சலிப்பு
தற்போது ராஜாவுக்கும் ராணிக்கும் திருமணமாகி இருபத்தைந்து வருடமாகிறது. முதல் வருட திருமண நாளன்றே முதல் குழந்தைக்கு தாயானாள் ராணி. இதனால் தன்னை யாரும் மலடி என சொல்ல மாட்டார்கள் எனவும் நினைத்தாள் ராணி. அந்த காலத்தில் எல்லாம் மூன்று நான்கு குழந்தைகள் வேண்டும் என்று நினைத்து பெற்றுக் கொள்வர். ராணிக்கு முதல் குழந்தை பிறந்து பத்து வருட இடைவெளிக்கு பிறகு தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. எல்லாம் நன்மைக்கே என நினைத்தனர் தம்பதியினர். ஏனென்றால் இவ்வளவு இடைவெளியிருப்பதால் முதலாமவன் இரண்டாமவனை பார்த்துக்கொள்வான் எனக் கூட எண்ணினர். வயது முதிர்வின் போது வேலைக்கு செல்வது சிரமம் தான். எது எப்படியோ சர்வேசன் கணக்கு தப்பாது.
குழந்தைகளும் பெரியவராகினர். முதல் பையன் காலேஜ் முடித்து விட்டான். போட்டித் தேர்விற்காக படித்துக் கொண்டிருக்கிறான். இரண்டாமவன் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான். எப்போது பார்த்தாலும் இவர்கள் சண்டை போடுவதே வேலையாக இருந்தது. இது ராஜாவிற்கும் ராணிக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் பெற்றோரை கலாய்க்கும் போது மட்டும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. இந்த கொரானா வைரஸ் வந்து இப்படி ஆட்டிவைக்கும் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள். வீட்டில் எல்லோரும் இருப்பதால் சில நேரங்களில் சிக்கல் வருகிறது. இப்படித்தான் ராஜா-ராணியின் பிள்ளைகளும் கேட்க கூடாத கேள்வியை இன்று கேட்டனர். எனக்கும் தம்பிக்கும் இவ்வளவு வருடங்கள் இடைவெளி இருப்பதால் தான் எங்களால் ஒற்றுமையுடன் இருக்க முடியவில்லை. அதுவுமில்லாமல் நான் படித்து முடித்து விட்டேன். தம்பி இப்போதுதான் பள்ளியில் படிக்கிறான். சென்ற வருடம், இந்த வருடம் பத்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் ஆல் பாஸ் செய்து விட்டனர். ஆனால் பாருங்கள் நானும் தம்பியும் பொது தேர்வு எழுதாமல் பாஸ் பண்ண முடியவில்லை. கஷ்டப்பட்டு படித்து தான் முன்னேற வேண்டியிருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து எங்களை பெற்றிருக்கலாம் அல்லவா என தன் குமுறலை வெளிப்படுத்தினான். அதற்கு அவன் தம்பியும் ஆமோதித்தான். இவர்களின் சலிப்பைப் பார்த்து இது என்னடா நமக்கு வந்த சோதனை என வேதனைப்பட்டனர் ராஜா-ராணி தம்பதியினர்.
பெயரில் ராஜா-ராணி தான் என்றாலும் பிள்ளைகளின் வார்த்தைகளால் ஏழையாயினர்.

ஆமாம் ஒரு கட்டத்தில் எல்லா பிள்ளைகளும் கேட்கும் கேள்வி
ReplyDelete