Thursday, January 28, 2021

கல்கியின் "பொன்னியின் செல்வன்" சுருக்க விளக்கம் 1 by Vidhya Nivash

 


அம்மாவிற்காக பொன்னியின் செல்வன் கதை சொல்ல வருகிறேன். பொன்னியின் செல்வன் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கனவு, தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாவலைப் படிக்கத் தூண்டப்படுகிறார்கள். அதற்கு காரணம் பேராசிரியர் கல்கி தன்னுடைய கைவண்ணத்தால் மிக எளிமையாக யாவரும் படிக்கும் வகையில் படைத்துள்ளார். சின்ன அம்மாச்சியின் படுக்கையில் பொன்னியின் செல்வனை பார்த்தவுடன் இந்த எண்பது வயதிலும் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை பார்த்து ,எப்படியாவது பொன்னியின் செல்வனை வாழ்நாளில் படிக்க வேண்டுமென்று ஆசை வந்தது அதற்கு கொரானா உதவியது.


எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை எதை சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனை அழகு பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் எழுத்தின் எளிமையை சொல்வதா ?ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சித்தரிக்கும் விதத்தை சொல்லுவதா? அங்கே கொட்டிக் கிடக்கும் பெண்களின் அழகு பெண்களான நமக்கே பொறாமை வரும் அந்த அளவுக்கு வர்ணனை .இயற்கையை வர்ணித்ததை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ,அத்தனை அழகு அதைப் படிக்கும் பொழுதே நாமும் அதில் காற்றில் கலந்து எங்கும் பறப்பது போல் தோன்றும்.


பொன்னியின் செல்வன் எதைப்பற்றிய நாவல் என்பதை தெரியாமல் படிக்க ஆரபித்தேன் முதல் ஆச்சரியம் இது சோழர்களின் வரலாற்று நாவல் என்பது எனக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. இரண்டாவது பொன்னியின் செல்வன் யார் என்று தெரியாது அதை அறியும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது . முடிந்த வரை கதையை சுருக்கிச் சொல்ல முயல்கிறேன்.


வல்லவராயன் வந்திய தேவனை கொண்டு கதையை இயக்கியிருக்கிறார் கல்கி.ஆரம்பிப்பதற்கு முன் அதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களை விளக்கினால் உங்களுக்கு புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுந்தர சோழர் அவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் ஆதித்ய கரிகாலன் ,இளையவர் அருள்மொழிவர்மன் ,தந்தையே அறிவுரை கேட்கும் அளவிற்கு பெண்களின் மகத்துவத்தை உயர்த்திக் காட்டும் அத்தகை பெருமைகுரிய குந்தவை சுந்தர சோழரின் ஒரே மகள். சோழர்களின் பெரும் மதிப்பிற்குரிய அரசாங்க அதிகாரிகளான பெரிய பழுவேட்டரையர் மற்றும் சிறிய பழுவேட்டரையர். சோழர் குலத்தின் தளபதியான முதல் மந்திரியான கிருஷ்ணராயர் எனும் பிரம்மராயர். அவருடைய தலைமை ஒற்றனான ஆழ்வாருக்கடியான் நம்பி. சுந்தர சோழர் உடைய பெரியப்பாவான கண்டங்கத்திரியார் ,செம்பியன் மாதேவி அவர்களால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மதுராந்தகன். நந்தினி நாவல் முழுவதும் புரியாத புதிராக இருக்கும் ஒரே கதாபாத்திரம் பெரிய பழுவேட்டரையருடைய ஆசை நாயகியாக அறிமுகம் ஆவாள்.


