Saturday, May 1, 2021

விவாகம் (ரத்து) by Veena Shankar

 


விவாகம்(ரத்து)


                காலையில் ரவியும் கீதாவும் மிகவும் பரபரப்பாக இருந்தனர். இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகிறது. இருவருக்கும் ஐ.டி. கம்பெனியில் வேலை. சும்மாவா? கை நிறைய சம்பளம். வார விடுமுறையில் கேளிக்கை, விருந்து என சகல ஆடம்பர பொழுதுபோக்குகளுடன் நகர்ந்தது. இதுவும் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லைஅதற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பித்ததுஎன்னதான் காதல் திருமணம் என்றாலும் உணர்வுகள் வெவ்வேறு தானே? '"அலைபாயுதே'" படத்தில் வருவது போல் காதலிக்கும் போது சின்ன விசயங்கள், தவறுகள் மறந்து போகின்றது. அதுவே திருமணமான பின் மறுக்கப்படுகின்றது. இருவரும் சேர்ந்து செல்லும் விழாக்கள், கேலிகள், கிண்டல்கள் என அனைத்தும் குறைந்து போயின.


             "கீதா! சீக்கிரம் கிளம்பு"- இது ரவி. "பொண்ணுங்கதான் லேட்டாக்குவாங்க ன்னு நினைக்காதீங்க. நீங்களும் கிளம்பும் வழியைப் பாருங்க"- இது கீதாஇப்படித்தான் ஆரம்பிக்கும் இவர்களது பிரச்சனை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி  வைக்க தான் கிளம்புகிறார்கள் இவர்கள்.


              காலை மணி பத்து இருக்கும். இருவரும் கீதாவின் சித்தப்பா ராஜனை சந்திக்க செல்கிறார்கள். அவர் வீட்டையடையும் முன் பல விவாதங்கள்


              ராஜன் மிகப் பெரிய வக்கீல் என்று பெயரெடுத்தவர். அவர் வீட்டையடைந்து அவர் முன் அமர்ந்தனர். "சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார் ரவியை பார்த்து.நாங்கள் டைவர்ஸ் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்” என்றான் ரவி "சரி என்ன பிரச்சனை" எனக் கேட்டார் ராஜன். ரவியும் கீதாவும் மாறி மாறி அடுத்தவர் குற்றங்களை அடுக்கினர். அவர்களின் குற்றங்கள் என்னவோ ராஜனுக்கு பெரியதாகப்படவில்லை. ஏனென்றால் அவர் அனுபவத்தில் பார்க்காத கேசா? மௌனம் சாதித்தார். சரவெடிகள் அடங்கினமெதுவாக பேச்சை ஆரம்பித்தார் ராஜன். “எல்லோருடைய வீட்டிலையும் காதல்னா எதிர்ப்பு வரும். ஆனால் உங்க விசயத்துல அப்படி இல்லை. பச்சை கொடிதான். அதனால் உங்களுக்குள்ள அனுசரிச்சி போனா என்ன?”  என்று சொன்னது தான் தாமதம். இருவரும் வேண்டாம் என ஒற்றுமையுடன் சொன்னார்கள். அவர் பேச்சை மறுத்தனர். “இதப் பாருங்க. திருமணமாகி குறைந்தது ஒரு வருடம் ஆகணும். அப்பத்தான் விவாகரத்து கிடைக்கும்” என்று சொன்னார் சட்டத்தை முன் வைத்து.

“ஆறு மாதங்கள் கழிச்சி வாங்க “ என்றார் ராஜன். தோல்வி முகத்தோடு திரும்பிய அவர்கள், ஆறு மாதங்கள் ஆறு வருடம் போல் நினைத்தனர்.


              ராஜன் சொன்ன ஆறு மாதமும் ஓடிற்று. மறுபடியும் ஆபிசுக்கு லீவு போட்டு சித்தப்பா வீட்டிற்கு கிளம்பினர் இருவரும். ஜோடியாக வருவதை பார்த்து சந்தோசப்பட்டாலும் விசயம் சுமூகமாக முடிந்திருக்கும் என்று நினைக்கவில்லை ராஜன். நன்றாக இருக்கிறார்கள் என்றால் இங்கு வந்திருக்கமாட்டார்களே. ஃபோன் கால் மட்டும் வந்திருக்கும்.


