Sunday, March 15, 2026

பொருள் இரண்டு by Veena Shankar

 


பொருள் இரண்டு


பகவதிக்கு ஊர் வம்பு என்றால் அல்வா சாப்பிடுவது போல. பக்கத்தில் நாலு பேரை கூட்டி வைத்து கொண்டு புரணி பேசுவதும் இல்லாததை உண்டு என்று சொல்லி சாதிப்பதும் அவள் வழக்கம். அவள் நடவடிக்கைக்கு பயந்தே அவர்களும் ஜால்ரா அடிப்பார்கள். அவளுக்கு குழந்தைகள் இல்லாததாலும்

கணவன் காலையில் சீக்கிரமே வேலைக்கு செல்வதாலும் அவளுக்கு இது தான் முழு நேர பொழுது போக்கு.  


விதி வலியது தானே? அவள் தன் ஐம்பது வயதை தொட்டவுடன் செவிகள் இரண்டும் மந்தமாக, பிறரின் ஏச்சு பேச்சுக்கு சொந்தமாகிப் போனாள். பின் என்ன? இதனால் அடுத்தவரிடம் தன் வார்த்தையையும் சுருக்கினாள் பகவதி. இருந்தாலும் அடுத்தவர் உதட்டின் அசைவு கொண்டு அவர்கள் சொல்வதை தெரிந்து கொள்வாள். இதனால் அவளை சுற்றியிருந்த கூட்டங்கள் விலகின. ஆனால் பக்கத்து வீட்டு மாலாவின் மருமகள் லட்சுமி மட்டும் இவளிடம் கொஞ்சம் சைகை மூலமாக பேசுவாள்.


லட்சுமி கரும்பு ஆலையில் வேலை பார்ப்பதால் அவளுக்கு சர்க்கரை இலவசமாக கிடைக்கும். தன் தேவைக்கு போக மிகுதியாய் இருக்கும் சர்க்கரையை குறைந்த விலையில் அக்கம்பக்கத்தில் விற்று வருவாள்.  


இரு தினங்களுக்கு முன் பேச்சுவாக்கில் லட்சுமி, தன்னிடம் சர்க்கரை இருப்பதாக பகவதியிடம் சொல்ல, அதை தனக்கு விலைக்கு தருமாறு கேட்டாள் பகவதி . மேலும் அதற்கான விலை எவ்வளவு என்று பகவதி கேட்க, நூற்றி நாற்பது ரூபாய் என்பதை சைகையில் ஒன்று மற்றும் நாற்பது என்பதை பிரித்து பிரித்து காட்டினாள். அதனை தவறாக புரிந்து கொண்ட பகவதி, " ஒரு கிலோ நாற்பது ரூபாய் மிக அதிகம். கடையில் கூட நாற்பத்தைந்து ரூபாய் தான், நீ ரொம்ப அதிகம் சொல்கிறாய் " என்று சொல்லி அன்று என்னமோ லட்சுமியிடமே கத்த ஆரம்பித்தாள்.


" அச்சோ அக்கா! நான் மொத்தம் நாலு கிலோவுக்கு சேர்த்து நூற்றினாற்பது ரூபாய் என்று தானே சொன்னேன்" என்று உரக்க, விளக்கமாய் லட்சுமி சொல்ல, இம்முறை அவள் சைகையை விடுத்து அவள் உதட்டின் உச்சரிப்பை கண்டு கொண்டவள், "ஓ அப்படியா? " என்று கணக்கு போட்டு "அப்படியானால் கிலோ முப்பதைந்து ரூபாய் தானே ?" என்று கேட்க, லட்சுமியும் "ஆமாம்" என்று தலையசைத்து ஆமோதித்தாள்.


பேச்சு மட்டுமல்ல ஒருவரின் சைகை கூட அடுத்தவரால் தவறாக புரிந்து கொள்ளபடுகிறது என்பதும் உண்மையே!

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...