நாவலின் ஆரம்பத்தில் ஆதித்த கரிகாலனுடைய நண்பரான வந்தியதேவன் இரண்டு ஓலைகளுடன் காஞ்சிபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி பயணிக்கிறார். ஆடிப்பெருக்கன்று அழகான வீரநாராயண ஏரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. பழையாறையில் இருக்கும் குந்தவையை சந்தித்து ஓலை கொடுப்பதற்கு முன் இரவு வழியில் இருக்கும் கடம்பூரில் தன்னுடைய நண்பன் கந்தமாறனை சந்தித்து அங்கு தங்க முடிவு பண்ணுகிறார் வந்தியதேவன் போகும் வழியில் ஆழ்வாருக்கடியான் நம்பியை ஒரு கலவரத்தில் சந்திக்கிறார். அங்கே அறிமுகமான நம்பி நீ கடம்பூர் மாளிகைக்கு செல்வதாக இருந்தால் தன்னுடைய தங்கையான நந்தினிக்கு ஒரு ஓலையைக் கொடுக்குமாறு வந்தியதேவனிடம் கேட்கிறார்.


அங்கே பெரிய பழுவேட்டரையர் மிகப்பெரிய ஆரவாரத்துடன் கடம்பூர் அரண்மனைக்கு வந்து சேர்கிறார். அரண்மனை வாசலில் சிறிய சண்டையுடன் எப்படியோ கந்தமாறனை சந்தித்து அவருடைய தந்தையான சம்புராயருக்கு அறிமுகபடுத்தப்படுகிறார். கந்தமாறன் அன்றிரவு அங்கே தங்குவதற்காக அவருக்கு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். ஒரு திருப்பம் காத்திருந்தது பெரிய பழுவேட்டரையர் தலைமையில் அடுத்த சோழ மன்னனாக அரியணையில் ஏறுபவர் யாரென்று பல சிற்றரசர்கள் மத்தியில் அங்கே ஆலோசிக்கப்பட்டது. ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்டுபட்டு இருக்கையில் எப்படி மதுராந்தகன் அரசனாக பதவி ஏற்பது அவரோ சிவபக்தியில் மூழ்கி இருக்கிறார் என்று பலரும் சொன்னார்கள். அங்கே காத்திருந்த அவருடைய ஆசை நாயகியின் பல்லக்கிலிருந்து மதுராந்தகன் அனைவரும் ஆச்சரியமூட்டும் வகையில் வெளியே வந்தார். இது யாருக்கும் தெரியாத வண்ணம் மறைமுகமாக நடத்தப்பட்ட கூட்டம் இதை ஒளிந்திருந்த வந்திய தேவர் ஒருபுறமும் ஆழ்வாருக்கடியான் நம்பி ஒரு புறமும் நோட்டமிட்டனர். அங்கே பல அதிர்ச்சி மிக்க தகவல்களை சேகரித்து அங்கிருந்து விடை பெறுகிறார்.


பல அழகான இயற்கை அழகை ரசித்தவண்ணம் வந்திய தேவர் கடைசியில் பழையாறையிக்கு சென்றடைகிறார். ஜோசியரை பார்த்து வருகிறார் குந்தவையும் அவளுடைய நெருங்கிய தோழியான வானதியும் ,வானதி கொடும்பாளூர் வேளாளர் உடைய இளவரசி அவருடைய தந்தையை இழந்த காரணத்தினால் இங்கே குந்தவியின் கண்காணிப்பில் இருக்கிறாள்.


குந்தவைக்கு தன்னுடையை இளைய தமையன் அருள்மொழிவர்மனுக்கு வானதியை திருமணம் செய்து கொடுக்க ஆசை. வந்தியத்தேவனும் குந்தவை பிராட்டியும் சந்திக்கும் இடத்தில் ஏற்படும் காதல் கலவரங்களில் நாமும் காதலிக்க மறக்கமாட்டோம். ஓலையில் ஆதித்ய கரிகாலன் இங்கு நிலைமை எதுவும் சரியில்லை உடனடியாக அருள்மொழிவர்மனை இலங்கையில் இருந்து கிளம்பி வருமாறு தமக்கைக்கு உத்தரவிட்டு இருந்ததோடு வந்திய தேவன் மிகவும் உண்மையான ஒருவன் எதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். குந்தவை பிராட்டி வந்தியத்தேவனிடம் தன்னுடைய இளைய தமையன் ஆன அருள்மொழி வர்மனுக்கு ஒரு ஓலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.


