Wednesday, August 13, 2025

எவரும் இழிவல்ல by Veena Shankar



 எவரும் இழிவல்ல 


ஒரு நாள் ஜெகன் பஜாருக்கு செல்ல வேண்டி செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினான். அப்போது அவன் காலுக்கும் செருப்புக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் வந்தது. செருப்பு சொன்னதாம் நான் தான் பெரியவன் என்று. கால் சொன்னதாம் நான் தான் பெரியவன் என்று. 


"இல்லை. நான் இல்லையென்றால் நீ நடக்க முடியாது" என்று செருப்பு தன் வாதத்தை துவக்க, "இல்லை நீ இல்லாமல் நான் வீட்டினுள் நடந்து கொண்டு தானே இருக்கிறேன். அதனால் நீ இல்லாமலும் என்னால் இருக்க முடியும்" என்று தர்க்கத்தை தொடர்ந்தது கால். "வீட்டினுள் என் தேவை இல்லையென்றாலும் வெளியில் போகும் போது நான் தான் உன்னை தாங்கி கொண்டு நடக்கிறேன். அதுவுமில்லாமல் சிலர் வீட்டில் என்னை வீட்டினுள் பயன்படுத்துகிறார்கள். எனவே நானே பெரியவன்" என்றது செருப்பு. உடனே கால், " திமிரில் ஆடாதே! 

இப்போ பார்! உன்னை நான் என்ன செய்கிறேன் என்று ?" என்று சொல்லியவாறே ஓர் கல்லில் செருப்பை முட்ட வைக்க, செருப்பின் வளையம் அறுந்து போக, "ச்சீ! என்று புலம்பிய ஜெகன் செருப்பை கொஞ்சம் சரி செய்து நடக்க முற்பட்டான்.


 ஒரு சில மணித்துளிகளில் அவன் கால் இடறி விழ, அவன் கால் கட்டை விரல் பதம் பார்க்கப்பட்டது. "ஐயோ! " என்று புலம்பியவன் செருப்பை எடுத்து பார்க்க, முற்றிலும் அது சேதமாகியிருந்தது .


 இதை பார்த்த கால் , செருப்பை பார்த்து ஏளன சிரிப்பு உதிர்த்தது தன் கால் அடிப்பட்டதை மறந்து.


" என்னை பார்த்து நீ மகிழ்ச்சி கொள்ளாதே! அடிபட்டதில் உன் காலில் ரத்தம் வருவதை கூட கவனிக்காமல் இருக்கிறாய் " என்று செருப்பு சொல்ல, அதற்குள் செருப்பை முன் பின் பார்த்த ஜெகன் இனி இந்த செருப்பால் பிரோஜனம் இல்லை என்று நினைத்து இரு செருப்புகளையும் குப்பைத்தொட்டியில் வீசினான். 


"பார்த்தாயா! திமிராக பேசிய நீ இப்போது கிடப்பது குப்பை தொட்டியில்" என்று சொல்லிக் கொண்டே சென்றது கால். செய்வதறியாது இருந்த செருப்பும் மௌனம் காத்தது.


அடி மேல் அடி வைத்து எப்படியோ ஒரு வழியாக ஜெகன் வீடு வந்து சேர்ந்தான். அடிபட்ட காலுக்கு மருந்து போட்டு மாத்திரையையும் விழுங்கினான். 

மருந்து போட்டதால் விரைவில் குணமாகி விடுவேன் என்ற மிதப்பில் இருந்த காலுக்கு தற்போது ஓய்வு தேவைப்பட, ஜெகன் கட்டிலில் படுத்தான். மருந்து உண்டதால் வலி தெரியாமல் கண் அயர்ந்தான். வீட்டின் முன் யாரோ "தீ ! தீ! " என குரல் கொடுக்க , பதட்டத்துடன் எழுந்த ஜெகன் மறுபடியும் கட்டிலில் காலை இடித்துக் கொள்ள காலில் ரணம் பன்மடங்கு கூடியது. வலி தாங்க முடியாமல் கட்டிலில் மீண்டும் படுத்து துவண்டான் ஜெகன். அவன் அழும் சத்தம் கேட்டு வந்த அவன் மனைவி மருத்துவமனைக்கு அவனை அழைத்து செல்ல, வழியில் குப்பையில் கிடந்த செருப்பு, "நானாவது பரவாயில்லை. ரத்தம் இல்லாததால் அவதிப்படவில்லை. ஆனால் நீ பாரேன்" என்று செருப்பு சொல்ல வந்ததை முழுமையாக சொல்லாமல் இருந்தது. ஜெகனின் கால் நொண்டி அடித்து கொண்டு கூட செல்ல முடியாமல் இருவர் தாங்க மருத்துவமனையின் உள்ளே சென்றான். நீரிழிவு நோயால் அவதிப்பட்டவனுக்கு மட்டுமே தெரியும் அந்த வேதனை. காலில் புண், காயம் கொள்ளாமல் இருப்பதே நல்லது. 


பிறர் செயல் கண்டு ஏளனம் செய்யாமல் இருப்பது நன்று. "இன்று உனக்கு நாளை எனக்கு" என்பது எப்போதும் எவருக்கும் பொருந்தும். எவரும் இழுந்தவர்கள் அல்லர் இவ்வுலகில்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...