இன்றைய நகைச்சுவை
பல வீடுகள் நிறைந்த தொகுப்பு வீட்டில் நான் குடியிருந்த சமயம் அது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசுவதும், எல்லோரும் அண்டை வீட்டினரை மதிப்பதும் அவர்கள் வீட்டு விழாவில் பங்கெடுத்து கொள்வதுமாய் இருப்போம். எவரும் முகம் சுளித்துக் கொண்டு இருப்பது கிடையாது , ஒரு விஷயத்தை தவிர. ஆம். தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் சமயம் கிணற்று நீரை தெளிய வைத்து இறைப்பதில் மட்டும் மனஸ்தாபங்கள் வந்ததுண்டு. இருந்தாலும் அதுவும் பூதாகரமாக வெடிக்காது. பனி போல் விலகி விடும்.
அன்று காலை நான் சமைத்து கொண்டிருந்த சமயம் பக்கத்து வீட்டு சிறுவன் வந்து இனிப்பு தட்டை நீட்டி இன்று தன் அம்மாவிற்கு "வெட்டிங் டே" என்றான். நானும் அவனிடமிருந்து இனிப்பை வாங்கி கொண்டு "என்ன விசேஷம்" என மறுபடியும் கேட்க, அவன் "இன்று என் அம்மாவிற்கு வெட்டிங் டே " என்று சொல்ல, எனக்கு சிரிப்பு வந்தது. "ட் " என்ற தமிழ் எழுத்தின் உச்சரிப்பால் பொருள் மாறுகிறது. ஆங்கில மொழியின் வார்த்தை தமிழில் என்ன பாடுபடுகிறது என்று நினைத்தவாறே அவன் சொன்னதை திருத்தினேன். " தம்பி, அது வெட்டிங் டே அல்ல, wedding day. தமிழில் "வெட்டிங்" என்றால் அது அறுந்து போவது என்ற பொருளில் வரும். ஆனால் அதுவே ஆங்கிலத்தில் உச்சரிப்பு சரியாய் இருக்கும் பட்சத்தில் "திருமண நாள்" என்று பொருள் படும் " என்று தெளிவாக சொல்லி கொடுத்தேன். மேலும் "திருமண நாள்" என்பது உன் அம்மா , அப்பா இருவருக்கும் இணைந்தே வருவது, இதில் அம்மாவிற்கு மட்டும் திருமண நாள் என்று நீ சொன்னது சரியல்ல என்பதையும் எடுத்துக் கூற, அவனும் "சரி அத்தை" என்று தலையாட்டி சென்றான்.
எந்த மொழியிலும் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல . ஆனால் இரு மொழிகளை கையாளும் போது பொருள் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம்.

No comments:
Post a Comment