வந்திய தேவர் தஞ்சைக்கு செல்கிறார் அங்கே கோட்டைக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் இரவில் பூ தொடுக்கும் ஒருவருடைய பழக்கம் கிடைக்கிறது அவருடைய பெயர் சேந்தன் அமுதன் அவனுடைய தாய் வாணி அவருக்கு வாய் பேச வராது. எப்படியோ தவறுதலாக நந்தினியின் அறைக்குள் சென்று விடுகிறார் .வந்தியத்தேவனும் மயங்கி விடுகிறார் அவள் அழகில் அடுத்த கணம் சுதாரித்து இருவரும் அறிமுகமாகிறார்கள் .அப்பொழுது நந்தினியும் வந்தவரிடம் ஒரு உதவியை கேட்கிறாள். அப்பொழுது அவள் கொடுக்கும் அடையாள முத்திரையை பல இடங்களில் பின்பு பயன்படுத்திக் கொள்கிறார் வந்தியதேவன். அரண்மனை கோட்டை முழுவதும் சிறிய பழுவேட்டைரையார் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. அவரின் பிடியில் மாட்டிக்கொண்டு சிறைக்கு செல்கிறார் .அங்கே நந்தினியின் முத்திரையை காட்ட வந்தியத்தேவன் மீது வெறுப்பு அதிகரிக்கிறது. சிறிய பழுவேட்டையாருக்கு நந்தினியின் மீது சரியான உடன்பாடில்லை. இதில் குந்தவையும் வந்து சேர மன்னரிடம் ஓலை சென்றடைகிறது. ஓலையில் ஆதித்ய கரிகாலன் தந்தையைத் தான் கட்டி இருக்கும் பொற்க்கோட்டையில் வந்து தங்குமாறு வேண்டியிருந்தார். அதில் நோய்வாய்ப்பட்டிருந்த மன்னருக்கு உடன்பாடில்லை.


சேந்தன் அமுதன் உடைய மாமன் மகளான படகு ஓட்டக்கூடிய பூங்குழலி உதவியுடன் இலங்கைக்கு பயணத்தை தொடங்குகிறார் வந்தியதேவன். ஆதித்ய கரிகாலன் வீரபாண்டியருடைய தலையை கொய்தும், பாண்டியருடைய மணிமுடியை அடைய முடியவில்லை . அது இலங்கையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அடைய படை எடுத்து சென்றிருந்தார் அருள்மொழிவர்மன் இலங்கைக்கு, சென்ற இடத்திலும் புகழ் சேர்க்கும் அளவிற்கு அமைதியான முறையில் போர் புரிந்தார் .அதோடு மட்டுமில்லாமல் அங்கே போரில் சேதமடைந்த புத்த கோயில்களையும் சரிசெய்து அவர்களுடைய மரியாதையும் பெற்றார், அரியணையில் பொறுப்பேற்க வாய்ப்பு வந்தும் அவருடைய பெருந்தன்மையால் அதை ஏற்க மறுத்தார் . அப்பொழுதுதான் புத்த விகாரங்களுக்கு இணையாக ஒரு பெரிய சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றியது அருள்மொழிவர்மன் மனதில்.. ஒருபுறம் தஞ்சைக்கு வருமாறு குந்தவியின் ஓலையுடன் வந்தியதேவன், காஞ்சிக்கு வரவேண்டுமென்ற ஓலையை ஆதித்ய கரிகாலன் நண்பனான பல்லவர் எடுத்துக்கொண்டு வருகிறார் இலங்கைக்கு ஒரு புறம், அங்கேயே இருந்து படைகளை முன்னேற்ற வேண்டும் என்று உத்தரவுடன் பிரம்மராயர் ,வேளாளர்கள் ஒருபுறமும் , இளைய மகனை சந்திக்க விரும்பும் மன்னரின் ஆசையை நந்தினியின் யோசனையால் இலங்கையில் ஆட்சி அமைக்க திட்டம் போட்டதாக துரோகம் என்று அவரை கைதி செய்துவர மன்னரின் உத்தரவுடன் பெரிய பழுவேட்டரையர் ஒருபுறமும்.. நான்கு பேரும் அருள்மொழிவர்மனினை சந்திக்க இலங்கைக்கு செல்கிறார்கள். கண்ட இடத்திலேயே வந்திய தேவருக்கும் அருள்மொழிவர்மனுக்கு நட்பும், பூங்குழலிக்கு காதலும் மலர்கிறது.இராஜராஜ சோழன் என்று பெருமைக்கொள்ளும் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனை அந்த இடத்தில் தான் நானும் கண்டேன்.

