இன்றைய நகைச்சுவை
திருமண நாள்
அன்று ஞாயிற்று கிழமை மட்டுமன்றி எங்கள் திருமண நாள்
என்பதால் நானும் என் மனைவியும் அருகிலுள்ள கோயிலுக்கு செல்லலாம் என முடிவு செய்து கிளம்ப தயாரானோம்.
எப்போதும் வார நாட்களில் மட்டுமே எங்கள் திருமண நாள் வரும். அதுவும் அவளுக்கு காலையிலும் எனக்கு இரவிலும் ஷிப்ட் அமையும். எனவே அன்று நாங்கள் தனித்தனியே கோயிலுக்கு செல்வது வழக்கம். அன்று கூட அலுவலகத்தில் விடுப்போ, அனுமதியோ கேட்க முடியாது.
ஆனால் அன்றோ மிக சந்தோஷத்துடன் இருவரும் கிளம்பினோம். கோயிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டோம். எப்போதும் சிறிது சத்தம் போட்டு சாமி கும்பிடுவது என் வழக்கம் என்பதால் சாமியிடம் " எங்களுக்குள் பிரியா வரம் வேண்டும்" என்றேன் நான். ஆனால் இது பக்கத்திலிருந்த என் மனைவிக்கு தவறாக காதில் விழுந்து விட்டது. " என்ன நான் இருக்கும் போது பிரியாகிட்ட போய் வரம் வேண்டும் என்று கேட்கிறீர்கள்?" என்று குய்யோ முறையோ என்று கூவினாள். நானும் "எங்களுக்குள்"என்ற வார்த்தையை தொண்டையில் முழுங்கி கொண்டதால், எவ்வளவு எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளாமல் "நீ இரவு ஷிப்ட் போகும் போதே எனக்கு சந்தேகம் தான். நாளைக்கு நானும் உன்னோடு அலுவலகம் வருவேன். யாரு அந்த பிரியா என்பது தெரிந்தாக வேண்டும் என்று சொன்னாள்.
அப்புறம் என்ன ? இந்த வருடமும் நானும் அவளும் தனித்தனியே கோயில் பிரகாரம் சுற்றி வீடு வந்து சேர்ந்தோம்.
சாமி வரம் கொடுத்தாலும் இந்த ஆசாமியின் நாவில் சனி விளையாடியது என்று எண்ணி என்னை நானே நொந்து கொண்டேன்.

No comments:
Post a Comment