Tuesday, January 26, 2021

ஜெயமோகன் அவர்களின் "வெண்கடல்" புத்தக விளக்கம் by Vidhya Nivash

 


"வெண்கடல்" புத்தகம் ஜெயமோகன் அவர்களின் சிறுகதைகள் தொகுப்பு. ஒரு எழுத்தாளனின் வெற்றி நம்மை அந்த கதைகளிலே மூழ்கடித்து ,சிந்தனையை கிளறிவிட்டு, பல தேடல்களை உருவாக்குகிறது. அந்தவகையில் இந்த புத்தகம் சிறு கதைகள் வாயிலாக பல எண்ணங்களை தூவி செல்கிறது. சிலவை வடுக்களாக பதிந்துவிடுகிறது.


"பிழை "என்னும் தலைப்பில் சிறிய விஷயங்கள் மகிழ்ச்சி கொடுத்தாலும் பெரிய விஷயங்களுக்கு அருகிலே இரு அதுதான் வாழ்க்கை என்று தொடங்கி,சரித்திரத்தில் ஒரு "ஈ" ஆகவாது இருக்கவேண்டும் என்று முடிகிறது. பழைய ஹிந்தி திரைப்படமான "ராம ராஜ்யா"அதை காந்தி பார்த்து உருகியதும் நம்மையும் அதில் உருகச் செய்து.அந்தப் படத்தில் ஒரு பாடலில் வரும் சிறிய பிழையை அதில் வேலை செய்த கலை ரசிகனால் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பற்ற துயரை அற்புதமான காட்சி ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். அந்தக் காட்சியை தேடிப் பிடித்து பார்க்க தூண்டியது அவருடைய எழுத்து..


"கைதிகள் "என்னும் தலைப்பில் வரும் கதை காட்டில் வேலை செய்யும் காவலர்கள் உடைய அவதிகளை, காட்டின் அழகோடு சேர்த்து வர்ணித்துள்ளார். அவர்களுடைய மனோநிலையை ஒரு சிறிய சிட்டு குருவியுடனும் , சவக்குழி தோண்டுவதனுடன் ஒப்பிட்டு .காலத்தின் கட்டாயத்தினால் செய்யும் வேலையையும் ,அங்கே என்கவுண்டர் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட கைதி கேட்கும் ஒரே ஒரு கேள்வி சாவின் போதும் பிறர் நலன் நாடும் மனது நம் மனதையும் கனக்கச் செய்கிறது .எதுவும் பாவமில்லை என்று அவர்கள் தங்களையே சமாதானப் படுத்திக் கொள்வதும் என முடிகிறது.


பிள்ளையில்லா வீட்டில் சொத்தெதற்கு என்பதுபோல் கதையில் வரும் மனைவி எதற்காக நிலம் நிலம் என்று கணவன் அலைந்து கொண்டிருக்கிறார் என்று வருத்தப்பட அதனால் தான் அவனால் இப்படி இருக்க முடிகிறது. பிள்ளைகள் இருந்தால் என் கதிதான் என்று சொல்லாமல் சொல்லும் ஒரு பரதேசியுடைய சொல் அவளுடைய மனத்துடன் சேர்ந்து நம்முடைய மனமும் கலங்கச் செய்கிறது.


"வெண்கடல்" என்னும் தலைப்பில் ஒரு பெண்ணின் வலியின் ரணத்தை குறைக்கும் ஒரு அட்டை பூச்சி மீது கூட அவள் காட்டும் இரக்கத்தை மிக அழகாக படைத்துள்ளார் ஆசிரியர்.


மிக அழகான வட்டார மொழியில் கிராமங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி படிக்கும் அனைவரையும் அதில் பயணிக்கச் செய்திருக்கிறார் ஆசிரியர். அம்மையப்பமும் ஆசாரியும், நமக்கு பிடித்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று புரிந்து செயல்பட்டால் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே.. எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையை இன்பம், சமுதாயத்தில் எதிர்த்துக்கேட்பவர்களுக்கு மரணமே மிச்சம், உண்மையான ஆசான் உடைய ஆசீர்வாதம் இல்லாத போது எந்த ஒரு விருதும் பெரிய விருது அல்ல.. என பல சிந்தனைகளை அலை அடிக்க செய்கிறது வெண்கடல் புத்தகம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...