இலங்கை காடுகளில் பயணிக்கும்போது வரும் ஆபத்துகளிலிருந்து அங்கே வரும் சூறாவளி போன்ற வயதான ஊமைப் பெண் காப்பாற்றுகிறார்.அது மட்டுமில்லாமல் அருள்மொழி வர்மனை, ஒரு குகையில் அவள் தீட்டிய சித்திரத்தையும் காட்டி அருள்மொழியின் சரித்திரத்தை கூறுகிறார். 

அருள்மொழிவர்மனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது அவள் பார்ப்பதற்கு நந்தினி போலவும் அவள் கூரிய விஷயங்கள் புதிராக இருந்தது. அவள் பெயர் மந்தாங்கினி பூங்குழலி உடைய அத்தை சேந்தன் அமுதன் தாய் உடன் பிறந்தவள்.


நந்தினியைப் பற்றிய இரண்டு புதிர்கள் ஒன்று அவள் பாண்டிய மன்னனுடைய காதலி ,மற்றொன்று ஆதித்திய கரிகாலனுடைய முன்னாள் காதலி. சோழர் களை பழி வாங்குவதற்காகவே பெரிய பழுவேட்டரையரை மணந்துகொண்டு மயக்கி வைத்திருந்தாள். அவளுக்கு ஆதரவாக பாண்டிய ஆபத்துவதிகளான பரமேஸ்வரன் ,ரவிதாசன் தலைமையில் மறைமுகமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் பலர். பூங்குழலியின் அண்ணி அதிலும் ஒருத்தி, இலங்கையிலிருந்து கைது செய்து வரும் பொழுது கப்பலிலேயே அருள்மொழிவர்மனை தீர்த்து கட்ட முடிவு பண்ணியிருந்தாள் நந்தினி.

தந்தையின் உத்தரவுக்கு இணங்கி கைதியாக பெரிய பழுவேட்டரையருடன் தஞ்சைக்கு கிளம்புகிறார் அருள்மொழிவர்மன். கப்பலிலே செல்லும்பொழுது பாண்டியர்களால் ஏற்படும் ஆபத்தும் , கடைசியில் பத்திரமாக சேந்தன் அமுதன் ,பூங்குழலி மற்றும் வந்தியதேவன் உடன் நாகப்பட்டினத்திலுள்ள புத்த மடத்தில் தஞ்சம் அடைகிறார் இளவரசர்.


கண்டிப்பாக சுட்டி காட்ட வேண்டிய இடங்கள் இலங்கைக்கு செல்லும் முன் இளவரசரைப் பார்த்து மயங்கி விழும் வானதி சந்திக்கும் இடமும், தஞ்சை கோட்டையின் அழகையும் , ஒரு பெண் நினைத்தால் நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்ல முடியும் அதே போல் சொர்க்கத்திலிருந்து நரகத்திற்கு அழைத்து செல்ல முடியும், என குந்தவையும், நந்தினியையும் அழகாக வர்ணிக்கிறார் ஆசிரியர், வந்திய தேவருக்கு ஆபத்து வரும் இடத்திலெல்லாம் ஆழ்வார்க்கடியான் நம்பி வருவதும் அவர்களுக்கிடையேயான நகைச்சுவை கலந்த உரையாடல்களும் மிகவும் சுவாரசியமானவை, பூங்குழலி கடல் மீதும் இளவரசர் மீதும் கொண்டிருக்கும் காதல்கள் மிகவும் இனிமையானவை, கடலுடன் ,காட்டில் பல மர்மங்களுடன்,இயற்கை அழகுடன் நம்மை இணைத்து பயணிக்க செய்யும் அழகிய உயிரோட்டமான காவியம்.

தொடரும்...

Click below link for Ponniyin selvan audio book

Ponniyin selvan audio book 1







No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...