைத்துக் கொண்டு நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.
இப்படித்தான் நான் பார்த்து வளர்ந்த பக்கத்து வீட்டு பெண் ஒருத்தி, திருமணமாகி வேறு ஊருக்கு சென்று, ஒரு குழந்தைக்கு தாயான பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள்.
அவளுக்கு தற்போது பத்து வயதில் ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான்.
விவாகரத்துக்கு பின் மீண்டும் எங்கள் ஊரிலே தான் வேலைப் பார்த்து வசித்து வருகிறாள். அவள் குடும்பம் வேறு பகுதிக்கு மாற்றலாகி விட்டதால் இந்த பெண்ணை சந்திக்க முடியவில்லை.
ஒருமுறை என்னைப் பார்க்க வந்தவளிடம் அவள் கணவனைப் பற்றி விசாரிக்க அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னாள். இவ்வளவு கஷ்டப்படுகிறாயே ஏதாவது ஜீவனாம்சம் கொடுத்தானா? என்று நான் கேட்க, அவன் யார் எனக்கு ஜீவனாம்சம் கொடுக்க? அவன் பணம் தேவையில்லை. எனக்கு சக்தி உள்ள வரை நான் வேலைப்பார்த்து என் பிள்ளையை காப்பாற்ற எனக்கு தெரியும் என்றாள் மிக தைரியத்துடன்.
மேலும் அவள் தன் மாமியார் வீட்டில் உள்ளாள். மாமியார் வேலைக்கு செல்கிறார். காலைக்கும் மதியத்திற்கும் அவர் சமைக்க , இரவிற்கு இவள் செய்வாள் என்று கூறினாள்.
மாரியார் நல்லவர் என்றும் ஏதாவது அவர் சொன்னால் கூட தான் ஏதும் விவாதிக்காமல் அவ்விடம் விட்டு சென்று விடுவதாகவும் சொன்னாள்.
மேலும் அவள் பிள்ளையை பற்றி நான் விசாரிக்க, அரசு பள்ளியில் படிப்பதாகவும் மேற்படிப்பும் அரசு கல்லூரியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் அப்படியும் அவன் விரும்பும் பாடம் தனியார் கல்லூரியில் இருந்தால் அவனிடமே படிப்பிற்காக வங்கியில் கடன் வாங்கி அதனை அவனே அடைக்க சொல்லியுள்ளதாகவும் அவள் சொல்ல , ஒரு நிமிடம் நான் அவள் முன் தலை குனிந்தேன்.
வீடு கட்டுவதற்காகவும் பிள்ளைகளின் படிப்பிற்காகவும் குடும்பத்தின் மருத்துவ செலவிற்காகவும் நான் பெற்ற கடனை எப்படி திரும்ப செலுத்துவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் உன் கடனை மட்டும் நீ பார்! உன் பிள்ளைகளின் கல்விக்கடன் உனக்கானதல்ல ! என்று நேரே சொல்லாமல் என் தலையில் புகுத்தி விட்டாள் அவள்.
கணவர் பிரிந்த நிலையிலும் தன் மாமியாரின் அரவணைப்பில் அவள் இருப்பதும் அவரை அனுசரித்து போவதும் இன்றைய நிலையில் மிக பெரியதான ஒரு விஷயமாக எனக்கு தோன்றியது.
சூழ்நிலைக்கேற்ப கிடைக்கும் அனுபவ பாடமே எதிலும் சிறந்தது என்பதை நான் அவள் மூலம் அறிந்து கொண்டேன்.

No comments:
Post a Comment