Thursday, January 22, 2026

புரியாத கேள்வி by Veena Sharker

 


புரியாத கேள்வி 


அழகான நீண்ட பேருந்து பயணம், நம் எண்ணங்களையும் கனவுகளையும் அசை போட வைக்கும். அதனால் தான் என்னவோ பேருந்தில் பயணிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி தான் ஒரு சமயம் பேருந்தில் பயணிக்க பல விதமான மனிதர்களை என் கண் முன்னே காண முடிந்தது. பிள்ளைகளின் சத்தம், கணவன் மனைவி இடையேயான சிறு சச்சரவுகள், மழலையின் பசிக்கான அழுகுரல், அடுத்த வாகனங்களின் அதீத ஒலியுடன் கூடிய ஒலிப்பான், நடத்துனரின் சில்லறைக்கான, கோபத்துடனான எதிர்ப்பார்ப்பு என பட்டியல் நீளும். 


சக பயணியரிடம் நட்பு பாராட்டி பயணிப்பதும் என் வழக்கம் என்றாலும் முன்பு போல் எவரும் வெளிப்படையாக எதையும் இப்போது சொல்லுவதில்லை. காலத்தின் கோலம் என்பதால் நானும் அதை பெரிதுப்படுத்துவதில்லை. இப்படியே பேருந்து பயணம் ஓட, இருக்கை நிரம்புவதும் அடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் இறங்கி ஏறுவதுமாக இருக்க, என் இருக்கையின் பின்னால் ஜோடி ஒன்றின் மெல்லிய பேச்சு என்னை ரசிக்க வைத்தது.


" இன்னிக்கி அத்தை என்னை பூ கட்ட சொன்னாங்க, நானும் நெருக்கமா கட்டி தந்ததை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாங்க" என்று மனைவி சொல்ல, கணவனும் "வெரிகுட்" என்றான்.


"ஏங்க இறங்கியதும் நீங்க என்னை வீட்டிலேயே கொண்டு விடுவீங்களா இல்லை நான் ஆட்டோல போகட்டுமா? " என்று அவள் கேட்க, "எனக்கு பாங்க் வேலை இருக்கு செல்லம். வேணும்னா நீ அப்பாகிட்ட சொல்லி வண்டி ல போயேன். " என்றான். "வேண்டாங்க, பரவாயில்லை அப்பாவை கஷ்டபடுத்த விரும்பல" என்றாள். "சாரி டா" நெக்ட்ஸ் டைம் இப்படி செய்யமாட்டேன்." என்றான் அவன் பதிலுக்கு.


"நான் யூ ட்யூப் ஆரம்பிக்கலாம் ன்னு பிளான் பண்றேங்க. " இது அவள். "வேணாமா. நீ கஷ்டபடாத, உனக்கு இருக்குற வேலையில இது அவசியம் இல்லை" இது அவன்.


"இல்லைங்க. வியூஸ் நிறைய கிடைச்சா நல்ல இன்கம் வரும்ங்க " என்று அவள் சொல்ல, "நோ டியர்" என்றான். 


"ஆமாங்க, வீடியோ கூட எடுத்திடலாம் ஆனா அதை எடிட்டிங் பண்றது ரொம்ப கஷ்டம் ன்னு நினைக்கிறேன்" என்றாள். அவனும் "ம்ம் " என்று ஆமோதித்தான். 


இப்படியே வசனங்கள் தொடர என் நிறுத்தம் வர, நான் இறங்க ஆயத்தம் ஆனேன். இருந்தாலும் இறங்கும் போது அந்த ஜோடியை வாய் நிறைய பாராட்டவும் வாழ்த்தவும் என்றும் இவர்கள் இணை பிரியாது இருப்பார்கள் என்று சொல்லவும் நினைத்தே எழுந்து நின்றேன். அவர்களும் இறங்குவதாக ஆண் சொல்ல என் காதில் விழுந்தது.


 பின்னிருக்கையில் திரும்பி பார்க்க அங்கே ஓர் ஆண் மட்டும் தயாராய் நின்று கொண்டு இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தால் அந்த பெண் தென்படவில்லை . அப்படி நினைத்துக் கொண்டே இருக்கையில் நிறுத்தத்தின் பெயரை சொல்லி நடத்துநர் இறங்க சொல்ல, என்னோடு அவன் மட்டும் இறங்கினான்.


 நானும் என் சந்தேகத்தை தீர்க்க அவனை தடுத்து நிறுத்தி "உன் வீட்டம்மா எங்கேப்பா,? இவ்வளவு சிறு வயதில் இப்படி ஒரு அன்யோன்யமா உங்களிடத்தில். வெரி குட்." என்று நான் சொல்ல, " யாரை கேட்கிறீர்கள் சார்?" என்றான் அவன்.


 "அதன்பா இவ்வளவு நேரம் பின் இருக்கையில் நீங்கள் கணவனும் மனைவியும் பேசி கொண்டு வந்ததை கேட்டு கொண்டு தானே வந்தேன்" என்று நான் அவனுக்கு விடையளிக்க, "அட போங்க சார். எனக்கு கல்யாணமாகி ஆறு மாசத்திலேயே அவ டைவர்ஸ் பண்ணிட்டா. ஒத்த கட்டையா இரண்டு வருஷமும் ஓட்டிட்டேன்" என்று அவன் என்னை வாக்கியத்தில் திணறடிக்க, மீண்டும் நான் பயணித்துக் ஊடே கேட்டதை சொல்ல, "சார் ! அது வேற விஷயம். நான் தனியா இருக்குறதால ரொம்ப போராடிக்குது, பொண்ணுங்க மாதிரி மனதை மாற்றி கொண்டு இருக்க எனக்கு தெரியல . அதான் இப்ப போன்ல கூப்பிட்டா நேர்ல வந்து நம் பேச்சு துணைக்கு கொஞ்ச நேரம் இருந்துட்டு சம்பளம் வாங்கிட்டு போயிடுவாங்க இல்ல. அது தான் எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. ஆனா அவங்க சம்பளம் என்னால சமாளிக்க முடியாததால அவங்க என்னோட இருந்த டைம்ல பேசுனதை ரிக்கார்ட் பண்ணி வைச்சு அப்பப்ப கேட்பேன் " என்று அவன் சொல்ல, எனக்கு அகிலமே சுற்றியது.  


எங்கே போகுது உலகம்? அட இதுக்கெல்லாம் கிடைக்குற பொண்ணுங்க திருமண பந்தத்தை மட்டும் ஏன் நிராகரிக்கிறாங்க?


 புரியாத கேள்வி, பதில் யார் கையில்?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...