             ரவி பேச்சை ஆரம்பித்தான். "மாமா!, ஆறு மாதம் ஆயிடுச்சி. இப்போ டைவர்ஸ் க்கு அப்ளை பண்ணலாமா?" என்று கேட்க, கீதாவும் தலையசைத்தாள். "சரி ! இந்த காலம் எப்படி போச்சு? என கேட்டார் ராஜன். " எப்பவும் போலத்தான். உணர்ச்சியோட சண்டை போட்டோம். ஆனால் அது ஒரு வழிப் பாதையாத்தான் இருந்தது. நான் கத்தினால் அவர் அமைதியா இருப்பார்அவர் கத்தினால் நான் அமைதியா இருப்பேன். எல்லாம் கொஞ்சம் நாளைக்குத்தானே " என்று கீதா சொன்னாள். ரவியும் ஆமோதித்தான்.


              ராஜன் தான் பாதி வெற்றியடைந்ததாக நினைத்தார். அவர்களை பார்த்து சிரித்தார். ரவிக்கும், கீதாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை. " உங்க இருவருக்கும் ஒன்று சொல்றேன். இந்த ஆறு மாசத்தை எப்படி கழிச்சீங்களோ அப்படியே உங்க மற்ற காலத்தையும் கழிக்கலாமே! என்று சொல்ல. "அதெப்படி கொஞ்ச நாள்தான்னு நினைச்சு அட்ஜெஸ்ட் செய்தோம். மீதி காலமும்மா? நோ. முடியாது” என்றனர். உடனே ராஜன் அவர்களை அடுத்த வாரம் வந்து சந்திக்க சொன்னார்.


               கஜினி முகமது போல படையெடுத்தனர் மறு வாரமும். அவர்கள் உள்ளே நுழையும்போது கீதாவின் சித்தி ஏதோ ஒரு படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். " என்ன சித்தி! என்ன எழுதுகிறீர்கள்?" என்று கீதா கேட்க, "நானும் உங்க சித்தப்பாவும் டைவர்ஸ் பண்ணிக்க போறோம். இருவருக்கும் எந்த ஒரு விசயத்திலேயும் ஒத்துப் போகவில்லைஅது தான்" என்றார். "என்ன அத்தை? இத்தனை வருசம் கழிச்சி இப்படி பண்றீங்க?" என கேட்டான் ரவி. "ஆமாம்பா! என்ன பண்றது? ஆறு மாசத்துல மனசு ஒத்துப் போகலைன்னு நீங்க விவாகரத்து பண்றீங்க. ஆனால் அந்த காலத்துல அப்படி முடியாது. எல்லாம் அனுசரிச்சிதான் போகவேண்டியிருந்தது. பிள்ளைகளையும் பெத்துகிட்டோம். குடும்பத்துக்காக டைவர்ஸ் பண்ணல. இப்பத்தான் எங்க கடமை முடிஞ்சி போச்சு. இனி பிரிஞ்சி வாழ்றதா முடிவு பண்ணினோம்" என்றார். கொடுமை, கொடுமைன்னு வந்தா இங்க ஒரு கொடுமை ஜிங் ஜிங் ன்னு ஆடுதாம், என ரவியும் கீதாவும் தலையில் அடித்துக் கொண்டனர்.

              இந்த சம்பவம் அவர்களை ஏனோ சலனப்படுத்த இருவரும் பேசிக்கொண்டு "சரி. நாங்க கிளம்புறோம். மாமாகிட்ட சொல்லிடுங்க " என்று ரவி சொல்ல விடைபெற்றனர் இருவரும்.


              அவர்கள் சென்றதும் உள்ளேயிருந்து வந்த ராஜனும் அவர் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தனர். எல்லாம் ஒரு நாடகம் தானே என்று. " என்ன படிச்சி என்ன பிரயோசனம்? எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சனை வரத்தானே செய்யும். அதற்கு போய் டைவர்ஸ், மட்டை, மண்ணாங்கட்டி ன்னு போவாங்களா?" என்று உண்மையாகவே அவர்களின் செயலுக்கு ஆதங்கப்பட்டார்  கீதாவின் சித்தி. 


              தான் முழு வெற்றியடைந்ததாக "ராஜனா? கொக்கா?" என ராஜன் அங்கலாய்க்க, "ஆமாம். ஆமாம். நீங்க டைவர்ஸ் வாங்கி தரமாட்டீங்க நினைச்சி ரெண்டு பேரும் வேறு வக்கீலை பார்க்க போயிருப்பாங்க." என சித்தி சொல்ல, "இதற்காகவே உன்னை நான் டைவர்ஸ் பண்றேன்" என ராஜன் தன் மனைவியைப் பார்த்து கண்ணடித்தார்.


             ஆராய்ச்சி செய்வது தானே வாழ்க்கை. அதுல வர்றதுதான் அட்ஜெஸ்ட்மென்ட் என்று ரவியும் கீதாவும் உணர்ந்திருப்பர் என்பது ராஜனின் ஆணித்தரமான கணிப்பு.


அன்பு எனும் ஊன்றுகோல் என்றும் அளவுகோலாகாது.


1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...