🙏🏻உயிரின் மெய் 🙏🏻
அன்னை என்ற மெய்யில்
உதித்த உயிர் நான் ..
என்னை கருவாக சுமக்கும் முன்பே..
கற்பனையில் உருவாக சுமந்தவள்! அவளின் கற்பின் கற்பனை நான்..
என்னை கருவில் சுமந்த போதே..
என் அசைவை ஆளிங்கனம் செய்தவள் !
அவளின் ஆசையின் ஆதாரம் நான்..
என்னை உதிரத்தோடு கண்டபோதே..
என் உச்சியில் உச்சத்தை உணர செய்தவள் !
அவளின் விதியின் உதயம் நான்..
என்னை அழுகையோடு கண்டபோதே
என் கண்ணீரில் கண்ணியத்தை காண செய்தவள் !
அவளின் தைரியத்தின் வெற்றி நான்..
என்னை புன்னகையோடு கண்டபோதே..
என் மகிழ்ச்சியில் மதிப்பை உணர்த்தியவள் !
அவளின் மரியாதையின் மகுடம் நான்..
என்னை அன்ன நடை பழகி பார்த்தபோதே..
என் அடியின் அதிர்வை உணர்த்தியவள் !
அவளின் வீரத்தின் விதை நான்
என்னை மழலை மொழி பேச கேட்டபோதே..
என் சொற்களில் வாய்மையை உணர்த்தியவள் !
அவளின் வாக்கின் சத்தியம் நான்..
என்னை பள்ளி பாடம் படிக்க கேட்டபோதே..
என் அறிவை அறிந்து ஆராய்ந்து கொண்டவள்!
அவளின் பகுத்தறிவின் பட்டம் நான்..
என்னை பருவமடைந்து பார்த்தபோதே..
என் பண்பை பண்படுத்தியவள் !அவளின் பூரிப்பின் புணர்ஜென்மம் நான்..
என்னை தோழமையோடு தோள் சாய்த்தபோது..
என் தோல்வியை தோற்கடிக்க செய்தவள் !
அவளின் சாதனையின் சகாப்தம் நான்..
என்னை மணமேடையில் கண்டு மனமுவந்த போதே..
என் பெண்மையில் பொறுப்பை உணர்த்தியவள் !
அவளின் பொறுமையின் பெருமை நான்..
என்னை தாய்மையில் தாங்கிய போதே..
என் கடமையில் கனிவை உணர்த்தியவள் !
அவளின் மழலையின் தாய்மை நான்..
இந்த உயிர் மெய்யில் கலக்கும் வரை அன்னை என்ற மெய்யில் உதித்துக் கொண்டிருக்கும் உயிர் நான்!
இப்பிறவியில் என்னை சுமந்து மனித நேயத்துடன் இறை உணர்வுக்கு வழிநடத்திக் கொண்டிருக்கும்
என் அன்னைக்கு
ஆன்ம வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻
எழுத்து
உமாவாணி

அற்புதம்❤
ReplyDelete